வாக்காளர் கணக்கெடுப்புக்கான காலக்கெடு – மே 31 | பதிவை உறுதிசெய்யுமாறு பசுமை இயக்கம் வேண்டுகோள்
Share
இலங்கைத் தேர்தல்கள் ஆணையம் 2023ஆம் ஆண்டுக்கான வாக்காளர் கணக்கெடுப்பின் இறுதித் திகதி மே மாதம் 31ஆம் திகதி என அறிவித்துள்ளது. இக்காலப்பகுதிக்குள் கிராம சேவையாளர்கள் கணக்கெடுப்பை மேற்கொள்வதற்கு வீடுகளுக்கு வருகை தராவிடில் வாக்காளர்கள் உடனடியாகத் தங்கள் பகுதிக்குரிய கிராம சேவையாளரைத் தொடர்புகொள்ள வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பை உதாசீனம் செய்யாது வாக்காளர்கள் அனைவரும் இந்த ஆண்டுக் கணக்கெடுப்பில் தங்கள் பெயர் பதிவு செய்யப்படுவதை உறுதிசெய்துகொள்ள வேண்டும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுதொடர்பாகத் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் பொதுச்செயலாளர் மகேசன் கஜேந்திரன் அவர்கள் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்திருக்கும் அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில்,
வாக்காளர் கணக்கெடுப்பில் ஒருதடவை பெயர்களைப் பதிவுசெய்தால் போதுமானது எனக்கருதிப் பலர் தொடர்கணக்கெடுப்புக் குறித்து அக்கறை செலுத்துவதில்லை. இதனால், புதிய தேருநர் இடாப்பில் அவர்களது பெயர் நீக்கப்பட்டு விடுகிறது. இதைக் கருத்திற்கொண்டு கிராமசேவையாளர்கள் தற்போது மேற்கொண்டுவரும் 2023ஆம் ஆண்டுக்கான கணக்கெடுப்பில் வாக்காளர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பெயர் இடம்பெறுவதை உறுதிசெய்வது அவசியமாகும்.
இலங்கையில் வாக்காளர் தினம் கொண்டாடப்பட்டுவரும் யூன் 01 ஆம் திகதியன்று 18 வயது பூர்த்தியடைந்த இலங்கைக் குடிமகனாகவுள்ள எவரும் வாக்களிக்கும் உரிமை பெற்றவர்களாகக் கருதப்படுவார்கள். வாக்காளர்களாகத் தகுதி பெற்றுள்ள புதியவர்களும் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தித் தேருநர் இடாப்பில் தங்கள் பெயர்களைப் பதிவு செய்துகொள்ள வேண்டும். இதன்மூலம் மாத்திரமே வாக்களிக்கும் உரிமை உறுதி செய்யப்படும்.
ஒவ்வொரு மாவட்டத்திலுமுள்ள வாக்காளர்களின் எண்ணிக்கையின் அடிப்படையிலேயே பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை தீர்மானிக்கப்படும். உதாரணமாக, 1989ஆம் ஆண்டு யாழ் – கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தில் 11 பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவுசெய்யப் பட்டிருந்தனர். தற்போது வாக்காளர்களின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்ததன் காரணமாகப் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 7ஆகக் குறைவடைந்துள்ளது.
வாக்காளர்களின் எண்ணிக்கை குறைந்து செல்லுதல் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆசனங்களில் மாத்திரம் குறைவை ஏற்படுத்தும் ஒன்றல்ல. மாவட்டத்தின் அபிவிருத்திக்கு ஒதுக்கப்படும் நிதி, மாவட்டத்திலிருந்து பல்கலைக்கழகத்துக்குத் தெரிவாகும் மாணவர்களின் எண்ணிக்கை போன்றவற்றிலும் குறைவை ஏற்படுத்தும். அந்தவகையில், வாக்களிக்கத் தகுதி பெற்ற அனைவரும் தங்களை வாக்காளராகப் பதிவு செய்தல் ஒரு தேசியக் கடமையாகும்.
எனவே, வாக்காளர்கள் அனைவரும் தாமதமின்றித் தமது கிராமசேவையாளருடன் தொடர்பு கொண்டு இந்த ஆண்டுக்கான வாக்காளர் கணக்கெடுப்பில் தங்கள் பெயர் இடம்பெறுவதைத் தவறாது உறுதிசெய்துகொள்ள வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.