LOADING

Type to search

இலங்கை அரசியல்

மன்னார் மாவட்டத்தில் உள்ள வளங்களை பாதுகாக்க கோரி கவனயீர்ப்பு போராட்டம் : அரச அதிபரிடம் மகஜர் கையளிப்பு

Share

(மன்னார் நிருபர்)

(14-06-2023)

மன்னார் மாவட்டத்தில் உள்ள வளங்களை பாதுகாக்க கோரி சூழல் பாதுகாப்பிற்கான கவனயீர்ப்பு போராட்டம் இன்றைய தினம் புதன்கிழமை(14) காலை 10.30 மணியளவில் மன்னாரில் இடம் பெற்றது.

மன்னார் கறிற்றாஸ்- வாழ்வுதயத்தின் ஏற்பாட்டில் மன்னாரில் உள்ள அலுவலகத்திற்கு முன் கறிற்றாஸ் வாழ்வுதய இயக்குனர் அருட்தந்தை எஸ்.அன்ரன் அடிகளார் தலைமையில் ஆரம்பமானது.இதன் போது இளைஞர்,யுவதிகள்,சூழல் பாதுகாப்பு குழுவினர்,மன்னார் கறிற்றாஸ் வாழ்வுதய பணியாளர் களும் கலந்து கொண்டிருந்தனர்.

-இதன் போது கவனயீர்ப்பு பேரணியில் கலந்து கொண்டவர்கள் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு சென்றனர்.குறித்த ஊர்வலம் மன்னார் மாவட்டச் செயலகம் முன் சென்றடைந்தது.

இதனைத் தொடர்ந்து மன்னார் மாவட்ட அரசாங்க அதிபருக்கு எழுதப்பட்ட மகஜர் மன்னார் கறிற்றாஸ் வாழ்வுதய இயக்குனர் அருட்தந்தை எஸ்.அன்ரன் அடிகளாரினால் வாசிக்கப்பட்டது.பின்னர் குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஒன்றினைந்து மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டி மேலிடம் கையளிக்கப்பட்டது.

கையளிக்கப்பட்ட மகஜரில் மேலும் குறிப்பிடுகையில்,,,,

சர்வதேசம் COP27 மூலம் இயற்கையைப் பாதுகாப்பது மற்றும் காலநிலை மாற்றங்களை நிர்வகிப்பது குறித்து தனது தீவிர அக்கறை காட்டும் இக்காலப் பகுதியில் மன்னார் மாவட்டத்தில் உள்ள மக்களின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரங்களை பாதுகாப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்வதும் அவசர தேவையாகும்.

முல்லை, மருதம், நெய்தல் நிலங்களையும், அழகிய நீர்நிலைகள், ஆறுகள் மற்றும் குளங்கள், மணல் திட்டுக்கள் போன்ற பல்வேறு சுற்றுச்சூழல் இயற்கை வனப்புகளை உள்ளடக்கிய மன்னார் மாவட்டம் தாவரங்கள் மற்றும் விலங்கினங்களுக்கு மிகவும் வளமான இடமாகும்.

‘கறிராஸ்-வாழ்வுதயம் நிறுவனம் ‘இயற்கை வளங்களை பாதுகாப்போம்’ எனும் திட்டத்தை மன்னார் மாவட்டத்தில் உள்ள ஒன்பது கிராமங்களில் செயல்படுத்தி வருகிறது. இயற்கை வளங்களை பாதுகாக்கும் முயற்சிகளில் சமூகத்தின் பங்கேற்பையும், ஈடுபாட்டையும், நிலைத்த தன்மையையும் உறுதி செய்யும் நோக்குடன் ஒவ்வொரு இலக்கு கிராமங்களிலும் சிறுவர், இளையோர், வளர்ந்தோர் சுற்றுச்சூழல் பாதுகாப்புக் குழுக்கள் அரச அதிகாரிகளின் பூரண ஒத்துழைப்புடனும், வழி காட்டல்களுடனும் உருவாக்கப்பட்டுள்ளன.

இக்கிராம மட்டத்திலான சுற்றுச்சூழல் பாதுகாப்புக் குழுக்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களை மாவட்டத்தில் உள்ள இயற்கை வளங்கள் சுரண்டல் செயற்பாடுகளின் முக்கியமானவற்றை தங்களின் மேலான கவனத்திற்கு, தடுப்பு நடவடிக்கைகளுக்கும் கோடிட்டுக் காட்டுகின்றன:

1. காற்றாலை திட்டம் – முதலாம் கட்டம்

மன்னார் தீவில் ஏற்கனவே சுமார் 30 காற்றாலைகள் நிறுவப்பட்டு, மணல் அகழ்வோடு இணைக்கப்பட்டு வருகின்றன. இந்த சிறிய தீவில் ஆண்டுக்கு 380 – 400 GWh என்ற இலக்குடன் அதிக காற்றாலைகளை நிறுவுவதற்கான திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை செயல்படுத்துவதற்கான சில அடிப்படை வேலைகள் நடந்து வருகின்றன. இத்திட்டத்தினால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் பற்றியும், வெளிநாட்டுப் பறவைகள் வருகை குறைவு, மீன் உற்பத்தி குறைபாடு, மண் வளம் அகழ்வு செய்யப்படுவது பற்றியும் கருத்தில் கொண்டு பாதிப்பு தவிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

