இரட்ணம் பவுண்டேசன் அமைப்பின் 200 வது திறன் வகுப்பறை சின்னப்பூவரசன்குளம் விக்கினேஸ்வரா மகா வித்தியாலயத்தில் திறந்து வைப்பு 28.06.2023
Share
இரட்ணம் பவுண்டேசன் அமைப்பின் ஸ்தாபகர் கலாநிதி இரட்ணம் நித்தியானந்தன் அவர்களினால் முல்லைதீவு உடையார்கட்டு மகாவித்தியாலயத்தில் அப்போதைய அதிபர் திரு.நல்லையா அமிர்தநாதர் மூலம் 2018 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட திறன்பலகையுடனான திறன் வகுப்பறை ஆரம்பம் இன்று 200 ஐ கடந்து சாதனை படைத்துள்ளது. மிகவும் பின்தங்கிய பிரதேசங்களிலுள்ள பாடசாலைகளும் டிஜிட்டல் தொழில்நுட்பத்துடனான கற்றல் வாய்ப்புகளை மாணவர்களுக்கு வழங்க வேண்டுமென்ற உயரிய சிந்தனையின் பேறாக IMHO-USA, VANNI HOPE, AUS மற்றும் அவ்வப்பாடசாலைகளினது நலன் விரும்பிகளின் பங்களிப்புடன் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
115 பாடசாலைகளில் IMHO-USA அமைப்புடனும் 30 இல் VANNI HOPE, AUS அமைப்புடனும் ஏனையவற்றில் இரட்ணம் பவுண்டேசன் தனியாகவும் நலன் விரும்பிகளுடனும் இணைந்து இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. மேற்போந்த அனுசரணைகளினூடு மலையகத்தில் 23 பாடசாலைகளிலும் மேல்மாகாணத்தில் 3 இலும்,வடமேல்மாகாணத்தில் 14 இலும்,கிழக்குமாகாணத்தில் 37 இலும், வடக்கு மாகாணத்தில் 129 இலும்,தொண்டர் நிறுவனங்களில் 5 மாக மொத்த எண்ணிக்கை 200 ஐக் கடந்து இத்திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
இவ்வரிசையில் 200 வது திறன் வகுப்பறை வவுனியா வடக்கு கல்வி வலயத்தில் போக்குவரத்து வசதி குன்றிய சின்னப்பூவரசன்குளம் கிராமத்தில் அமைந்துள்ள விக்கினேஸ்வரா மகா வித்தியாலயத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஆனந்தர் புளியங்குளத்தைச் சேர்ந்த திரு.மயில்வாகனம் சிறீதரன்,IMHO-USA அமைப்புடன் RATNAM FOUNDATION UK அமைப்பு இணைந்து திறன் வகுப்பறையை இப்பாடசாலைக்கு வழங்கியுள்ளன. இதற்கான கையளிப்பு வைபவம் யூன் 28 இல் இப்பாடசாலையியில் சிறப்பாக நடைபெற்றது. வவுனியா வடக்கு வலயக்கல்விப்பணிப்பாளர் திரு.லெனின் அறிவழகன் முதன்மை விருந்தினராகவும் திருமதி மயில்வாகனம் மற்றும் IMHO-USA அமைப்பின் வதிவிட பணிப்பாளர் திரு சு. கிருஷ்ணகுமார் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து சிறப்பித்த இவ்விழாவில் வலய மட்டத்திலான உத்தியோகத்தர்களும் ஒய்வு பெற்ற மற்றும் அயல் பாடசாலை அதிபர்கள் மட்டுமல்லாது பெருமளவிலான பாடசாலை சமூகத்தினரும் கலந்து சிறப்பித்திருந்தார்கள்.
வலயக்கல்வி பணிப்பாளர்கள் மற்றும் அவ்வப்பிரதேச கல்விசார் பொது அமைப்புக்களுக்கூடான கோரிக்கைகள் யாவும் அனுசரணையாளர்களின் அனுமதியுடன் IMHO-USA அமைப்பின் வதிவிட பணிப்பாளரும் ஓய்வுபெற்ற வலயக்கல்வி பணிப்பாளருமாகிய திரு சு.கிருஷ்ணகுமார் அவர்களினது பாடசாலைகளுக்கான நேரடி தரிசிப்பின் மூலம் திறன் பலகை பொருத்தப்படவுள்ள வகுப்பறைகளின் தரம் உறுதி செய்யப்படுகின்றமையும், ஆசிரியர்களுக்கான தொடருறு பயிற்சிகளும் இத்திட்டத்திற்கு வலு சேர்க்கின்றது. அதுமட்டுமல்லாது வலயக்கல்வி அலுவலக கண்காணிப்பு நடைமுறைகளும் வாட்ஸ் அப் குழுமத்தில் பகிரப்படும் பதிவேற்றங்களும் திறன் பலகைக்கூடான கற்றல் கற்பித்தல்செயல்பாடுகளை செழுமைப் படுத்தி வருகின்றது.