LOADING

Type to search

இலங்கை அரசியல்

மனோ சாட்சி | என்னை “செய்ய” நினைத்த மஹிந்த – கோத்தா அரசை நான் “செய்த” கதை 

Share

மனம் திறக்கிறார் மனோ கணேசன்

 (கனடா உதயனிற்கான பிரத்தியேகத் தொடர் –அத்தியாயம்-13)

 

  • புலிகளுடன் தொடர்பு எனக்கூறி, என்னை பயங்கரவாத தடுப்பு பிரிவில் வாக்குமூலம் தர பொலிஸ் மா அதிபர் அழைத்தார். 
  • “எனக்கும் புலிகளுக்கும் தொடர்பு இருந்தது என்பதை ஏற்கிறேன்” என என் வாக்குமூலத்தை ஆரம்பித்தேன். 
  • ஜனாதிபதி சந்திரிகா, அவரது செய்தியை புலிகளின் தலைவர் பிரபாகரனிடம் கொடுக்க சொன்னார், என்றேன்.
  • மேத்தானந்த எல்லாவள தேரர் என்னிடம் “புலிகளை சந்திக்க ஏற்பாடு செய்து தாருங்கள்” என்று கேட்டார், என்றேன்.
  • 2005 ஆம் வருட ஜனாதிபதி தேர்தலின் முன் என்னிடம் அமைச்சர்கள் ஜெயராஜ் பெர்னெண்டோ புள்ளேவும், பசில் ராஜபக்சவும், புலிகளுடன் தொடர்பு ஏற்படுத்தி தாருங்கள் என்றார்கள், என்றேன்.
  • “சொன்னதை அப்படியே எழுதப்பா, ஒப்பமிட முன் வாசிப்பேன், எனக்கு சிங்களம் தெரியும்” என்றேன்.
  • என்னை உள்ளே வைத்து செய்ய நினைத்த மஹிந்த-கோத்தா அரசை நான் உள்ளே போய் செய்தேன் என நினைத்தேன்.
 

காலகட்டம்: கொழும்பில் அரச பயங்கரவாதத்தின் உச்சகட்டம். ஒட்டுக்குழுக்களும் களத்தில். படுகொலை, வெள்ளை வான் கடத்தல், அடாத்தாக கைது… என்ற அடக்குமுறைகள் நிகழ்ந்துகொண்டிருந்த 2007 ஆம் வருடம்

 

கொழும்பில் உள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவிற்கு வந்து வாக்குமூலம் தரும்படி, என்னை பொலிஸ் மா அதிபர் அழைத்தார். ’பயங்கரவாத தடுப்பு பிரிவின் (டிஐடி) இயக்குனரை என்னுடன் பேச சொல்லுங்கள்’ என்றேன். 

சிறிது நேரத்தில் டிஐடி  இயக்குனர் அழைப்பில் வந்தார். அவர்களது விசாரணையில் இருக்கும் ஒரு புலி உறுப்பினர் “மனோ நம்ம ஆளு” என்று கூறினாராம். அதன் அடிப்படையிலே என்னை விசாரிக்கனும் என்றார்.  “சபாநாயகருக்கு அறிவித்தீர்களா”? என கேட்டேன். ஆம் சார். எழுத்து மூலமாக அறிவிப்போம் என்றார். 

”நான் வராவிட்டால் என்ன செய்வீர்கள்” என கேட்டேன். 

“சாட்சியங்களை நீதிமன்றில் சமர்ப்பித்து அழைப்பாணை பெறவேண்டும், ஐயா. நீங்கள் வந்து வாக்குமூலம் வழங்கினால் போதும். அழைப்பாணைக்கு எங்களை தயவுசெய்து தள்ள வேண்டாம், ஐயா” பணிவாக பதில் வந்தது. 

இந்த அதீத பணிவு சரியில்லேயே என உணர்ந்தபடி “சரி, நாளை வருகின்றேன்”  என்று சொல்லி, அடுத்தநாள் காலை 9 மணிக்கு நான் டிஐடிக்கு சென்றேன்.

அவ்வேளை கொழும்பிலே தமிழர்கள் பலர் கடத்தப்பட்டு கொலை. அடாவடியாக பெருந்தொகையானோர் கைது. பொதுவாக ஒரு அச்சமான சூழல். 

