LOADING

Type to search

இலங்கை அரசியல்

விநாயகர் விமர்சனம் | தமிழ்ச் சமூகம் மீண்டும் அறிவுசார் சமூகமாக மாற வேண்டும்

Share

(கனடா உதயனிற்கான பிரத்தியேகத் தொடர்- பகுதி 16)

கொழும்பிலிருந்து கலாநிதி முருகேசு கணேசமுர்த்தி

கண்ணுடையர் என்பார் கற்றோர் முகத்திரண்டு 

புண்ணுடையர் கல்லா தவர்  (அதிகாரம்: கல்வி; குறள் 393)

உயர்தரப்பரீட்சை மதிப்பீட்டுப்பணியில் ஈடுபட்டுள்ள ஒரு இஸ்லாமிய நண்பருடன் அவர்களின் இன்றைய கல்வி நிலை பற்றிப் பேசினேன். 1970களின் இறுதியில் ஆரம்பித்த இலங்கை முஸ்லிம்களின் நவீன கல்விப்பாய்ச்சல் இன்று எவ்வாறு மிகப்பெரிய வளர்ச்சியைக் கண்டுள்ளது என்பதை அவர் விளக்கினார். வியாபாரிகளின் சமூகமாக பெரும்பாலும் அடையாளப்படுத்தப்பட்ட அச்சமூகம் இன்று அதிகளவு கல்விமான்கள் வைத்தியர்கள் பொறியாளர்கள் கணக்கியலாளர்கள் முகாமையாளர்கள் கணிணி வல்லுநர்கள் நிருவாக அதிகாரிகள் சட்டத்தரணிகள் என்று பொருளாதார ரீதியில் வலுவானதொரு கற்றோர் சமூகமாக மாறியுள்ளது என்பதைச் சுட்டிக்காட்டினார். 


கடந்த நான்கு தசாப்த காலப்பகுதியில் இந்த மாற்றம் இடம் பெற்றாலும் அதன் ஆரம்பப் புள்ளியாக 1977இல் பொருளாதாரம் திறந்து விடப்பட்டமையால் மத்தியகிழக்கில் உள்ள இஸ்லாமிய நாடுகளில் உருவாகிய தொழில்வாய்ப்புகள் காரணமாக ஏற்பட்ட குடிப்பெயர்வும் அதன் மூலம் உள்வந்த பணம் காரணமாக அவர்களின் பொருளாதார நிலைமைகளில் முன்னேற்றம் ஏற்பட்டது. அதேவேளை அச்சமூகத்தில் இருந்த தனவந்தார்கள் சிலர் தமது சொந்தப்பணத்தில் வசதியில்லாத ஆனால் படிப்பில் ஆர்வம் காட்டும் சிறுவர்களுக்கு உணவு உடை இருப்பிடம்; மற்றும் பாதுகாப்பினை வழங்கி தமது சமயம் சார்ந்த கல்விச் சுழலில் மதக்கற்கைகளோடு இலங்கையின் பிரதான பரீட்சைகளுக்கும் அவர்களைத் தயார்படுத்தும் நோக்கில் கல்விச்சாலைகளை அமைத்தனர். இதன் ஒரு முன்னோடியாக பேருவளையின் நளீம் ஹாஜியாரையும் அவர் தாபித்த ஜாமியா நளீமிய்யா என்ற கல்வித்தாபனத்தையும் குறிப்பிடலாம். 

நான்கு தசாப்பதங்களுக்கு முன்பு முஸ்லிம் செல்வந்த வர்த்தகரான ஒருவர் யாருமே சிந்தித்திராத ஒரு வேளையில் தனது சமூகம் பற்றிய அக்கறையோடு இலவசமாக கல்வி வழங்கும் ஒரு தாபனத்தை உருவாக்கி அதன் ஊடாக இலங்கையின் பலபாகங்களிலும் இருந்து வசதி குறைந்த முஸ்லிம் மாணவர்களுக்கு இலவசமாகக் கல்வியை வழங்கி மிகப்பெரிய ஒரு மாற்றத்தைச் செய்திருக்கிறார். அதில் கல்வி கற்றோர் இலங்கை நிர்வாக சேவை உட்பட அரச சேவைகளிலும் தனியார் துறையிலும் நல்ல பதவிகளில் உள்ளனர். 

