LOADING

Type to search

இலங்கை அரசியல்

இலங்கை பொலிசாரின் அடக்குமுறை: கஜேந்திரகுமார் பொன்னம்பலம் காலை கொழும்பில் கைது; மாலை கிளிநொச்சியில் விடுதலை

Share

யாழ்ப்பாணத்திலிருந்து நடராசா லோகதயாளன்

கொழும்பில் புதன்கிழமை (7) காலையில் கைது செய்யப்பட்ட யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மாலையில் கிளிநொச்சி நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக காலை அவரது வீட்டிற்கு சென்ற இலங்கை பொலிசார் கடுமையான வாக்குவாதங்களிற்கு பிறகு அவரை கைது செய்து, மருதங்கேணிக்கு அழைத்துச் சென்றனர். அங்கிருந்து தமக்கு அளிக்கப்பட்ட தகவலின் அடிப்படையிலேயே அவரை கைது செய்வதாக பொலிசார் கூறினாலும், அதற்கான உத்தரவு எதையும் அவர்கள் காட்டவில்லை என்று சம்பவத்தை நேரில் கண்டவர்கள் கூறுகின்றனர்.

பொலிசார் அவரை கைது செய்ய வந்துள்ள நிலையில், அவர் உடனடியாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை தொடர்பு கொண்டு விஷயத்தை தெரியப்படுத்தினார். அவர் சபாநாயகருடனான அவரது உரையாடலும், பொலிசாரிடம் கைது உத்தரவை காட்டுமாறு அவர் கோரியதையும் ஊடகங்களில் காண முடிந்தது.

மருதங்கேணிப் பகுதியில் பரீட்சை இணைப்புச் செயலகமாக இயங்கிய பாடசாலை வளாகத்தில் கூடி “பொலிசாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தார்” என்ற குற்றச் சாட்டின் பெயரிலேயே கொழும்பில் வைத்து கொள்ளுப்பிட்டிப் பொலிசார் அவரை கைது செய்து மருதங்கேணிக்கு அழைத்து வந்தனர்.

இவ்வாறு மருதங்கேணிக்கு அழைத்து வரப்பட்ட கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திடம் வாக்குமூலம் பெறப்பட்டு அவர் கிளிநொச்சி நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட்டார்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மருதங்கேணியில் உள்ள பாடசாலையின் மைதானத்தில் விளையாட்டுக் கழக உறுப்பினர்களைச் சந்துத்து உரையாடிய சமயம் அங்கு பிரசன்னமான சிவில் உடை தரித்த பொலிசார் நாடாளுமன்ற உறுப்பினரை தாக்க முற்பட்டதாக முன்னணி தரப்பிலும், தற்போது நாட்டில் இடம்பெறும் க.பொ.த சாதாரணப் பரீட்சையின் இணைப்புச் செயலக பாதுகாப்பிற்கு இருந்த பொலிசாரின் பணிக்கு இடையூறு ஏற்படுத்தியதாக பொலிசாரினாலும் குற்றம் சாட்டப்படுகின்றது.

இதேநேரம் இக்குற்றச் சாட்டில் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள இருவரும் புதன்கிழமை கிளிநொச்சி நீநிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற அமர்வின் ஆரம்பத்தில் பாராளுமன்றத்தில் சபாநாயகரால் அறிவிக்கப்பட்டது.

பொலிசார் தனக்கு அறிவித்த பின்னரே பாராளுமன்ற உறுப்பினரை கைது செய்ததாகவும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன அறிவித்தார்.

இதனையடுத்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச “ஒரு பாராளுமன்ற உறுப்பினரை இவ்வாறு கைது செய்வதற்கு அனுமதிக்க முடியாது” என கூறிய போது ‘நாங்கள் பொலிசாரின் கடமைக்கு இடையூறு விளைவிக்க முடியாது’ என சபாநாயகர் சபையில் பதிலளித்தார்.

அவரின் கைது நாடாளுமன்றத்தில் காரசாரமான விவாதங்களை ஏற்படுத்தியது. அவருடைய கொள்கைகளுடன் தாங்கள் மாறுபட்டாலும், ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் அவர் நாடாளுமன்றத்திற்கு வந்து அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்க முடியும் என்று சஜித் பிரேமதாச வாதிட்டார். இலங்கை தமிழரசு கட்சியின் உறுப்பினர்கள் சிறீதரன், சுமந்திரன், சாணக்கியன் ஆகியோருடன் வேறு சில எதிரகட்சி உறுப்பினர்களும் பொலிசாரின் நடவடிக்கையை கண்டித்தனர்.

மருதங்கேணி சம்பவம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று ஒரு சிறப்பு அறிக்கையை கஜேந்திரகுமார் தாக்கல் செய்யவிருந்தார். அதை தடுக்கும் நோக்கிலேயே அவர் கைது செய்யப்பட்டார் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன. எனினும், நாடாளுமன்ற உறுப்பினரின் கைது அவரது சிறப்புரிமையை மீறும் செயலாகும் என்று உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

இதற்கு பதிலளித்த சபாநாயகர், அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பிறகு, நாடாளுமன்ற விவாதங்களில் கலந்துகொள்ள அவர் அனுமதிக்கப்படுவார் என்று தெரிவித்தார்.

இதேவேளை யாழ்ப்பாணம் மருதங்கேணி பகுதியில் பொலிசாரின் கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இரண்டு உறுப்பினர்கள் இன்று புதன்கிழமை (7) பிணையில் செல்ல கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றம் அனுமதித்தது. இந்த வழக்கின் அடுத்த விசாரணை ஜுலை மாதம் 14ஆம் திகதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கைது தொடர்பான சமூக ஊடங்களில் பரவலாகப் பதியப்பட்டும் பகிரவும்பட்டுள்ளது. அவர் கைது செய்யப்பட்ட உடனேயே அது டிவிட்டரில் பதிவாகியது. உள்நாட்டிலும், புலம்பெயர்ந்த நாடுகளில் வாழ்பவர்களும் அந்தச் செய்தியை சுயமாகவும் மறுடிவீட்டும் செய்தனர்.

பிரித்தானிய நாடாளுமன்றத்தில் தொழிலாளர் கட்சியின் மிட்சம் மற்றும் மோடன் தொகுதிக்கான உறுப்பினர் ஷியோபயின் மெக்டோனா அம்மையாரும் அவர் கைது செய்யப்பட்டதை கண்டித்துள்ளார். “கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கைதானது, தமிழ் மக்கள் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் நீதிக்காகவும், பாரியளவிலான அட்டூழியங்கள் மற்றும் இனப்படுகொலை ஆகியவை குறித்தும், இன மோதலுக்கான அரசியல் தீர்வு குறித்து பேசும் போதும் அவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. அவர் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்” என்று டிவீட் செய்துள்ளார்.

அவரது கருத்து புலம்பெயர்ந்த நாடுகளில் பரந்தளவில் வாழும் தமிழ் மக்களால் வரவேற்கப்பட்டுள்ளது.