LOADING

Type to search

இலங்கை அரசியல்

தொல்லியல் பணிப்பாளரின் பதவி விலகல் ஆக்கிரமிப்பிற்கு தீர்வாகுமா?

Share

எமது யாழ்ப்பாணச் செய்தியாளர் 

அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்துகொண்ட ஒரு கூட்டத்தில் நாட்டின் தொல்லியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்தை ஒரு பிடிபிடித்தார். இதையடுத்து அவர் பதவி விலக வேண்டிய நிலை ஏற்பட்டது.

“நாட்டின் வரலாறு உங்களுக்கு தெரியவில்லை என்றால், நான் அந்த வகுப்பை உங்களுக்கு எடுக்க வேண்டிய தேவை ஏற்படும்” என்று ரணில் விக்ரமசிங்க தொல்லியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் அனுர மானதுங்கவை நோக்கி கூறியதை அடுத்து அவர் பதவி விலகும் சூழல் ஏற்பட்டது.

எனினும் நாட்டில் ஒரு நபர் பதவி விலனினால் மட்டுமே பிரச்சனைகளுக்கு தீர்வு ஏற்படாது என்று சிவசேனை அமைப்பில் தலைவர் கூறுகிறார். 

”தொல்லியல் திணைக்களத் தலைவர் பதவி  விலகியதால் சிக்கல் தீராது. வவுனியாத் தொல்லியல் திணைக்களத் துணை ஆணையர் செயதிலகர் விலக வேண்டும்” என்று சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தம் கோரிக்கை விடுத்துள்ளார். 

இது தொடர்பில் சிவசேனை அமைப்பின் தலைவர் செய்தி குறிப்பு ஒன்றையும் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. 

இந்து புத்த நல்லிணக்கத்தைக் கெடுத்தவர் செயதிலகர். சிவசேனையில் உள்ள நாங்கள் கூறுகிறோம். வட மாகாணத்தில் தொல்லியல் திணைக்கள அடாவடித்தனங்களுக்கு வவுனியாத் தொல்லியல் துணை ஆணையர் செயதிலகரே காரணம். சிவசேனையினர் அவரிடம் சென்று முறையிட்டோம். நல்லிணக்கத்துக்கு இடையூறாக இருக்காதீர்கள் எனக் கோரினோம்” 

அவரிடம் நேரடியாகவே சென்று தாங்கள் பேசியதாகவும் மறவன்புலவு சச்சிதானந்தம் கூறுகிறார்.

”சட்டங்களுக்கு அமைய நடப்பேன். யார் சொன்னாலும் விட்டுக் கொடுக்க மாட்டேன் இந்து புத்த நல்லிணக்கம் உடைந்தாலும் கருதேன்” என்று அவர்  நேரடியாகவே சிவ சேனையிடம் சொன்னார் என்று அவரது செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் ஜனாதிபதி உடனடியாக அவரையும் இடமாற்றியோ இடைநிறுத்தியோ விசாரணைகளைத் தொடங்க வேண்டும். இந்து புத்த நல்லிணக்க முயற்சிகளைச் சிவ சேனை பாராட்டுகிறது எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

”வட மாகாணத்தைப் புத்தமயமாக்கத்திலிருந்து காப்போம் .போர் முடிந்த காலத்தில் வட மாகாணத்தில் ஏறத்தாழ 500 / 600 புத்தர் சிலைகள் காணப்பட்டாலும்  படை முகாம்களுள் காவல் அரண்களுள் காவல் நிலையங்களுள் என  அவை இருந்தன. 14 ஆண்டுகளுக்குப் பின்பும் அந்த எண்ணிக்கை 100க்கு அண்மையாகவுள்ளது”. 

எனினும், புதிதாக அடாத்தாக ஆக்கிரமித்துப் புத்த விகாரங்களை கட்டுவதற்கும் புத்தர் சிலைகளை நாட்டுவதற்கும் திட்டங்களும் நடைமுறைகளும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன என்றும் சிவசேனை அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.

”கடந்த 14 ஆண்டுகளில் வட மாகாணத்தில் மட்டும் 25 முதல் 30 வரையான புதிய பௌத்த  கட்டுமானங்கள் ஆக்கிரமிப்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளன. அவ்வாறு செய்யுமாறு புத்த பகவான் கோரவில்லை. பௌத்த சமயத்தில் ஈடுபாடு, அறிவு, நம்பிக்கை இல்லாதவர்களே பௌத்த ஆக்கிரமிப்பாளராக உள்ளனர்”. 

தர்மத்திலும் வினையிலும் சங்கத்திலும் நல்லிணக்கத்திலும்  ஈடுபாடும் நம்பிக்கை உடைய பௌத்தர்கள் இலங்கையில் ஏராளமானோர் உள்ளனர்.  அவர்கள் வழி வடக்கின் பௌத்தமயமாக்கலைக் கட்டுக்குள் கொண்டு வர முடியும் என்கிறர் சச்சிதானந்தம்.

”அண்மைக் காலங்களில் வடக்கின் நயினாதீவு தேரர், வவுனியாவின் பன்சலை வாழ் தேரர், தெற்கில் வாழ்கின்ற அறவாணரா பௌத்த தேரர் போன்றோர் கூறிவரும் நல்லிணக்கக் கருத்துகளை வட மாகாணத்தின் பௌத்தமயமாக்கலுக்கு எதிராகக் கருவியாக்கும். திறனும் ஆளுமையுமே வடமாகாணத்தைப் புத்தமயமாக்கலில் இருந்து காக்கும்”. 

சிவசேனையில் உள்ளவர்கள் நயினாதீவு சென்றார்கள். பௌத்த சமயத்தவர் வாழாத இடங்களில் பௌத்த விகாரங்களை ஏன் கட்டுகிறீர்கள்? எனக் கேட்டுக்கொண்டேயிருக்கும் நயினாதீவு நாக விகாரைத் தேரரைப் பாராட்டினார்கள் எனவும் அவர்களின் செய்திக்குறிப்பு கூறுகிறது.