LOADING

Type to search

இலங்கை அரசியல்

விநாயகர் விமர்சனம் | அரங்கேறும் நரித்தனம்….ஆடுவதற்கு ஒரு கூட்டம்….

Share

(கனடா உதயனிற்கான பிரத்தியேக கட்டுரைத் தொடர்- பகுதி 11)

கொழும்பிலிருந்து கலாநிதி முருகேசு கணேசமூர்த்தி

இலங்கை நாட்டில் சாதாரண பொதுமக்களுக்கு நன்மையும் நிம்மதியும் தரக்கூடிய மாற்றங்கள் பற்றிய தகவல்கள் வந்து கொண்டிருக்குதோ இல்லையோ நம்மை வயிறு குலுங்கச் சிரிக்கவைக்கும் தலைப்புச் செய்திகளுக்குப் பஞ்சமே இல்லை. 

இலங்கைக் குரங்கு சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்படப் போகுதாம் என்று வந்திருக்கிறது செய்தி. சீனாவுக்கு போற குரங்கு பெரும்பான்மை சிங்களக் குரங்கா அல்லது சிறுபான்மைத் தமிழ்க்குரங்கா என்று கேட்கிறது ஒரு பதிவு. சீனா கேட்ட ஒரு இலட்சம் குரங்குகளோடு பாராளுமன்றத்தில் அடிக்கடி பக்கம் தாவிக்கொண்டிருக்கும் 225 குரங்குகளையும் இலவசமாக சீனாவுக்கே அனுப்பி விடுங்கள் என்கிறது இன்னொரு அரசியல் கார்ட்டூன். குரங்கு மட்டுமல்ல விவசாயத்தை அழிக்கும் மயில்கள் மரஅணில்கள் காட்டுப்பன்றிகள் என்பவற்றையும் ஏற்றுமதி செய்து பணம் சம்பாதிக்கலாம் என சில அறிவுக் கொழுந்துகள் ஆசை காட்டி அறிக்கைகளையும் விடுக்கின்றன. 

அது ஒருபுறமிருக்க பிந்திய செய்தியாக இப்போது காலி முகத்திடலில் சமய நிகழ்வுகளைத்தவிர வேறு எந்த நடவடிக்கைக்கும் அனுமதி இல்லை என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதிகளவு மக்கள் கூடுவதால் அங்குள்ள புற்றரைகள் பாதிக்கபடுவதாகவும் அதனை சீர்செய்ய அதிகளவு நிதி செலவிடப்பட்டுள்ளதாகவும் அரசாங்கம் கூறுகிறது.  உண்மையில் காலி முகத்திடல் என்பது டச்சுக்காரர்களின் ஆட்சியில் ஒரு கொலைக்களமாகப் பயன்படுத்தபட்டு வந்திருக்கிறது என்பது பலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. 

கோட்டாவின் ஆட்சிக்காலத்தில் காலிமுகத்திடலின் ஒரு பகுதியில் மக்கள் தங்கள் குறைகளை வந்து கூற ஒதுக்கப்பட்டிருந்தது. பெரிய கதிரையில் இப்போது அமர்ந்துள்ளவர் அப்போது அரகலயகாரர் அங்கு போராட்டம் நடத்தத் தடையில்லை என்றும் வேண்டுமென்றால் அங்கு மேலதிக வசதிகளை ஏற்படுத்தித் தரலாம் என்றும் சுற்றுலாப்பயணிகளும் கூட அவற்றிலே பங்கேற்று அரசாங்கத்திற்கு எதிராகக் கோஷம் எழுப்பலாம் என்றும் வேடிக்கை காட்டினார். பதவிக்கு வந்தபின் இப்போது அந்த திசையைப்பார்த்தாலே அடித்துச் துவைத்துக்காயப் போடுகிறார். இவருக்கு முன்னர் இருந்த ஆமிக்கார ஆளே பரவாயில்லை என்று கூறுகிறார்கள் அடிபட்டுத் தெளிந்தவர்கள். ஒரு முக்கியமான பிரச்சினையில் குவிந்த கிடக்கும் மக்கள் கவனத்தை திசை திருப்ப வேண்டுமானால் மக்கள் பேசிக்கொண்டு திரியக் கூடிய வேறெரு பிரச்சினையை கொளுத்திப் போடவேண்டும். அது முடிய இன்னொரு கண்கவர் செய்தியைப் போட்டுத் தாக்க வேண்டும். ஒரு சினிமாப்படம் பார்க்கும் ரசிகனை கிளைமாக்ஸில் கதிரையின் நுனியில் உட்காரவைப்பதில் படத்தின் வெற்றி தங்கியிருப்பதைப் போல அரசியலிலும் வெற்றியும் நிலைத்திருத்தலும் ஒரு தலைவர் அல்லது கட்சி பற்றி அடிக்கடி காட்டப்படும் இமேஜின் அடிப்படையிலேயே தங்கியிருக்கும். இப்போது மீண்டும் தலைதூக்க ஆரம்பித்திருக்கும் புலிப்பூச்சாண்டி அதில் ஒரு வகை. ன்னதான் குறைகள் இருந்தாலும் நாட்டை பயங்கரவாத்தில் இருந்து மீட்ட தலைவர்கள் அல்லவா என்று ஊடகங்களில் கொளுத்திப்போடப்படுவது இதனால் தான். அத்தோடு மகிந்தவோடு எதையும் பேசித் தீர்த்துக்கொள்ளலாம்- இவரோடு பேச வாயைத்திறக்கவே முடியவில்லையே என்று பலர் அங்கலாய்ப்பதும் அடிக்கடி கேட்கிறது. அதேபோல இவர் ஆனானப்பட்ட அரகலயவையே விரட்டி விட்டார் பாருங்கள் என்று ஒரு தரப்பினர் சிலாகிக்கின்றனர்

