LOADING

Type to search

இலங்கை அரசியல்

பருத்தித்துறையில் 10 படகுகள் தீக்கிரை, புதன் அதிகாலை பயங்கரம்

Share

எமது யாழ் செய்தியாளர்

புதன்கிழமை அதிகாலை யாழ்ப்பாணக் கடற்கரையோரம் 10 படகுகள் தீக்கிரையாகியுள்ளன.

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பொலிஸ் பிரிவில் நாகர்கோவில் மேற்கு, நாகர்கோவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10 படகுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. குடா நாட்டில் சர்ச்சைக்குரிய கடலட்டை தொழில் குறித்து தொடர்ச்சியாக சர்ச்சைகள் இருந்துவரும் நிலையில் இந்த படகுகள் தீக்கிரையாகியுள்ளன என்று உள்ளூர் தகவல்கள் கூறுகின்றன.

அதிலும் குறிப்பாக, கடலட்டை தொழிலில் ஈடுபட்டு வந்த படகுகள் தற்போது இத்தொழிலில் ஈடுபடாமல் நீண்ட காலமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சமயமே இவ்வாறு தீயிடப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.

அல்ஜித்தா , தில்லையடி, புத்தளம் முகவரியில் வசிக்கும் சாகுல் ஹமீது ஜௌபர் (672332982V) என்பவருக்குச் சொந்தமான 10 படகுகளே புதன் அதிகாலை 2 மணியளவில் , தீக்கிரையாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றபோதும் இதற்கான காரணம் மற்றும் சந்தேக நபர்களோ இதுவரை அறியப்படவில்லை .

இது தொடர்பாக பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

சீனா மற்றும் அரச ஆதரவுடன் யாழ் குடா நாட்டின் பல பகுதிகளில் கடலட்டை பண்ணைகள் இயங்கி வருவது உள்ளூர் மீனவர்களிடையே பெரும் விசனத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக தமது வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இலங்கையின் யாழ் குடாநாட்டில் வளர்க்கப்படும் கடல் அட்டைகள் யாவும் சீனாவிற்கே ஏற்றுமதி செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. சீனா உட்பட பல கிழக்காசிய நாடுகளில் கடலட்டை விருப்ப கடலுணவுகளில் ஒன்றாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.