தமிழர் தாயகப் பகுதிகளில் தொடரும் மதம் மற்றும் கலாச்சார அழிப்புகள்
Share
நடராசா லோகதயாளன்
நெடுங்கேணி வெடுக்குநாறி மலையில் உள்ள சிவன் ஆலயத்திலிருந்து அத்தனை விக்கிரகங்களும் அடியோடு பெயர்க்கப்பட்டு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன
இலங்கையில் உள் நாட்டுப போர் முடிந்து 14 ஆண்டுகளானாலும் இன்னமும் மதம் மற்றும் கலாச்சார அழிப்புக்கள் தொடருகின்றன என்பதனை அண்மைக் காலங்களில் தொடர்ச்சியாக நடைபெறும் சம்பவங்கள் தெளிவாக எடுத்துக காட்டுகின்றன.
அதிலும் தொல்லியல் திணைக்களமா அல்லது தொல்லை தரும் திணைக்களமா? என்று வடக்கு-கிழக்கு வாழ் தமிழ் மக்களால் விமர்சிக்கப்படும் அரச அமைப்பின் ஊடாக தமிழர்களின் நிலங்களை அபகரிப்பது, அங்குள்ள மத வழிபாட்டு மையங்கள், சின்னங்கள், புராதன இடங்கள் ஆகியவற்றை திட்டமிட்டு அழிப்பது சமீப காலத்தில் அதிகரித்து வருவதை யாவரும் அறிவர்.
அண்மை காலத்தில் வெளிப்படையாக குருந்தூர்மலையில் தொடங்கிய இந்த கலாச்சார அழிப்பு அல்லது தாக்குதல்- ஆக்டோபஸ் ஜீவராசி மெல்ல மெல்ல தனது நீண்ட கரங்களால் கடல்வாழ் உயிரனங்களை சுற்றி வளைத்து, தனது பிடியில் இறுக்கி கபளீகரம் செய்வது போன்று முன்னெடுக்கப்படுவது தெரிகிறது.
இப்படியான ஆக்டோபஸ் அணுகுமுறை, கிழக்கே திருகோணமலை மாவட்டம் கிண்ணியா நீராவியடி பிள்ளையார் கோவில் நிலத்தை வளைப்பதில் ஆரம்பித்து பின்னர் அந்த ஆலயச் சுற்றாடல் காணிகளையும் வலிந்து அபகரிக்கும் தீய உள்நோக்கம் கொண்ட செயலாக விரிவடைந்து அதே பாணியில் தொடருகிறது என்று இந்த விடயங்களை கூர்ந்து கவனித்து வரும் மூத்த குடிமக்கள் கூறுகின்றன
கிண்ணியாவை அடுத்து குறுந்தூர்மலை ஆதிசிவன் அய்யனார் ஆலயம் மற்றும் அதை சுற்றியுள்ள அடர்ந்த வனப்பகுதியை கையகப்படுத்தி, அங்கு நீதிமன்ற உத்தரவையும் மீறி, இராணுவம் புத்தசாசன அமைச்சுடன் இணைந்து வலிந்து பௌத்த விகாரை ஒன்றை கட்டியெழுப்பப்பட்டுள்ளது. எனினும் ‘எம்மை யாரும் எதுவும் செய்ய முடியாது’ என்ற ஆணவ நிலை அங்கே நீடிக்கிறது.
முறிகண்டி பிள்ளையார் ஆலயம் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதியிலும் இப்படியான வலிந்த கலாச்சார தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
போர் என்ற பூச்சாண்டியைக் காட்டி கீரிமலைப் பகுதியில் மூன்று தசாப்தங்களிற்கும் மேலாக தனியார், ஆலயக் காணிகளை வலிந்து ஆக்கிரமித்திருந்த படையினர் அவர்கள் கட்டுப்பாட்டின் கீழிருந்த பகுதியில் பன்னெடுங்காலமாக விழிபாட்டு தலமாக இருந்த ஆதி சிவன் கோவில் மற்றும் அதன் அருகில் இருந்த பல சிவ சின்னங்களும் இப்போது இடித்து அழிக்கப்பட்டுள்ளது அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.
அதை முதல் முறையாக ஆதாரங்களுடன் கனடா உதயனே வெளியிட்டது.
இப்போது அந்த ஆக்டோபஸ் கரங்கள் வவுனியாவை நோக்கி நீண்டுள்ளன.
