போராடும் மலையகத் தோட்டத் தொழிலாளர்களை லயன் வீடுகளிலிருந்து வெளியேற்ற முதலாளிகள் முயற்சி
Share
(12-07-2023)
இரண்டு நூற்றாண்டுகளாக நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த உழைத்து வரும் தோட்டத் தொழிலாளர்களுக்கான நிதியை வழங்காமல் காலம் தாழ்த்தி வரும் தோட்ட நிர்வாகம், தமது கோரிக்கைகளுக்காக போராடும் தொழிலாளர்களை லயன் அறைகளில் இருந்து வெளியேற்றும் முயற்சி ஒன்று அம்பலமாகியுள்ளது.
2007ஆம் ஆண்டு தொடக்கம் சுமார் 16 வருடங்களாக ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியை செலுத்தாத முதலாளிகள், 39 தொழிலாளர் குடும்பங்களுக்கு அவர்கள் வசிக்கும் லயன் வீடுகளை விட்டு வெளியேறுமாறு கடிதம் அனுப்பியுள்ளதாக, ரம்பொடை தோட்டம், ஆர்.பி பிரிவு தோட்டத் தொழிலாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
ரம்பொட, ஆர்.பி.பிரிவில் ஏழு லயன் குடியிருப்புகளில் தோட்டத் தொழிலாளர்களின் 150 குடும்பங்கள் வசிக்கின்றன, அந்த 150 குடும்பங்களில் 39 குடும்பங்களைச் சேர்ந்த 48 பேர் தோட்டத்தில் தொழிலாளர்களாக பணியாற்றுகின்றனர்.
2023 மே 16 ஆம் திகதி முதல் குறித்த 48 தொழிலாளர்களும் முன்னறிவிப்பின்றி வேலைக்குச் செல்லாமையால், தோட்ட நிர்வாகத்தால் வீடுகளை ஒப்படைக்குமாறு 39 குடும்பங்களுக்கும் கூறப்பட்டுள்ளது.
பெருந்தோட்டத்துறை ஊழியர்களின் ஊழியர் சேமலாப நிதியத்துக்குச் செலுத்தவேண்டிய நிலுவையையும் மாதாந்தக் கொடுப்பனவையும் முறையாகச் செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளிநாட்டு தொழில்கள் மற்றும் உழைப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக்குழுவின் குழுவின் தலைவர் ஹெக்டர் அப்புஹாமி பெருந்தோட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கு ஆலோசனை வழங்கியிருந்தார்.
2007ஆம் ஆண்டு முதல் ரம்பொடை, ஆர்.பி பிரிவு தோட்டத் தொழிலாளர்கள் தங்களுக்கு வழங்க வேண்டிய ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியை வழங்கக் கோரி பலத்தடவைகள் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.
அவ்வாறான ஒரு போராட்ட வடிவமாகவே, மே 16ஆம் திகதி முதல் தோட்ட மக்கள் பணிக்குச் செல்லாமல் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
அன்றைய தினம் முதல் இன்று (ஜுலை 12) வரை பணிக்கு சமூகமளிக்காத தொழிலாளர்கள் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், ஜூலை 5ஆம் திகதி தொழிலாளர்களுக்கு தோட்ட நிர்வாகம் கடிதம் மூலம் விடுத்த அறிவிப்பில், 7 நாட்களுக்குள் பணிக்கு சமூகமளிக்காவிட்டால் அவர்கள் சேவையை விட்டு வெளியேறியதாகக் கருதப்படுவார்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிதாக பணியில் சேரும் தொழிலாளர்களுக்கு தங்குமிடம் வழங்க வேண்டியது அவசியம் என்பதால், பணியில் இருந்து வெளியேறிய தொழிலாளர்கள் பயன்படுத்திய லயன் அறையை 15 நாட்களுக்குள் மீள ஒப்படைக்க வேண்டும் எனவும், இல்லை என்றால் சட்ட நடவடிக்கை நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் (CWC) செயலாளர் ஜீவன் தொண்டமான் மற்றும் மாவட்ட தொழில் அலுவலகத்தின், உதவி தொழில் ஆணையாளர் ஆகியோருக்கும் தோட்ட நிர்வாகம் குறித்த கடிதத்தின் பிரதிகளை அனுப்பி வைத்துள்ளது.
அந்த லயன் அறைகளிலேயே தாங்கள் பல தலைமுறைகளாக வாழ்ந்து வருவதாக தொழிலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
1971 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க தோட்ட வீடுகள் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்திற்கு அமைய, தோட்ட நிர்வாகமானது, நீதிமன்றத்தின் அனுமதியின்றி தோட்டத் தொழிலாளி ஒருவரை தோட்ட வீட்டில் இருந்து வெளியேற்ற முடியாது.
தகவல் முரண்பாடுகள்
பெருந்தோட்டத்துறை நிறுவனங்கள் ஊழியர் சேமலாப நிதிய கொடுப்பனவுகளைச் செலுத்தத் தவறியுள்ளதாகவும், பாரியளவான நிலுவை ஊழியர் சேமலாப நிதியத்துக்குச் செலுத்தவேண்டி உள்ளதாகவும் வெளிநாட்டுத் தொழில்கள் மற்றும் உழைப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அண்மைய அமர்வில் தெரியவந்துள்ளது.
குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி தலைமையில் ஜூன் 22ஆம் திகதி கூடியபோது, பெருந்தோட்டத்துறையில் சில நிறுவனங்களினால் செலுத்தப்பட்ட சுமார் 700 மில்லியன் ரூபாய் தொடர்பில் வழங்கப்பட்டுள்ள தகவல்களின் முரண்பட்ட நிலைமை காரணமாக கணக்கில் பதிவுசெய்ய முடியாமல் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.