LOADING

Type to search

இலங்கை அரசியல்

மட்டக்களப்பில் மேய்ச்சல் தரையைப் பிடிக்கும் சிங்கள விவசாயிகள்

Share

யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார்

மட்டக்களப்பில் மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரைகளை சிங்கள விவசாயிகள் ஆக்கிரமித்து வருகிறார்கள். இது தொடர்பாக நீதிமன்ற உத்தரவுகள் இருக்கத்தக்கதாக அவற்றை மீறி ஆக்கிரமிப்பு நடந்து வருகிறது. அந்த பிரதேசம் மலைகளை அண்டியிருக்கிறது. மலைகளில் இருந்து வடிந்து வரும் நீர் பரவியோடும் பிரதேசம் என்ற காரணத்தால் அது ஒரு செழிப்பான பூமி.தமிழ்ப்  பண்ணையாளர்கள் சுமார் 4 லட்சம் கால்நடைகளை அங்கே வைத்து பராமரிக்கிறார்கள். கிட்டத்தட்ட 996 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் அந்த பண்ணைகளில் வேலை செய்கிறார்கள்;அதனால் பயனடைகிறார்கள். மலையகத்துக்கான இயற்கை உரம் அதாவது மாட்டெரு பெருமளவுக்கு இப்பிரதேசத்தில் இருந்துதான் கொண்டு செல்லப்படுகிறது. இப்பொழுது அதைச் சிங்கள விவசாயிகள் கொள்வனவு செய்து வருகிறார்கள். அதுவும் அறா விலைக்குத்தான். நாள் ஒன்றுக்கு மூன்று அல்லது நான்கு  பார ஊர்திகளில் மாட்டு எரு ஏற்றப்படுகிறது. அந்த மேய்ச்சல் தரை இழக்கப்பட்டால் அது கிழக்கின் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதை நம்பியிருக்கும் குடும்பங்கள் தொழிலை இழக்கும்.

மட்டக்களப்பில் ஒரு லீட்டர் பாலின் விலை 100 ரூபாய். யாழ்ப்பாணத்தில் ஒரு லீட்டர் பாலின் விலை 220 ரூபாய். அந்த மேய்ச்சல் தரையை பயன்படுத்தும் மாடுகளில் அனேகமானவை நாட்டு மாடுகள். கலப்பின மாடுகள் அல்ல. அந்த மேய்ச்சல் தரை இழக்கப்பட்டால் நாட்டு மாடுகளின் இன விருத்தி பாதிக்கப்படும். எனவே மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரையை இழப்பது என்பது கிழக்கின் பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்.

ஏற்கனவே தமிழ் மக்களின் தாயகத்தை வடக்கு கிழக்காகப் பிரித்து விட்டார்கள். வடக்குக் கிழக்கு இணைந்த ஒரு தீர்வை முன்வைத்த இந்தியா அவ்வாறு வடக்கும் கிழக்கும் பிரிக்கப்பட்ட பொழுது அதைத் தடுக்கவில்லை. இன்றுவரை அது தொடர்பாக கூர்மையான கருத்துக்கள் எவற்றையும் தெரிவிக்கவும் இல்லை.

அம்பாறை மாவட்டம் என்கனவே திட்டமிட்ட குடியேற்றங்களின்மூலம் பெருமளவுக்கு சிங்களமயப்பட்டு விட்ட்து. திருகோணமலையிலும் நிலைமை அப்படித்தான். இப்பொழுது கிழக்கில் செறிவாக தமிழ் மக்கள் வாழும் இடம் என்று பார்த்தால் மட்டக்களப்புத்தான். அங்கேயும் பிள்ளையானின் கட்சி ஒரு நாடாளுமன்ற ஆசனத்தை பெறக்கூடிய அளவுக்கு வளர்ச்சி பெற்றிருக்கிறது. அக்கட்சியானது வடக்குக்கு எதிரான அரசியலையும் முஸ்லிம்களுக்கு எதிரான அரசியலையும் முன்னெடுக்கின்றது. அதேசமயம் தெற்கில் மகிந்த அணியோடு கூட்டிச்சேர்கின்றது. கடந்த ஆண்டு தென்னிலங்கையில் சிங்கள மக்கள் எந்த குடும்பத்திற்கு எதிராக போராடினார்களோ; எந்த குடும்பத்தை பதவிகளில் இருந்து துரத்தினார்களோ; எந்த குடும்பம் சிங்கள மக்களுக்கு அஞ்சி படை முகாம்களில் ஒளிய நேரிட்டதோ, அந்த குடும்பத்தின் அடுத்த கட்ட வாரிசு ஆகிய நாமல் ராஜபக்சவை பிள்ளையான் தன்னுடைய கட்சியின் மாநாட்டுக்கு விருந்தினராக அழைத்திருந்தார். கடந்த ஆண்டு தன்னெழுச்சி போராட்டங்களின் பொழுது அவற்றுக்கு ஆதரவாக தமிழ் பகுதிகளில் குறிப்பாக, மட்டக்களப்பில்தான் காந்தி பூங்காவைச் சூழ உள்ள பகுதிகளில் நீதிக்கான பயணம் என்று கூறி ஒரு போராட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வந்தது. அதே மட்டக்களப்பில்தான் பிள்ளையானின் கட்சி சிங்கள மக்களால் துரத்தப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரை தனது கட்சி மாநாட்டுக்கு அதிதியாக வரவழைத்தது.

