LOADING

Type to search

இலங்கை அரசியல்

விநாயகர் விமர்சனம் | நீர் நிர்வாகம்: இலங்கைக்கு விடுக்கபட்டுள்ள எச்சரிக்கை மணி

Share

(கனடா உதயனிற்கான பிரத்தியேகத் தொடர்- பகுதி 19)

கொழும்பிலிருந்து கலாநிதி முருகேசு கணேசமூர்த்தி

ஐயா கோப்பி குடிக்கிறியளே? சார் காப்பி சாப்பிடுறீங்களா? இந்த இரண்டிற்கும் என்ன வித்தியாசம்?

இதென்ன கோதாரி ரண்டும் ஒண்டு தானே? நாங்கள் இப்படிச் சொல்லுவம் இந்தியாவில அவை அப்பிடிச்

சொல்லுவினம் என்று உங்கள் பதில் வருமென்று தெரியும். இந்திய நேயர்களிடமிருந்து நாங்க இப்பிடித்தான்சொல்லுவோம் சிலோன் காரர் அப்படித்தான் சொல்லுவாங்க என்று பதில் வரும். திண்ம உணவுகளை உட்கொள்வதையே பொதுவாக சாப்பிடுதல் என்ற சொல் குறிக்கும். திரவ வடிவில் உள்ளவற்றை உட்கொள்வதை குடிப்பது என்று தான் பொதுவில் சொல்லுவோம். 

இலக்கியத்தமிழில் வேண்டுமானால் தண்ணீர் அருந்துதல் உணவு அருந்துதல் என்று இரண்டிற்கும் பொதுவில் சொல்லலாம். ஆனால் அதே நேரத்தில்; தண்ணி அடித்தேன் தண்ணி போட்டேன் என்றால் அந்தத்தண்ணீரின் அர்த்தமே மாறிவிடும். அந்த அர்த்தத்திற்கு விளக்கம் தேவையில்லை என்று நினைக்கிறேன். அடித்தும் இருப்பீர்கள் அடித்ததைப் பார்த்தும் இருப்பீர்கள். 

ஒரு மனிதன் சராசரியாக ஒரு நாளுக்கு நாலைந்து கிளாஸ் தண்ணீராவது குடிக்க வேண்டும் என்கிறார்கள் ஏனென்றால் மனித உடலின் சராசரி 60 தொடக்கம் 70 சதவீதம் தண்ணீராலானது. உடலில் ஏற்படும் அதிக நீரிழப்பு மனித உடலில் உள்ள முக்கிய அவயவங்களை இயங்கவிடாமல் செய்து மரணத்தையும் ஏற்படுத்திவிடும். வெய்யில் காலங்களில் போதியளவு நீராகாரங்களை எடுத்துக் கொள்ளுமாறு கூறுவது அதனால் தான். 


சரி நாம் தண்ணீர் குடிக்கிறோம் ஏனைய நீராகாரங்களையும் எடுத்துக் கொள்கிறோம். அவையெல்லாம் நாம் குடிக்கின்ற தண்ணீர். ஆனால் அதற்கு மேலதிகமாக நாம் சாப்பிடுகிற அல்லது உண்ணுகிற தண்ணீர் என்ற ஒன்று இருக்கிறது என்றால் நம்புவீர்களா? இதனை ஆங்கிலத்தில்  (the water we eat) என்கிறார்கள். நீங்களும் நானும் இந்த சமூகத்தின் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் சராசரியான 3496 லீற்றர் தண்ணீரைச் சாப்பிடுகிறோம் என்று நான் சொன்னால் மறை கழன்டிட்டுது என்பீர்களா?

உண்மையில் இது ஒரு கணிப்பிடப்பட்ட ஒரு பெறுமதிதான். இதனை காப்பி சாப்பிடுதல் போன்ற அர்த்தத்தில் எடுத்துக்கொள்ளக் கூடாது. ஒரு மனிதன் நாளாந்தம் சராசரியாக நுகர்கின்ற நீரின் அளவு 3800 லீற்றர்கள் என்று கணிப்பிட்டிருக்கிறார்கள். இதை மூன்று வகையாகப் பிரித்த்pருக்கிறார்கள் இதில் முதலாவது வகை 137 லீற்றர்கள் குளித்தல், துணிதுவைத்தல், கழிவறை பாவித்தல், சுத்திகரித்தல், உணவு சமைத்தல் என்பவற்றுக்குப் பயன்படுத்துவதுடன் நாம் குடிக்கும் நீரும் இதில் உள்ளடங்கும். இரண்டாவது வகை 167 லீற்றர்கள் நாம் பயன்படுத்தும் உடைகள் காகிதம் பருத்தி மற்றும் ஏனைய கைத்தொழில் பொருள்களை உற்பத்தி செய்வதற்குப் பயன்படுத்திய நீரின் அளவாகும். இந்த நீர் நமது கண்ணுக்குத் தெரியாமல் அப்பொருள்களில் அருவமாய் (invisible) ஒளிந்துள்ளது. மூன்றாவது பகுதிதான் உண்மையில் நாம் சாப்பிடுகின்ற நீர். 3496 லீற்றர் நீர் அதாவது நமது நாளாந்த தண்ணீர் நுகர்வின் 92 சதவீதம் நாம் உண்ணும் உணவுப் பொருள்களை உற்பத்தி

