IPL 2023 : ஷுப்மன் கில், மோஹித் ஷர்மா அபாரம்.. குஜராத் அணி த்ரில் வெற்றி
Share
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், குஜராத் டைடன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில், த்ரில் வெற்றியை பதிவு செய்துள்ளது.
16-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மொஹாலியில் நேற்று நடைபெற்ற 18வது லீக் ஆட்டத்தில், பஞ்சாப், குஜராத் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி, தொடக்கத்திலேயே அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து தடுமாறியது.
அந்த அணியில் துவக்க வீரர்கள் பிரப்சிம்ரன் சிங், ஷிகர் தவான் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். மேத்யூ ஷார்ட் அதிகபட்சமாக 36 ரன்களும், ஜிதேஷ் ஷர்மா 25 ரன்களும் சேர்த்தனர். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி, 8 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் சேர்த்தது. குஜராத் பந்து வீச்சாளர் மோஹித் ஷர்மா 4 ஓவர்கள் வீசி 18 ரன்களை விட்டுக் கொடுத்து 2 விக்கெட்களை கைப்பற்றினார்.
இதையடுத்து 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி ஆரம்பம் முதலே அதிரடியாக ரன் சேகரிப்பில் இறங்கியது. துவக்க வீரர்கள் விருத்திமான் சாஹா 19 பந்துகளில் 30 ரன்களும், ஷுப்மன் கில் 49 பந்துகளில் 67 ரன்களும் சேர்த்து சிறப்பான தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தனர்.
இதன் காரணமாக போட்டி நிறைவடைய ஒரு பந்து மீதமிருந்த நிலையில், குஜராத் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக மோஹித் ஷர்மா தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் குஜராத் அணி புள்ளிப் பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது.