LOADING

Type to search

இலங்கை அரசியல்

ரணில் சமாளிக்கிறார்? | யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார்

Share

கடந்த ஆண்டு இதே காலம் எரிபொருள்,எரிவாயுவுக்காக வரிசையில் நின்ற மக்கள், இந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக பல்பொருள் அங்காடிகளிலும் புடவை கடைகளிலும் வரிசையாக நிற்கிறார்கள். இது ஒரு காட்சி மாற்றம். ரணில் விக்ரமசிங்க ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பின் பொருளாதாரத்தை படிப்படியாக நிமிர்த்தி வருகிறார் என்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தும் காட்சி மாற்றம்.

அவர் ஆட்சிப் பொறுப்பை ஏற்றதிலிருந்து தொடர்ச்சியாக இவ்வாறு காட்சி மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டேயிருக்கிறார். பொருளாதார நெருக்கடியில் இருந்து நாடு நிமிர்ந்து எழுகிறது என்று ஒரு தோற்றத்தை அவர் வெற்றிகரமாகக் கட்டியெழுப்பி வருகிறார். பன்னாட்டு நாணய நிதியத்தின் உதவியை ஒரு பெரிய அடைவாக அவர் காட்டுகிறார். ரணிலைத் தவிர வேறு யார் அவருடைய இடத்தில் இருந்தாலும் இதுபோன்ற மாற்றங்களை ஏற்படுத்த முடியாது என்று படித்த சிங்கள நடுத்தர வர்க்கம் நம்பத் தொடங்கிவிட்டது. சிங்கள நடுத்தர வர்க்கம் மட்டுமல்ல, கீழ் நடுத்தர வர்க்கம், போதிய வருமானத்தை பெறாத பிரிவினர் போன்றவர்களும்கூட நாடு ஏதோ ஒரு விதத்தில் முன்னேறுவதாக நம்புகிறார்கள். அண்மையில் தொழிற்சங்கங்கள் அழைத்த வேலை நிறுத்தங்கள் எதிர்பார்த்த வெற்றிகளைப் பெறவில்லை. அதற்கு காரணம் மக்கள் போராடும் மனோநிலையில் இல்லை என்பதே.

தொழிற்சங்கப் போராட்டங்கள் எதிர்பார்த்த பெரு வெற்றிகளை பெறாததற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உண்டு. முதலாவது காரணம் மக்களுக்கு கஷ்டங்கள் பழகிவிட்டன. இயல்பின்மையை ஓர் இயல்பாக அவர்கள் ஏற்றுக் கொள்ளத் தொடங்கி விட்டார்கள். இரண்டாவது காரணம், ரணில் விக்கிரமசிங்க ஏற்படுத்தி வரும் காட்சி மாற்றங்கள்.

எரிபொருள் எரிவாயு விநியோகத்தை ஏதோ ஒரு வழமைக்கு கொண்டு வந்தமை ஒரு பெரிய வெற்றியாகக் கருதப்படுகிறது. நாட்கணக்காக  எரிபொருளுக்காக வரிசைகளில் காத்திருந்த ஒரு நாடு, இப்பொழுது வரிசைகளில் நிற்பதில்லை. க்யூ ஆர் கோட் எனப்படுவது ஒரு அற்புதமான தீர்வு. அது எரிபொருள் நுகர்வை மட்டுப்படுத்தியது. அதன்மூலம் எரிபொருள் பதுக்கப்படுவதைக் குறைத்தது. மேலும் எரிபொருளுக்காக வெளியே போகும் டொலர்களையும் குறைத்தது. அதனால் எரிபொருள் விநியோகம் ஓரளவுக்குச் சீராகியது. ஒரு நாடு எதிர்கொண்ட மிக நெருக்கடியான ஒரு காலகட்டத்தில் ஓர் இலத்திரனியல் தீர்வு எப்படி ஒரு நிவாரணமாக அமைய முடியும் என்பதற்கு கியூஆர் கோட் ஒரு சிறந்த முன்னுதாரணம். அங்கேயும் விமர்சனங்கள் உண்டு. நாளாந்தம் தூர இடங்களுக்கு பயணம் செய்பவர்கள் தங்களுக்கு வழங்கப்படும் கோட்டா காணாது என்று கூறுகிறார்கள். ஆனால் எரிபொருள் வினியோகம் ஏதோ ஒரு வழமைக்கு வந்துவிட்டது என்பதே பொதுசன அபிப்பிராயமாக உள்ளது.