செய்வதில் ஒளிந்திருக்கிறது. சரி நமது கோப்பி உதாரணத்திற்கே வருவோம். ஒரு கப் கோப்பி போடஎவ்வளவு தண்ணீர் வேண்டும்? கேத்திலிலை தண்ணிகொதிச்சவுடன் ஊத்திக்கலக்க ஒரு 200 தொடக்கம் 300 மில்லிதான் தேவைப்படும் இல்லைiயா? ஆனால் ஐக்கிய நாடுகள் சபையின் கணிப்பீடு ஒன்றின்படி ஒரு கோப்பை கோப்பி தயாரிக்க 140 லீற்றர் தண்ணீர் தேவைப்படுகிறது என்றால் தலை சுற்றுகிறமாதிரி இல்லையா?.

ஒரு கிலோகிராம் கோப்பியை உற்பத்தி செய்ய 18900 லீற்றர் தண்ணீர் தேவைப்படுவதாக மற்றொருகணிப்பீடு சொல்கிறது. இதென்ன பிரமாதம் இன்னொரு ஸ்பெஷல் ஐட்டமும் இருக்கு. ஒரு கிலோ எலும்பில்லாத மாட்டிறைச்சி உற்பத்தி செய்ய 15400 லீற்றர் தண்ணீர் தேவைப்படுகிறதாம். ஒரு லீற்றர் பிளாஸ்டிக் போத்தல்களில் இந்த 15400 லீற்றறையும் ஊற்றி ஒன்றின் மீது ஒன்று அடுக்கினால் 8 மீற்றர் நீளமானதும் 40 மீற்றர் உயரமானதுமான ஒரு தண்ணீர் சுவரை எழப்பி விடலாம் என்கிறார்கள். இவ்வளவு பெரிய தண்ணீர் சுவர் ஒரு கிலோ மாட்டிறைச்சியில் அருவமாய் ஒளிந்துள்ளது. ஏனைய இறைச்சி வகைகளை  உற்பத்தி செய்ய அதைவிடக் குறைந்த நீரே செலவாகிறது என்கிறார்கள். உதாரணமாக ஒரு கிலோ கோழி இறைச்சி; உற்பத்திக்கு 4300 லீற்றரும் ஒரு கிலோ ஆட்டிறைச்சிக்கு 5500 லீற்றரும் தேவைப்படுகிறதாம். மறுபுறம் ஒரு கிலோ அரிசி உற்பத்திக்கு 2500 லீற்றரும் சீனி உற்பத்திக்கு 1780 லீற்றரும் செலவாகிறதாம். ஆனால், ஒரு கிலோ ஆப்பிள் உற்பத்திக்கு 822 லீற்றர் மட்டுமே செலவாவதாகக் கணிப்பிட்டிருக்கிறார்கள். இதெல்லாம் மேற்குலக நாடுகளில் தொழில் ரீதியாக வளர்க்கப்படும் மிருகங்கள் பறவைகள் மற்றும்   தாவரங்களின் தண்ணிர் உள்ளடக்கம். எங்களுடைய வீடுகளிலே விட்டுவளர்க்கப்படும் கோழி வாத்து போன்ற பறவைகள் ஆடு மாடு போன்ற மிருகங்களின் தண்ணீர் பாவனை நிச்சயமாகக் குறைவுதான். அவற்றை அடித்துச் சுவைக்கும் போது நீங்கள் சாப்பிடும் தண்ணீர் குறைவாகத் தானிருக்கும். 