வெளிப்பார்வைக்கு ஒரு மதக்கல்வி நிறுவனமாகத் தோற்றமளித்தாலும் இலங்கையின் அரசதுறை மற்றும் தனியார் துறை தொழில்வாய்ப்புகளில் போட்டியிட்டு வெற்றிபெறும் அளவுக்கு அந்நிறுவனம் கல்வியாளர்களையும் நிபுணர்களையும் உருவாக்கி விட்டிருக்கிறது. கிழக்கிலங்கையைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் அரசியல்வாதி மத்திய கிழக்கு நாடொன்றின் நிதி அனுசரணையில் உருவாக்கிய பிரமாண்டமான பல்கலைக்கழகக் கட்டடம் இந்த முயற்சியின் ஒரு நீட்சியாகவே பார்க்கப்பட வேண்டும். அது மட்டுமல்லாமல் தென்கிழக்குப் பல்கலைக்கழகம் தமது சமூகத்தின் நன்மைகருதி தமக்குக் கிடைக்கும் வாய்ப்புகளை சரியானவகையில் பயன்படுத்திக் கொள்ளும் முயற்சியில் தீவிரமாக ஈடுபடுவதையும் காணமுடிகிறது. 

கிழக்கிலங்கையில்  வாழ்ந்த முஸ்லிம் சமூகத்தவர்கள் கொழும்பிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் பெருமளவில் குடியேறியுள்ளதையும் காணமுடிகிறது. கல்வி மற்றும் பொருளாதார வாய்ப்புகளுக்காகவே இத்தகைய குடிப்பெயர்வுகள் இடம் பெறுகின்றன. ஆரம்பத்தில் தனிப்பட்ட சிலர் மேற்கொண்ட தூரநோக்குடனான கல்வித்துறை முதலீடுகள் மற்றும் அச்சமூகத்தின் அரசியல்வாதிகள் வழங்கிய தொழில் வாய்ப்புகள் ஆகியன இத்தகைய முன்னேற்றத்திற்கு பிரதான காரணங்களாக அமைந்தன. 

அதேவேளை, ஆங்கிலேயர் காலத்திலேயே கற்றோர் நிறைந்த ஒரு சமூகமாக மற்றவர்கள் பொறாமைப்படும் உன்னத நிலையில் இருந்த இலங்கையின் தமிழ்ச் சமூகம் தனது கண்களை இழந்து வெறும் புண்களைச் சுமந்த சமூகமாக அலைந்து கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் இருந்தே உரிமைகள் மறுக்கப்பட்ட ஒரு சமூகமாக இருந்த மலையக தமிழ்ச்சமூகம் கல்வித்துறையில் சில முன்னேற்றங்களைக் கண்டுள்ள போதிலும் அதன் நிலையை முஸ்லிம் சமூகத்தின் கல்விப்பாய்ச்சலுடன் ஒரு போதும் ஒப்பிட முடியாது. ஒரு காலத்தில் ”கோழி மேய்ச்சாலும் கோன்மேந்திலை கோழி மேய்க்கோனும்” என்று அரச தொழில் துறை வேலைவாய்ப்புகளைப் பெறுவதையே கல்வியின் முழு நோக்கமாகக் கொண்டிருந்தது இலங்கைத் தமிழ்ச்சமூகம். 

