LOADING

Type to search

இலங்கை அரசியல்

மன்னார் ஈச்சளவக்கை கிராமத்தின் அவல நிலை

Share

அபிவிருத்திப் பணிகளில் தொடர்ந்து ஓரங்கட்ட படுவதாக மக்கள் விசனம்.

(மன்னார் நிருபர்)

(5-07-2023)

மன்னார் மாவட்டத்தில் மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தின் ‘காயா நகர்’ கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள ஈச்சளவக்கை கிராமம் கடந்த 2002 யுத்த காலப் பகுதியில் இடம் பெயர்ந்து குடியிருப்பதற்கு காணிகளற்று நிர்க்கதியாக நின்ற பல இடத்து மக்களையும் ஒன்று சேர்த்து ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியில் இப்பகுதி ஒரு குடியேற்றப் பகுதியாக நிறுவப்பட்டது.

ஆனால் தற்போது சகல அபிவிருத்தி செயற்பாடுகளிலும் ஈச்சளவக்கை கிராமம் ஓரங்கட்ட படுவதாக அந்த கிராமத்து மக்கள் தெரிவிக்கிறார்கள்.

ஈச்சளவக்கை கிராம அபிவிருத்திச் சங்க தலைவர் திருச்செல்வம் கருத்து தெரிவிக்கையில்,,,

கடந்த 2002 ம் ஆண்டு யுத்த காலப்பகுதியில் மக்கள் காணிகளற்று நிர்க்கதியாக நின்று கொண்டிருந்த அந்த காலப் பகுதியில் இன்று ஈச்சளவக்கை கிராமமாக காணப்படும் இடமானது அன்றைய காலகட்டத்தில் பெரும் வனப்பகுதியாக காணப்பட்டது. அந்த சமயத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதிப்பங்களிப்பில் காணியற்ற மக்களுக்கு ஒரு ஏக்கர் காணி வீதம் பகிர்ந்தளிக்கப்பட்டு சுமார் 98 குடும்பத்தினர் அப்போது குடியேற்றப் பட்டார்கள்.

இவை யாவும் அப்போது வன்னியில் ஊரக வளர்ச்சிப் பணி என்ற ஒரு கட்டமைப்பு இந்த ஈச்சளவக்கை கிராமத்தை தத்தெடுத்துக் கொண்டது.

அதன் முக்கிய நோக்கமாக அந்த கிராமத்தினுடைய சமூக பொருளாதார கல்வி மேம்பாடுகள் என்ற பல்வேறு வகையாக அந்த மக்களுடைய அடிப்படை பிரச்சனைகளையும் அந்த நேரத்தில் பல்வேறுபட்ட நெருக்கடியான நிலையிலும் மாணவர்களும் மக்களும் தங்களுடைய கல்வியிலும் வாழ்வாதாரத்தில் முன்னோக்கி சென்று கொண்டிருந்தார்கள்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியில் 98 குடும்பங்களுக்கான வீடமைப்புத் திட்டங்கள் உருவாக்கப்பட்டது. அந்த நேரத்தில்தான் மக்கள் யுத்தத்தினால் இடப்பெயர்வை சந்திக்க வேண்டிய ஒரு துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டார்கள் அப்போது அந்த மக்கள் அனைத்து உடமைகளையும் விட்டும் இடம்பெயர்ந்து இறுதி யுத்தம் வரை சென்றார்கள்.

இறுதி யுத்தத்தின் பின்னர் அந்த மக்கள் மீளக் குடியேறி அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான ஈச்சளவக்கை கிராமத்தில் வசிக்கத் தொடங்கினார்கள் .

அதன் பின்னர் பல்வேறு பட்ட அரசியல் நெருக்கடிகளை அந்த மக்கள் சந்தித்தார்கள். மீள்குடியேற்றத்தின் பின் அந்த மக்களுக்கு மின்சாரம் வழங்கப்படவில்லை. குறிப்பாக ஈச்சளவக்கை கிராமத்தை அண்மித்த அனைத்து பகுதிகளுக்கும் மின்சாரம் வழங்கப்பட்டு கொண்டிருந்தது. ஆனால் ஈச்சளவக்கை கிராமத்து மக்களுக்கு மின்சாரம் வழங்காமல் குப்பி விளக்குடன் வாழ்ந்தார்கள். இந்த நிலைமைகளை போக்குவதற்கு பல சிரமங்களின் பின் மின்சாரம் பெற்றுக் கொள்ளப்பட்டது என்றார்.

வீதி பிரச்சனை

குறிப்பாக ஆறு கிலோ மீற்றர் நீளமான 11 வீதிகள் எதுவும் சீரமைக்கப்படவில்லை. 2002ல் குடியேற்றம் செய்யப்பட்ட போது அன்று போடப்பட்ட கிரவல் வீதிகளுடன் தான் அந்த மக்கள் இன்று வரை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். மழை காலங்களில் வீதிகளில் மக்கள், பாடசாலை மாணவர்கள், நோயாளிகள், பயணிக்க முடியாத நிலை காணப்படுகிறது.