மேலும் அரசாங்கம் விலைகளை படிப்படியாகக் குறைத்து வருகிறது. குறிப்பாக புத்தாண்டை முன்னிட்டு சமையல் எரிவாயுவின் விலை ஆயிரம் ரூபாய்க்கு மேல் குறைக்கப்பட்டது. இதுபோன்ற மாற்றங்களின்மூலம் மக்களுடைய கோபமும் சலிப்பும் ஒப்பீட்டளவில் குறைந்து வருகின்றன.அதனால் மக்கள் தொடர்ச்சியாகப் போராடத் தயார் இல்லை.

அது மட்டுமல்ல,உள்ளூராட்சி சபைத் தேர்தலை குறித்து மக்கள் இப்பொழுது பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை.மக்கள் மட்டுமல்ல எதிர்க்கட்சிகளும் அதைப்பற்றி குரல் எழுப்புவது குறைந்து வருகிறது. சில மாதங்கள் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நோக்கிக் கட்சிகளின் கவனத்தைக் குவிய வைத்து, காசு செலவழித்து சுவரொட்டிகளை அடிக்க வைத்ததில் ரணில் விக்கிரமசிங்க எதிர்பார்த்த வெற்றியைப் பெற்றுவிட்டார். நெருக்கடியான ஒரு காலகட்டத்தில் பெரிய காசைச் செலவழித்து சுவரொட்டிகளை அடித்த எதிர்க்கட்சிகள் அந்த சுவரொட்டிகளை சுவர்களில் ஒட்டிவிட்டு தேர்தல் வருமா வராதா என்ற நிச்சயமின்மைகளோடு காத்திருக்க, ரணில் விக்கிரமசிங்க மிகவும் தந்திரமாக நிர்வாக நடைமுறைகளைச் சுட்டிக்காட்டி தேர்தலை ஒத்திவைத்துக் கொண்டே போகிறார். தேர்தல் விடயத்தில் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு ஒப்பீட்ளவில் குறைந்து வருகிறது. இந்த விடயத்தில் ரணில் எதிர்க்கட்சிகளை மிகத் தந்திரமாக சமாளித்து விட்டார் என்று சொல்ல வேண்டும். அவர் உள்ளூராட்சி சபைத் தேர்தலை விடவும் ஜனாதிபதி தேர்தலையே இலக்குவைத்து உழைப்பதாகத் தெரிகிறது.

அடுத்த ஜனாதிபதி தேர்தலை அடுத்த ஆண்டு நடத்த வேண்டும். அதற்கிடையில் அவர் தன் சொந்தக் கட்சியைப் பலப்படுத்த வேண்டும். அவருடைய சொந்தக் கட்சியான யுஎன்பியைப் பலப்படுத்துவது என்பது சஜித் பிரேமதாசாவை எப்படி உடைப்பது என்பதுதான்.அந்த வேலையை அவர் ஏற்கனவே தொடங்கி விட்டார். எனினும் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் அவர் ஒரு பொது வேட்பாளராக களமிறங்குவது பற்றியே சிந்திப்பதாகத் தெரிகிறது. ராஜபக்ஷைகளுக்கு அவர் தேவை.ராஜபக்சக்கள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் செல்வாக்கிழந்து காணப்படுகிறார்கள். ஒரு நெருக்கடியான காலத்தைக் கடப்பதற்கு அவர்களுக்கு ரணில் தேவை.அதிலும் குறிப்பாக நாமல் ராஜபக்சவை அடுத்த ஜனாதிபதியாக தயார்படுத்துவதற்கு இடைப்பட்ட காலகட்டத்தில் ரணிலைப்போல பொருத்தமான வேறு யாரும் அவர்களுக்கு இல்லை.எனவே ரணிலை வைத்துக் கொண்டே அவர்கள் தங்களைப் பலப்படுத்த முயற்சிப்பார்கள்.இந்த அடிப்படையில் சிந்தித்தால், அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் அவர்கள் ரணிலையே ஆதரிக்கக் கூடிய வாய்ப்புகள் அதிகமாகத் தெரிகின்றன.

