மலேசியாவில் தமிழ் வாழ்வதற்கு தமிழ்ப் பள்ளிகளே முழு காரணம்
Share
-மனித வள அமைச்சர் சிவகுமார்
-நக்கீரன்–கோலாலம்பூர்
உலகில் தமிழர்கள் எத்தனையோ நாடுகளில் வாழ்ந்தாலும் அத்தனை நாடுகளிலும் தமிழும் வாழ்வதில்லை. ஆனால், மலேசியாவில் தமிழர்களுடன் தமிழும் சேர்ந்து வாழ்வதற்கு இந்த நாட்டில் உள்ள தமிழிப் பள்ளிகளே காரணம் என்று மனித வள அமைச்சர் வ.சிவக்குமார் கூறினார்.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ்ப் பள்ளிகள் இருந்ததாக சொல்லப்பட்டாலும் அண்மைய வரலாற்றுத் தகவலின்படி 888 தமிழ்ப் பள்ளிகள் இருந்ததற்கான ஆதாரம் உள்ளது.
ஆனாலும் இப்பொழுது 528 தமிழ்ப் பள்ளிகள் இருப்பதாகத் தெரிகிறது. இப்படி தமிழ்ப் பள்ளிகளின் எண்ணிக்கை குறைந்ததற்கு தனிப்பட்ட எவரையும் குறைகூற முடியாது. தோட்டப் புறங்களில் வாழ்ந்த மக்கள், நகர்ப் பகுதிகளுக்கு இடம்பெயர்ந்ததால், மாணவர்கள் இல்லாத நிலையில்தான் நூற்றுக் கணக்கான தமிழ்ப் பள்ளிகள் மூடப்பட்டன.
ஒருசில பள்ளிகள் ஒருசில மாணவர்களுடன் இன்னமும் செயல்படுவதைக் காண முடிகிறது. தோட்டப் பகுதிகளில் உள்ள தமிழ்ப் பள்ளிகள் மாணவர் பற்றாக்குறை காரணமாக மூடப்படக் கூடாதென்ற அக்கறையில் ஒருசில இடங்களில் நகர்ப் பகுதியில் உள்ள பிள்ளைகளை வாகனங்களின்மூலம் அழைத்துச் சென்று அத்தகையப் பள்ளிகளில் சேர்த்து மாணவர் எண்ணிக்கையை உயர்த்திக் காட்டி ஒருசில பள்ளிகள் காப்பாற்றப் படுகின்றன.
அப்படிப்பட்ட பணியை மேற்கொள்பவர்களுக்கு சமுதாயம் நன்றி பாராட்ட வேண்டும். அதேவேளை, காலமெல்லாம் இப்படியே செயல்பட முடியாது.
மாணவர் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ள பள்ளிகளை நகர்ப் பகுதிகளுக்கு மாற்றி, அப்படி காப்பாற்றுவதுதான் ஒரேவழி என்று சிவகுமார் பினாங்கு கவிஞர் செ. குணாளனின் அந்தாதிப் பறவைகள் நூல் அறிமுக விழாவில் கலந்து கொண்டு நூல் அறிமுகம் செய்யும் முன், தலைமையுரை ஆற்றியபோது பேசினார்.
வரும் ஆகஸ்ட் மாதத்தில் தமிழ் எழுத்தாளர்களுக்காக இலக்கியப் பட்டறை நடத்த இருப்பதாகவும் அதில் கலந்து கொள்ளும் எழுத்தாளர்களில் 10 பேர், தங்களின் நூலை வெளியிட ஆதரவு அளிக்க இருப்பதாகவும் அமைச்சர் அறிவித்தார்.
எழுத்தாளர்கள், நூலை இயற்றி, அவற்றை வெளியீடு செய்யும்பொழுது ஏற்படும் பலகட்ட சிரமங்களை தான் அனுபவப்பூர்வமாக அறிவேன் என்றும் தான் ஒரு நூலை வெளியிட்டபோது அந்த அனுபவம் கிடைத்ததாகவும் சிவகுமார் தெரிவித்தார்.
நிறைவாக, அந்தாதிப் பறவைகள் நூலை அறிமுகம் செய்யும்முன், நூலாசிரியர் செ. குணாளன் உரை நிகழ்த்தினார்.