மனோ சாட்சி | “யுத்த நெருக்கடியில், ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் லூயிஸ் ஆர்பரை கொழும்புக்கு வரவழைத்த கதை”
Share
மனம் திறக்கிறார் மனோ கணேசன்
கனடா உதயனிற்கான பிரத்தியேகத் தொடர்- அத்தியாயம் 8
- ஐநா ஆணையாளர் இலங்கைக்கு வருவதானால், இலங்கை அரசின் ஒப்புதலுடன் தான் வர முடியும்
- சமாதான காலத்திலே ஆணையாளர் நவநீதன் பிள்ளையின் வருகை ஏற்படுத்திய பரபரப்பை விட லூயிஸ் ஆர்பரின் 2007ம் வருட இலங்கை வருகை பாரியது.
- மக்கள் கண்காணிப்பு குழு என்ற மனித உரிமைகள் அமைப்பை மிகுந்த சவால்களின் மத்தியில் நான் கொழும்பில் நடத்தினேன்.
- தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்றத்தில் புலிகளின் குரலாக, அவர்களின் வழிநடத்தலின் கீழ் செயற்பட்டது
- மனித உரிமை ஆணையாளர் கூட்டமைப்பு பிரதிநிதிகளை சந்திக்க அரசாங்கம் அனுமதி மறுத்தது. கூட்டமைப்பை ஆணையாளர் சந்தித்தே ஆக வேண்டுமென நான் ஐநாவுக்கு கடுமையாக வலியுறுத்தினேன்.
- மூன்று பெண்கள், மனித உரிமை பால் மிகுந்த அர்ப்பணிப்புடன் அந்நேரம் செயற்பட்டார்கள். ஒருவர், கொழும்பு UNDP வதிவிட பிரதிநிதி ஜோதி சங்கேரா (Jyoti Sanghera), அடுத்தவர், மக்கள் கண்காணிப்பு குழுவின் செயலாளர் பிரியாணி குணரத்ன (Priyani Gunaratna), அடுத்தவர், மக்கள் கண்காணிப்பு குழுவுக்கு ஒத்துழைப்புகளை வழங்கிய அம்பிகா சற்குணநாதன் (Ambika Satkunanathan).
காலகட்டம்: 2007ல் கொடும் யுத்தம் நடைபெறும் காலம். கொழும்பில் தமிழர்கள், தடுக்கி விழுந்தால் வெள்ளை வேன் கடத்தல்காரர்களின் மீதுதான் விழ வேண்டும் என்ற மாதிரியான காலம். ரவிராஜ் படுகொலை நடந்து முடிந்த கொடும் காலம். யுத்த பூமியில், வடகிழக்கில் கடுமையான மனித உரிமை மீறல்கள் நடந்து கொண்டிருந்த காலம். |
2007 ஆம் வருடம் அக்டோபர் மாதம், அப்போதைய ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் லூயிஸ் ஆர்பர் (Louise Arbor) இலங்கை வந்தார். ஐ.நா மனித உரிமை ஆணையாளர் இலங்கை வர வேண்டும் என்பதிலே நான் பெரும்பங்கை வகித்தேன்.
அப்போதைய ஐநா வளாகத்திற்குள்ளே இருந்த UNDP- ஐநா வளர்ச்சித் திட்டம் என்ற அமைப்பின் இலங்கை வதிவாளர் பிரதிநிதி ஜோதி சங்கேரா (Jyoti Sanghera) என்ற வட இந்திய வம்சாவளி பெண்மணி, இலங்கையில் அப்போது மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அவதானிக்கும் பொறுப்பில் இருந்தார்.
ஐநா ஆணையாளர் இலங்கைக்கு வருவதானால், இலங்கை அரசின் ஒப்புதலுடன்தான் வர முடியும். இலங்கையின் மஹிந்த-கோத்தாபய-பெசில் ராஜபக்ச அரசு, ஐநா மனித உரிமை ஆணையாளர் இலங்கை வருவதை ஒருபோதும் விரும்பவில்லை.
ஆகவே ஐ.நா சபையின் மற்றும் சர்வதேச சமூகத்தின் அழுத்தத்தினால் மாத்திரமே ஐ.நா ஆணையாளரை இலங்கை வரவைக்க முடியும்.
