கல்வியில் அரசியல் தலையீட்டை ஆளுநர் நிறுத்தாவிட்டால் தொழிற் சங்கப் போராட்டம் – யாழ்ப்பாணத்தில் யோசப் ஸ்டாலின் எச்சரிக்கை
Share
பு.கஜிந்தன்
கல்வியில் அரசியல் தலையீட்டை ஆளுநர் நிறுத்தாவிட்டால் தொழிற் சங்கப் போராட்டம் – யாழில் யோசப் ஸ்டாலின் எச்சரிக்கை
வட மாகாண ஆளுநர் வடக்கு கல்வியை அரசியல் மயப்படுத்தும் செயற்பாட்டை கைவிடாவிட்டால் தொழிற்சங்க போராட்டத்துக்கு தள்ளப்படுவோம் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்தார்.
நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் ஆசிரியர்களை சந்தித்த பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கு கல்வி ஆசிரிய இடமாற்றங்களில் இடமாற்றச் சபையின் அறிவுறுத்தல்களை மீறி ஆளுநர் இடமாற்றங்களை வழங்குவதாக அறிகிறோம் .
வடக்கு கல்வியின் நிர்வாக செயல்பாடுகள் சுதந்திரமாகவும் வினைத் திறனாகவும் நடப்பதற்கு ஆளுநர் இடையூறு ஏற்படுத்தக் கூடாது.
அது மட்டுமல்லாது வடக்கில் இடம்பெற்ற ஊழல் முறைகேடுகள் தொடர்பில் விசாரணைகள் இழுத்தடிக்கப்பட்டு ஊழல்வாதிகள் பாதுகாக்கப்படுகின்றனர்.
மேலும் ஆயிரம் பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக்கும் திட்டத்திற்கு சுமார் 2285 மில்லியன் ஒதுக்கப்பட்ட நிலையில் வடக்கிலும் தேசிய பாடசாலைகள் என சுவர்களில் எழுதி திறப்பு விழா செய்தார்கள்.
தேசிய பாடசாலைகளாக 22 பாடசாலைகள் மட்டுமே உள்வாங்கப்பட்ட நிலையில் எஞ்சிய பணத்துக்கு என்ன நடந்தது.
ஆகவே வடக்கு கல்வியை அரசியல் மயமாக்குவதற்கு வடமாகாண ஆளுநருக்கு இடமளிக்க மாட்டோம் என்பதுடன், அவர் தனது செயற்பாடுகளை நிறுத்தாவிட்டால் தொழிற்சங்க போராட்டத்திற்கு தள்ளப்படுவோம் என அவர் மேலும் தெரிவித்தார்.