LOADING

Type to search

இலங்கை அரசியல்

“வாழ்க்கைக்கான கல்வியை மாணவர்கள் பெறுவதற்கு எமது பெற்றோர்களே தடையாக இருக்கிறார்கள்”

Share

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் பசுமை அறிவொளி நிகழ்ச்சியில் தலைவர் ஐங்கரநேசன் சுட்டிக்காட்டு

பாடசாலைக் கல்வியும் பல்கலைக்கழகக் கல்வியும் மட்டுமே ஒரு மாணவனை முழு மனிதனாக்கும் என்ற நம்பிக்கை பெரும்பாலான பெற்றோர்களிடம் இருக்கிறது. ஆனால், ஒரு மாணவனை முழு மனிதனாக்கும் வாழ்க்கைக்கான கல்வி வகுப்பறைகளுக்கு வெளியேயே இருக்கிறது. துரதிஸ்டவசமாக அந்தக் கல்வியை மாணவர்கள் பெறுவதற்கு எமது பெற்றோர்களே தடையாக இருக்கிறார்கள் என்று தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் பசுமை அறிவொளி நிகழ்ச்சி கடந்த சனிக்கிழமை (29.04.2023) நல்லூர் இளங்கலைஞர் மன்ற மண்டபத்தில் நடைபெற்றது. நூற்றுக்கணக்கான மாணவர்களும் பெற்றோர்களும் கலந்துகொண்டிருந்த இந்நிகழ்ச்சியில் உரையாற்றும்போதே பொ. ஐங்கரநேசன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மாணவர்களுக்குச் சுற்றுச்சூழல் பற்றிய அறிவையூட்டிச் சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் அவர்களைச் சூழற்பாதுகாப்பில் பங்கேற்க வைக்கும் நோக்குடனும், அவர்களின் பன்முக ஆளுமையை விருத்திசெய்யும் நோக்குடனும் தமிழ்த்தேசிய பசுமை இயக்கம் பசுமை அறிவொளி என்ற பெயரில் மாணவர்களுக்கான வலுவூட்டல் திட்டமொன்றை முன்னெடுத்து வருகிறது. இதன் தொடர்ச்சியாகவே நல்லூரில் இளங்கலைஞர் மன்ற மண்டபத்தில் இந்நிகழ்ச்சி இடம்பெற்றுள்ளது.

ஓய்வுநிலைப் பிரதிக்கல்விப் பணிப்பாளர் கௌரி முகுந்தன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கனடா உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியரும், ரொறன்ரோவின் மனித நேயக் குரல் அமைப்பின் தாபகத் தலைவருமான ஆர்.என். லோகேந்திரலிங்கம் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டிருந்தார். சிறப்புரைஞர்களாகத் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன், நீர்ப்பாசனத் திணைக்களப் பொறியியலாளர் ச.சர்வராஜா ஆகியோர் பங்கேற்றிருந்தார்கள்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

அனுபவத்தைவிட சிறந்த ஆசான் உலகில் வேறெதுவும் இருக்கமுடியாது. ஆனால், அந்த அனுபவத்தைப் பெறமுடியாதவாறு பாடசாலை வகுப்பறைகளுக்குள்ளும் தனியார் கல்வி நிறுவனங்களின் கொட்டகைகளுக்குள்ளுமே எமது மாணவர்களின் பெரும்பொழுது கழிகிறது. பிறநிகழ்ச்சிகளில் மாணவர்கள் கலந்துகொண்டால் கல்வி பாதிக்கப்படும் என்றே பெற்றோர்கள் கருதுகிறார்கள். இதனால், உயர்ந்த சித்திகளைப் பெற்றிருந்தாலுங்கூட கல்வியை முடித்து வெளியே வரும் மாணவன் வாழ்க்கையில் தடுமாற நேரிடுகின்றது.

வாள்வெட்டும், போதைப்பொருள் பாவனையும் என்று எமது பண்பாட்டுச் சூழல் சீர்கெட்டிருக்கும் நிலையில் பிள்ளைகளை வெளியே அனுப்பினால் அவர்களும் தவறாக வழிநடத்தப்படுவார்கள் என்று பெற்றோர்கள் அஞ்சுகிறார்கள். வெளியே மாத்திரமல்ல ; இன்று பிரபல்யமான பாடசாலைகளில் பயிலுகின்ற மாணவர்கள்கூட போதைக்கு அடிமையாகி இருக்கிறார்கள். எனவே, பெற்றோர்கள் பிள்ளைகள் மீது சந்தேகம் கொள்ளாமல் அதேசமயம் அவர்களைக் கண்காணித்தவாறு இதர நிகழ்ச்சிகளிலும் மாணவர்கள் பங்கேற்பதற்கு அனுமதிக்க வேண்டும்.

வகுப்பறைகளுக்கு வெளியே இயற்கை எங்களுக்கு ஏராளமான விடயங்களைக் கற்றுத் தருகிறது. இயற்கையைப் புரிந்துகொண்டதும் இயற்கையின் மீதான நேசிப்புத் தானாகவே ஏற்பட்டுவிடும். இயற்கையை நேசிப்பவர்கள் சுற்றுச்சூழலைச் சீரழிக்காதவாறு இயற்கையுடன் இசைந்து வாழ்வதற்குக் கற்றுக்கொள்வார்கள். அதுமாத்திரமல்ல, மனிதன் உட்பட சகல உயிரிகளையும் நேசிக்க ஆரம்பிப்பார்கள். சகமனிதர்கள் மீதான நேசமே இன்று சமூக வன்முறைகளைக் களைவதற்கான தீர்வாகவும் அமையும் என்றும் தெரிவித்துள்ளார்.

அங்கு உரையாற்றிய கனடா உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியரும் ரொறன்ரோ மனித நேயக்குரல் அமைப்பின் தலைவருமான ஆர். என். லோகேந்திரலிங்கம் தனது பிரதம விருந்தினர் உரையில் பினவருமாறு கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.

“ எமது தாயக மாணவச் செல்வங்களிற்கு பல தேவைகள் உள்ளன. அவர்களின் தேவைகளில் சிலவற்றை அரசு கவனிக்க வேண்டிய நிலையில் அவ்வாறான நிலை தாயகத்தில் இல்லை. இதன் காரணமாக பல புலம் பெயர் அமைப்புக்கள் இந்த தேவைகளை பூர்த்தி செய்கின்றன. மாணவர்களின் தேவைகள் பெற்றோர்களின் தேவைகளாக மாறிவிடுகின்றன.இதனால் அவர்களின் தலைகளில் சுமைகள் அதிகரிக்கின்றன. அரசு பொறுப்பேற்க வேண்டிய மாணவர்களின் தேவைகள் பற்றி எமது தமிழ் பேசும் அரசியல்வாதிகளோ அன்றி தென்னிலங்கை அரசியல்வாதிகளோ கவனிப்பதில்லை. இந்த நிலை மாற வேண்டும்” என்றார்

ஓய்வுநிலை ஆசிரியர் பா. காசிநாதன் வரவேற்புரையாற்றியிருந்த இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான மாணவர்களும் பெற்றோர்களும் ஆர்வத்துடன் கலந்துகொண்டிருந்தார்கள். கலந்துகொண்டிருந்த மாணவர்கள் அனைவருக்கும் ரொறன்ரோவின் மனித நேயக் குரல் அனுசரணையுடன் சூழல் விழிப்புணர்வுக் குறிப்பேடுகள் வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.