LOADING

Type to search

இலங்கை அரசியல்

அதிகாரப் பகிர்வும் மாகாண சபைத் தேர்தலும் பிரிக்க முடியாதது என்று கூட்டமைப்பு விலியுறுத்து.

Share

நடராசா லோகதயாளன்

அர்த்தமுள்ள அதிகாரப்  பகிர்வு,13ஆம் திருத்தம், மாகாண சபைத் தேர்தல் ஆகிய மூன்றையும பிரித்துப் பார்க்க முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெளிவாக  ஜனாதிபதியிடம் தெரிவித்திருந்தது என நாணாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் உறுதிபட வலியுறுத்தியுள்ளார்.

கடந்த சில நாட்களிற்கு முன்னர் ஜனாதிபதி அழைத்திருந்த அனைத்து கட்சிக் கூட்டத்தில் காரசாரமாக வாக்குவாதங்கள் இடம்பெற்றிர்ந்தது. ஒரு கட்டத்தில் “உங்களுக்கு அதிகாரப் பகிர்வு தேவையா அல்லது மாகாண சபை தேர்தல் தேவையா”? என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை பார்த்து கேட்ட ரணில் விக்ரமசிங்க இரண்டும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்தது என்று சுமந்திரன் விளக்கமளிக்க, கூட்டத்தை உடனடியாக முடித்துக் கொண்டு வெளியேறியது ஊடகங்களில் பரபரப்பு செய்தியானது. 

இதையடுத்து ஊடகங்கள் மாறுபட்ட செய்திகளையும் கருத்துக்களையும் முன்வைத்திருந்தன. இந்நிலையில் இந்த விடயத்தை விளக்கி கூட்டமைப்பு விரிவான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன் பேச்சாளரும் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன் பெயரில் அந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு, அரசியலமைப்பின் 13வது திருத்தம், நீண்டகாலமாக தாமதமாகி வரும் மாகாண சபைத் தேர்தல்கள் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் கூட்டப்பட்ட சர்வகட்சி மாநாடுகள் ஆகிய விடயங்கள் தொடர்பான எமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும் வகையில்  வெளியிடப்படுகின்றது அந்த அறிக்கை வெளியிடப்படுவதாக கூட்டமைப்பு கூறியுள்ளது.

”தமிழ் மக்கள், 1956 ஆம் ஆண்டு முதல், வடக்கு – கிழக்கில் சமஷ்டி ஏற்பாட்டின் மூலம் தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வை நோக்கிச் செயற்படுவதற்கான ஆணையை, தமிழ் அரசியல் கட்சிகளுக்கு தொடர்ச்சியாக வழங்கியுள்ளனர். 1987ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29 ஆம் திகதி கைச்சாத்திடப்பட்ட இந்திய-இலங்கை உடன்படிக்கையில் வடக்கு கிழக்கானது தமிழ் பேசும் மக்களின் பூர்வீக வாழ்விடம் என்பது ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது, இதில் மாகாணங்களுக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் உள்ளடங்கலான அதிகாரப் பகிர்வு வழங்கப்பட்டிருந்தது” என்று கடந்தகால வரலாற்றை அந்த அறிக்கை நினைவூட்டியுள்ளது. 

1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இடம்பெற்ற தமிழர்களுக்கு எதிரான வன்முறைகளின் விளைவாக இந்தியா வழங்கிய அனுசரணைகளை இலங்கை ஏற்றுக்கொண்டது முதல் கடந்த 40 ஆண்டுகளாக இந்திய அரசாங்கம் இந்த முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது என்பதையும் சுமந்திரன் தனது அறிக்கையில் விளக்கியுள்ளார்.

மிக சமீபத்தில் கூட, இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் , இலங்கை அரசு தமிழர்களின் அபிலாஷைகளை நிறைவேற்றி, சமத்துவம், நீதி மற்றும் சமாதானத்திற்க்கான மறுகட்டமைப்பை முன்னெடுத்துச் செல்லும் என்ற இந்தியாவின் நம்பிக்கையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் தெரிவித்திருந்ததையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

ரணிலுடனான சந்திப்பின் போது மேலும் 13வது திருத்தத்தை அமல்படுத்துவதற்கும் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கும், இலங்கையின் தமிழ் சமூகத்திற்கு சுயமரியாதை மற்றும் கண்ணியமான வாழ்க்கையை உறுதி செய்யவும் இலங்கை தனது உறுதிமொழியை நிறைவேற்றும் என்றும் இந்தியப் பிரதமர் தனது நம்பிக்கையை தெரிவித்திருந்தார். 