எனவே இப்பொழுது ரணில் முன்னால் உள்ள பெரிய சவால்கள் மூன்று. ஒன்று பொருளாதாரத்தை நிமித்துவது.இரண்டு யு.என்.பியைப் பலப்படுத்துவது. மூன்று இனப்பெருச்சினையைத் தீர்ப்பது.

பொருளாதாரத்தை மீட்கும் நடவடிக்கைகளை அவர் ஏற்கனவே தொடங்கி விட்டார். அவருக்குத் தெரியும் அவருடைய காலத்துக்குள் அதை செய்வதென்றால் அவரிடம் மந்திரக்கோல் இருக்க வேண்டும். எனவே அவர் தன்னுடைய ஆட்சிக் காலத்தில் ஒப்பீட்டளவில் மாற்றத்தைக் கொண்டு வந்தால் போதும் என்று சிந்திக்கிறார். இதில் தனக்குள்ள வரையறைகள் அவருக்குத் தெரியும்.

இரண்டாவது யூ.என்.பியைப் பலப்படுத்துவது. அதை வேறு வார்த்தைகளில் சொன்னால் சஜித்தை பலவீனப்படுத்துவது. பொருளாதாரத்தை மெல்ல மெல்ல நிமிர்த்தினால் அதுவே சஜித்தைப் பலவீனப்படுத்திவிடும். அதே சமயம் பதவி ஆசைகளைக் காட்டி சஜித்தோடு நிற்கும் முன்னாள் யூ.என்.பிக்காரர்களை கழட்டி எடுக்க வேண்டும். அதை அவர் விரைவாகச் செய்வார்.

மூன்றாவது, இனப்பிரச்சினையைத் தீர்ப்பது. அது தன்னால் முடியும் என்று ரணில் கருதுவதாகத் தெரியவில்லை. தனக்குக் கிடைத்திருக்கும் ஒன்றரை ஆண்டு காலத்துக்குள் அதைச் செய்ய முடியாது என்பது அவருக்கு நன்கு தெரியும். சில சமயம் அடுத்த ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டாலும் அந்த ஐந்து ஆண்டு காலகட்டத்திலும் கூட ஒரு தீர்வை கொண்டு வரலாமா என்பது அவரைப் பொறுத்தவரை சந்தேகந்தான். இனப்பிரச்சினையைத் தீர்ப்பது என்பது ஒரு சிங்களத் தலைவரைப் பொறுத்தவரை ரிஸ்க் எடுப்பது. அப்படி ஒரு ரிஸ்க்கை எடுக்க கூடிய தலைவராக ரணிலைப் பார்த்தால் தெரியவில்லை. இப்போதுள்ள பதவிக்காலத்தில் ஒன்றரை ஆண்டு காலத்துக்குள் அவர் ரிஸ்க் எடுக்கவே மாட்டார். இனப்பிரச்சினையில் கைவைக்கப் போய் எல்லாவற்றையும் கொட்டிக் குலைக்க அவர் தயாராக இருக்க மாட்டார். தென்னாபிரிக்கப் பாணியிலான நல்லிணக்க முயற்சி என்று அவர் கூறுவது அந்த நோக்கத்தில்தான்.

