‘சிங்களச் சிந்தனையுடன்’ தமிழர்களை ஆள நினைக்கும் தமிழ் தலைமைகள்!
Share
வி.தேவராஜ்
மூத்த ஊடகவியலாளர்
- தொல் பொருள் திணைக்களத்தை கைப்பற்றியுள்ள துறவிகள்.
- எல்லாளனின் சமாதியில் துட்டகமுனுவின் அஸ்தியைத்; தேடியவர்கள் இந்து ஆலயங்களில் பௌத்த எச்சங்களைத் தேடுகின்றனர்.
- இலங்கை சிவ பூமி மாத்திரமல்ல தமிழ் பௌத்த பூமியும்தான்!
மனிதாபிமானத்துக்கான போர் முற்றுப் பெற்று 14 வருடங்கள் உருண்டோடிவிட்டன.
1.தமிழர்களின் பிரச்சனைகள் தீரவில்லை
2.தமிழ் மக்களிடையே கட்டி எழுப்பப்பட்டிருந்த ஒற்றுமைஇ கட்டுக்கோப்ப ஒழுக்கம் என்பன காணாமல் போயிற்று
3.தமிழ் மக்களிடையே கட்டிக் காக்கப்பட்டு வந்த சமூகப் பாதுகாப்பு காணாமல் போயிற்று.
4.வாள்வெட்டுக் கலாசாரத்திற்குள்ளும் போதைப் பொருள் பாவணைக்குள்ளும் இளைஞர் அணி இழுபட்டுக் கிடக்கின்றது.
5.போதையில் இருந்து காப்பாற்றித் தாருங்கள் என பெற்றோர் பிள்ளைகளை பொலிசில் ஒப்படைக்கும் யுகம் தோற்றுவிக்கப்பட்டுள்ளது.
6.கொள்ளை கொலைகள் சாதாரண நிகழ்வுகளாகிவிட்டன.
7.போதையில் தறி கெட்ட கூட்டத்தின் காம வெறிக்கு வயது வித்தியாசமின்றி பலியாகும் பெண்ணாய்ப் பிறந்த பாவங்கள்.
8.கல்வி பறி போய்விட்டது..
9.காணாமல் ஆக்கப்பட்டோரைத் தேடி அலையும் பெற்றோர் உறவினர்கள் தமது தேடுதல் பயணத்தில் தமது உறவுகளைக் காணாமலே உயிரை விட்டுக் கொண்டிருக்கின்றனர்.
மொத்தத்தில் மனிதாபிமானத்துக்கான போர் விடுதலை செய்த தமிழ் மக்கள் போரின் குருதிச் சேற்றுக்குள் இருந்து இன்னும் மீள முடியாதுள்ளனர். மரண ஓலங்கள் இன்னும் ஒலித்துக் கொண்டிருக்கின்றது. தமிழ் மக்களில் பெரும்பாலானவர்கள் போர் தின்ற எச்சங்களாக வலி சுமந்தவர்களாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
“செல்” துகள்களும் ,வெடித்து உயிர்ப் பலி கொண்ட குண்டுகள் எஞ்சியவாகளின் உடல்களில் இன்றும் நினைவுச் சின்னங்களாக புகுந்து கொண்டு அவர்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கின்றன.
மறுபுறம் தமிழர் தாயகத்தில் புத்தர் விருப்பமின்றியே குடிவைக்கப்படுகின்றார்.
தொல் பொருள் திணக்களத்திற்கு நிலப் பசி எடுத்துவிட்டது. ரத்தக் காட்டேரியாக தமிழர் நிலத்தை விழுங்கி ஏப்பம் விடுகின்றது.
- தொல் பொருள் திணைக்களத்தை கைப்பற்றியுள்ள துறவிகள்.
இதற்கும் அப்பால் அரசுக்குள் அரசாக நின்று பௌத்த துறவிகள் வரவு செலவுத் திட்டத்திற்கு அப்பால் தொல்பொருள் திணைக்களம் கஷடப்படக் கூடாதென நிதி உதவி வழங்குகின்றனர். நாட்டில் எத்தனையோ ‘பன்சலைகள்‘ பணமின்றி தமது அன்றாட மதக் கடமைகளையே செய்ய முடியாது உள்ள நிலையில் தொல்பொருள் திணைக்களம் கஷடப்படக் கூடாதென நிதியுதவி அளிப்பது வியப்பாக இருக்கின்றது.பௌத்த துறவிகள் அரசாங்கத்திற்கள் ஒரு அரசாங்கமாக செயற்படுவதையே இது காட்டுகின்றது. தொல் பொருள் திணைக்களத்தை மீட்டெடுக்க முன் வந்த பரோபாகாரிகளான பௌத்த துறவிகள் பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுக்க ஏன் முன்வரவில்லை என்பது தெரியவில்லை.
- புத்தரையும் விகாரைகளையும் காவித் தரியும் படைத் தரப்பு
தனது போர் வெறியை வெற்றி மூலம் தீர்த்துக் கொண்ட அசோகன் தம்மபதத்தை கையிலெடுத்தான்.இங்கோ தம்ம பதத்தை அல்ல புத்தரின் பெயரில் விகாரைகளாகவும் குடியேற்றங்களாகவும் தமிழர் தாயகத்தில் படைத்தரப்பு காவித் திரிகின்றது.
எல்லாளனின் சமாதியில் துட்டகமுனுவின் அஸ்தியைத் தேடியவர்கள் தொடர்ச்சியாக இன்று இந்து ஆலயங்களில் பௌத்த எச்சங்களைத் தேடத் தொடங்கிவிட்டனர்.
நீங்கள் கிண்டிப் பார்க்கும் மண்ணை சற்று கீழ் நோக்கித் தோண்டுங்கள் திராவிட எச்சங்கள் வரும். தமிழர்கள்தான் இலங்கையின் மூத்த குடிகள் என்பதை உறுதிப்படுத்தும்.
- பௌத்தம் உங்களுக்கு மாத்திரம் சொந்தமில்லை.
தமிழர்களுக்கும் சொந்தம்.
இலங்கை சிவ பூமி மாத்திரமல்ல தமிழ் பௌத்தர்கள் வாழ்ந்த பூமியாகவும் இலங்கை இருந்துள்ளது.
புல்கலைக் கழக மூத்த போராசிரியரிடம் அரச உயர்பீடம் வடக்குக் கிழக்கில் பௌத்தம் இருந்ததென்று சொல்லுங்கள் ஆனால் தமிழ் பௌத்தம் இருந்ததென்று கூறாதீர்கள் என்று கேட்டுக் கொண்டதாம்.பௌத்த சான்றுகளைத் தேடுவதற்கு அரச மேலிடத்துக்கு தமிழ் பேராசிரியர்களையும் துணைக்கு அழைக்க வேண்டிய தேவையுள்ளது.
- பௌத்த பூமியாக்கும் திட்டம்
2030 ஆம் ஆண்டுக்குள் வடக்குக் கிழக்கை பௌத்த பூமியாக்கும் திட்டத்தை ‘அரகலய‘ சற்று தாமதப்படுத்தியுள்ளது. அதேவேளையில் பொருளாதார நெருக்கடியும் சேர்ந்து இந்தத் திட்டத்தை மேலும் தாமதப்படுத்தியுள்ளது. ஆனால் தற்போது “அரகலயா “மற்றும் பொருளாதார நெருக்கடிகளையும் மேவி இந்தத் திட்டத்தை துரிதப்படுத்த முயற்சிக்கின்றனர்.
இந்தப் பயணத்தில் 2030 க்குள் மாகாண எல்லைகளை முற்று முழுதாக மாற்றி அமைக்கும் திட்டத்தையும் கைவசம் வைத்துள்ளனர்.மாகாண எல்லை மீளமைப்பதில் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் பெரும்பாலான மாவட்டங்கள் தென் பகுதிகளுடன் இணைப்பதற்கான திட்டங்களும் தீட்டப்பட்டுள்ளன.இதற்கான வரைபுகளை பல்கலைக்கழக பேராசிரியர்கள் ஏற்கனவே சமர்ப்பித்துள்ளனர்.
