தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிரிழந்தாரா என எனக்கு அறிவிக்கப்படவில்லை – முன்னாள்பதில் பாதுகாப்பு அமைச்சர் மைத்திரி
Share
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிரிழந்தாரா? ; எனக்கு அறிவிக்கப்படவில்லை – முன்னாள்பதில் பாதுகாப்பு அமைச்சர் மைத்திரி
பிரபாகரனின் மரணம் தொடர்பில் எனக்கு எவ்விதமான தகவல்களும் வழங்கப்படாமல் மேல்மட்டங்களுக்கு அது தொடர்பில் தகவல்கள் வழங்கப்பட்டதாக அக்கால பகுதியில் பதில் பாதுகாப்புச் செயலாளராக இருந்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
ஞாயிற்றுக்கிழமை பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் யாழ். தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் நான்கு நாட்கள் சுற்றுப்பயணமாக கடந்த வியாழக்கிழமை யாழ்ப்பாணம் வருகை தந்த முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்தார்.
இதன்போது ஊடகவியலாளர் ஒருவர் அண்மையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மரபணு அறிக்கையை பாதுகாப்பு காரணங்களுக்காக வெளியிட முடியாது என செய்திகள் வெளிவந்தன.
அக் காலப்பகுதியில் பதில் பாதுகாப்பு அமைச்சராக நீங்களே செயற்பட்டதால் யுத்தத்தில் பிரபாகரன் உயிரிழந்தாரா? அல்லது சுட்டுக் கொல்லப்பட்டாரா? ஏன் அவரது மரபணு அறிக்கையை வெளியிட முடியாது என கூறுகிறார்கள் என கேள்வி எழுப்பினார்.
இதன்போது பதில் அளித்த மைத்திரிபால சிறிசேன பிரபாகரனின் மரணம் தொடர்பில் எனக்கு அறிவிக்கப்படவில்லை உயர் மட்டங்களில் இருந்தவர்களுக்கே தெரியும் என்றார்.
இதன்போது குறுக்கீடு செய்த மற்றொரு ஊடகவியலாளர் நீங்கள் ஜனாதிபதியாக இருந்த போது இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வில் இறுதி யுத்தத்தை வெற்றி கொண்ட பங்கு என்னையே சாருமென கூறினீர்கள் அவ்வாறு கூறிய உங்களுக்கு பிரபாகரனின் உயிரிழப்பு தொடர்பில் தெரியாதா? என கேள்வி எழுப்பினார்.
இதன்போது பதிலளித்த மைத்திரிபால சிறிசேன நான் பதில் பாதுகாப்பு அமைச்சராக சிறிது நாட்களே கடமை ஆற்றினேன் அவரது இறப்பு விடயம் தொடர்பில் எனக்குத் தெரியாது என பதிலளித்தார்.