வவுனியா வடக்கு பகுதியில் அமைந்துள்ள வெடிக்குநாறிமலை சிவன் ஆலயத்தின் அத்தனை விக்கிரகங்களும் அகற்றப்பட்டுள்ளமை ஆலய நிர்வாகிகளால் இப்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அந்த ஆலயத்தில் சிவன், அம்மன், பிள்ளையார், பாலமுருகன் மற்றும் வயிரவர் விக்கிரகங்கள் இருந்து வழிபட்ட நிலையில் 2019ஆம் ஆண்டில் தொல்லியல்த் திணைக்களத்தின் தொல்லை காரணமாக எவருமே அப்பகுதிக்கு செல்ல முடியாது தடுக்கப்பட்டனர்.
இருந்தபோதும் இது தொடரபில் வவுனியா நீதிமன்றில் வழக்கு இடம்பெற்று வரும் நிலையில் ஆலயத்தின் விக்கிரகங்கள் அனைத்தும அரச திணைக்களம் ஒன்றால் திருட்டுத்தனமாக எடுத்துச் செல்லப்பட்டு விட்டதாக கிடைத்த தகவலின் பெயரில் ஆலய நிர்வாகத்தைச் சேர்ந்த சிலர் கடந்த வாரத்தின் இறுதியில் அப்பகுதிக்குச் சென்று பார்வையிட்டனர்.
அவ்வகையில் அங்கு சென்றவர்களிற்கு அதிர்ச்சியும் வேதனையுமே காத்திருந்தன. பன்னெடுங்காலமாக தாங்கள் வழிபட்டு வந்த ஆலயம் மற்றும் அதன் சூழலில் இருந்த மத அடையாளங்கள் அனைத்தும் திட்டமிட்ட முறையில் அகற்றப்பட்டுள்ளதை கண்ட ஆலய நிர்வாகத்தினர் மனமுடைந்து போயினர்.
“பாதுகாப்பு படையினரும் தொல்லியல் துறையினரும் இறைவனைக் கூட விட்டுவைப்பதில்லை, புத்த பகவானை போற்றி வணங்கும் இவர்கள் ஏன் இந்து (தமிழ்) மக்களை திட்டமிட்டு இலக்கு வைத்து, அவர்களின் மத, கலாச்சார விழுமியங்களை தாக்கி அழிக்கின்றனர்” என்று மூத்த குடிமக்கள் மிகுந்த விசனத்துடன் வினவுகின்றனர்.
வவுனியா வெடுக்குநாறி பகுதிக்கு யாரும் செல்லவதற்கு அனுமதி மறுத்த தொல்லியல் திணைக்களம் அங்கிருந்த திருவுருவங்களையும் ஆலய சொத்துக்களையும் அபகரித்துச் செல்வதறகும் உடந்தையாக செயலபட்டு விட்டதா? என வவுனியா நகரவாசிகள் கேளவி எழுப்புகின்றனர்.
பொதுமக்களை திட்டமிட்டு அந்த பகுதிக்குச் செல்லவிடாமல் தடுத்து நிறுத்த யார் கட்டளையிட்டது என்ற கேள்விக்கு இதுவரை பதிலில்லை. தொல்லியல் பூமி என்றால் எந்த வகையிலும் அந்த இடத்தில் யாரும் எவ்விதமான கட்டுமானங்களை கட்டுவதோ, அல்லது அந்த சூழலை மாற்றியமைக்கவோ முடியாது என்பதே பொதுவாக வழிகாட்டல் நடைமுறையாகும். ஐ நாவின் ஒரு அங்கமாக யுனெஸ்கோவும் இதையே கூறுகிறது.
தொல்லியல் பிரதேசம் என்பது சரித்திரபூர்வமாக சான்றுகள் மற்றும் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட வேண்டும், அதன் பிறகு அது பாதுகாப்பப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு யாரும் அங்கு அத்துமீறி செல்ல அனுமதிக்கப்படக் கூடாது, அரச அதிகாரிகள் மற்றும் அதை பராமரிப்பவர்கள் கூட முறையான அனுமதி பெற்றே தொல்லியல் பிரதேசங்களிற்குள் செல்ல வேண்டும், அந்த பயணம் வீடியோவில் பதிவு செய்யப்பட்டு ஆவணப்படுத்தப்பட வேண்டும், எவ்வகையிலும் அந்த பிரதேசத்தில் மாற்றங்கள் செய்யப்படவில்லை என்பதை எழுத்துபூர்வமாக அரசிற்கும் நீதிமன்றத்திற்கும் தெரிவிக்க வேண்டும் என்று பல கட்டுப்பாடுகளை யுனெஸ்கோ அமைப்பு விதித்துள்ளது.
