LOADING

Type to search

இலங்கை அரசியல்

சர்வதேசத்தில் ஈடுபாடின்றி கொக்குத்தொடுவாய் புதைகுழி அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளது.

Share

நடராசா லோகதயாளன்

கொக்குத்தொடுவாய் புதைகுழி தோண்டப்படுவது தொடர்பில் எதிர் வரும் வியாழக்கிழமை(20) மீண்டும் ஒரு கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கொக்குத்தொடுவாயில் காணப்பட்டுள்ள மனிதப் புதைகுழியில் குறைந்தது 13 மனித உடல்களின் பகுதிகள் அடையாளம் காணப்பட்ட நிலையில், அங்கு அகழ்வுகளை அடுத்தகட்டமாக எப்படி முன்னெடுத்துச் செல்லுவது என்பதை ஆராய முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி டி பிரதீபன் தலைமையில் நேற்று (13) நடைபெற்ற கூட்டத்தில், அவ்விடத்தில் அகழ்வுப்பணிகள் தொல்லியல் திணைக்களத்தின் தலைமையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் சட்ட வைத்திய அதிகாரி, தொல்லியல்த் திணைக்கள அதகாரிகள், பொலிசார், சட்டத்தரணிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

மேலும் அடுத்தக்கட்ட அகழ்வின் போது, தொல்லியல் திணைக்களத்துடன் சட்ட வைத்திய அதிகாரிகள் குழாம் இணைந்து செயல்படுவார்கள் என்றும், இதில் தொடர்புடைய இதர திணைக்களங்களின் வளங்கள், தேவைப்படும் நிதியாதாரங்கள் குறித்து அடுத்த கூட்டத்தில் அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் முடிவானது.

அந்த மனிதப் புதைகுழி கணப்படும் இடத்தில் தேவையற்ற வகையில் அதிக புலனாய்வாளர்கள் நடமாடுவது சந்தேகத்தை ஏற.படுத்துகின்றது என்று கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது. இதேநேரம் இனி வரும் காலத்தில் இடம்பெறும் அகழ்வுப் பணியின்போது யாழ்ப்பாணம் பல்கலைக்கழக தொல்லியல் மாணவர்களையும் இணைத்துக்கொள்ளுமாறு கோரிக்கை விடப்பட்டது.

அடுத்தகட்ட அகழ்வுப் பணிகளின்போது சர்வதேசப் பிரதிநிதிகள் பிரசன்னம் அவசியமானது என சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் கோரிக்கை விடுத்தார்.

இவற்றை ஆராய்ந்த நீதிபதி ”புலனாய்வாளர்களில் தேவையானோர் தவிர்ந்த ஏனையோரின் நடமாட்டம் கட்டுப்படுத்தப்படும். அதேநேரம் பல்கலைக்கழக தொல்லியல்துறை மாணவர்களை அனுமதிக்க முடியாது அதற்குப் பதிலாக தொல்லியல் பீடத்துறையின் அனுப அதிபாரிபனை இணைக்க முடியும். இதேநேரம் சர்வதேசப் பிரதிநிதிகளை நாம் நேரில் அழைக்க முடியாது. ஆனால் சர்வதேச அமைப்புக்களின் பிரதிநிதிகள் தாமாக வந்தால் தடுக்கப்பட மாட்டார்கள்” என நீதபதி பதிலளித்தார்.

ஆனால், காணாமல் போனவர்களை தேடி அலையும் உறவுகளும், தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் பிரதிநிதிகளும் உள்ளூர் பொறிமுறைகளில் நம்பிக்கை இல்லை, சரவதேசத்தின் ஈடுபாட்டுடன் இந்த அகழ்வுகள் நடைபெற வேண்டும், அப்போது தான் அது பாரபட்சமின்றி நேர்மையாக நடைபெறும் என்று கருத்துரைத்தனர்.

