பல்லாரி மாநகராட்சி காங்., வசமானது கர்நாடகாவின் ‘இளம் வயது மேயர்’ தேர்வு
Share
பல்லாரி மாநகராட்சியின் புதிய மேயராக காங்கிரசின் திரிவேணி, துணை மேயராக ஜானகி தேர்வு செய்யப்பட்டனர். கர்நாடகாவின் இளம் வயது மேயர்’ என்ற பெருமை, திரிவேணிக்கு கிடைத்துள்ளது. பல்லாரி மாநகராட்சி 39 உறுப்பினர்கள் பலம் கொண்டது. காங்கிரஸ் 21, பா.ஜ., 13 உறுப்பினர்கள், ஐந்து சுயேச்சை உறுப்பினர்கள் உள்ளனர். இந்த மாநகராட்சிக்கு 2021 ஏப்ரலில் தேர்தல் நடந்தது. தற்போதைய மாநகராட்சியின் இரண்டாம் ஆண்டு மேயர், துணை மேயர் பதவிக்கு, நேற்று தேர்தல் நடந்தது.
மேயர் பதவி எஸ்.சி.,க்கும், துணை மேயர் பதவி எஸ்.டி.,க்கும் ஒதுக்கப்பட்டது. காங்கிரசில் பலத்த போட்டி ஏற்பட்டது. மேயர் பதவிக்கு திரிவேணி, உமாதேவி, குபேரா வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.காங்கிரசின் தேர்தல் பார்வையாளர் சந்திரப்பா, நேற்று முன் தினம் மாலை பல்லாரிக்கு வந்தார். மேயர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்தவர்களுடன், ஆலோசனை நடத்தினார்.
நேற்று மீண்டும் கூட்டம் நடத்தி, திரிவேணியை ஒருமித்த வேட்பாளராக தேர்வு செய்தார். உமாதேவியும், குபேராவும் வேட்பு மனுவை திரும்ப பெற்றனர். அப்போது உமாதேவி கண்ணீர் வடித்தார்.காங்., சார்பில் திரிவேணி, பா.ஜ., வேட்பாளராக நாகரத்னம்மா போட்டியிட்டனர். திரிவேணிக்கு 28 ஓட்டுகளும், நாகரத்னம்மாவுக்கு 16 ஓட்டுகளும் கிடைத்தன.
துணை மேயர் பதவிக்கு, காங்கிரசின் ஜானகம்மா மட்டுமே, வேட்பு மனு தாக்கல் செய்திருந்ததால், போட்டியிட்டு தேர்வு செய்யப்பட்டார்.பல்லாரி மாநகராட்சி ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என, பா.ஜ.,வின் முயற்சி பலனளிக்கவில்லை.புதிய மேயராக தேர்வு செய்யப்பட்ட திரிவேணிக்கு 23 வயது. கர்நாடகாவின் இளம் வயது மேயர் என்ற பெருமை, இவருக்கு கிடைத்தது. பட்டப்படிப்பு முடித்த இவர், தன் குடும்பத்தின் இரண்டாவது மேயர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது தாய் சுசிலா பாய், பல்லாரி மாநகராட்சி மேயராக இருந்துள்ளார்.