“கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி” பொய்யான செய்தியை வெளியிட்ட இரு சிங்கள ஊடகங்கள்
Share
(13-07-2023)
இலங்கையின் போரினால் அதிகம் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தில் அண்மையில் கண்டறியப்பட்ட மனித புதைகுழியானது, “தமிழீழ விடுதலைப் புலிகள அமைப்பின் சித்திரதை முகாம்” என, இலங்கையின் இரண்டு சிங்கள ஊடகங்கள் பொய்யான செய்தியை வெளியிட்டுள்ளன.
இலங்கை அரசாங்கத்திற்கு சொந்தமான தினமின பத்திரிகை மற்றும் இலங்கை அரசாங்கத்திற்கு சார்பான தனியார் பத்திரிகையான திவயின ஆகிய இரு பத்திரிகைகளும் இந்த தவறான செய்தியை வெளியிட்டுள்ளன
குறித்த இரு பத்திரிகைகளிலும் ஒரே செய்தி இரு வேறு ஊடகவியலாளர்களின் பெயர்களில் வெளியாகியுள்ளது.
“புலிகளின் சித்திரவதை முகாமில் கொல்லப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் பெண் உறுப்பினர்களின் உடல்கள் முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் புதைகுழியில் புதைக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.” என குறித்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது, எனினும் அந்த இடத்தில் சித்திரவதை முகாம் ஒன்று காணப்பட்டதை இலங்கை அரசாங்கமோ, பாதுகாப்புத் தரப்போ அல்லது அரச அதிகாரிகளோ உறுதிப்படுத்தவில்லை.
மேலும், இந்த மனித உடல்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் பெண் போராளிகளின் உடல்களாக இருக்கலாம் என பொது மக்களும், அரசியல்வாதிகளும் சந்தேகம் வெளியிட்டுள்ளபோதிலும் இதுவரை அந்த உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.
“கடந்த 8ஆம் திகதி மனித புதைகுழிகளை தோண்டியவர்களுக்கு சில வெடிபொருட்கள் மற்றும் குண்டுகள் கிடைத்ததாக” குறித்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
எனினும் கடந்த 6ஆம் திகதியே அகழ்வுப் பணிகள் இடம்பெற்றது என்பதோடு, வெடிபொருட்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.
“போரின் இறுதிக்கட்டத்தில் புலிகளின் சித்திரவதைக் கூடத்தில் கொல்லப்பட்ட விடுதலைப்புலிகளின் பெண் உறுப்பினர்களின் உடல்களே புதைக்கப்பட்டுள்ளன என, தகவல் வெளியாகியுள்ள நிலையில், தமிழ் அரசியல்வாதிகள், இராணுவத்தினரால் கொல்லப்பட்ட புலிகள் அமைப்பின் உறுப்பினர்களின் சடலங்கள் இந்த பாரிய புதைகுழியில் புதைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச சமூகத்திற்கு காட்ட பெரும் முயற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.” என அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், அகழ்வின் போது கிடைத்த விடயங்கள் குறித்து ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளித்த நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், அந்த எலும்புகள் தமிழீழ விடுதலைப் புலிகளின் பெண் போராளிகளின் உடல் பாகங்களாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டார்.
ஆனால் அவர் இலங்கை இராணுவத்தையோ அல்லது பாதுகாப்பு படையினரையோ குற்றம் சாட்டியிருக்கவில்லை.