மறுநாள் காலை, நான் டிஐடிக்கு புறப்படும் போது, கட்சியின் அடிமட்ட உறுப்பினர்களை அழைத்து போய், டிஐடிக்கு எதிரில்  தெருவில் நிறுத்தி கோஷம் எழுப்பியிருக்க முடியும். அதை நான் செய்ய விரும்பவில்லை. கைது செய்யப்பட்டு, நான் ஒருவேளை மீண்டும் வெளியே வராவிட்டால், இந்த அப்பாவி தொண்டர்கள் ஆபத்தில் விழுவார்கள்.  

ஆகவே, காலையிலே டிஐடி செல்ல உள்ளதை முதல் நாள் இரவே  கட்சியில் 2ம், 3ம் அந்தஸ்துகளில் இருந்த மாகாண சபை உறுப்பினர்கள் பிரபா கணேசன், குமரகுருபரன் ஆகியோருக்கு கூறியிருந்தேன். 

துணையாக அவர்களும் வந்தால் நலமா இருக்கும் என்று அவர்கள் இருவரையும் காலையில் பேசியில் அழைத்தேன். 

இரண்டு தொலைபேசிகளும் அணைக்கப்பட்டிருந்தன. வீடுகளில் “ஐயா வீட்டில் இல்ல”. அவர்கள் என்னுடன் வர விரும்பவில்லை.



எனது செயலாளர் பிரியாணியை அழைத்து “நான் போகிறேன். எம்பீ ஜயலத் ஜெயவர்தனவை அழைத்துக்கொண்டு அங்கே வாருங்கள்” என்று கூறிவிட்டு நான் டிஐடிக்கு சென்றேன்.

டிஐடியின் இயக்குனர் வரவேற்றார். சுமூகமாக அழைத்து சென்று தனி அறையில் அமரச்செய்து அவரும், பொலிஸ் எழுத்தர் ஒருவரும் வாக்குமூலம் எடுக்க ஆரம்பித்தார்கள்.

அந்நேரம் டிஐடி அலுவலகம் கொழும்பு துறைமுக கலங்கரைவிளக்க கடலோர பாதையில் இருந்தது. இன்று கிங்ஸ்பரி ஓட்டலை ஒட்டி துறைமுகத்தை நோக்கி செல்லும் வீதி.

தடுப்பில் உள்ள ஒரு புலி உறுப்பினர், எனக்கும், அவர்களுக்கும் தொடர்பு இருந்ததாக கூறினார். ஆகவே என்னை விசாரிப்பதாக  சொன்னார்கள்.

விஷயத்தை புரிந்துகொண்டேன். கொஞ்சம் வாக்கு பிசகினாலும் என்னை இறுக்கி விடுவார்கள். இவன்கள் கில்லாடி. நான் பலே கில்லாடி என காட்ட தீர்மானித்தேன்.

வாக்குமூலம் தருகிறேன். அப்படியே எழுத வேண்டும். எனக்கு சிங்களம் விளங்கும். வாசித்துவிட்டு ஒப்பமிடுவேன் என்றேன். 

இத்தகைய தருணங்களில் வழமை போல் எனக்கு சிங்களம் தெரியாது. தமிழில் எழுது என அடம் பிடிக்கலை.    

நான் சொல்வதை அப்படியே எழுதுகிறார்களா என எழுத்தரின் எழுத்துக்களை பார்த்தபடி தொடங்கினேன்.

“எனக்கும் புலிகளுக்கும் தொடர்பு இருந்தது என்பதை ஏற்கிறேன்.” என்று ஆரம்பித்தேன். போலீஸ் எழுத்தர், நிமிர்ந்து என்னை பார்த்துவிட்டு எழுத தொடங்கினார்.

எனது கூற்று அவருக்கு ஆச்சரியத்தை தந்தது ஆச்சரியமல்லவே.

“2004 ஆம் வருடம் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க, அவரது செய்தியை கொண்டு போய் புலிகளின் தலைவர் பிரபாகரனிடம் கொடுக்க சொன்னார். நான் சென்று கொடுத்தேன்”. 

நான் சொல்வது சரியா எழுதப்படுதா என பார்த்தேன். 

அதென்ன செய்தி என பணிப்பாளர் கேட்கவில்லை. 

