LOADING

Type to search

இலங்கை அரசியல்

இன்னொரு“83 ஜூலையை” நோக்கி இலங்கை நகர்த்தப்படுகிறதா?

Share

வி.தேவராஜ்

மூத்த ஊடகவியலாளர்.

  • தமிழ் மக்களுக்கு ஒரு திறந்த வெளி கொலைக் களமாகவே இலங்கை உள்ளது.
  • சிங்கள ஆளும் வர்க்கத்தின் சூழ்ச்சிக்கு அப்பாவித் தமிழர் பலி.

சுதந்திர இலங்கையில் 1956, 1958, 1961, 1964, 1974, 1977 மற்றும் 1981, 1983 என தொடர்ச்சியாக அரங்கேற்றப்பட்ட கொலைக் களங்களை தமிழ் மக்கள் கண்டவர்கள். அந்தவகையில் தமிழ் மக்களுக்கு ஒரு திறந்த வெளி கொலைக் களமாகவே இலங்கை காட்சியளிக்கின்றது.

தமிழ் மக்களில்; ஒரு சாராருக்கு மாத்திரமன்றி சுதந்திர இலங்கையில் பிறந்த அடுத்தடுத்த ஒவ்வொரு சந்ததியும் கொலைக் கள அனுபவத்துடனேயே வாழ்ந்து வருகின்றனர்.

மொத்தத்தில் சுதந்திர இலங்கையின் 75 வருடகால வரலாறு என்பது தமிழ் சமூகம் கரடு முரடான, இலகுவில் மறந்துவிடமுடியாத ,மிகவும் கசப்பான அனுபவப் பகிர்வுடனேயே பயணித்துக் கொண்டிருக்கின்றது.

 

இவ்வாறு கொலைக் கள அனுபவத்துடன் நடமாடிவரும் தமிழ் மக்கள் மாத்திரமல்ல பிற இனத்தவர்களும் கறுப்பு ஜ10லை குறித்த நினைவுகளை தற்போது மீட்டிப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

இடதுசாரிகளை ஆதரித்ததால் பிரஜா உரிமையை இழந்த மலையக மக்கள். சுதந்திர இலங்கையில் 1948 ஆம் ஆண்டு பத்து இலட்சத்துக்கு மேற்பட்ட இந்திய வம்சாவளி மக்களின் பிரஜா உரிமை பறிக்கப்பட்டது.. இதன் தாக்கம் அந்தச் சமூகத்தில் பிறப்பெடுக்கும் இன்றைய பிள்ளைகளைக் கூட பாதித்து நிற்கின்றது. அந்தளவுக்கு பிரஜா உரிமைச் சட்டம் இந்திய வம்சாவளி மக்களை தேசிய நீரோட்டத்தில் இருந்து தூக்கி வீசிவிட்டது. இந்திய வம்சாவளி மக்கள் தேர்தல்களில் இடதுசாரிகளை அதரித்தனர் என்பதற்காக அந்த மக்கள் கொடுத்த பெரும் விலை இதுவாகும்.

சிங்கள ஆளும் வர்க்கத்தின் சூழ்ச்சி. இதே போன்றே தொடர்ந்த கலவரங்களின் பின்னணியில் சிங்கள ஆளும் வர்க்கம் தமது இருப்பைத் தக்க வைத்துக் கொள்வதற்காக மேற் கொண்ட சூழ்ச்சிகளே காரணமாக அமைந்தன.

ஜே.ஆர்.ஜெயவர்தன தலைமையிலான யூ.என்.பி. ஆட்சியானது வடக்கு மற்றும் கிழக்கில் புலிகளாலும் தெற்கில் ஜே.வி.பியாலும் அவரது எதேச்சதிகாரத்திற்கு முன்வைக்கப்பட்ட அரசியல் அச்சுறுத்தல்களை ஒரே நேரத்தில் அகற்றுவதற்கான மூலோபாய கட்டமைப்பை அமைத்தது. இந்த மூலோபாயம் இறுதியில் பல்லாயிரக் கணக்கான மக்களின் உயிர்களைக் காவு கொண்டது.