அவர் இங்கே வந்தால் இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பான விஷயம் உலகத்தின் பேசும்பொருளாக மாறும். அதுமட்டுமல்லாமல் ஐ.நா பொறிமுறைக்கு அன்று கடத்தப்பட்டு, கொல்லப்பட்ட தமிழர்களின் குடும்ப உறுப்பினர்களின் குரலை நேரடியாக கேட்கக்கூடியதாக இருக்கும்.
எனக்கும், எங்களது மக்கள் கண்காணிப்பு குழுவிற்கும், இது தேவையாக இருந்தது.
UNDP வதிவிட பிரதிநிதி ஜோதி சங்கேரா எனக்கும், மக்கள் கண்காணிப்பு குழு செயலாளர் பிரியாணிக்கும் நெருங்கிய நண்பராகிவிட்டார். இலங்கைக்கு வருவதற்கு முன்னாலே நேபாளத்திலும் பணியாற்றிய அவர் மனித உரிமைகள் தொடர்பில் மிகுந்த அக்கறையும், பாதிக்கப்பட்டோர் தொடர்பில் மிகுந்த அனுதாபம் கொண்ட பெண்மணி.
ஒரு கட்டத்தில், இலங்கை அரசாங்கத்தின் கடுமையான எதிர்ப்பு காரணமாக ’ஆணையாளர் இலங்கை வரும் யோசனையை ஒத்திவைப்போமா’, என்று கூட ஐநா யோசித்தது.
ஆனால், நாங்கள் ஐநா மனித உரிமை ஆணையாளர் இலங்கைக்கு வந்தாக வேண்டும் என்பதிலே உறுதியாக இருந்து, தொடர்ந்து வலியுறுத்தினோம்.
அதுவரையில் இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இலங்கையில் உள்ள வெளிநாட்டு தூதுவர்கள் தமது அரசாங்கங்களுக்கு இரகசியமாக அனுப்பிவைத்த அறிக்கைகள் மட்டுமே இருந்தன.
நேரடியாக சர்வதேச சமூகமும், குறிப்பாக ஐ.நா சபையும், இலங்கையுடன் இந்த விவகாரம் தொடர்பில் முரண்பட ஆரம்பிக்கவில்லை.
ஒருவழியாக அரசாங்கத்தின் மீது அழுத்தம் பிரயோகித்து ஐநா மனித உரிமை ஆணையாளர் இலங்கை வருவதற்கு வாய்ப்பேற்பட்டது.
மிக கடுமையான யுத்தம் நடந்துகொண்டிருந்த காலகட்டம். கடத்தல், படுகொலைகள், பெருந்தொகை கைதுகள், காணாமல் போதல்கள், யுத்தகளத்தில் மட்டும் அல்ல, நேரடி யுத்தம் நடைபெறாத, புலிகளின் கட்டுப்பாட்டில் இல்லாத யாழ் குடா மற்றும் இங்கே கொழும்பு உட்பட தென் இலங்கை பிரதேசங்களிலும் நிகழ்ந்தன.
பின்னாட்களில் யுத்தம் முடிந்து சமாதான காலத்திலே இலங்கை வந்த அப்போதைய ஆணையாளர் நவநீதம் பிள்ளை ஏற்படுத்திய பரபரப்பை விட லூயிஸ் ஆர்பரின் 2007 ஆம் வருட இலங்கை வருகை பெரும் பரபரப்பையும் முக்கியத்துவத்தையும் ஏற்படுத்தியது.
அரசாங்கம் பல நிபந்தனைகளை விதித்தது. இலங்கையிலே ஆணையாளரின் நிகழ்ச்சி நிரல் அரசாங்கத்தின் ஒப்புதலுடன் தான் தயாரிக்கப்பட வேண்டும். இலங்கையில் பொது மக்கள் எவரையும் ஆணையாளர் சந்திக்க கூடாது. குறிப்பிட்ட சில எதிர்க்கட்சி அரசியல்வாதிகளையும், அரசு உடன்பாடு தெரிவிக்கும் சிவில் சமூக அங்கத்தவர்களையும் மாத்திரமே ஆணையாளர் சந்திக்க வேண்டும், என்றெல்லாம் நிபந்தனைகள் இருந்தன.