இவரது பொருளாதாரக் கொள்கைகள் பலன் தர ஆரம்பித்திருக்கின்றன என்று பொருளாதாரம் கற்றவர்களே பேச ஆரம்பித்திருக்கிறார்கள். பல்கலைக்கழகங்களின் கல்விசார் ஆளணியினர் அரசாங்கத்தின் நியாயமற்ற வரிக்கொள்கையை மாற்றியமைத்தல் உட்பட வேறு கோரிக்கைகளையும் முன்வைத்து சிலவாரங்களாக வேலை நிறுத்தம் செய்திருந்தனர். அவர்களின் தொழிற்சங்கங்கள் இலங்கை அதிபருடன் சந்திப்புக்கு விடுத்த கோரிக்கைகளுக்கு பதிலெதுவும் கூறாமல் இலங்கைப்பல்கலைக்கழங்களில் பொருளியல் கற்பிக்கும் விரிவுரையாளர்களை சந்தித்து சர்வதேச நாணய நிதியத்தின் செயற்திட்டம் குறித்து அவர்களுக்கு விளக்கமளிக்கவேண்டும் என்று ஒரு கூட்டத்திற்கு அழைப்ப விடுக்கப்பட்டது. விரிவுரையாளர்களின் தொழிற்சங்கம் கூட்டத்திற்குச் செல்ல வேண்டாம் என்று கூறியது ஆனால் சுமார் முப்பது பேர்வரையில் மேற்படி கூட்டத்தில் கலந்து கொண்டதாகவும் அதில் பெரும்பாலானவர்கள் வடக்கு கிழக்கில் உள்ள பல்கலைக்கழகங்களில் பொருளியல் கற்பிக்கும் தமிழ்மொமி பேசும் விரிவரையாளர்கள் எனவும் அறியக் கிடைத்தது. ’பேசுவோம் வாங்கோ’ என்று அழைத்தவர் தனிச்சிங்களத்தில் கூட்டத்தை நடத்தி தமிழ்மொழி மூல விரிவுரையாளர்களுக்கு சிறப்பான கவனிப்பச் செய்திருக்கிறார். 

நெடுந்தூரம் மணித்தியாலக்கணக்கில் பல்கலைக்கழக வண்டிகளில் பயணித்து கூட்டத்தில் ஆர்வத்தடன் கலந்து கொண்ட தமிழ்மொழி மூல விரிவுரையாளர்களில் சிங்களம் தெரிநதவர்கள் ஓரளவு தலையை ஆட்டியிருப்பார்கள் மற்றவர்கள் சிதம்பர சக்கரத்தைப் பேய் பார்த்த மாதிரி பேந்தப் பேந்த விழித்திருந்தவிட்டு வந்திருப்பார்கள். இதில் குறிப்பிடத்தக்க விடயம் என்னவெனில் இது ஒரு புலமைச் சமூகத்தை அவர்கள் சார்ந்த தொழிற்சங்கத்திலிருந்து பிரித்தாளும் தந்திரம் மட்டுமல்லாமல் பன்றியின் இறைச்சியை பன்றியின் மீதே வைத்து வெட்டுவது போல தன்னையும் தனது கொள்கை நடவடிக்கைகளையும் விமர்சித்தவர்களின் வாயிலேயே தனக்குப் பாராட்டுப்பத்திரம் வாசித்துக்கொண்ட ஒரு நடவடிக்கையாகவும் அமைந்தது. 