மேலே நாம் கண்ட உதாரணங்களிலே ஒரு கிலோகிராம் உற்பத்தி செய்ய தண்ணீரைப் பயன்படுத்தும் உற்பத்திப் பொருளாக கோப்பி அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறது தான் ஆச்சரியம். ஒரு கிலோ கோப்பியில் ஒரு கிலோ மாட்டிறைச்சியை விட அதிகளவு தண்ணீர் மறைந்திருப்பதாக  (thewaterweeat.com) வெப்தளம் சொல்லுகிறது. கோப்பிய தோட்டங்களில் உற்பத்தி செய்வது முதல் நமது சாப்பாட்டு மேசைக்கு கொண்டு வருவதற்கான செயன்முறையில் அதிகளவு தண்ணீர் பயன்படுத்தப்படுவதாக அவர்கள் கூறுகின்றனர். ஆக நாம் உண்ணும் உணவில் மறைந்துள்ள தண்ணீரே நேரடியாக நாம் காணும் தண்ணீர் பயன்பாட்டை விட மிக மிக அதிகம் என்கிறார்கள். 

கோப்பி போன்ற ஓரிரு உணவுகளைத் தவிர சைவ உணவுவகைகளில் மறைந்துள்ள நீரின் அளவைவிட அசைவ உணவு வகைகளில் மறைந்துள்ள நீரின் அளவு மிகவும் அதிகம். அதிலும் குறிப்பாக கைத்தொழில் ரீதியில் பண்ணைகளில் வளர்க்கப்படும் விலங்குணவுகளில் மறைந்துள்ள நீரின் அளவு சாதாரணமாக வீடுகளிலும் காடுகளிலும் வளர்க்கப்படும் விலங்குகளில் மறைந்துள்ள நீரின் அளவை விட மிக அதிகம் என்று கண்டுபிடித்துள்ளார்கள். 

இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் மக்கள் சுத்தமான குடிநீருக்காக நீண்டதூரம் சென்று அதைப் பெறவேண்டிய நிலை ஒரு புறம் காணப்படும் அதேவேளை மறைமுகமான நீர்ப்பயன்பாடும் தொழில்சாலைகள் மற்றும் பண்ணைகள் ஊடாக அதிகரித்திருப்பதை காண முடிகிறது. காபனீரொட்சைட்டு ஊட்டப்பட்ட மென்பானங்களை உற்பத்தி செய்யும் பிரசித்தி பெற்ற கமபனிகள் அபிவிருத்தி அடைந்த நாடுகளில் தமது உற்பத்தியை விரிவாக்கம் செய்வதற்கு பிரதான காரணி தங்கள் நாட்டின் நீர்வளத்தைப் பாதுகாத்துக் கொள்வதாகும்.

இது நமக்கு நேடியாக நீர்பயன்படுத்தப்படுவதைக் காட்டுகிறது. ஆனால் வெளிநாட்டு முதலீடுகள் ஊடாக விவசாயம் கைத்தொழில் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மேற்கொள்ளப்படும் முதலீடுகள் அரிவிருத்தி அடைந்த நாடுகளின் நீர்வளத்தை சுரண்டும் முக்கிய வழியாகக் காணப்படுகிறது. உதாரணமாக வங்காளதேசத்திலிருந்து ஒருகிலோ மாட்டிறைச்சியை அமெரிக்கா இறக்குமதி செய்யுமாயின் 15400 லீற்றர் தண்ணீரைச் சேமிப்பதாக அமையும்.

ஆகவே ஒரு நாடு அதிகமாக தண்ணீரைப் பயன்படுத்தும் பொருள்களை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதன் மூலம் தமது உள்நாட்டு நீர்வளத்தைப் பாதுகாக்க முடியும்.. அதென்ன பெரிய விடயமா எவ்வளவு நீர் நிலைகளிலிருந்து ஆவியாகிறது. ஏவ்வளவு நீர் ஆறுகளில் சென்று கடலோடு கலக்கிறது. அதனுடன் ஒப்பிடுகையில் நாம் உண்ணும் நீர் என்ன பெரிதா என்று நீங்கள் முணுமுணுப்பது கேட்கிறது. உலகின் பெரும்பகுதி நீரினால் தான் மூடப்பட்டள்ளது. ஆனால் மனித தேவைகளுக்காகப் பயன்படுத்தத்தக்க நிலையில் உள்ள நீரினளவு மிகக்குறைவாக உள்ளதென்று நீரியல் அறிஞர்கள் கூறுகின்றனர். அத்துடன் மனித பொருளாதார செயற்பாடுகள் காரணமாக புவி வெப்பமடைவதானால் ஏற்படக்கூடிய வரட்சி நிலைமைகள் காரணமாக மக்கள் நீருக்காக போராட வேண்டிவருமெனவும் அவர்கள் எச்சரிக்கின்றனர். 