முல்லைத்தீவு -கொக்குத்தொடுவாய் பகுதியில் 29.06.2023 அன்று விடுதலைப் புலிகளின் சீருடையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்ற சீருடைகளுடன் கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பிலான அகழ்வு பணிகள் கடந்த இம்மாதம் 6ஆம் திகதி அடையாளம் காணப்பட்டன. அதற்கு சரியக ஒரு வாரம் முன்னதாக கொக்குத்தொடுவாய்-கொக்கிளாய் பாதையில் நீர் வழங்கலிற்கான குழாய்கள் பதிக்கப்படுவதற்காக தோண்டப்பட்ட சமயம் மனித எச்சங்கள் காணபட்டத்தை அடுத்து, அது உள்ளூர் நீதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லபட்டது.

பிறகு அடுத்த வியாழக்கிழமை-ஜுலை 6ஆம் திகதி அவ்விடம் தோண்டப்படும் போது மேலும் பல உடல் பகுதிகள், உடைகள், வேறு சில பொருட்கள் ஆகியவை காணப்பட்டன. அவை ஊடகவியலாளர்கள், நாடாளுமன்ற, உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் ஆகியோரின் முன்னிலையில் குறிக்கப்பட்டு பாதுகாப்பாக வைக்கபடுவதற்கான முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி வாசுதேவாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அடுத்தகட்ட அகழ்வு குறித்த பணிகள் தொடர்பிலான உரையாடல் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்ற போது, அனைத்து திணைக்களங்கள் மற்றும் சட்டத்தரணிகள், நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், வடக்கு மாகாண முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன், மதகுருமார்கள், அரச அதிகாரிகள், ஊடகவியலாளர்கள் உட்பட பல்துறையினர் பங்குபெற்றனர்.

முல்லைத்தீவு நீதிமன்ற கட்டடத்தொகுதியில் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி த.பிரதீபன் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர் கனகசபாபதி வாசுதேவா, யாழ்ப்பாணம் வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர் செல்லையா பிரணவன், கொக்கிளாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, உள்ளிட்ட பொலிஸ் உயரதிகாரிகள், காணாமல் போனோர் அலுவலகத்தின் (ஓ எம் பி ) சிரேஸ்ட சட்டத்தரணி ஜெகநாதன் தர்ப்பரன், பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணிமான எம். ஏ. சுமந்திரன், சட்டத்தரணிகளான கேசவன் சயந்தன்,வி.எஸ்.எஸ்.தனஞ்சயன்,ருஜிக்கா நித்தியானந்தராஜா உள்ளிட்ட சட்டத்தரணிகள் மனித உரிமைகளுக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் சட்டத்தரணிகளான றணித்தா ஞானராஜா,வி.கே நிறஞ்சன்,தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் ,அளம்பில் பங்குத்தந்தை யூட் அமலதாஸ், நல்லூர் சிவகுரு ஆதீனத்தின் முதல்வரும், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையாக மக்கள் பேரியக்கத்தின் இணைப்பாளருமான தவத்திரு வேலன் சுவாமிகள், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், சமூக செயற்பாட்டாளர் பீற்றர் இளஞ்செழியன், முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்க தலைவி மரியசுரேஷ் ஈஸ்வரி,மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கங்களின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்

கலந்துரையாடலில் முன்னதாக நீதிபதி அவர்களால் சட்ட வைத்திய அதிகாரியிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டது. இதனடிப்படையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர் கனகசபாபதி வாசுதேவா, யாழ்ப்பாணம் வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர் செல்லையா பிரணவன், யாழ்ப்பாணம் வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர் உருத்திரபசுபதி மயூரதன் ஆகிய மூவர் கொண்ட குழாம் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர் கனகசபாபதி வாசுதேவா தலைமையில் குறித்த பணியை முன்னெடுக்கும் எனவும் இதில் அகழ்வு பணிகளை முன்னெடுக்க தொல்லியல் திணைக்களத்தினரை உள்வாங்க வேண்டும் எனவும் அவர்களே அகழ்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் குறித்த பகுதியில் மழைக்காலத்துக்கு முன்னதாக அகழ்வு பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் குறித்த அகழ்வுப்பணிக்கான நிதி ஏற்ப்பாடுகள் செய்யவேண்டும் எனவும் நீதிபதி தெரிவித்தார்