பல்லாயிரக் கணக்கான மக்களை சொந்த நாட்டில் அகதி முகாம்களுக்குள் அடைத்தது. ஆயிரக் கணக்கானோர் வெளி நாடுகளில் அகதிகளாகத் தஞ்சமடைந்தனர். இந்த படுகொலையானது சிங்கள ஆளும் உயரடுக்கின் மேலாதிக்கத்தை வலுக்கட்டாயமாக நிலைநிறுத்த கட்டவிழ்த்து விடப்பட்டது என சிங்கள புத்திஜீவிகள் சுட்டிக் காட்டுகின்றனர். இதே பாணியிலான அரசியல் சூழ்ச்சியே நாடு மீள முடியாத பெரும் பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியுள்ள இன்றைய நிலையிலும் சிங்கள ஆளும் வர்க்கம் தமது அரசியல் இருப்பைத் தக்க வைத்துக் கொள்வதற்காக காய்களை நகர்த்தி சூழ்ச்சி செய்து கொண்டிருக்கின்றது.

தென்னிலங்கை மக்களை திசைதிருப்ப இனமுரண்பாடுகள். நாட்டில் புரையோடிப் போயுள்ள மீள முடியாத நெருக்கடிகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்ப வேண்டிய தேவை இன்றைய சிங்கள ஆளும் வர்க்கத்தின் முன் பெரும் சவாலாக உள்ளது. எனவே மக்களின் கவனத்தை திசை திருப்பும் நோக்கில் இன மற்றும் மத ரீதியிலான முரண்பாடுகள் தோற்றுவிக்கப்பட்டு வருகின்றன.

எனவேதான் 1983 கறுப்பு ஜூலை பாணியில் இன்னொரு படுகொலைக்கான களத்தை திறந்துவிடுவதற்கான ஒரு உள்ளார்ந்த ஆபத்து இருப்பது குறித்த எச்சரிக்கையை சிங்கள புத்திஜீவிகள் தெரிவிக்கின்றனர். 1983 ஜூலைப் படுகொலையைத் தோற்றுவித்த தேசியப் பிரச்சினைக்கான அடிப்படைக் காரணங்களை, கடந்த நாற்பது வருடங்களாக ஆட்சிக்கு வந்த எந்த ஒரு அரசாங்கத்தினாலும் இன்னும் கவனிக்கப்படவில்லை.

அதே வேளையில் இனப்படுகொலை சிறுபான்மை இனங்களின் பொருளாதார தளங்களை அழித்தல் போன்றன சிங்கள ஆளும் உயரடுக்கின் இனவழிப்பு மற்றும் பொருளாதாரப் போரின் திட்டமிடப்பட்ட நிகழ்ச்சி நிரலாகும்.

  • சிங்கள பௌத்த மக்களுக்கானதே தேசிய நீரோட்டம்!

இலங்கையின் தேசிய நீரோட்டம் என்பது சிங்கள பௌத்த மக்களுக்கானது என காலத்துக்குக் காலம் பிரகடனப்படுத்திய பேரினவாதச் சக்திகள் ஒட்டு மொத்த தமிழ் பேசும் மக்களையும் சிற்சில வேறுபாடுகளுடன் ஆனால் ஒரே தராசில் வைத்து நடத்தத் தொடங்கியது.

சிறுபான்மை இன மக்கள் தமக்குள் தமிழர்கள் என்றும் முஸ்லிம்கள் என்றும் பிரிந்து நிற்கின்றனர். தமிழர்கள் வடக்குக் கிழக்கென்றும் மலையகம் என்றும் பிரிந்து உள்ளனர்.

வடக்குக் கிழக்கிற்குள்ளும் பல்வேறு பிரிவுகள் உள்ளன. மொத்தத்தில் தமிழ் பேசும் மக்கள் பல்வேறு கூறுகளாகச் சிதறிக் கிடக்கின்றனர்.