உலக மரபுகள் மற்றும் வழிகாட்டல்களை மீறி, இவ்வாறு அரச திணைக்களத்தின் பெயரில் பொதுமக்களை தடுத்து நிறுத்தி மத வழிபாட்டித் தலத்தையே இல்லாது ஒழிப்பதை அரசின் திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலாகவே பார்ப்பதாக தமிழ் மக்கள் கவலையுடன் தெரிவிக்கின்றனர்.
வவுனியா வடக்கு நெடுங்கேணியில உள்ள வெடுக்குநாறி மலையில் உள்ள சிவன் ஆலயத்திலிருந்து திட்டமிட்ட வகையில் அத்தனை விக்கிரகங்களும் அடியோடு பெயர்க்கப்பட்டு எடுத்துச் செல்லப்பட்டுள்ளமை தற்போது உறுதி செய்யப்படுகின்றது.
தமிழ் மக்களின் வழிபாட்டு தலங்களை திட்டமிட்டு அழிக்கும் இலங்கை அரச தரப்பு, அங்கிருக்கும் பழமையும் புனிதமும் வாய்ந்த விக்கிரகங்களையும் எடுத்துச் செல்வதை எவ்வகையிலும் ஏற்க முடியாதது என்கிறார்கள் உள்ளூர் மக்கள். வலிந்து உடைக்கப்பட்ட, அல்லது எடுத்துச் செல்லப்பட்ட சிலைகள் எங்கே என்கிற கேள்வியும் இங்கு எழுகிறது.
இதேநேரம் இலங்கையில் உள்ள தொல்லியல்த் திணைக்களம் என்பது தொன்மைகளையும் வரலாற்றையும் பாதுகாக்கவில்லை மாறாக சிங்களத்தையும் பெளத்தத்தையும் மட்டுமே வளர்ப்பதாக தமிழர்கள் தொடர்ந்தும் குற்றஞ்சாட்டி வரும் நிலையில், வெடுக்குநாறிமலைச் சம்பவம் சைவ சமயத்தின் மீதான திட்டமிட்ட தாக்குதல் மற்றும் அழிப்பை நிரூபிக்கும் வகையிலான மற்றொரு சம்பவமாக உள்ளது என்பதை மறுப்பதற்கில்லை.
இவ்வாறு வெடுக்குநாறி ஆலய விக்கிரகங்கள் உடைக்கப்பட்டு அவற்றில் சில அயலில் உள்ள காடுகளில் வீசப்பட்டுள்ளமை கண்டுகொள்ளப்பட்டுள்ளதாக ஆலயப்பகுதிக்கு சென்று திரும்பியவர்கள் உதயனிடம் உறுதி செய்தனர்.
தொடர்ச்சியாக இந்து ஆலயங்கள் சூறையாடப்படுவதும், ஆலயத்திற்கு சொந்தமான இடங்கள் அபகரிக்கப்படும் விடயத்தில் சில கேள்விகள் எழுவதை தவிர்க்க முடியவில்லை.
போர்க்காலத்திலும் சரி, அதற்கும் பின்னரான காலப்பகுதியிலும் தமிழர் தாயகப் பகுதிகளில் கிறிஸ்தவ தேவாலயங்களோ அல்லது முஸ்லிம் பள்ளிவாசல்களோ தொல்லியல் பிரதேசம் என்ற போர்வையிலோ, பாதுகாப்பு அச்சுறுத்தல் என்ற மாயையிலோ திட்டமிட்டு ஆக்கிரமிக்கப்படவில்லை என்பதை அவதானிக்க முடிகிறது. அதேவேளை விமானப் படையினரின் வான்வழித் தாக்குதலில் இந்து ஆலயங்களைப் போன்றே தேவாலயங்களும் தாக்குதலுக்கு இலக்காயின என்பதையும் மறுக்க இயலாது. ஆனால் அவை வலிந்த ஆக்கிரமிப்பு மற்றும் அழிப்பு என்ற வரையறைக்குள் வரவில்லை என்று சமூகச் செயற்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
கடந்த 2012ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி தம்புள்ள பகுதியில் இருந்த பள்ளிவாசல் ஒன்றில் முஸ்லிம்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்த போது, பாதுகாப்பு படையினரின் அனுசரணையுடன் சிங்கள் பௌத்த பிக்குகள் அங்கு அதிரடியக நுழைந்து அவர்களை அங்கிருந்து விரட்டியடித்தது உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பெரும் பிரச்சனையக வெடித்தது. அந்த சமயத்தில் அப்பகுதிக்குச் சென்று வந்த செய்தியாளர்கள் அந்த பள்ளிவாசல் என்பது முழுமையான கட்டுமானங்களுடன் இல்லாமல் தகரங்களைக் கொண்டு ஒரு தடுப்பு ஏற்படுத்தி ஒரு தற்காலிக அமைப்பைப் போன்றே இருந்தது என்றனர். ஆனாலும் அவ்விடம் ஒரு வழிப்பாட்டு தலமாக கருதப்பட்டமையால் அங்கு கடும்போக்கு பிக்குகள் நுழைந்து தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்களை விரட்டியடித்தது பெரும் பேசுபொருளாகியது.
