LOADING

Type to search

இலங்கை அரசியல்

சீனித் தொழிற்சாலை தொடர்பில் யாரும் குத்தி முறிய வேண்டாம்

Share

– வவுனியா மக்கள் வேண்டாம் என்றால் திருப்பி அனுப்புறோம் என்கிறார் செல்வம் அடைக்கலநாதன்

சீனித் தொழிற்சாலை தொடர்பில் யாரும் குத்தி முறிய வேண்டாம். வவுனியா மக்கள் வேணாம் என்றால் திருப்பி அனுப்புறோம் என தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) அமைப்பின் தலைவரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் இன்று (03.-07-2023)- இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது வவுனியாவில் சீனித்தொழிற்சாலை அமைக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளமை தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பிய போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

சீனித்தொழிற்சாலை தொடர்பில் 4 வது தடவையாக அமைச்சரவை அனுமதி கிடைத்திருக்கின்றது. ஆனாலும் நடைமுறைப்படுத்துவதற்கான வாய்ப்புக்கள் உருவாக்கப்படவில்லை. நிலம் ஒதுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. முதலீட்டாளர்கள் இன்னும் தமது கருத்துக்களை சொல்லவில்லை. ஆனால் பலர் குத்திமுறிகிறார்கள். சிங்கள குடியேற்றம் வரும் எனவும், சீனா முதலீடு எனவும் கூறுகிறார்கள்.

எம்மைப் பொறுத்தவரை தமிழீழ விடுதலை இயங்கம் சீனாவின் முதலீட்டை அதாவது இந்தியாவுக்கு எதிரான முதலீட்டை ஏற்கமாட்டோம். இந்தியாவுக்கு எதிரான எந்தவொரு விடயங்களையும் நாங்கள் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. சீனா முதலீட்டை எதிர்போம். நாம் ஒரு போராட்ட இயக்கம். நிச்சயமாக சிங்கள குடியேற்றங்களையும் எதிர்ப்போம்.

சீனித் தொழிற்சாலை முறையாக நடைமுறைப்படுத்தப்படாத நிலையில் பல பேர் குத்தி முறிகிறார்கள். வவுனியா மக்களோ அல்லது வவுனியாவில் உள்ள அரசியல்வாதிகளோ இது தொடர்பில் கருத்து சொல்லவில்லை. வவுனியாவிற்கு வரும் முதலீடு என்ற அடிப்படையில் எங்களது மக்களின் கருத்துக்களையும், இங்குள்ள அரசியல்வாதிகள், பொது அமைப்புக்களின் தலைவர்கள் ஆகியோரது கருத்துக்களையும் பெற்ற பின் தான் இங்கு கொண்டு வருவதா இல்லையா என முடிவெடுப்போம்.

ஆகவே, தயவு செய்து யாரும் கத்தி முறியவேண்டாம். சீனித் தொழிற்சாலையால் சிங்கள குடியேற்றம் வரும். சீனா வரும் என நிரூப்பிக்க முடிந்தால் நிரூப்பிக்கவும். அதைவிடுத்து சும்மா குத்திமுறிவதால் அர்த்தமில்லை.

இந்த தொழிற்சாலை தாய்லாந்து நிறுவனத்தின் முதலீடு. இதில் தமிழீழ விடுதலை இயக்கம் எந்தப் பங்காளியும் இல்லை. இது தென்னிலங்கைக்கு செல்வதற்கான வாய்ப்பை தடுத்து நிறுத்தி வடக்கிற்கு கொண்டு வருவதற்கான ஒரு முயற்சியே. இதற்கான பங்காளிகளாக நாம் இருக்கப் போவதில்லை.

முதலீட்டாளர்களை கொண்டு வருவதற்கான ஒரு செயற்பாடே ஒழிய பங்காளர் இல்லை. மக்களின் நலன், விவசாயிகளின் நலன் என்பன பற்றி கவனம் செலுத்தி வவுனியா மக்களோடு கலந்தாலோசித்து எமது கருத்தை சொல்ல இருகின்றோம். வவுனியா மக்கள் விரும்பவில்லை என்றால் சிங்கள இடத்திற்கு போகட்டும். மக்கள் அபிப்பிராயம் பெற்று தான் நாம் முடிவெடுப்போம்.

எங்களைப் பொறுத்தவரை எமது தேசத்தில் முதலீடுகள் நடைபெற வேண்டும். ஆகவே இதில் முதலீட்டை பார்ப்பதை விட்டுவிட்டு கனவுகளோடு பார்க்க வேண்டாம். ஆதாரம் இல்லாத கருத்துக்களை கூற வேண்டாம்.

வவுனியா மக்கள் ஆதரவு தந்தால் கொண்டு வர முயற்சி செய்வோம். அவர்கள் வேணாம் என்றாம் திருப்பி அனுப்புவோம். தமிழீழ விடுதலை இயக்கம் முதலீட்டை கொண்டு வர முயற்சிக்கின்றது என்பதற்காக சிலர் இதை எதிர்க்கிறார்கள். இது எங்களது ஒரு முயற்சி அவ்வளவு தான். இதை பற்றி யாரும் குத்தி முறிய வேண்டாம். நாமும் குத்தி முறியப்போவதில்லை எனத் தெரிவித்தார்.