உண்மையில் மனித உரிமை ஆணையாளர் தனது விஜயத்தின் போது, தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரதிநிதிகளை சந்திக்கும் நிகழ்ச்சி இருக்கவில்லை. அரசாங்கமும் அதற்கு உடன்படவில்லை. ஐநாவும் அதுபற்றி பேசாமலேயே ஒரு தர்மசங்கடத்துடன் இருந்தது.
இதற்கு இன்னொரு காரணமும் இருந்தது. அப்பொழுது வடக்கு, கிழக்கிலே தமிழர்களின் அரசியல் தலைமை விடுதலை புலிகள் வசமே இருந்தது. தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்றத்தில் புலிகளின் குரலாக, அவர்களின் நேரடி வழிநடத்தலின் கீழ் செயற்பட்டது.
அடிக்கடி புலிகளின் தலைவர் பிரபாகரனோ அல்லது அரசியல் துறை பொறுப்பாளர் தமிழ் செல்வனோ எல்லா கூட்டமைப்பு எம்பீக்களையும் கிளிநொச்சிக்கு அழைத்து அறிவுறுத்தல்கள் கொடுப்பார்கள்.
கூட்டமைப்பிற்கு தனித்துவமாக செயற்பட முடியாமல் இருந்தது. ஆனால் உலகம் புலிகளை விடுதலை போராளிகளாக அங்கீகரித்திருக்கவில்லை. அரச பயங்கரவாதத்துடன் சேர்த்து, புலிகளையும் பயங்கரவாதிகளாக கடுமையாக பார்த்துவந்த காலம் அதுவாகும்.
புலிகளின் முகவர்கள் (Proxy) என்ற முத்திரை குத்தப்பட்டு இருந்ததால் சர்வதேச சமூகம் கூட்டமைப்பை கொஞ்சம் தள்ளியே வைத்திருந்தது. கூட்டமைப்பின் தலைவரை தவிர பல கூட்டமைப்பு எம்பீக்களுக்கு சில மேற்கத்திய நாடுகள் விசா வழங்கவே மறுத்தன.
இந்த பின்புலம் மற்றும் அரசாங்க கெடுபிடிகளுக்கு மத்தியில், மனித உரிமை ஆணையாளர் லூயிஸ் ஆர்பர் எங்களது மக்கள் கண்காணிப்பு குழுவையும், சிவில் சமூக பிரதிநிதிகளையும், அன்றைய எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவையும் சந்திக்கும், “மூன்று சந்திப்புகள்” என்ற திட்டத்தையே இலங்கை ஐநா அலுவலகம் வைத்திருந்தது.
அதை தவிர யாழ்ப்பாணம் சென்று பிஷப் ஹவுசில் வடக்கில் சிவில் சமூக பிரதிநிதிகளையும் சந்திப்பதற்கு பெரும் அழுத்தத்தின் பிறகு அரசாங்கம் உடன்பட்டது.
இவ்வேளையில் கொழும்பிலே, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் மற்றும் குழுவினரை ஆணையாளர் சந்திக்க வேண்டும் என்று, கொழும்பு எம்பி என்ற முறையிலும், மக்கள் கண்காணிப்பு குழுவின் ஏற்பாட்டாளர் என்ற முறையிலும், நான் கொழும்பு ஐநா பிரதிநிதிகளுக்கு கடுமையாக வலியுறுத்தினேன்.
அரசாங்கம் உடன்படவில்லை. ஆனால் UNDP வதிவிட பிரதிநிதி ஜோதி சங்கேரா, எனது கருத்தை உள்வாங்கி, மிகச் சிறப்பாகப் பணியாற்றினார். கடைசியில் அரசின் கடும் தயக்கத்துடன், கொழும்பில் கூட்டமைப்பு பிரதிநிதிகளையும் ஆணையாளர் சந்திக்கும் கூட்டமும் நிகழ்ச்சி நிரலில் இடம்பெற்றது.
ஆனால், அந்த கூட்டத்தில் கூட்டமைப்பு எம்பீக்களுடன் சேர்ந்து நானும் கலந்துகொள்ள வேண்டும் என்றும், அக்கூட்டத்தை ஆணையாளருக்கும், தமிழ் மக்களின் பாராளுமன்ற பிரதிநிதிகளுக்கும் இடையிலான கூட்டம் என வர்ணிப்பதெனவும் தீர்மானிக்கப்பட்டது.