அன்றெல்லாம் அரச உத்தியோகம் இல்லாவிட்டால் மாப்பிள்ளைக்கு யாரும் பெண் தரமாட்டார்கள். ”உத்தியோகம் புருஷ லட்சணம்” என்றொரு பழமொழியுண்டு. ஆனால் அது அரச உத்தியோகமாக இருக்கவேண்டுமென்று வடபுல தமிழ்ச்சமூகம் எதிர்பார்த்தது. எழுபதுகளிலும் எண்பதுகளிலும் இலங்கையில் வெளிவந்த தமிழ் நாவல்கள், நாடகங்கள், சிறுகதைகள் போன்றவற்றின் பிரதான கதையம்சங்களில் இந்த அம்சம் மறுக்க முடியாத ஒன்றாக இருந்தது. ஒரு ஏழை விவசாயக் குடும்பம். அம்மா, அப்பா, அண்ணன், தங்கை. அண்ணன் உயர்தரத்தில் படித்துக்கொண்டிருப்பார். பெரும்பாலும் ஊரில் உள்ள ஒரு பெட்டைக்கு படலைக்குள்ளால் களவாக கதையும் காதல் கடிதமும் பரிமாறிக்கொண்டிருப்பார். பல்கலைக்கழகம் போவார். பட்டம் பெறுவார். அரசாங்கத் தொழில் கிடைக்கும். தங்கச்சிக்கு பொறுப்பான அண்ணையாக கலியாணம் முடித்து வைப்பார். பிறகு உச்சகட்டப்பிரச்சினைகள் ஏதாவது ஏற்பட்டு அதை வெற்றிகொண்டு தன்னுடைய கலியாணத்தையும் முடிப்பார் சுபம் வரும். 

ஆக, அரசாங்கத் தொழிலில் தங்கியிருப்பது தான் வாழக்கையை வெற்றிகொள்ள ஒரே வழி கற்றலின் நோக்கமும் அதுவே என்பது சொல்லாமல் சொல்லப்பட்டிருக்கும். ஆனால், பின்வந்த காலங்களில் நாட்டில் சிங்கள மொழிக்கு வழங்கப்பட்ட முன்னுரிமை மற்றும் பல்கலைக்கழக அனுமதியில் தரப்படுத்தல் அரசாங்கத் தொழில் வாய்ப்புகள் மறுக்கப்பட்டமை போன்ற நடவடிக்கைகளால் தமிழ்ச்சமூகத்தின் தொழில்வாய்ப்புகள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டது என்பதில் நமக்கு மாற்றுக்கருத்துகள் இல்லை. இப்போது காணப்படுவது போல் தனியார் பல்கலைக்கழகங்களோ தொழில் வாண்மைக் கற்கைகளைத் தரும் நிறுவனங்களோ இலங்கையில் இருக்கவில்லை. தனியார்துறைத் தொழில்வாய்ப்புகளும் பெரிதாக இருக்கவில்லை. எனவே முற்றும் முழுதாக அரச நிறுவனங்களிலேயே தங்கியிருக்க நேர்ந்தது. 

பாதிக்கப்பட்ட தமிழ்ச் சமூகம் இதற்கெதிரான போராட்டங்களை சாத்வீக முறையில் ஆரம்பித்த காலப்பகுதியிலேயே தூரநோக்குடைய கல்விமான்கள் மேற்குலக நாடுகளுக்குக் குடிபெயர்ந்து சென்றனர். ஆனால் கல்விச் செயற்பாடுகளில் பெரியளவில் பாதிப்புகள் ஏற்படவில்லை. காலை நான்கு மணிக்கு யாழ்ப்பாணத்தில் தொடங்கும் டியுசன் சென்டர்கள் இரவு வேளைகளிலும் இயங்கின. பாடசாலைகளில் ஆசிரியர்கள், மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளை கண்களில் விளக்கெண்ணெய் விட்டுக்கொண்டு அவதானித்தனர். சிறந்த பெறுபேறே அவர்களின் நோக்கமாக இருந்தது. பல்கலைக்கழகங்களில் நுண்மான்நுழைபுலமும் நுண்மதியும் கொண்டவர்கள் இருந்தனர். அவர்களது ஆங்கிலப்புலமை அற்புதமானது. அவர்கள் இப்போது போல ஒரு புள்ளித்திட்டத்திற்கு அமைய கடதாசித்தகைமைகளைப் பெற்று பேராசிரியரானவர்கள் அல்லர். அவர்களிடையே வித்துவக்காய்ச்சல் இருந்தாலும் அது குழாயடிச் சண்டையாக மாறியதில்லை. அவர்களைப் பார்த்தாலே அவர்களின் தோற்றம் பேச்சு நடத்தை பழகும் விதம் என்பன அவர்களைப் பேராசிரியர்களாகக் காட்டும். அவர்களின் அறிவின் ஆழம் அவர்களது மாணவர்களில் நடத்தை மாற்றங்களை ஏற்படுத்தும். அத்தகைய பேராசிரியர்களைத் தரிசிக்கும் பாக்கியம் பெற்றவர்களுள் நானும் ஒருவன்.