2. சட்டவிரோத மணல் அகழ்வு

அருவி ஆறு ஆற்றில் சட்டவிரோதமாக மணல் அகழ்வு மேற்கொள்ளப்படுவதால் அளவுக்கு அதிகமாக ஆறு ஆழமாக்கப் பட்டுள்ளமையால் கடல் வெள்ளம் உயரும் போது ஆற்று நீருடன் உப்பு நீர் கலப்பதால் ஆற்றங்கரை கிராமங்களின் நிலத்தடி நீர் உவராக மாறியுள்ளது. ஆற்றங்கரைகளில் தோட்டம் செய்ய முடியாதபடி நீர் உருவாகியுள்ளது. குறிப்பாக மடுக்கரை மற்றும் தம்பனைக்குளம் கிராமங்களின் குடிநீர் கிணறுகள் உவராக மாறியுள்ளன. ஆற்று வித்தன்களில் உள்ள பெரிய மரங்கள் வேரோடு வீழ்த்தப்பட்டு விலங்குகள் பறவைகளின் வாழ்விடங்கள் அழிக்கப்பட்டுள்ளன.

3. இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறல்

மன்னார் மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்திலும், பொருளாதார அபிவிருத்தியிலும் கடல்வளம் பாரிய செல்வாக்கினைச் செலுத்துகின்றது. ஆனால், இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறல் காரணமாக எமது கடல் வளமும்,கடல்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்க சுற்றுச்சூழலில் உள்ள பவளப் பாறைகளும், ஏனைய இடங்களும் அடியோடு அழிக்கப்பட்டு வருகின்றன. காலப்போக்கில் எமது மக்கள் மீன்பிடித் தொழிலை இழப்பதற்கான குறி காட்டிகளாகவே இவை துலங்குகின்றன.

4. காடழிப்பு

மன்னார் மாவட்டம் உள்நாட்டு யுத்தத்திற்கு முன்பு பரந்த காடுகளை கொண்டிருந்தது. யுத்தம் நிறைவுற்று 2010ம் ஆண்டிற்கு பிற்பாடு பாரியளவிலான காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றன. 2021ம் ஆண்டின் பிற்பாடு காட்டு வளமானது 210 ஹெக்டேயர் வனப்பரப்பை இழந்துள்ளது. கூகுள் எர்த் வரைபடத்தின் படி டிசம்பர் 2015க்குள் ஏறத்தாழ 2,208 ஏக்கர் அழிக்கப்பட்டுள்ளது. முதிரை, பாலை, வீரை போன்ற பெரு மரங்களில் 70 வீதம் வரையானவை சட்டவிரோதமாக அழிக்கப்பட்டுள்ளதாக காட்டு இலாகாவின் அறிக்கை மூலம் அறிய முடிகிறது.

5. கண்டல் தாவர அழிப்பு

கண்டல் தாவரங்களின் வேர்கள் நண்டு, இறால், சிப்பி போன்ற பல்லுயிர்களின் பெருக்கத்திற்கான மையமாகும், இவற்றின் கிளைகள் பறவைகளின் தங்கு தளம் ஆகும். சிறு மீன்கள், பறவைகள், ஊர்வன மற்றும் ஏராளமான பிற வனவிலங்குகளுக்கும் நீரின் மேற்பரப்பிற்கு மேலேயும், கீழேயும் ஏராளமான உணவுகள் உருவாகும் தொழிற்பாட்டை இத்தாவரங்கள் மேற்கொள்கின்றன. துரதிஸ்ட விதமாக சட்டவிரோத மீன்பிடித்தல், விறகு மற்றும் பிற நடவடிக்கைகளுக்காக மாவட்டத்தில் உள்ள சதுப்பு நில தாவரங்கள் பெருமளவில் அழிக்கப்படுகின்றன.

6. வங்காலை பறவைகள் சரணாலயம்

வங்காலை பறவைகள் சரணாலயம் வறண்ட–மண்டல முள் புதர் காடுகள், மேய்ச்சல் நிலங்கள், கடல் – புல் படுக்கைகள், மணல் திட்டுகள், தடாகங்கள், அலை அடுக்குகள், சதுப்பு நிலங்கள், முதலியவற்றைக் கொண்ட அழகிய பிரதேசமாகும்.

இங்கு உள்நாட்டு பறவைகளும், வெளிநாட்டுப் பறவைகள் வந்து செல்கின்றமை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகும். இவற்றைக் கண்டு களிப்பதற்காக சுற்றுலாப் பயணிகள் எமது மாவட்டத்திற்கு வருகை தருதல் பொருளாதார வளர்ச்சிக்கான படிக்கல்லாகும்.

ஆனால், இந்த இடத்தின் அழகினையும். வரலாற்று முக்கியத்துவத்தையும் அறிந்து கொள்ளாத, புரிந்து கொள்ளாத மக்கள் தங்கள் வீட்டுக் கழிவுகளை (பொலித்தீன்-பிளாஸ்ரிக்) சரணாலயத்தின் உள்ளே கொட்டுவது விலங்குகளுக்கும், பல்லுயிர் காப்பிற்கும் பாரிய அச்சுறுத்தலான செயற்பாடாகும்.

எனவே மேற்கூறிய பிரச்சனைகள் மற்றும் சுரண்டல்களின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதைக் கண்டு வேதனை அடைகிறோம். மன்னார் வளங்களை பாதுகாத்து அடுத்த தலைமுறைக்குக் கையளிக்கும் பொருட்டு விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு தங்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.என குறித்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது.