செல்வம் அடைக்கலநாதன் வேண்டுகோளிற்கு அமையவே சீனித் தொழிற்சாலை என்கிறார் ரணில்
Share
நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் வேண்டுகோளுக்கு அமையவே வவுனியாவில் சீனித் தொழிற்சாலையொன்றை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
மன்னார் மடு மாதா ஆலயத்தின் வருடாந்தா உற்சவம் இம்மாதம் 15ஆம் திகதி இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா இதனைத் தெரிவித்தார்.
வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவின் நெடுங்கேணியை அண்டிய பகுதியில் நயினாமடுக் கிராமத்தில் மத்திய வகுப்பு திட்டத்தில் மக்களிற்கு வழங்கிய நிலத்தில் 500 ஏக்கர் பகுதியில் சீனித் தொழிற்சாலை அமைக்கப்படவுள்ளதோடு அத் தொழிற்சாலையின் செயற்பாட்டிற்கு வவுனியா வடக்கில் 30 ஆயிரம் ஹெக்டேயர் நிலத்தில் கரும்புச் செய்கை மேற்கொள்ளப்படவும் திட்டமிடப்பட்டு பணிகள் இடம்பெறுகின்றன என்ற செயல்பாட்டின் செய்திகள் வெளியாகி உள்ளன.
இந்த நிலையிலேயே மடுவிற்கு வந்த ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் வேண்டுகோளுக்கு அமையவே வவுனியாவில் சீனித் தொழிற்சாலை ஒன்றை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதோடு அதற்கான அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்து விட்டது என பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.
இதற்கு பலர் கடுமையான எதிர்ப்பையும் வெளியிட்டுள்ளனர். வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சரும், யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான க.வி.விக்னேஸ்வரன் இந்த திட்டம் தமது ஆட்சி காலத்தில் நிராகரிக்கப்பட்டது என்று அண்மையில் தெரிவித்திருந்தார்.
திட்டமிடப்பட்டுள்ள அந்த சீனித் தொழிற்சாலை அங்கு வருமாயின், அது நீர் மேலாண்மையை மிகவும் மோசமாக பாதிக்கும், சுற்றுச்சூழலிற்கு பாரிய சீர்கேட்டை ஏற்படுத்தும் என்று தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் பொன்.ஐங்கரநேரசனும் கருத்து வெளியிட்டிருந்தார்.
வவுனியாவில் ஏற்கனவே கடுமையன நீர் நெருக்கடி இருக்கும் சூழலில், கரும்புச் செய்கை மற்றும் சீனி ஆலைக்கு தேவையான நீர் ஆதாரம் எங்கிருந்து கிடைக்கப் போகிறது என்ற கேள்வியும் இதில் எழுப்பப்பட்டுள்ளது.