மறுபுறம் பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறும் பட்டதாரிகளில் ஆசிரியத் தொழிலுக்கு வருவோர் கட்டாயமாக கஷ்டப்பிரதேசங்களில் சிலகாலம் பணிபுரிய வேண்டியிருந்தது. அவ்வாறு அக்காலப்பகுதியில் கட்டாயத்தின் பிரகாரம் இலங்கைபூராகவும் நியமிக்கப்பட்ட யாழ்ப்பாணத்து ஆசிரியர்களே அந்தந்த கஷ்டப் பிரதேசங்களில் இருந்த மாணவர்களின் கல்விக்கண்களைத் திறந்துவிட்ட புண்ணியவான்கள். கவனிக்கவும் நாம் இங்கு குறிப்பிடுவது தொலைக்காட்சி, செல்லிடத்தொலைபேசி, கணிணி, இணையம் போன்ற இவை எதுவுமே இல்லாமல் நாம் இயற்கையோடு இணைந்து வாழ்ந்த ஒரு காலப்பகுதியை. வானொலி, பத்திரிகை, சினிமா போன்றவை மட்டுமே தொடர்புச் சாதனங்களாக இருந்தன. ஆகவே ஆசிரியர் சொல்வதே மாணவனுக்கு வேதவாக்காக இருந்தது. 

அப்படி வந்தவர்களில் ஒருவரை எனக்கு நன்கு பழக்கம். நல்ல வெள்ளை. நல்ல உயரம். சண்டியன் போலப்பேச்சு. ஒரு செல்வந்த வர்த்தகக் குடும்பத்தைச் சேர்ந்தவர். பேராதனைப்பல்கலைக்கழக புவியியல் சிறப்புப் பட்டதாரி. யாருக்கும் பயப்படமாட்டார். விட்டுக்கொடுக்கவும் மாட்டார். ஒரு தடவை மாற்று மதத்தைச் சேர்ந்த ஒரு ஆசிரியர் மோசமாகப் பேசிவிட்டார் என்பதற்காக அவரது கழுத்தைப் பிடித்து தூக்கிச் சுவற்றிலே சாத்திவிட்டார். ஆனால் படிப்பிப்பதிலே மன்னன். எங்களுக்கு அவர் சூப்பர் ஹீரோவாகத்தான் தெரிந்தார். இப்போது கனடாவில் அமோகமாக வாழ்கிறார். தனது ஊர் பாடசாலைக்கு நிதிஉதவிகள் செய்வதாக முகப்புத்தகத்தில் சமீபத்தில் பதிவொன்றைக்கண்டேன். அன்றைய காலத்திலேயே தனது சமூகத்தைச் சேர்ந்த பிள்ளைகளுக்கு புத்தகங்கள், கற்றல் உபகரணங்கள் என்பவற்றை வழங்கி ’படியுங்களடா’ என்று ஊக்குவித்தவர் இப்போதும் அதைத் தொடர்ந்து செய்வது மகிழ்வு தந்தது.    

யுத்தம் தொடங்கிய பின்னர் வடபுலத்தில் எல்லாச் செயற்பாடுகளும் முடங்கிப்போனாலும் கல்விச் செயற்பாடுகள் தொடர்ந்து இடம் பெற்றதாக தென்பகுதியில் உள்ளவர்கள் கருதுகின்றனர். ஆனால், பிரித்தானிய ஆட்சி காலப்பகுதியிலிருந்து தக்கவைக்கப்பட்டு வந்த முதன்மைத்தனம் படிப்படியாகக் வீழ்ச்சியடைந்து இப்போது வெறும் பேச்சளவில் மாத்திரமே கடந்தகாலப் பெருமைகளாக இருப்பது தெரிகிறது. மூன்று தசாப்தகால யுத்தம் கல்விசார் அடைவுகளின் வீழ்ச்சிக்கு காரணமாக இருந்தாலும் யுத்தம் முடிவடைந்து பதினான்கு ஆண்டுகள் கடந்த பின்னரும் அதே மோசமான நிலை தொடர்வதை நியாயப்படுத்தவும் முடியாது மன்னிக்கவும் முடியாது. 

