நாகதீப விகாரையின் தேரர் நயினாதீவுக்கு வருகை தந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததையிட்டு விழா
Share
யாழ்ப்பாணம் – நயினாதீவில் அமைந்துள்ள நாகதீப ரஜ மகா விகாரை விகாராதிபதி நவதகல பதும கீர்த்தி திஸ்ஸ நாயக்க தேரர் நயினாதீவுக்கு வந்து 50வது ஆண்டுகள் நிறைவடைந்தமையை முன்னிட்டு சர்வமதங்களின் பங்கேற்புடன் கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது.
நயினாதீவு மேகலை அரங்கத்தில் இன்று புதன்கிழமை காலை 9 மணியளவில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
இலங்கையின் நான்கு பிரதான பௌத்த பீடங்களின் தேரர்கள் மற்றும் நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய பிரதம குரு உள்ளிட்ட சர்வமத தலைவர்களின் பங்கேற்புடன் நாகதீப ரஜ மகா விகாரை விகாராதிபதி நவதகல பதும கீர்த்தி திஸ்ஸ நாயக்க தேரர் நிகழ்விடத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
விகாரையில் இடம்பெற்ற பூஜைகளுடன் , விழா நாயகனான விகாராதிபதி நவதகல பதுமகீர்த்தி திஸ்ஸ நாயக்க தேரோ தவில் நாதஸ்வர இசையுடனும், கண்டிய நடனத்துடனும் மண்டபத்திற்கு செங்காவி விரிப்பில் அழைத்து செல்லப்பட்டார்.
அதன் போது வீதியில் இரு மருங்கிலும் மாணவர்கள் , பொதுமக்கள் என பலரும் கூடி, விகாரதிபதிக்கு மலர் தூபி மரியாதை செலுத்தினர்.
நிகழ்வில் நூற்றுக்கணக்கான பௌத்த பிக்குகள், நயினாதீவு மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
நயினாதீவு மண்ணில் சேவை புரிய தனது 11வது வயதில் தடம் பதித்த நவதகல பதும கீர்த்தி திஸ்ஸ நாயக்க தேரர் 50 வருடங்களாக நயினை மண்ணிற்கும் மக்களுக்கும் ஆற்றிவரும் பெரும் சேவையை கெளரவிக்கும் வகையில் நயினாதீவு மக்களால் குறித்த நிகழ்வு ஒழுங்குபடுத்தப்பட்டது.