ஆகவேதான் ஒவ்வொரு நாடும் தனது நீரவளத்தை முகாமை செய்வது மிகமுக்கியம் எனக்கருதப்படுகிறது. சர்வதேச வர்த்தகம் மற்றும் முதலீடுகள் ஒரு வறிய நாட்டிற்கு வரப்பிரசாதமாகவும் அபிவிருத்திக்கான ஒரு வழியாகவும் புகழப்பட்ட போதிலும் நாடுகளின் நீர்வளத்தை சுரண்டும் ஒரு மாற்றுக்கருவியாக அதனைப்பயன்படுத்த முடியும். இப்போது நீங்கள் உணவு வகைகளையும் கையில் எடுத்து வாயில் வைக்கும் போதெல்லாம் அதில் மறைவாக ; உள்ளடங்கியுள்ள உண்ணும் நீரின் அளவு உங்கள் நினைவுக்கு வந்து உங்களுக்கு தொல்லை கொடுக்கும். காலையில் ஒரு கோப்பை கோப்பியை கையில் எடுக்கும் போதேஅந்தத் தொல்லை ஆரம்பிக்கும். கவலை வேண்டாம். இப்படியான நீர்பயன்பாட்டை நாம் முழுமையாகத் தவிர்ததுவிட இயலாது ஆனால் குறைக்க முடியும். அதனையே நாம் செய்ய வேண்டும். இறய்கையான முறைகளில் வளரும் உணவுவகைகளை பயன்படுத்த முடிந்தால் தண்ணீர்ப்பயன்பாட்டைக் குறைக்க இயலும்.

இது பெரும்பாலும் கிராமங்களிலேயே சாத்தியப்படும் கனடா போன்ற மீளுயர நகராக்கம் கொண்ட நாடுகளில் இது சாத்தியப்படாது. ஆகவே நடைமுறை ரீதியில் சைவ உணவுகளை அதிகமாகவும் அசைவ உணவுகளை குறைவாகவும் எடுத்துக் கொள்வது இதற்கான ஒரு மாற்று வழியாகக் கூறுகிறார்கள். ஆடைவகைகள் என்று வரும்போது டெனிம் போன்ற ஆடைகளை உற்பத்தி செய்ய அதிகளவு நீர் செலவாகிறது. எனவே ஆடைத தெரிவுகளை மேற்கொள்ளும் போதும் இதுபற்றி கரிசனை கொள்ளலாம். இவை எதுவமே உங்களால் முடியாவிட்டால் கூட பரவாயில்லை. கழிவறையில் குளியலறையில் காரியாலயத்தில் விரயமாகும் நீரை குறைக்க தனிப்பட்ட ரீதியில் ஒவ்வொருவரும் பங்களிப்புச் செய்யலாம். உங்களில் பலருக்கு நீச்சல் தடாகங்களைக் கொண்ட வீடுகள் சொந்தமாக இருக்கலாம். அவற்றுக்காக விரயமாகும் நீரின் அளவு பற்றிச் சிந்தியுங்கள். சிக்கனமாக அவற்றைப்பயன்படுத்தும் விதம் குறித்துக்கரிசனைப்படுங்கள்.

நீஙகள் பணம் கொடுத்துத்தான் நீரைப் பெறுகிறீர்கள் அதற்கப்பால் அது ஒரு பொது வளமாகவம் பொதுச்சொத்தாகவும் இருக்கிறது என்பதையும் மறக்காதீர்கள். வங்குரோத்தடைந்த இலங்கையில் அரைலீற்றர் போத்திலில் இடைக்கப்பட்ட குடிநீர் 90 ரூபாவுக்கு விற்கப்படுவது விந்தையாக உள்ளது. நீர்வழங்கல் சபையினால் வழங்கப்படும் நீருக்காண கட்டணங்களும் வெகுவாக அதிகரிக்கப்பட்டுள்ளன. மக்கள் பசிக்கு நீரைக்குடிப்பது கூடஅதிக செலவு கூடியதாக அமையப் போகிறது. உங்கள் நாட்டில் எப்படி?

கனடா விநாயகர் விமர்சனம் பகுதி – 1 – 10

கனடா விநாயகர் விமர்சனம் பகுதி – 11

கனடா விநாயகர் விமர்சனம் பகுதி – 12

கனடா விநாயகர் விமர்சனம் பகுதி – 13

கனடா விநாயகர் விமர்சனம் பகுதி – 14

கனடா விநாயகர் விமர்சனம் பகுதி – 15

கனடா விநாயகர் விமர்சனம் பகுதி – 16

கனடா விநாயகர் விமர்சனம் பகுதி – 17

கனடா விநாயகர் விமர்சனம் பகுதி – 18

கனடா விநாயகர் விமர்சனம் பகுதி – 19