போதைப் பொருள் பாவனை, வன்முறை, கல்வீச்சு, வாள்வெட்டுக்கலாசாரம் போன்றவற்றிற்கு இளைஞர் சமூகம் அடிமைப்பட்டு போயுள்ள நிலையில் ஆசிரிய சமூகம் மாணவர்களுக்குப் பயப்படும் நிலை உருவாகியுள்ளது. வகுப்பறையில் கண்டித்தால் வீட்டுக் கல்லெறிவார்கள் என்று ஆசிரியர்கள் பலர் கூறினார்கள். நமக்கெதற்கு வம்பு என்று ஒதுங்கிப் போவது சரீரப்பாதுகாப்புக்கு நல்லதென அவர்கள் நம்புகிறார்கள். பெற்றோர் சொல்லுக்கு பிள்ளைகள் கட்டுப்படுவதில்லை. 

கனடா உட்பட மேல்குலக நாடுகளில் வாழும் உறவினர்கள் அனுப்பும் பணத்தில் ஒரு மேட்டார் சைக்கிள், ஒரு ஐ போன், தமிழ் சினிமா காட்டும் நெகடிவ் ஹீரோயிஸத்தின் இன்றைய குத்தகைக்காரர்களாக பெடியன்கள். கட்டப்பஞ்சாயத்து, சினிமா கட்டவுட்டுக்கு பால் ஊற்றுவது போன்ற கருமங்களை கடைப்பிடித்து வாழ்கிறார்கள். 

ஆனால், போரினால் பாதிக்கப்பட்டு வாழ்விழந்த நிலையில் எதுவும் செய்ய வழியில்லாமலும் குழந்தைகளுக்கு கற்பிக்க முடியாத நிலையிலும் கணிசமான குடும்பங்கள் வாழ்கின்றன. அவர்களுக்கு கல்வியில் உதவி செய்ய தமிழ் தனவந்தர்கள் முன்வரவேண்டும். போராடிக்களைத்த சமூகத்திற்கு அரசாங்கம் எதுவும் செய்யும் என நம்புவதற்கில்லை. மேற்குலகில் உள்ள தமிழ் தனவந்தர்கள் இதுபற்றிச் சிந்தித்து அரசாங்கம் அமைத்துள்ள விளையாட்டுத்திடலில் நமக்குரிய வாய்ப்புகளைப் பயன்படுத்தி எப்படி விளையாடலாம் என்று பார்க்க வேண்டும். 

தமிழ் அரசியல்வாதிகள் தமிழ்ச்சமூகத்தின் கல்வித்துறை வளர்ச்சியை முதன்மைப்படுத்தி, இருக்கின்ற வளங்களையும் பெறக்கூடிய வளங்களையும் பயன்படுத்தி அதற்குரிய திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். வடக்கு கிழக்குப் பல்கலைக்கழகங்களில் உள்ளவர்கள் நான் பெரிதா நீ பெரிதா என்ற குடுமிப்பிடிச் சண்டைகளை விட்டுவிட்டு தம்மையும் வளர்த்து தம்மிடம் வரும் மாணவர்களையும் வளர்த்துவிட முயற்சிக்க வேண்டும். கல்வி மட்டும் தான் சமூகத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த உதவும். 

இன்று இதை ஒரு குறிப்பாக உங்களிடம் பதிவு செய்திருக்கிறேன். நமது வாசகர்கள் இது தொடர்பில் ஒரு உரையாடலை ஆரம்பிப்பார்கள் என்ற நம்பிக்கையுடன்…….