டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் 197 ரன்கள் குவிப்பு
Share
டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்துள்ள சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 197 ரன்கள் எடுத்துள்ளது. இதையடுத்து 198 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி டெல்லி கேபிடல்ஸ் அணியின் பேட்ஸ்மேன்கள் களத்தில் இறங்கியுள்ளனர். டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி கேப்டன் எய்டன் மார்க்ரம் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதையடுத்து ஐதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக அபிசேக் சர்மா மற்றும் மயங்க் அகர்வால் களத்தில் இறங்கினர். மயங்க் அகர்வால் 5 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றம் அளித்தார். அடுத்து வந்த ராகுல் திரிபாதி 10 ரன்களும், கேப்டன் மார்க்ரம் 8 ரன்களும், ஹேரி ப்ரூக் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்து நடையைக் கட்டினர். விக்கெட்டுகள் ஒரு பக்கம் விழுந்தாலும் பொறுப்புடன் விளையாடிய அபிசேக் சர்மா 36 பந்துகளில் 1 சிக்சர் மற்றும் 12 பவுண்டரிகளுடன் 67 ரன்களை எடுத்தார்.
விக்கெட் கீப்பர் ஹெய்ரிக் கிளாசன் 27 பந்தில் 4 சிக்சர் மற்றும் 2 பவுண்டரியுடன் 53 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் நின்றார் அப்துல் சமது 21 பந்தில் 2 சிக்சர்களுடன் 28 ரன்கள் எடுக்க சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 197 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 198 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்கை நோக்கி டெல்லி அணியின் பேட்ஸ்மேன்கள் விளையாடி வருகின்றனர்.