இலங்கைத்தீவின் சிங்கள பவுத்த அரசாட்சியைப் பொறுத்தவரை நல்லிணக்க முயற்சிகள் என்றால் நாடகங்களே. எனவே இந்த ஒன்றரை ஆண்டை கடப்பதற்குரிய நாடகமாகவே அதைப் பார்க்கவேண்டும். 2015ல் அவர் ஆட்சிக்கு வந்தபோதும் அப்படி ஒரு நாடகத்தை ஆடினார். அந்த நாடகத்தை 2018 ஆம் ஆண்டு மைத்திரி குழப்பினார்.மீண்டும் அதே நாடகம். எனவே அவருடைய இப்போதுள்ள பதவிக்காலத்தில் அவர் இனப்பிரச்சினையைத் தீர்க்க முயற்சிக்க மாட்டார். குறிப்பாக தமிழ்க் கட்சிகள் அதற்கு ஒத்துழைக்கப் போவதில்லை என்பதும் அவருக்கு தெரியும். எனவே இந்தவிடயத்தில் ரிஸ்க் எடுப்பதை விடவும் காலத்தை கடத்துவதே பொருத்தமானது என்று அவர் கருதக்கூடும். இருக்கின்ற ஒன்றரை ஆண்டுக்குள் தன்னை நன்கு பலப்படுத்திக் கொண்ட பின் அடுத்த ஆட்சி காலத்தில் இனப்பிரச்சினைக்கு தீர்வு கொண்டு வருவதென்றால் அங்கேயும் அவர் ரிஸ்க் எடுக்க வேண்டியிருக்கும் .

தனக்கு முன் இருந்த தலைவர்கள் ரிஸ்க் எடுக்கத் துணியாத ஒரு விடயத்தில் தான் ரிஸ்க் எடுக்கப்போய் தன்னுடைய வாழ்வின் இறுதிக்கட்டத்தில் கிடைத்திருக்கும் சிம்மாசனத்தை ஏன் இழக்க வேண்டும் என்று அவர் சிந்திப்பாராக இருந்தால், இனப்பிரச்சினையைத்  தீர்ப்பதற்கு அவர் முயற்சிக்க மாட்டார். தீர்ப்பது போல ஒரு நாடகத்தை ஆடுவார். அவ்வளவுதான்.

ஆனால் இனப்பிரச்சினையைத் தீர்க்காமல் பொருளாதாரத்தை முழுமையாக நிமிர்ந்த முடியாது. எனது கட்டுரைகளில் நான் திரும்பத் திரும்ப கூறுவதுபோல, பொருளாதார நெருக்கடி எனப்படுவது இனப்பிரச்சினையின் நேரடி விளைவு. பொருளாதார நெருக்கடியை நிரந்தரமாகத் தீர்ப்பது என்றால் அதற்கு இனப்பிரச்சினியை முதலில் தீர்க்க வேண்டும். இனப்பிரச்சினையைத்  தீர்ப்பது என்றால் நாட்டின் ஒற்றையாட்சிக் கட்டமைப்பை மாற்றத் தயாராக இருக்க வேண்டும். ஆனால் ஒற்றையாட்சி கட்டமைப்பை மாற்றுவது என்பது சிங்கள பௌத்த அரசாட்சிச் சிந்தனையை மாற்றுவது.அது நூற்றாண்டு கால சிந்தனையில் மாற்றத்தை ஏற்படுத்தும் விடயம். ரணில் அப்படியெல்லாம் புரட்சிகரமான மாற்றங்களை செய்யக்கூடிய ஒருவர் அல்ல. இருக்கிற நிலைமைகளை எப்படிச் சமாளிக்கலாம். பதவியில் இருக்கும்வரை எப்படி ஒப்பீட்டளவில் முன்னேற்றத்தை காட்டலாம், இந்தியாவையும் அமெரிக்காவையும் சீனாவையும் ஒரேதூரத்தில் வைத்து எப்படிக் கையாளலாம் என்றுதான் அவர் யோசிப்பார்.அதாவது சமாளிப்பது.வருகிற ஒன்றரை ஆண்டுகளை சமாளித்து விட்டால் அடுத்த பதவிக்காலம் அவருக்கு காத்திருக்கும். அங்கேயும் சமாளித்தால் சரி.பிரச்சினையை அடுத்த தலைவரிடம் கையளித்து விட்டு ஓய்வுபெறலாம்