நான் தொழில் புரியும் பல்கலைக்கழகத்திலே எனது துறையிலேயே வேலை செய்யும் இரண்டு பேர் அங்கு சென்று ராசாவே உன்னை விட்டால் மீட்பர் யாருமில்லை உனது கொள்கைகளை விட்டால் இந்த நாட்டிக்கு மீட்சியில்லை என்று துதி பாடினார்கள். அவர்களில் ஒருவர் சில நாட்களுக்கு முன்னர் வரை தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலே அரசாங்கத்தைக் கடுமையாக விமர்சித்து வந்தவர். இப்போது முற்றாகத் எதிர்த்திசையிலே திரும்பியிருக்கிறார். சோழியன் குடுமி சும்மா ஆடுமோ? அவர்களது புகழ்ச்சிக்கான பிரதிபலன்கள் விரைவில் உயர்பதவிகளாகவோ வேறுவழிகளிலோ அவர்களுக்குக் கிடைக்கும். 

அது சரி எள் எண்ணெக்குக் காய்ந்தது எலிப்பிழுக்கை எதற்காகக் காய்ந்தது

அண்மையில் எனது துறையில் நடந்த ஒரு ஒன்று கூடலில் அந்தக் கூட்டத்திற்குச் சென்ற பேசிய மேற்படி இருவரையும் சந்தித்தேன். அந்தக் கூட்டத்தைத் தனிச்சிங்களத்தில் நடத்தியது தவறு என்று வம்புக் கதை விட்டார்கள். நோ கொமென்ட்ஸ் என்று வெட்டிவிட்டேன். அங்கே புகழ்மாலை சூட்டிவிட்டு இங்கே வந்து விமர்சிக்கும் பச்சோந்திகளுடன் கதைத்து என்ன பயன்? பொருளாதார நெருக்கடி விலையதிகரிப்பு மற்றும் நெருப்பு வீத வரிக்கொள்கையால் பாதிக்கப்பட்ட மக்கள் நடத்திய போராட்டங்கள் எல்லாம் பழைய செய்திகளாக மாறிவிட்டன. இலங்கையில் எந்தெந்தச் தொழிற் சங்கங்கள் வீதிக்கு வந்து போராட்டம் நடத்துமோ அவை பணிபுரியும் அரச நிறுவனங்கள் வழங்கும் பொருள்களும், சேவைகளும் அத்தியாவசிய தேவைகளாக வர்த்தமானியில் பிரகடனப் படுத்தப்பட்டுள்ளன. அண்மையில் பெற்றோலிய  தொழிற்சங்கங்கள் நடத்திய வேலைநிறுத்தப் போராட்டம் இராணுவத்தைக் கொண்டு அடக்கப்பட்டமையும் அதில் ஈடுபட்ட தொழிற்சங்கத் தலைவர்கள் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளமையும் விசாரணை முடிவில் அவர்கள் வேலை இழக்கும் நிலை ஏற்படும் சாத்தியங்களும் ஒரு தெளிவான செய்தியினைக் கூறுகின்றன. 

அது மட்டுமல்லாமல் புதிதாக ஒரு பயங்கரவாதத் தடைச்சட்ட வரைவு சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. அது நிறைவேற்றப்படுமானால் பதவியிலிருக்கும் அரசாங்கத்தை விமர்சிக்கும் எவரையும் பயங்கரவாதிகளாகக் கருதி நடவடிக்கை எடுக்கலாம். சொல்லப்போனால் இலங்கை இப்போதுள்ளதைவிடவும் சர்வ அதிகாரங்களும் ஓரிடத்திலே குவிந்த ஒரு எதேச்சதிகார இராச்சியத்தை நோக்கி நகர்வதற்கான எல்லாச் சமிக்ஞைகளும் ஒருங்கே தென்படுகின்றன. 

அதேவேளை தற்போதைய அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகளால் இலங்கையின் பொருளாதாரம் சீர்செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதனால் எதிர்க்கட்சி அரசியல் வாதிகள் அரசாங்கத்துடன் இணைந்து கொள்ள வரிசையில் நிற்கின்றனர் என்ற தொனியில் மிகப்பலமான ஒரு சமூக ஊடகப் பிரசாரம் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படுகிறது. வறுமை என்றால் என்ன என்று தெரியாத கூட்டத்தை இப்பிரசாரம் வெகுவாகக் கவரக் கூடும். ஆனால் வறுமை நிலையில் உழல்பவர்கள் தமது நாளாந்த வாழ்க்கை நெருக்கடியில் உள்ள போது இத்தகைய பிரசாரங்களை நம்புவது கடினம் என்கிறார் முன்னைநாள் ராஜதந்திரி ஒருவர். 

இப்போது மீண்டும் தேசிய அரசாங்கம் அமைப்பது பற்றிய செய்திகள் வரத் தொடங்கியுள்ளன. அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் சர்வதேச நாணய நிதியத்துடனான கொள்கைப் பொதி சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில் தேசிய அரசாங்கம் பற்றிய செய்திகள் அதனை மேவிச் செல்லும் வகையில் பிரபலப்படுத்தப்படலாம். 

