LOADING

Type to search

இலங்கை அரசியல்

இலங்கையின் ’குரங்குப் பிரச்சனை: உதயனின் சிறப்பு நேர்க்காணல்

Share

உலகெங்கும் இல்லாத வகையில் சுமார் ஒரு லட்சம் குரங்குகளை சீனாவிற்கு ஏற்றுமதி செய்ய அரசு திட்டமிட்டுள்ளதாக இலங்கையின் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர அண்மையில் தனது அமைச்சக கூட்டம் ஒன்றில் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து நாட்டில் வாதப் பிரதிவாதங்கள் எழுந்தன. குரங்குகளை சீனாவிற்கு ஏற்றுமதி செய்யலாம் ஒரு தரப்பும், அது எப்படிச் செய்ய முடியும் என்று மறு தரப்பும் வாதிட்டன. ஆனால் மேலோட்டமான இந்த வாதங்களிற்கு அப்பாற்பட்டு இதிலுள்ள யதார்த்தங்களை உள்ளூர் ஊடகங்கள் ஆராயவில்லை.

சீனா இலங்கையிடமிருந்து பெருந்தொகையான அளவிற்கு குரங்குகளை வேண்டியுள்ளது என்றும், அவை தமது நாட்டின் மிருகக்காட்சி சாலைகளில் வைக்கப்படும் என்று வெளியான தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என்றும் இந்த தகவல் வெளியாகி சுமார் இரண்டு வாரங்களிற்கு பிறகு கொழும்பிலுள்ள சீனத் தூதரகம் மறுப்பு வெளியிட்டுள்ளது.

ஆனால், சீனாவின் இந்த மறுப்பறிக்கை தொடர்பில் இலங்கை இதுவரை வெளிப்படையாக கருத்துக்கள் எதையும் தெரிவிக்கவில்லை. அதேவேளை குரங்கு ஏற்றுமதிக்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக கொழும்பிலிருந்து கிடைக்கும் சில தகவல்கள் கூறுகின்றன. இவற்றை சுயாதீனமாக உதயனால் உறுதி செய்ய முடியவில்லை.

இப்படியான குழப்பங்களிற்கு மத்தியில் இலங்கையில் இருந்து குரங்குகள் ஏற்றும் சாத்தியம் உண்டா என வவுனியா பல்கலைக்கழகத்தின் வனவிலங்கு, வனச்சூழல் பாதுகாப்புத் தொடர்பான சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி சண்முகசுந்தரம் விஜயமோகனுடன் ஓர் செவ்வி.

செவ்வி கண்டவர் எமது யாழ் செய்தியாளர் நடராசா லோகதயாளன்.

இலங்கையில் இருந்து நூறு ஆயிரம் குரங்குகள் சீனாவிற்கு ஏற்றப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுவது தொடர்பில் பல கருத்துக்கள் வெளிவருகின்றன. அவ்வாறு நூறு ஆயிரம் குரங்குகளை ஏற்ற முடியுமா, அதற்கான சாத்தியம் உண்டா, அதில் நன்மைகள் அதிகமா அல்லது தீமைகள் அதிகமா?

”நாட்டில் எத்தனை குரங்குகள் உள்ளன என்ற கணக்கெடுப்பு இதுவரை கிடையாது. இவ்வாறு கணக்கெடுப்பு இடம்பெறாது எவ்வாறு நூறு ஆயிரத்தை ஏற்றுமதி செய்வது என்ற முடிவிற்கு வந்தனரோ தெரியாது. அதே நேரம் முதலைகள் தொடர்பான கணக்கெடுப்பு இடம்பெற்று தற்போதுதான் நிறைவுறுகின்றது.

சிறுத்தைகள் 1,500 வரையில் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளதோடு 2011ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின் பிரகாரம் மிக குறைந்தது 5584 யானைகள் உள்ளதாக கணக்கிடப்படுகின்றதோடு வளர்ப்பு யானைகள் 107 உள்ள அதேநேரம் மின்னவளவில் 82 யானைகளும் உள்ளதாக அப்போது கண்டறியப்பட்டன”.

அப்படியானால் குரங்குகளின் கணக்கெடுப்பின்றி அவற்றை ஏற்றுமதி செய்ய அரசு சீனாவுடன் ஆலோசித்து வருவது யதார்த்த ரீதியில் எந்தளவிற்கு சாத்தியமானது?

”மில்லியனை அண்மித்து குரங்குகள் இலங்கையில் இருப்பதாக கருதி அவற்றை ஏற்றுமதி செய்வதற்கு திட்டமிட்டாலும் நூறு ஆயிரம் குரங்குகள் ஏற்றுமதி செய்வதென்பது ஒருபோதும் இடம்பெற முடியாத காரியம். இலங்கையில் ’மெக்காக்கா சினிக்கா’ என்னும் இனமே அதிகமாக உண்டு. இதனையே பலரும் செங்குரங்கு என்பர் இதிலும் மூன்று இனம் உண்டு குளிர் வலயம், உலர் வலயம், இடை வலயம் ஆகிய இடங்களில் வாழும் குரங்கினங்கள் அவை. இதற்கு அப்பால் கருங்குரங்குகளில் இரு இனமும் என குரங்கினத்தை ஒத்த தேவாங்கு என மொத்தமாகவே 4 இனங்களே உண்டு. இவை கூட்டமாகவே வாழும் இதில் நூறு ஆயிரம் குரங்கை ஏற்றுமதி என்பது ஒருபோதும் சாத்தியமே அற்றது. ஏனென்றால் இதில் அரசிற்கு ஒரு சில தடை அல்ல பல தடைகளே ஏற்படும். இந்த குரங்கு ஏற்றுமதி என்பது வெறுமனே செய்தியாகவும் தகவலுமாகவே இருக்குமே அன்றி அப்பணி இடம்பெறாது. வேண்டுமானால் ஒரு 50 அல்லது 100 குரங்கை எடுத்துச் செல்ல முடியும் அதற்கும் பெரும் செலவை எதிர்கொள்ள வேண்டும். அது சீனா போன்ற நாட்டிற்கு பெரிய விடயம் இல்லை என்பதனால் ஒரு நூறிற்கும் உட்பட்ட குரங்கை எடுத்துச் செல்வர்.