சுமார் இரண்டு மணித்தியாலங்களாக பல்வேறு தரப்புக்களின் கருத்துக்களை தொடர்ந்து எதிர்வரும் வியாழக்கிழமை (20.07.2023) அன்று சர்வதேச நியமங்களுக்கு அமைவான சட்டவைத்திய அதிகாரிகளின் அகழ்வு நடவடிக்கைகள், நிதி தொடர்பான விடயம் ஓ எம் பி அலுவலகம் ஊடாக நிதியை பெற்றுக்கொள்ளல் ,விரைவாக அகழ்வு பணிகளை மேற்கொள்ளவேண்டும், சான்றுப்பொருட்களை பாதுகாக்கும் பொறிமுறை. புதைகுழி காணப்படும் காணி தொடர்பில் நில அளவை திணைக்களத்தின் வரைபடங்கள், தொல்லியல் திணைக்களத்தின் அகழ்வு பணி தொடர்பான விடயங்கள், கிராம அலுவலர் மற்றும் பிரதேச செயலாளரால் குறித்த காணி-சுதந்திரத்தின் பின்னர் யார் யாரின் ஆளுகையில் இருந்தது என்பது தொடர்பான விடயம், தற்போதுள்ள பாதுகாப்பை அதிகரித்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் தொடர்பில் மன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறும் அன்றைய தினம்(20) அகழ்வு பணி தொடர்பில் தீர்மானிப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சட்டத்தரணி வி. கே .நிறஞ்சன் அவர்கள்
சர்வதேச நியமங்களை பின்பற்றியும் வைத்தியர்களுக்காக தயாரிக்கப்பட்ட கோவையின் அடிப்படையிலும் முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் அகழ்வு நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று இடம்பெற்ற மனித புதைகுழி தொடர்பான விசேட கலந்துரையாடலில் சட்ட வைத்திய அதிகாரிகள் இதனை தெரிவித்துள்ளனர்.

இதன்போது, அழைக்கப்பட்ட நிறுவன பிரதிநிதிகளும் வைத்தியர்களாக வைத்தியர் வாசுதேவ மற்றும் பிரணவன் ஆகியோர் பிரசன்னமாகியிருந்தார்கள்.

அவர்கள் இந்தப் புதைவழி எவ்வாறு மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ஒட்டுமொத்த நபர்களின் கலந்துரையாடலின் அடிப்படையில், சர்வதேச நியமங்களை பின்பற்றி மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கருத்துரைக்கப்பட்ட நிலையில், ஏற்கனவே வைத்தியர்களுக்கு அவர்களுடைய தயாரிக்கப்பட்ட கோவை ஒன்று காணப்படுவதாக கூறி அதற்கு அமைவாக இந்த அகழ்வை மேற்கொள்வதாக தீர்மானிக்கப்பட்டிருக்கிறது

அதே நேரம் எவ்வாறு இந்த மனித புதைகுழி அகழ்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என நீதிமன்றத்தால் பல கட்டளைகள், அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவுகள், அரசியல்வாதிகள் மற்றும் பல நிறுவனங்களைச் சார்ந்தோர் இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்டிருந்தார்கள்.

இந்த நிறுவனங்களின் அறிக்கைகளுக்காக தொல்பொருள் திணைக்களத்தின் அறிக்கைக்காகவும் இந்த வழக்கு அடுத்த வியாழக்கிழமை மீண்டும் அழைக்கப்பட இருக்கிறது என தெரிவித்தார்