பொருளாதார நெருக்கடிகளை விக்கிரமசிங்க லாவகமாகக் கையாண்டிருக்கிறார். அரகலய காலத்தில்  காணப்பட்ட நெருக்கடிகள் இப்போது இல்லை பற்றாக்குறைகள் நீங்கிவிட்டன. பொருட்கள் தாராளமாகக் கிடைக்கின்றன. விலை மட்டங்கள் குறைவடைந்து வருகின்றன. என்று பாராட்டுப்பத்திரம் வாசிக்கபடுகிறது. கடந்த பண்டிகைக் காலத்தில் மக்கள் பெருமளவில் வெளியே வந்து பாரியளவு பொருட் கொள்வனவில் ஈடுபட்டமை மக்களிடம் செலவிடக் கூடிய வல்லமை உள்ளது என்பதைக் காட்டுவதாகவும், இலங்கை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டுவருவதற்கான ஒரு சமிக்ஞையாகவும் எல்லாவற்றுக்கும் மேலாக கடந்த பதினாறு தடவைகளிலும் பெற்ற நிதியை விடவும் கூடிய 2.9 பில்லியன் பெறுமதியான பொதியினை சர்வதேச நாணய நிதியிடமிருந்த ஜனாதிபதி பெற்றுவிட்டார் என்று அவரது சாதனையாகக் காட்ட மேட்டுக் குடியினர் முயற்சித்து வருகின்றனர். 

பொருளியல் பேசவல்ல சிலரும் மேட்டுக் குடி வர்த்தக சமூகத்தில் உள்ள சிலரும் தற்போது நடைமுறைப்படுத்தப்படும் கொள்கைகளால் நாடு விரைவில் நெருக்கடிகளில் இருந்து மீண்டுவரும் என்று ஊடகப்பிரசாரம் செய்கின்றனர். 2048ஆம் ஆண்டில் இலங்கை ஒரு அபிவிருத்தியடைந்த நாடாக மாறிவிடும் எனவும் நாட்டுக்குத் தேவை சரியான பொருளாதாரக் கொள்கையே தவிர பிரபல்யம் வாய்ந்த பொருளாதாரக் கொள்கைகள் அல்ல தான் சரியானதையே செய்ய விரும்பவதாகவம் பிரபலமான கொள்கைகளையல்ல என்கிறார் இலங்கை அதிபர். இலங்கை நாட்டின் பிரதமராகப் பல தடவைகள் பதவி வகித்த அவர் ஏன் சரியானதாக அவர் கருதும் பொருளாதாரக் கொள்கைகளை முன்பு அறிமகப்படுத்தவில்லை? யாராவது அதை தடை செய்தார்களா? இப்போது தான் புதிய ஞானோதயம் பிறந்திருக்கிறதா என்று தெரியவில்லை. ஆனால் வேலையைச் செய்து முடிக்க அவரைவிட்டால் ஆளில்லை என்றே பிரசாரம் வலுப்பெறுகிறது. 

சர்வதேச நாணய நிதியத்தின் உதவி கிடைத்த உடனேயே அரசாங்கம் பெற்றோலியப் பொருள்களின் விலைகளைக் குறைத்தது. அதன்மூலம் சர்வதேச நாணய நிதியத்தின் பொதி பொதுமக்களுக்கு நேரடி நன்மைகளைத்தரும் என உணர்த்தப்பட்டது அதனைத்  தொடர்ந்து மரக்கறிகள் உள்ளிட்ட உணவுப்பொருள்களின் விலைகளும் சந்தையில் குறைவடைந்தன. ஆனால் சர்வதேச நிதியத்துடன் இணங்கிக்கொள்ளபட்ட கடன் மீள்செலுத்தல் பற்றிய பேச்சுவார்த்தைகள் இனிமேல்தான் நடத்தப்படப் போகின்றன. ஆகவே மிகக்கடினமாக வேலைகள் இனிமேல் தான் நடைபெற உள்ளன ஆகவே அரசாங்கம் வாழைமரத்தில் கொத்திய மரங்கொத்தியாக அதில் சிக்கிக் கொள்ளும் வரையில் தேர்தல்கள் வேண்டும் என்று கத்தாமல் அடக்கி வாசிக்கலாம் என எதிர்க்கட்சிகள் இருப்பதாக ஒரு ஹேஸ்யம் நிலவகிறது. ஸ்ரீமான் பொதுஜனத்தின் பார்வையில்; தற்போதைய இலங்கை அதிபர் சிங்கப்பூரின் லீக்குவான் போலச் செயற்பட விரும்புவதாகத் தெரிகிறது. ஆனால் அதற்குத் தேவையான மக்கள் ஆணை அவருக்கு இல்லை என்பது தான் கசப்பான கள யதார்த்தம்.