2002 ல் முதன் முதலாக குடியேற்றம் செய்யப்பட்ட போது அமைக்கப்பட்ட வீதிகள் இன்று வரை அதன் அடையாளமாக காணப்படுகிறதே தவிர எந்தவித மாற்றங்களும் ஏற்படவில்லை.

இது தொடர்பாக பல அரசியல்வாதிகள் அரச அதிகாரிகளிடம் தெரிவித்த போதும் எது வித நடவடிக்கையும் எடுக்க வில்லை. அயல் கிராமங்களுக்கு அனைத்து வீதிகளுக்கும் காபட் வீதிகளும் மின் விளக்குகளும் போடப்பட்டுள்ளது. ஈச்சளவக்கை கிராமத்திற்கு அவ்வாறான வசதிகள் செய்து கொடுக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளது.என அந்த கிராம மக்கள் தெரிவிக்கிறார்கள்.

குடிநீர் பிரச்சினை

அதை விட இந்த கிராமத்தில் காணப்படும் குடிநீர் பிரச்சினை தூய்மையான குடிநீர் இன்றி சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டு மக்கள் வாழ்கிறார்கள். ஆனால் அதே ஈச்சளவக்கை கிராமத்தில் அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணற்றில் குழாய் மூலமாக
பெரியமடு வட்டாரம், விடத்தல் தீவு வட்டாரத்தில், உள்ள பல கிராமங்களுக்கு நீர் செல்கிறது. ஆனால் நீர் எடுக்கும் கிராமத்து மக்கள் குடிப்பதற்கு தூய குடிநீர் இல்லை. அதே போல் ஒரே கிராம சேவையாளர் பிரிவில் உள்ள இரண்டு கிராமங்கள் காயா நகர் கிராமத்திற்கு குடிநீர் செல்கிறது. ஈச்சளவக்கை கிராமத்திற்கு குடிநீர் இல்லை. இவ்வாறு இந்த ஈச்சளவக்கை கிராமம் ஆனது தற்போது வரை புறக்கணிக்கப் பட்டுள்ளதாக தெரிவிக்கின்றார்கள்.

காட்டு யானைகளால் பாதிப்பு

ஒவ்வொரு நாளும் காட்டு யானைகள் அச்சுறுத்தல் உடன் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அண்மையில் ஒருவர் தனது வீட்டில் உறங்கிய போது யானை தாக்கி இறந்துள்ளனர். இவ்வாறு இது வரை இரண்டு பேர் இறந்துள்ளார்கள்.
அது மட்டுமல்லாது மக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக வளர்க்கும் தென்னை, வாழை, உள்ளிட்ட பலன் தரும் மரங்களையும் அழித் துச் செல்கிறது. இதற்காகவும் இதுவரை எந்த வித நடவடிக்கைகளும் எடுக்கவில்லை.

போதை வஸ்து பிரச்சனை

வாழ்வாதாரத்திற்கு வயல்காணிகளோ, மேட்டு நிலக்காணிகளோ, இல்லாமலும் ஒழுங்கான தொழில் வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் இப்பகுதியில் கள்ளச்சாராயம் உட்பட போதை வஸ்து பாவனைகள் அதிகமாக காணப்படுகிறது. இவை இல்லாமல் செய்யப்பட வேண்டும் என்றால் இப்பகுதி மக்களுக்கு வாழ்வாதாரத்திற்காக வயல் காணிகள் வழங்கப்பட்டு தொழில்கள் மூலம் வருமானங்களை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறார்கள்.

மாணவர்களுக்கான கல்வி தரமுயர்த்த வேண்டும்

பாடசாலைக்குரிய பௌதீக கட்டமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும் குறிப்பாக கணினி போன்ற புதிய தேடல்களுடன் ஏனைய கல்விச் சமூகம் பயணிக்கும் போது குறிப்பிட்ட வசதிகளுடன் எமது மாணவர்கள் கல்வி கற்று வருகிறார்கள். எமது மாணவர்களுக்கு அவ்வாறான தரமுயர்த்த கல்விகள் வழங்கப்பட வேண்டும். இங்கு சாதாரண தரம் வரை உள்ளது. உயர்தரப் படிப்பிற்காக மாணவர்கள் வேறு இடங்களுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. எமது பாடசாலையில் தரமுயர்த்தப்படும் போது பாடசாலை வளர்ச்சி அடையும் அதே நேரம் மாணவர்களின் இடைவிலகல் தவிர்க்கப்படும் என்றார்கள்.

எனவே மக்களை துன்பப்படுத்தும் இவ்வாறான நிலைகளில் இருந்து மக்கள் விடுபட வேண்டுமானால் தூய குடிநீர் வழங்கப்பட வேண்டும்.வீதிகள் புனரமைப்பு செய்யப்பட வேண்டும், மாணவர்களின் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும், மற்றும் எமது மக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கும் ஏனைய கட்டமைப்புகளையும் உரிய அதிகாரிகள் கவனம் எடுத்து செய்து தர வேண்டும் என அப்பிரதேச மக்கள் உரிய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கின்றனர்.