பின்னர், செய்தியாளர் சந்திப்பு ஒன்றில்  இந்திய வெளியுறவு செயலாளர் பின்வருமாறு கூறியிருந்தார் என்பதையும் அந்த அறிக்கை கூறுகிறது.

”ஒன்றுபட்ட மற்றும் வளமான இலங்கை எனும் கட்டமைப்பிற்குள் தமிழ் சமூகத்தின் அபிலாஷைகள், நிச்சயமாக சமத்துவம், நீதி மற்றும் சுயமரியாதைக்கான அபிலாஷைகளை நிவர்த்தி செய்யும் அரசியல் தீர்வை இந்தியா தொடர்ந்து எதிர்நோக்குகிறது என்ற உண்மையின் அடிப்படையில் இதைவிட வெளிப்படையாக எதுவும் இருக்க முடியாது. அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு மற்றும் 13வது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்துதல் என்பன இலங்கையின் நல்லிணக்கச் செயற்பாடுகளுக்கு தீர்வு காண்பதற்கும், அதனை எளிதாக்குவதற்கும் இன்றியமையாத கூறுகளாகும் என பிரதமர் மேலும் தெளிவாகக் கூறியிருந்தார். இதுவே எங்களின் நிலையான நிலைப்பாடாக இருந்து வருகின்றதோடு, இது இரு தலைவர்களுக்கிடையிலான சந்திப்பின் போதும்  முன்வைக்கப்பட்டது.” 

1956 முதல் ஒவ்வொரு தேர்தலிலும் வெளிப்படுத்தப்படும் தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்கு இணங்க, சமஷ்டி கட்டமைப்பில் அதிகாரப் பகிர்வு இருக்க வேண்டும் என்பதே தமது நிலைப்பாடாகும் என்கிறது கூட்டமைப்பின் அறிக்கை. 

“அரசியலமைப்பின் 13 வது திருத்தம் இலங்கையின் அரசியலமைப்பின் ஒரு பகுதியே தவிர, ஒரு தனி இணைப்பு அல்ல. ஜனாதிபதி மற்றும் நாம் அனைவரும் அதை நிலைநிறுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் சத்தியபிரமாணம் செய்துள்ளோம். இவ்வாறு அரசியலமைப்பின் ஒரு பகுதியை நடைமுறைப்படுத்தாதது விடுவது என்பது அரசியலமைப்பு முழுவதையும் மீறுவதாகவே அமையும். எனவே  எமது அரசியலமைப்பில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள அதிகாரப்பகிர்வு ஏற்பாட்டை முழுமையாக அமல்படுத்துமாறு நாம் வலியுறுத்துகின்றோம். எனினும் அது தமிழ் மக்களின் நியாயமான அபிலாஷைகளை பூர்த்தி செய்யாது”. 

அதிகாரப் பகிர்வு ஏற்பாட்டை பல்வேறு செயல்முறைகள் மூலம் அர்த்தமுள்ளதாக்க வேண்டும் என்பது,மங்கள முனசிங்க தெரிவுக்குழுவில் இருந்து 2016 – 2019 வரை அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கீழ் இடம்பெற்ற அரசியலமைப்பு பேரவை வரை, மற்றும்  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பதவிக்காலத்தின் போது இந்தியாவுடன் குறைந்தபட்சம் மூன்று தனித்தனி கூட்டு அறிக்கைகள் மூலம் உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்பதையும் சுமந்திரன் கையொப்பமிட்டுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அறிக்கை மீண்டும் எடுத்துக்காட்டியுள்ளது.