கொழும்பு புள்ளர்ஸ் வீதி ஐநா வளாகம்.
ஒரே நாளிலே காலையில் எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் அரை மணித்திலாயம் சந்திப்பு. அந்த சந்திப்பு முடிந்தவுடன் நானும், கூட்டமைப்பு எம்பீக்களும், இன்னொரு அரை மணித்தியாலம் சந்தித்து பேசினோம்.
எங்களது பிரத்தியேக மக்கள் கண்காணிப்பு குழுவுடன், ஐநா மனித உரிமை ஆணையாளரின் சந்திப்பு இதே வளாகத்தில் அடுத்த நாள் நடைபெற ஏற்பாடாகி இருந்தது.
அன்று, முதல்நாள் சந்திப்பிற்காக ஐநா வளாகத்திற்குள்ளே ரணிலின் முதல் சந்திப்பு முடியும்வரை காத்திருந்த பொழுது, என்னை அங்கு கண்ட கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன், “They invited you too? Are you also meeting her with us?” (உங்களையும் அழைத்தார்களா? நீங்களும் எங்களுடன் அவரை சந்திக்கின்றீர்களோ..?) என்று என்னை பார்த்து அசந்தர்பமாக கேட்டார். நான் ஒன்றும் சொல்லவில்லை. மனதுக்குள் சிரித்துக்கொண்டேன்.
ஆனால் அங்கிருந்த UNDP பிரதிநிதி ஜோதி சங்கேரா “It’s Mano who insisted that Commissioner should meet you too” (மனோதான், உங்களையும் ஆணையாளர் சந்திக்க வேண்டுமென வலியுறுத்தினார்..!) என்று என்னை காட்டி சட்டென சொன்னார். அப்படியே அந்த கூட்டம் நடந்து முடிந்தது.
இக்காலகட்டத்தில், மூன்று, மனோ திடம் கொண்ட பெண்கள், தத்தமது தொழில் பொறுப்புகளுக்கு அப்பால், மனித உரிமை தொடர்பான தங்கள் உறுதியான நிலைப்பாடுகள் காரணமாக, போர் கெடுபிடிகளுக்கு மத்தியில் ஐநா மனித உரிமை ஆணையாளர் லூயிஸ் ஆர்பரின் வருகை மற்றும் எங்களது மக்கள் கண்காணிப்பு குழுவின் நடவடிக்கைகளுக்கு மிகுந்த ஒத்துழைப்புகளை வழங்கினார்கள்.
இவர்கள் இல்லாவிட்டால், ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் லூயிஸ் ஆர்பர் (Louise Arbor) அவர்களது இலங்கை விஜயம் சாத்தியமாகி இருக்காது. அல்லது, நாம் எதிர்பார்த்த சாதக விளைவுகளை ஏற்படுத்தி இருக்காது என நான் கூறியே ஆக வேண்டும்.
ஒருவர், UNDP வதிவிட பிரதிநிதி ஜோதி சங்கேரா, அடுத்தவர், மக்கள் கண்காணிப்பு குழுவின் செயலாளர் பிரியாணி குணரத்ன (Priyani Gunaratna), அடுத்தவர், மக்கள் கண்காணிப்பு குழுவுக்கு ஒத்துழைப்புகளை வழங்கிய அம்பிகா சற்குணநாதன் (Ambika Satkunanathan). அம்பிகா பிற்காலத்தில், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் பணியாற்றினார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேசிய பட்டியலிலும் அவர் பெயர் இடம் பெற்றது என நினைக்கிறேன்.
அடுத்த நாள், ஐநா மனித உரிமை ஆணையாளர் லூயிஸ் ஆர்பரை, காணாமல் போனவர்களின் குடும்ப அங்கத்தவர்களுடன் சந்திக்கும் மக்கள் கண்காணிப்பு குழுவின் பிரதான கூட்டம் ஏற்பாடாகி இருந்தது.
அக்கூட்டத்தில், மக்கள் கண்காணிப்பு குழு உறுப்பினர் என்ற முறையில் சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்பியும் கலந்துக்கொண்டார். இக்கூட்டம் பற்றி பிறகு வேறு இடத்தில் கூறுகிறேன்.