தமிழர் தாயகத்தில் தொடரும் நில அபகரிப்பு: மேலும் 2500 ஏக்கரை கபளீகரம் செய்யும் முயற்சி
Share
நடராசா லோகதயாளன்
யாழ்ப்பாணக் குடாநாட்டிலும் புதிதாக மேலும் 2500 ஏக்கர் நிலத்தை வனவளத் திணைக்களம் அபகரிக்கும் நோக்கில் வரைபடம் தயார் செய்யப்பட்டுள்ளது.
நல்லூர், சாவகச்சேரி, வேலணை, மருதங்கேணி, சண்டிலிப்பாய், சங்காணை, காரைநகர், பருத்தித்துறை ஆகிய எட்டு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் வழுக்கையாறு, மணல்காடு, மண்டைதீவு,முள்ளி,பொன்னாலை, காரைநகர்.பருத்தித்துறை ஆகிய எட்டு இடங்களிலுமே இந்த நிலங்கள் வனவளத் திணைக்களத்தினால் கையகப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இதில் கடல் அரிப்பு மற்றும் இயற்கை வளம் பேணல் என்பவற்றிற்காக நாட்டப்பட்ட கண்டல் தாவரங்கள் (மைங்கோஸ்) நிற்கும் பிரதேசங்கள் அனைத்தும் வனவளத் திணைக்களத்திற்கு உரியது என அவர்கள் உரிமை கோருகின்றனர்.
இதற்கமைய இவ்வாறு புதிதாக கோரப்படும் பிரதேசங்களில் 800 கெக்டேயர் அல்லது 2 ஆயிரத்து 400 ஏக்கர் வரையிலான நிலங்களை தமது ஆளுகையின் கீழ் கொண்டுவர வர்த்தமானி வெளியிடுவதற்கான புதிய முயற்சியினை வனவளத் திணைக்களம் மேற்கொண்டு இதற்கான வரைபடமும் மாவட்டச் செயலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் மே மாதம் 25 ஆம் திகதி இடம்பெற்ற கலந்துரையாடலில் வனவளத் திணைக்கள அதிகாரிகள் மற்றும் வடக்கின் அதிகாரிகள் கலந்துகொண்ட கூட்டத்தில் யாழ்ப்பாணத்தில் கையகப்படுத்த முனையும் இடங்களை வரைபடத்துடன் வனவளத் திணைக்கள அதிகாரிகளினால் காண்பிக்கப்பட்டபோது, ஏற்கனவே வனவளத் திணைக்களம் அபகரித்துள்ள நிலத்தை விடுவிக்குமாறு கோரும்சமயம் தற்போது புதிதாக நிலத்தை பிடிக்க முயலும் செயல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தும் என அதிகாரிகள் சுட்டிக்காட்டிய செய்தி வெளியானது.
இதனை 2023-05-30 அன்று யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் பிரஸ்தாபித்தபோது அது பொய்யான செய்தி 1985ஆம் ஆண்டிற்கு பினபு திணைக்களங்கள் வர்த்ததானி மூலம் சுவீகரித்த நிலங்கள் அனைத்தும் விடுவிக்கப்படுவதே ஜனாதிபதியின் கொள்கை என அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தா தெரிவித்தார்.
இந்த நிலையிலேயே 2 ஆயிரத்து 500 ஏக்கரையும் சுவீகரித்து அரச இதழ் வெளியிடுவதற்காக தேசிய குழுவிற்கு சமர்ப்பித்துள்ளதாக மாவட்டச் செயலகத்திற்கு வரைபடத்துடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறி வரைபடம் அனுப்பி வைக்கப்பட்டுள்ள பிரதேசங்களின் நிலங்கள் வனவளத் திணைக்கள அதிகாரிகளினால் ஏற்கனவே இரகசியமான முறையில் அளவீட்டுப் பணிகளும் இடம்பெற்றுவிட்டதாக தற்போது தெரிவிக்கப்படுகின்றது.