”தேர்தல் முறைமையை மாற்றியமைக்கும் நடவடிக்கையில் ஏற்பட்டுள்ள சட்ட காலதாமதங்கள் காரணமாக குறைபாடுகளுடன் இயங்கி வந்த ஒன்பது மாகாண சபைகள் செயலிழந்துள்ளன” என்று அறிக்கை வெளிப்படுத்துகிறது. 

பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையிலான தேர்தல் சீர்திருத்தத் தெரிவுக்குழு கடந்த வருடம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையில், மூன்று வருடங்களுக்கும் மேலாக இடைநிறுத்தப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தல் மக்களின் ஜனநாயக உரிமையை மறுப்பதாக இனங்கண்டு முன்பு இருந்த விகிதாசார பிரதிநிதித்துவ முறையின்   கீழ் தேர்தலை நடத்த வேண்டும் என பரிந்துரை செய்ததோடு இதை செயல்படுத்த தகுந்த சட்டம் இயற்ற வேண்டும் என்றும் பரிந்துரைத்தது. இந்த பரிந்துரைகளுக்கு இணங்க தான்ன் ஒரு தனி நபர் சட்டமூலம் ஒன்றினை தயாரித்து முன்வைத்திருந்ததை சுட்டிக்காட்டியுள்ள கூட்டமைப்பின் பேச்சாளர்,  அதன் முதல் வாசிப்பு முடிந்த நிலையில் இந்த சட்டமூலம் உச்ச நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்தப்பட்டது. மேலும் இதில் உள்ள சில சரத்துகளில் பரிந்துரைக்கப்பட்ட மாற்றங்களைச் செய்தால், அதனை பாராளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மை மூலம் சட்டமாக்க முடியும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது என்பதையும் அந்த அறிக்கையில் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கூறியுள்ளார்.

2022 டிசம்பர் 10 ஆம் திகதி இடம்பெற்ற முதலாவது சர்வகட்சி மாநாட்டிலேயே மாகாண சபைத் தேர்தலை இனியும் தாமதிக்காமல் நடத்த வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெளிவாக   ஜனாதிபதியிடம் தெரிவித்திருந்தது. அதிகாரப் பகிர்வை அர்த்தமுள்ளதாக்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் குறித்தும் த தே கூ விவாதித்திருந்தது.  ஜனாதிபதியுடன் பல கலந்துரையாடல்கள் இடம்பெற்றதுடன், 2023 ஜனவரி 26ஆம் திகதி நடைபெற்ற இரண்டாவது சர்வகட்சி மாநாட்டில் மீண்டும் தமது நிலைப்பாட்டை வலியுறுத்தியிருந்த கூட்டமைபு கடந்த 2023ஆம் ஆண்டு ஜூலை 26ஆம் திகதி நடைபெற்ற சர்வ கட்சி மாநாட்டிலும் இதே நிலைப்பாட்டையே மீண்டும் வலியுறுத்தியது. 

“இவ்விடயத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை அவ்வாறே உடனடியாக மாகாண சபைத் தேர்தல்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட மற்றும் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வுக்கு அழைப்பு விடுப்பதற்கும் இடையில் எந்த முரண்பாடும் இல்லை. மேலும் கூறுவதானால் ஒன்று இல்லாது மற்றொன்றில் எவ்வித அர்த்தமும் இல்லை” என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அறிக்கை காட்டமாக கோடிட்டு காட்டியுள்ளது.

இதேவேளை, ஜனாதிபதியுடனான கூட்டத்தை சுமந்திரனே குழப்பினார் என்று வடக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரான க. வி. விக்னேஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார். யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இதை தெரிவித்தார்.

தென்னிலங்கையிலிருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில், ரணில் அரசாங்கம் ஜனாதிபதி தேர்தலிற்கே முன்னுரிமை அளிக்கவுள்ளது என்றும், அதில் மக்கள் ஆதரவு பெற்று ஜனாதிபதி ஒருவர் தெரிவான பிறகு நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி அவர் அதிகாரப்பகிர்வு, மாகாண சபை தேர்தல்கள், பொருளாதார சீர்திருத்தம், இந்தியா-சினாவுடனான உறவுகளை ஆகியவற்றை முன்னெடுக்கட்டும் என்ற நிலைப்பாடு உள்ளது என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.