இடையிடையே சொல், பொருள், எழுத்து பிழைகளை சுட்டிக்காட்டி திருத்தித் தொடர்ந்தேன்.

அவ்வேளை புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையில் போர் நிறுத்த உடன்பாடு. புலிகள் தடையான இயக்கமல்ல. அதற்கு பிறகு மேத்தானந்த எல்லாவள தேரர் என்னை அழைத்து, “புலிகளை சந்திக்க ஏற்பாடு செய்யுங்கள்” என கேட்டார், என்றேன்.

அப்படியே எழுதுகிறார்களா என்று பார்த்தேன்.

விசாரணை நடந்தது 2005 -2010 காலப்பகுதி. மகிந்த ஜனாதிபதியாக, கோத்தா பாதுகாப்பு செயலாளராக, சில் பொருளாதார பொறுப்பாளராக, போரை உக்கிரமாக நடத்திய காலம். 

6ம் பாராளுமன்றம். நான் சொன்ன மேத்தானந்த தேரர், அரசுக்கு ஆதரவான ஜாதிக ஹெல உறுமய கட்சியின் முக்கிய எம்பி.

அடுத்துதான் அதிர்ச்சி குண்டு.

“2005ம் வருட ஜனாதிபதி தேர்தல் நடைபெற முன் (மாதம் திகதியை சொன்னேன்) அமைச்சர்கள் ஜெயராஜ் பெர்னெண்டோ புள்ளேயும், பசில் ராஜபக்சவும் எனது வீட்டுக்கு வந்தார்கள்.” என்று கூறி எழுதுங்கள் என்றேன். 

எழுத்தர் எழுதுவதை நிறுத்திவிட்டு அங்கிருந்த பணிப்பாளரை பார்த்தார்.

திருடனுக்கு தேள் கொட்டியதை போல், திருதிருவென  பணிப்பாளர், “சார், அடுத்த கெபினில் (தடுப்புக்கு அப்பால்) நாம் கைது செய்துள்ள புலி சந்தேக நபர் இருக்கிறார். அவர் முகத்தை நீங்கள் பார்க்க வேண்டாம். இங்கே நான் உங்களிடம் கேள்வி கேட்பேனாம். அவரிடமும் கேட்பேனாம். இருவரும் பதில் சொல்லுவீர்களாம். அப்படி விசாரணையை முடிப்போமா?” என்று அப்பாவி முகத்துடன் கேட்டார்.

உண்மையில் அந்த அறை முழுமையாக சுவரால் மூடப்பட்ட அறையல்ல. பலகை தடுப்பில் உருவாக்கப்பட்ட தனித்தனி சிற்றறைகள் (கெபின்). புலி உறுப்பினரை அடுத்த கெபினில் வைத்து, என்னை இந்த கெபினில் வைத்து விசாரிக்க டீஐடீ பணிப்பாளர் முயன்றார்.

 “அப்பக்கம் இருப்பது யாரென எனக்குத் தெரியாது. நீங்கள் சொல்லி கொடுத்ததை அவர் சொல்வார். நான் ஒரு எம்பி. என்னிடம் இப்படி விசாரிக்க முயல வேண்டாம்.” என்றேன், கடுமையாக.

பணிப்பாளருக்கு வியர்த்து களைத்து விட்டது. இடைவேளை எடுத்துக்கொள்வோம் என சொன்னார். அவர் அப்படி சொல்லும் போது நேரம் பகல் 12 மணி. அந்த வேளையிலேயே பெரிய சத்தம் கேட்டது.

நாங்கள் இருந்த அறைக்குள்ளே ஜயலத் ஜயவர்தன எம்பீயும், செயலாளர் ப்ரியாணியும் தள்ளிக்கொண்டு வந்தார்கள். 

பணிப்பாளர் எழுந்து “சார், நீங்கள் இந்த அறைக்குள் வரக்கூடாது” என்று ஜயலத்தை தடுத்தார். ஜயலத் என் முதுகில் தட்டிவிட்டு “அப்படியா, வெளியிலே இருக்கிறேன். ஆனால், எனது பையன் வரும்வரை (என்னைத்தான் பையன் -மகே கொல்லா- என்று கூறுகிறார்) அங்கேயே இருந்து அவரை கூட்டிக்கொண்டுதான் போவேன்” என்று கூறி வெளியே போனார். 