உடனடியக இஸ்லாமிய நாடுகள் கடும் கண்டனத்தை தெரிவித்தன. இலங்கையில் முஸ்லிம்களிற்கு பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்படுமாயின் தாங்கள் வழங்கும் ஆதரவு மற்றும் உதவிகளை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்று அந்த நாடுகள் இலங்கையை மிரட்டின. அரசும் அடிபணிந்தது. அதேவேளை அந்த பள்ளிவாசல் அவ்விடத்தில் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ளது என்று பௌத்த தரப்பும் அரசும் கூறியதை முஸ்லிம்கள் மறுத்தாலும், அவர்கள் தமது ’பள்ளிவாசலில்’ அத்துமீறி நுழைந்து அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் நீதிமன்றம் செல்லவில்லை என்பதெல்லாம் வரலாறு.
ஆனால் தமிழ் (இந்து) மக்களின் வழிபாட்டு இடங்கள், கலாச்சார மையங்கள், பண்பாட்டு இடங்கள் மீதான தாக்குதல் நடக்கும் போது உலக நாடுகளும், அண்டை நாடான இந்தியாவும் மௌனத்தையே கடைபிடிக்கின்றன. தற்போது தாக்குதலுக்கு உள்ளாகி வரும் இடங்கள் சரித்திர ரீதியாக பிரபலமானவை. பல நூற்றாண்டுகள் பழமையானவை. அவை தலைமுறை தலைமுறையாக வழிபட்டு வந்த இடங்கள். ஆனால், தமிழ் மக்கள் என்று வரும் போது மாறுபட்ட அளவுகோல்கள் கடைபிடிக்கப்படுகின்றன என்பதே யதார்த்தமாக உள்ளது.
”வெடுக்குநாறி மலையில் ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் இடித்தழிக்கப்பட்டமை தொடர்பில் அரசு உரிய கவனம் செலுத்தும், பொலிஸாரும் உரிய நடவடிக்கை எடுப்பார்கள், குண்டர்களின் காடைத்தனமான செயற்பாட்டைத் தூக்கிப் பிடித்துக்கொண்டு இன ரீதியில் – மத ரீதியில் பிளவுகளை ஏற்படுத்த வேண்டாமென சகல தரப்பினரையும் கேட்டுக்கொள்கின்றேன்” என்று பௌத்தசாசன மத மற்றும் கலாசார விவகார அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க திருவாய் மலந்துள்ளார்
வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் இடித்தழிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுத்து, ஆலயத்தை மீள அமைத்துக் கொடுப்பதற்குரிய நடவடிக்கைகள் எடுக்குமாறும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளதாக, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா கூறுகிறார்.
ஒன்றிணைந்த தேசம், ஒரே மக்கள், ஒரே சட்டம் என்றெல்லம் பேசும் சிங்கள அரசு, சிறுபான்மையினரின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில், அவர்களின் வழிபாட்டு இடங்கள் மீதான தாக்குதலை முன்னெடுத்து அழித்தொழிக்கும் நடவடிக்கையில் திட்டமிட்டு ஈடுபடும் நிலையில், ஒன்றிணைந்து நாட்டை கட்டியெழுப்புவோம் என்பவை வெற்று கோஷங்களாகவே இருக்கும் என்பதே பொதுவான கருத்தாக உள்ளது.