ஒப்பந்தங்கள் செல்லாக் காசாகின. இதன் விளைவு சிறிலங்கா அரசாங்கத்திற்கும் தமிழ் அரசியல் தலைவர்களுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட பண்டாரநாயக்கா-செல்வநாயகம் மற்றும் டட்லி- செல்வநாயகம் உடன்படிக்கைகள் போன்ற பல உடன்படிக்கைகள் சிங்கள பௌத்த தேசியவாதிகளின் அழுத்தத்தின் காரணமாக அரசாங்கத்தால் ஒருதலைப்பட்சமாக இரத்துச் செய்யப்பட்டன.

  • ஜனாதிபதியும் 13 வது திருத்தச் சட்டமும்.

இது போன்றதொரு நாடகம் தற்போது இலங்கை அரசியலில் அரங்கேற்றுவதற்கான முனைப்புகள் மேலெழுந்து வருகின்றன. இலங்கையின் அரசியலமைப்பில் இடம்பெற்றுள்ள நிலையிலும் கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாக கிடப்பில் போடப்பட்டுக்கிடக்கின்ற 13 வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமல்படுத்துவது குறித்து பெரும்பாலான தமிழ்க் கட்சிகள் இந்தியப் பிரதமர் மோடி அவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் இலங்கை அரசியலில் 13வது திருத்தச் சட்டம்; மீண்டும் பேசு பொருளாக உருவெடுத்துள்ளது.

  • இந்தியப் பிரதமரின் நம்பிக்கை!

அதே வேளையில் இந்தியப் பிரதமர் மோடி அவர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்த போது இலங்கை ஜனாதிபதி 13ஐ இலங்கை முழுமையாக அமல்படுத்துவார் என நம்புவதாக நம்பிக்கையும் வெளியிட்டிருந்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 13 வது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவது குறித்து  தொட்டிலையும் ஆட்டி பிள்ளையையும் கிள்ளி விடும் வேலையை ஏற்கனவே தொடங்கிவிட்டார். இந்த ஆட்டத்தில் எது நடந்தாலும் அது ரணில் விக்ரமசிங்கவிற்கே இலாபமாக அமையும். அதற்கேற்பவே ரணில் விக்ரமசிங்க காய்களை நகர்த்துகின்றார்.

அரசியலமைப்பில் இருப்பதை நடைமுறைப்படுத்த மீண்டும் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சிகளின் இணக்கம் அவசியம் எனக் கூறும் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்ற கட்சிகளின் இணக்கப்பாடு கிட்டாது என்பதை தெரிந்து கொண்டே இந்த நகர்வுகளை மேற் கொள்கின்றார்.

  • நெருக்கடிகளைத் தீர்க்கும் எண்ணமில்லை.

மொத்தத்தில் தேசியப் பிரச்சினை மற்றும் பொருளாதார நெருக்கடியைத் தீர்க்கும் உண்மையான எண்ணம் அரசுக்கு இல்லை என்பதையே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் செயற்பாடுகள் நிரூபிக்கின்றன. சிங்கள அளும் வர்க்கம் தமது இருப்பைத் தக்க வைத்துக் கொள்வதற்காக தமிழ் மக்கள் மீது தொடர்ச்சியாகக் கட்டவிழ்த்துவிட்ட இனக் கலவரங்கள் கொலைகள் கொள்ளைகள் அனைத்துக்குமான மறைந்த கரம் குறித்து அனைவரும் அறிந்ததே. ஆனால் அவர்கள் அரசியல்வாதிகளின் செல்லப் பிள்ளைகள். சுதந்திரக் காற்றை அனுபவிக்கின்றனர்.

1.கடந்த 75 வருடங்களாக தொடரும் இன சங்காரத்துக்குப் பிறகும் தமிழினத்தின் விடுதலை வேட்கை மறைந்துவிட்டதா?- முள்ளி வாய்க்கால் படுகொலைக்குப் பிறகு அதாவது போர் மௌனிக்கப்பட்டதன் பின் நந்திக் கடல் பகுதிக்குச் சென்ற போது ஊனமான கால்களுடன் ஷல் துகள்கள் கிழித்துச் சென்ற ஆறாத காயங்களுடன் இழப்பின் வெறுமைக்குள் வீழ்ந்து எதிர் காலத்தையே தொலைத்துவிட்டதான பார்வையுடன் தகிக்கும் மணல் சூட்டையும் உணராது நந்திக் கடலை வெறித்துப் பார்த்திருந்த முதியவரைச் சந்தித்தேன்.