- மறைந்த அதி வணக்கத்துக்குரிய ஆண்டகை ராயப்பு சோசப் அவர்களின் தீர்க்கதரிசனம்
2009 அம் ஆண்டு போர் முற்றுப் பெற்றவுடன் கேசரிக்காக மறைந்த அதி வணக்கத்துக்குரிய ஆண்டகை ராயப்பு சோசப் அவர்களை நேர் காணல் செய்திருந்தேன்.
ஆந்த நேர் காணலில் மறைந்த ஆண்டகை அவர்கள் உண்மையான முள்ளி வாய்க்னால் ஊழித் தாண்டவம் இனிவரும் காலங்களிலேயே நடைபெறப் போகின்றது என்று குறிப்பிட்டதுடன் இது 2009 முள்ளிவாய்க்கால் படுகொலையை விட மிக மோசமானதாக இருக்கும் என்றும் குறிப்பிட்டார்.தமிழ் மக்களின் இருப்பு ,மொழி, கலாசாரம், குடிப் பரம்பல் என தமிழ் மக்களின் ஒட்டு மொத்த ஆன்மாவையே சிதைத்து விடக் கூடியது என்று கூறிச் சென்றுள்ளார்.அது தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
- தமிழர்களுக்கு தலைமைத்துவம் இல்லை.
துரதிஷடவசமாக தமிழ்மக்களை அணி திரட்டி பேரினவாதச் சக்திகளின் இந்த நகர்வுகளை தடுத்து நிறுத்தக் கூடிய தலைமைத்துவத்தை தமிழ் மக்கள் கொண்டிருக்கவில்லை. தமிழ்த் தலைமைகள் பரபரப்புக்கான செய்திகளை உருவாக்கி ஊடகங்களில் இடம்பிடித்து நாடாளு மன்ற மாகாண சபைகளுக்கான நாற்காலிகளுக்காகப் பிரிந்து நின்று முட்டி மோதிக் கொள்கின்றன.
தமிழ் மக்கள் தமக்கு சரியான தலைமைக்கு வாக்களித்து தெரிவு செய்ய வேண்டும். அந்த சரியான தலைமை தாம் தான் என தமிழ்த் தலைமைகள்
தம்மை த் தாமே தமிழ் மக்களிடையே ஏலம் போட்டுக் கொண்டிருக்கின்றனர்.
- வீராப்புடன் தமிழ்த் தலைமைகள் களத்தில்
தையிட்டியில் விகாரை அமைப்பதை ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்தாது அமைதி காத்த தமிழ்த் தலைமைகள் விகாரைக்கான கட்டுமான வேலைகள் முற்றுப் பெற்ற நிலையில் வீராப்புடன் களத்தில் இறங்கி தமிழ் மக்களிடம் வசனம் பேசிக் கொண்டிருக்கின்றனர்.
இனி வரும் காலங்கள் தேர்தல் காலங்களாக இருப்பதால் தையிட்டி விவகாரத்தை வைத்து தமது தேர்தல் பிரசார களத்தைத் திறந்துள்ளனர்.இனி வரும் காலங்கள் தேர்தல் பரப்பரைகளுக்காக இவ்வாறு பல களங்களை தமிழ்த் தலைமைகள் திறந்து விடத் தயாராகி விட்டன.
முள்ளி வாய்க்காலில் 14 வருடங்களுக்கு முன் தேசியத்துடன் மக்களும் மடிந்து கொண்டிருந்த போது அமைதியாக மௌனம் காத்தவர்கள்தான் இன்று களத்தில் நிற்கும் தமிழ்த் தலைமைகள்.இந்தத் தலைமைகள்தான் மண்ணையும் மக்களையும் பலி கொடுத்துவிட்டு 2009க்குப் பின் 14 வருடங்களில் தமிழத் தேசியத்தையும் படு கொலை செய்துவிட்டு சிங்கள மக்களின் மனங் கோணாத அரசியலை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.
- ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா
இந்தத் தலைமைகள் எவ்வித இழப்புக்களையும் சந்தித்தவர்கள் அல்ல.எவ்வித உதவிகளையும் செய்தவர்களும் அல்ல என்று தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளைத் தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கே.வி.தவராசா நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
தெற்கின் அரசியலுக்கு எது தேவையோ குறிப்பாக ரணில்விக்ரமசிங்கவுக்கு எது தேவையோ அதனை கன கச்சிதமாகச் செய்கின்றனர்
- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிதைந்தது
தமிழ்த் தலைமைகளும் தமிழ் மக்களும் ஒன்றாகப் பயணிக்க வேண்டும்.போராட வேண்டும் என்ற நோக்கத்துடனேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று இல்லை. உள்ளூராட்சி சபகளுக்கான தேர்தலில் தமிழரசுக் கட்சியில் உள்ள அடி மட்ட தொண்டர்களைத் திருப்திப்படுத்துவதற்காக தமிழரசுக் கட்சி தனித்து போட்டியில் இறங்கியது.இது தமிழ்த் தேசியக கூட்டமைப்பு பிளவுபடக் காரணமாகியது.
- முல்லைத் தீவில் முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்து போட்டி
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பிளவுபடுத்திய தமிழரசுக் கட்சியினர் முல்லைத் தீவில் முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்து போட்டியிடுகின்றனர்.தமிழரசக் கட்சியின் இத்தகையப் போக்கு எதிர் காலத்தில் அதன் இருப்புக்கே ஆபத்தாக முடியும் என்றும் தெரிவித்தார்.
தமிழ்த் தேசியத்தை சிதைக்க் கூடாது என்று குறிப்பிட்ட ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா அதற்கு ஒற்றுமை அவசியம் என்று குறிப்பிட்டார்.
- ஒற்றுமை வராது
இன்றைய நிலையில் ஒற்றுமை என்பது வராது என்று குறிப்பிட்ட அவர் தலைமைகள்தான் கூடியுள்ளன. தமிழ்த் தேசியம் தேய்ந்து விட்டது என்றும் அந்த நேர் காணலில் சுட்டிக் காட்டினார்.திருகோண மலையில் வேலை வாய்ப்பு வசதிகள் தமக்குக் கிடைப்பதில்லை என்று மக்கள் குறிப்பிட்ட போது சம்பந்தன் எம்.பி. அவர்கள் அரசியலில சலுகைகள் வேலை வாய்ப்பெல்லாம் கொடுக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.
ஆனால் வடபகுதியில் தமக்குத் தெவையானவர்களுக்கு வேலை வாய்ப்புகள் பெற்றுக் கொடக்கப்பட்டுள்ளன என்று சுட்டிக் காட்டிய ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா ஒரேக் கட்சியில் இரு வேறுபட்ட நிலைப்பாடு இருப்பது கட்சிபை; பாதிக்கும் என்றும் தெரிவித்தார்.
மொத்தத்தில் தமிழ் மக்களுக்கென இருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று இல்லை.தனி வழி போன தமிழரசுக் கட்சியும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளது. தலைமைத்துவ போட்டிக்குள் தமிழரசுக் கட்சி சிக்கியுள்ளது என்பதையும் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா தனது நேர் காணலில் சுட்டிக் காட்டியுள்ளார்.
- மீள முடியாத பொருளாதார நெருக்கடிக்குள் இலங்கை மூழ்கிக் கிடக்கின்றது.
- நாடடில் அரசியல் ஸ்திரமின்மை ஆழ வேரூன்றியுள்ளது.
- தென்னிலங்கை அரசியலில் அரகலய தோற்றுவித்துள்ள மாற்றத்துக்கான கருத்தியல் உருவாக்கியுள்ள அதிhவலைககள் பலமாக எதிரொலித்துக் கொண்டிருக்கின்றது.
- ஆட்சி அதிகாரத்துக்காக பிரிந்து நின்று பல சக்திகள் தென்னிலங்கை அரசியல் களத்தில் ஒற்றுமை இன்றி போராடிக் கொண்டிருக்கின்றனர்.