ஆனால் மறுபுறம் குரங்குகளால் விவசாயம் பெருமளவிற்கு பாதிக்கப்படுகிறது என்பது உண்மை தானே. அப்படி ஏற்படும் போது நாட்டில் உணவு நெருக்கடி ஏற்படும் வாய்ப்பு உள்ளதல்லவா?

”தற்போது குரங்குகளிற்கு காடுகளில் உணவு நெருக்கடி ஏற்படுவதனால் அவை நகரை நோக்கி வருகின்றன அல்லது தோட்டங்களை நோக்கி வருகின்றது. இதனால் விவசாயிகளும் உற்பத்தியாளரும் பெரும் நட்டத்தையும் ஏற்படுத்துகின்றது என்பது மிகப் பெரும் உண்மை அதனால் இதனை கட்டுப்படுத்தவே வேண்டும். இதற்கு தடுப்பு முறைக்கு முயற்சிக்கும் ஓர் உறுப்பினராகவும் நான் தற்போது உள்ளேன். குரங்குகளால் ஏற்படும் பாதிப்பை சரி செய்வதற்கு அறிவியல் ரீதியான நடவடிக்கையே தேவை. குரங்குகளை ஏற்றுமதி செய்வதன் மூலம் பிரச்சனைக்கு தீர்வு காணலாக் என்பது நடைமுறைக்கு சரிப்பட்டு வராது”.

குரங்குகளை சீனாவிற்கு ஏற்ற முடியுமா என்கிற பிரச்சனை ஒரு புறம் இருந்தாலும், பெருந்தொகையான அளவில் அவற்றை பிடிப்பதே பெரும் சவால் இல்லையா?

”குரங்குகள் கூட்டம் கூட்டமாகவே வாழ்வதனால் அவற்றை பிடிப்பது சுலபமல்ல. ஒரு சில குரங்குகள் பிடிபட்டால் எஞ்சியவை அந்த இடத்தை விட்டு நகராது அல்லது சத்தம் எழுப்பினால் சிலவேளை தாக்கவும்கூடும். இவை அனைத்தையும் தாண்டி பிடித்து விட்டால் ஏற்ற முற்படும் அரச பலம் செல்வாக்கினை விடவும் மிஞ்சிய சக்தி ஒன்று உண்டு அதுதான் இந்த மிருகங்கள் தொடர்பில் பேசுபவர்கள். அவர்கள் மிருகவதை, மனித நேயம், காருண்யம் என்றெல்லாம் பேசுவார்கள் அப்போதும் எடுபடவில்லை என்றால் மதங்களுடன் கொண்டு சென்று முடிச்சுப் போடுவார்கள் அதேநேரம் சுற்றுலாப் பயணிகளை தடுப்போம் என அரசிற்கு அச்சுறுத்துவார்கள். இவ்வாறு அச்சுறுத்துபவர்கள் அலுவலகங்களில் இருந்து உத்தரவு போடும் அதிகாரம் கொண்ட சொகுசு வாழ்க்கையை மட்டும் கொண்டவர்கள் அல்லது ஆராச்சிக்காகவும், ஆய்விற்காகவும் காடுகளில் அலைந்து படித்தவர்களாகவுமே இருப்பார்களே அன்றி குரங்கு அல்லது மிருகங்களின் தாக்குதலிற்கு இலக்காகும் பிரதேசங்களில் வாழ்வபவராக இல்லாதபோதும் அவர்களின் குரலே எடுபடும் ஏனெனில் அவர்கள் கட்டமைக்கப்பட்ட அமைப்புக்களின் தொடர்பில் இருப்பவர்கள். இதனால் ஏழை விவசாயிகளினதும் அதற்காக முயற்சித்தவர்களும் தோல்வி அடைவர்”.

அப்படியென்றால் இந்த குரங்குப் பிரச்சனைக்கு என்னதான் தீர்வாக அமையும் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?

”இவற்றின் அடிப்படையிலேயே நான் ஆரம்பத்திலேயே கூறிவிட்டேன்-குரங்குகள் இலங்கையில் இருந்து சீனாவிற்கு அல்ல எங்கையுமே ஏற்றுமதி இடம்பெற மாட்டாது என்று ஏற்றுமதி இடம்பெறாதுவிட்டால் எமது நாட்டிலேயே விரைவில் விவசாயிகளோ ஊர் மக்களோ இரகசியமான முறையில் அதிக தொகையை அழிக்க முற்படுவர் என்பதும் உறுதி. தற்போது இந்த மிகப் பெரும் யானைகளையே அழிப்பவர்களிற்கு குரங்கு, மயிலை அழப்பது ஒன்றும் பெரிய விடயமாகவும் இருக்காது. இவற்றின் அடிப்படையில் இவ்வாறான மிருகங்களை நாட்டிற்குள்ளேயே விஞ்ஞான ரீதியில் அழிக்கும் நிலமை விரைவில் ஏற்படும். அதேநேரம் இவற்றை கட்டுப்படுத்தும் பொறிமுறையை ஏற்படுத்த முடியுமா என நாம் ஆராச்சியிலும் இறங்கி விட்டோம்” என்றார்.