பணிப்பாளரும் வெளியே போனார்.

வெளியே ஜயலத் வரவேற்பறையில் இருந்த நீண்ட சாய்வு நாட்காலியில் கால் நீட்டி படுத்ததாகவும், மனோ கணேசனை கூட்டிக்கொண்டுதான் நான் போவேன் என்று சத்தம் போட்டதாகவும் பிறகு அறிந்தேன். பிரியாணியும், ஜயலத் உடன் இருந்தார்.

சற்று நேரத்தில் இப்போது அரசில், அப்போது ஐ தே க வில், இருந்த  எம்பி ஜோன்ஸ்டன் பெர்னெண்டோ அங்கு வந்து முன்னறையில் எனக்காக காத்திருந்தார். 

எனக்கு பிரியாணி கொண்டு வந்த பகலுணவை நான் அங்கேயே சாப்பிட்டேன். பல பொலிஸ் அதிகாரிகள் அறைக்குள்ளே வந்தார்கள். அவர்கள் முகங்களில் புலிவாலை பிடித்துவிட்ட சங்கடம் தெரிந்தது.



புலி என்றுதானே என்னை அழைத்தீர்கள். இப்போது புலி வாலை பிடியுங்கள். என் வாக்குமூலம் மென்மேலும் தர்மசங்கடமாக இருக்க முடிவு செய்தேன்.

“வாருங்கள், சீக்கிரம் எழுதுங்கள்” என்று சொன்னேன். அமைதியாக மூவர் வந்தமர்ந்தார்கள். எழுத்தர் தனது அதிகாரியின் முகத்தை பார்த்துக்கொண்டே புத்தகத்தை விரித்து தயாரானார். நான் தொடங்கினேன்.

“பசில் ராஜபக்சவும், ஜெயராஜ் பெர்னெண்டோ புள்ளேயும் எனது இல்லத்திற்கு வந்தார்கள். ஜெயராஜ், புலிகளிடம் தொடர்புகளை ஏற்படுத்தி தரும்படி என்னிடம் கேட்டார். அவ்வேளை புலிகள் இயக்கம் தடைசெய்யப்பட்ட இயக்கமில்லை.”

“அரசியல் பிரிவுடன் தொடர்பு இருந்தது. வேறு பிரிவுகளுடன் தொடர்பில்லை” என்று ஜெயராஜுக்கு கூறினேன்”, என்றேன்.  

“அது 2005ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடைபெற இருந்த நேரம். மஹிந்த வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.  அவ்வேளை, புலிகளுடன் தொடர்பை ஏற்படுத்தி தர சொன்னது எதற்காக என அவர்கள் சொல்வில்லலை. ஆனால், அது எனக்கு புரிந்தது.” 

“அரசியல் அடிப்படையில், அவர்கள் தடைசெய்யப்படாத சட்டபூர்வமான அமைப்பாக இருந்த காலத்தில் எனக்கு தொடர்பு இருந்தது. புலிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தும்படி என்னுடன் ஜனாதிபதி சந்திரிக்கா, மேத்தானந்த தேரோ எம்பீ, இப்போது அமைச்சர் ஜெராஜ் பெர்னெண்டோ புள்ளே மற்றும் பசில்  ஆகியோர்தான் கோரிக்கை விடுத்தார்கள்.” 

“எனது போலீஸ் பாதுகாவலர்களின் குறிப்பேடுகளை பார்த்தால் என்னை சந்திக்க என் வீட்டுக்கு ஜெயராஜும், பசிலும் வந்தது தெரியவரும். இதுவே எனது வாக்குமூலம். என்னை அவசியமாயின் நீங்கள் கைது செய்யலாம். நீதிமன்றில் நிறுத்தலாம். வழக்கு தொடரலாம். ஆனால் விசாரணையின் போது, நான் பெயர் சொன்ன அனைவரும் விசாரிக்கப்படுவார்கள்.” என்று கூறி முடித்தேன்.

அப்படியே எழுதப்பட்டிருக்கின்றதா என்று பார்த்து சிங்களத்தில் இருந்ததை வாசித்து ஒப்பமிட்டேன். 