- ஆட்சி அதிகாரத்திற்காக பரிந்து நின்று போராடும் இந்த சக்திகள்; ரணில் – ராஜபக்ஷ அணியினருக்கு சவால் விடுத்து வருகின்றனர்
- தமது அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்காக ரணில் – ராஜபக்ஷ அணியினர் கட்டவிழ்த்துள்ள ஜனநாயக விரோதப் போக்கு தலை விரித்து ஆடுகின்றது.
- ரணில் – ராஜபக்ச அணிக்குள் முளைவிட்டுள்ள அதிகாரப் போட்டிக்குள் யாரை? யார்? விழுங்குவது என்ற பனிப் போர் உக்கிரமடைந்து வருகின்றது.
இவ்வாறு குழம்பிக் கிடக்கும் தென்னிலங்கையில் தமிழர்களை துவம்சம் செய்வதும் சிங்கள பௌத்த மேலாதிக்கத்தின் கட்டுப்பாட்டுக்குள் இலங்கையைக் கொண்டுவரும் கொள்கை கோட்பாடு வேலைத் திட்டம் என்பன எவ்விதத் தடைகளும் இன்றி நிறைவேறிக் கொண்டிருப்பது ஆச்சரியத்திலும் ஆச்சரியமாக உள்ளது.
- குழம்பிய குட்டைக்குள் மீன் பிடியுங்கள்
இவ்வாறு தென்னிலங்கையே குழம்பிக் கிடக்கின்றது. இந்தக் குழம்பிய குட்டைக்குள் மீன் பிடியுங்கள் என அரசியல் விமர்சகர்கள் தமிழ்த் தலைமைகளுக்கு உரத்துக் கூறி வருகின்றனர். ஆனால் தமிழ்த் தலைமைகள் தாமும் குழம்பி தமிழ் மக்களையும் குழப்பி தமிழ் மக்களுக்கு எதிரான ‘சிங்களச் சிந்தனைக்குள்‘ மூழ்கிக் கிடக்கின்றனர்.
தமிழ் மக்களை விடுதலை நோக்கி அழைத்துச் செல்லும் எவ்வித வேலைத் திட்டமும் தமிழ்த் தலைமைகளிடம் இல்லை. ஆனால் ஒப்புக்காக உள்ளக சுய நிர்ணயம் ,சமஷடி என்று பேசுகின்றனர். இவை அணைத்தும் ஒற்றையாட்சிக்குள் சாத்தியமா?
மறுபுறம் அரசியலமைப்பில் இருக்கின்ற 13ஐ வேண்டாம் என்று கூறுகின்றனர்.புதிய அரசியலமப்பு யாப்பின் மூலம் உள்ளக சுய நிர்ணயத்தையும் சமஸ்டியையும் கொண்டு வர முடியுமா?
- போர் முற்றுப் பெற்று 14 வருடங்கள் கழிந்து விட்டன. தமிழ் மக்களின் குருதியால் முள்ளி வாய்க்காலும் நந்திக் கடலும் மூழ்கிய சுவடுகள் இன்றும் மாறவில்லை.
- கொட்டிய குருதியின் ஈரமும் காயவில்லை அப்படியே இருக்கின்றது.
ஆனால் தமிழ்த் தலைமைகள் நெஞ்சில் ஈரமின்றி ‘சிங்கள சிந்தனைகளைக்‘ காவிக் கொண்டு ‘தமிழ் மக்களின் ஆணையை‘ மறந்து நாடாளுமன்ற மாகாண உள்ளூராட்சி சபைகளுக்கான நாற்காலிகளை இலக்கு வைத்துப் பயணித்துக் கொண்டிருக்கின்றனர்.
இன்றைய இந்த தமிழ்த் தலைமைகளை நம்பிப் பயணிப்பதில் பலனில்லை என்பது வெட்ட வெளிச்சமாக உள்ளது.
தமிழ் மக்கள் மாலுமி இல்லாத கப்பலில் இன்னும் எவ்வளவு காலத்திற்குப் பயணிக்கப் போகின்றனர் ஏன்பதுதான் இன்று உள்ள கேள்வியாகும்.