அவர் பேசியது ஒரு வசனம்தான். தலைவர் எனக் கூறி; எம் முன் ஒருவர் வந்தால் நாம் அனைவரும் அவர் பின்னால் அணி திரண்டு போய் விடுவோம்.

2.இதனைக் கூறியவர் புலி அல்ல இளைஞனும் அல்ல. ஒரு சாதாரண முதியவர். அப்பொழுது என்னுள் ஓடியது போரின் போது அரச தரப்பில் கூறப்பட்ட மனிதாபிமானத்துக்கான போர் என்ற வாசகம்தான்.

3. ஒட்டு மொத்த தமிழ் மக்களும் 2009 இல் போர் முற்றுப் பெற்று 14 வருடங்களுக்குப் பின்னரும் மனிதாபிமானத்துக்கான போர் விடுவித்ததற்கான உணர்வே இன்றி நடமாடுவதைக் காணலாம். இதுதான் யதார்த்தம்.

4. ஏனெனில்  மனிதாபிமானத்துக்கான போருக்குப் பின்  கடந்த 14 வருடங்களாக தமிழினத்தை துடைத்தெறியும் போர் தமிழ் மக்கள் மீது திணிக்கப்பட்டுள்ளதுதான் காரணம்.

5. சிங்கள மக்கள் அல்ல சிங்கள ஆளும் வர்க்கம் தமது அரசியலுக்காக தமது அரசியல் இருப்புக்காக தமிழர்களை எவ்வாறு அழிப்பது என்று சதா காலமும் சிந்தித்துச் செயலாற்றியதன் விளைவு இன்று நாடு நாசமாய்ப் போய்க் கிடக்கின்றது.

6. தமிழ் மக்களுடன் சமரசத்துடன் அதிகாரப் பரவலாக்களுக்கு இசைந்து போனால் நாடு முன்னேறும்.

7. 75 வருடகால வரலாற்றில் சிங்கள இளைஞர்களும் தமிழ் இளைஞர்களும் புதிய அரசியல் பயணத்தை நோக்கிய இலக்கு குறித்து முயற்சித்தபோதும் சிங்கள ஆளும் வர்க்கம் அதனை அடக்குவதில் காட்டிய அக்கறையை இளைஞர்களின் சிந்தனையை உணர்வை கணக்கில் எடுக்கத் தவறிவிட்டது.

8. இதன் விளைவு  அரகலய எழுச்சி ஏற்பட்டது. அரகலய எழுச்சியை ஜனநாயகத்தின் விரோத எழுச்சியாகவே பார்க்கின்றனர். சிங்கள ஆளும் வர்க்கத்தின் 75 வருடகால கொள்கை கோட்பாடுகளினால் இறுதியில் மிஞ்சியது தோற்றுப் போன அரசும் சீரழிந்து போன நாடும்தான். தமிழர்களுக்கு எதிரான இன அழிப்பு தமிழ் மக்களில் பெரும்பாலானவர்களை நாட்டைவிட்டு வெளியேற்றியது. தோற்றுப் போன அரசும் சீரழிக்கப்பட்ட நாடும் சிங்கள இளைஞர்களையும் நாட்டைவிட்டு வெளியேற்றிக் கொண்டிருக்கின்றது.

மக்கள் இல்லாத மண்ணையும் நாட்டையும் வைத்துக் கொண்டு சிங்கள ஆளும் வர்க்கம் செய்யப் போவது என்ன?.

சிங்கள ஆளும் வர்க்கம் தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும். இல்லையேல் புதிய தலைமுறைக்கு வழி விட்டு ஒதுங்கிக் கொள்ள வேண்டும். இல்லையேல் ஒதுக்கப்பட்டு ஓரம் கட்டப்படுவீர்கள்.

Email : vathevaraj@gmail.com

27 th July 2023