“என்ன செய்ய போகிறீர்கள்?” எழுந்தேன். 

அறையில் மிக கடும் அமைதி. டீஐடீ அதிகாரிகளுக்கு தெரியாமல் வேப்பெண்ணெய்யை குடித்து விட்ட நிலைமை. 

“கொஞ்சம் பொறுங்கள் சார்” என்று கூறிவிட்டு பணிப்பாளர் வெளியே சென்றார். ஒரு அரை மணித்தியாலம். மாலை 5 மணி. மீண்டும் அந்த பணிப்பாளர் அறைக்குள் வந்தார். இப்பொழுது பேச்சிலே முன்னரை விட அதிக பணிவு.

“சார், விசாரணை முடிந்தது. நீங்கள் போகலாம் சார்.” என்று மிக பவ்வியமாக என்னை பார்த்து கூறினார்.

அவர் வெளியே போய், மேலிடத்திற்கு, நான் தந்த வாக்குமூலத்தை பற்றி கூறியிருப்பார். அதை கேட்டவுடன், என்னை உடனடியாக அனுப்பி வைக்கும்படி மேலிடம் இவருக்கு உத்தரவிட்டிருக்கும். இதென்ன ரொக்கட் சயன்சா? சுலபமாக ஊகித்தேன்.

இவரது மேலிடம், அதன் மேலிடத்துடன், அந்த மேலிடம், அதன் மேலிடத்துடன், சங்கிலியாக உரையாடி இருக்கும். இச்செய்தி சங்கிலி தொடராக அதி மேலிடத்திற்கும் செல்லனும். இதுதான் என் விருப்பம்.


அவ்வேளை எனக்கு “சுதந்திர காவலன்” சர்வதேச மனித உரிமை விருது கிடைத்திருந்தது. இலங்கைக்கு என் முன் முயற்சியால் ஐ நா வின் அப்போதைய மனித உரிமை ஆணையாளர் லூயிஸ் ர்பர் அம்மையார் வந்து சென்றிருந்தார். என் உயிரை பாதுகாக்கும்படி ஐநா சபையின் செயலாளர் நாயகத்தின் மனித உரிமை போராளிகளுக்கான விசேட அறிக்கையாளர், இரு முறை இலங்கை ஜனாதிபதிக்கு எழுதியிருந்தார்.

இவற்றினால்தான் நான் உயிரோடு இருந்தேன். எனக்கு ஆபத்து நிகழ்ந்திருந்தால், அது தங்கள் கணக்கில்தான் விழும் என அரசுக்கு தெரியும். ஆகவேதான் என் மீது புலித்தொடர்புள்ள  பயங்கரவாதி முத்திரையை குத்த அரசு முயன்றது.

மேற்கத்திய நாடுகள், மனித உரிமை மீறல்களை கண்டிக்கும் நிலைப்பாட்டில் இருந்தாலும், புலிகளை பயங்கரவாதிகளாகவே தீர்மானித்திருந்தார்கள். புலிகளுடன் தொடர்பு கொண்டிருந்த காரணத்தினாலே அன்றைய கூட்டமைப்பின் மீதும் இந்த “பயங்கரவாத” முத்திரையை பல நாடுகள் குத்தி வைத்திருந்தன. 

என்னை பொறுத்தவரை நான் மனித உரிமை போராளியாக செயற்பட்ட வேளையில் புலிகளுடனான தொடர்பை அரசியலுடன் மட்டுப்படுத்திக் கொண்டேன். வேறு நான் புலிகளுடன் எதை பேச? 

ஆகவே கோத்தாபய போட்ட திட்டம் இப்படி படு கேவலமாக தோல்வி அடைந்தது.

சுமார் ஒன்பது மணித்தியாம் உள்ளே இருந்தேன். அதற்குள் வெளியே செய்தி பரவி இருந்தது. என்னை ஜயலத் ஜயவர்தன, ஜோன்ஸ்டன் பெர்னெண்டோ, லக்ஷ்மன் செனெவிரட்ன, பிரியாணி குணரட்ன ஆகியோர் வரவேற்று, கூட்டி சென்றார்கள். 

எனது கட்சியையோ, ஏனைய தமிழ் கட்சிகளையோ சார்ந்த எவரும் அங்கு வரவில்லை.