இவ்வாறு திட்டமிட்ட குடியேற்றங்களின் மூலமும்,வடக்குக்குக் கிழக்கைப் பிரிப்பதன் மூலமும், தொடர்ச்சியாக நடக்கும் சிங்கள பௌத்த மயமாக்களின் மூலமும், குறிப்பாக, மகாவலி அபிவிருத்தி என்ற போர்வையில் நடக்கும் நிலப் பறிப்பின் மூலமும், கிழக்கைத் தனிமைப்படுத்தி, பலவீனப்படுத்தி தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதன்மூலம், தமிழ் மக்களின் தாயகக் கோட்பாட்டை பலவீனப்படுத்தலாம் என்று தென்னிலங்கையில் இருப்பவர்கள் சிந்திக்கின்றார்கள். இப்படிப்பட்டதோர் பின்னணிக்குள் வைத்துத்தான் மேய்ச்சல் தரை விவகாரத்தைப் பார்க்க வேண்டும்

செழிப்பான அந்த மேய்ச்சல் தரையை சிங்கள விவசாயிகளை குடியிருத்துவதன் மூலம் அரசாங்கம் அபகரிக்க முயற்சிக்கின்றது. அங்குள்ள நாட்டு மாடுகள் உள்ளூரில் விளையும் காய்கறிகளை விரும்பி உண்பவை. சிங்கள விவசாயிகள் விவசாயத்துக்குத்தான் அந்த நிலத்தைப் பயன்படுத்துகிறார்கள். அவர்கள் அங்கே பயிர் செய்யும் பொழுது மேய்ச்சலுக்கு வரும் மாடுகள் அந்த பயிர்களைச் சாப்பிட்டுவிடும். மேய்ச்சல் தரையில் பயிர் செய்தால் அங்கு மேய வரும் கால்நடைகள் என்ன செய்யும்? உண்ணவிரதமா இருக்கும்?

பயிர்களை மாடுகள் மேய,அங்கு நிலத்தை ஆக்கிரமித்து வைத்திருக்கும் சிங்கள விவசாயிகள் மாடுகளை வெட்டுகிறார்கள் ; அல்லது கொல்லுகிறார்கள். இதுதொடர்பில் நீதிமன்ற உத்தரவுகளும் உண்டு. எனினும் எல்லாவற்றையும் மீறி அந்த மேச்சல் தரையை சிங்கள விவசாயிகள் ஆக்கிரமித்து வருகிறார்கள்.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட விவசாயிகளை சந்திப்பதற்காக மட்டக்களப்பு பல்சமய அமைப்பைச் சமூகத்தைச் சேர்ந்த 9 பிரதிநிதிகள் கடந்த செவ்வாய்க்கிழமை அப்பகுதிக்குச் சென்றார்கள்.அக்குழுவில் ஒரு முஸ்லிம் மௌலவியும் இரண்டு கிறிஸ்தவ மதகுருகளும் ஒரு இந்து மத குருவும் அடங்குவர்.அவர்களோடு ஊடகவியலாளர்களும் சென்றிருந்தார்கள். வாகனத்தில் சென்ற அக் குழுவை அப்பகுதியில் காணப்படும் ஒரு பிக்குவின் தலைமையிலான சிங்கள விவசாயிகள் சுற்றி வளைத்திருக்கிறார்கள்.

மௌலவியை மிகவும் கேவலமாகத் திட்டியிருக்கிறார்கள். இந்து மதகுருவை அவருடைய கொண்டையைப் பிடித்து இழுப்பதற்கு ஒருவர் முயற்சித்திருக்கிறார். பல்சமயக் குழுவை கிட்டத்தட்ட நான்கு மணித்தியாலங்களுக்கு மேல் அவர்கள் முற்றுகையிட்டு வைத்திருக்கிறார்கள். பொலிஸார் அந்த இடத்துக்கு வந்து அந்த முற்றுகையிலிருந்து அக் குழுவை விடுவித்திருக்கிறார்கள்.

அதிலும் அங்கு வந்த ஒரு போலீஸ் அதிகாரி முதலில் அங்கே முற்றுகைக்கு தலைமை தாங்கிய பௌத்த மத குருவை காலில் விழுந்து வணங்கியிருக்கிறார். அந்த இடத்தில் ஏனைய மதகுருகளும் இருந்தார்கள். அவர்கள் பாதிக்கப்பட்ட தரப்பில் இருந்து வந்தவர்களாகவும், பாதிப்பு தொடர்பான நிலைமைகளை மதிப்பிட வந்தவர்களாகவும் இருந்தார்கள். ஆனால் பாதிப்பை ஏற்படுத்திய அதாவது நிலத்தை பறிக்கும் விவசாயிகளுக்கு தலைமை தாங்கிய பிக்குவை அந்த போலீஸ் அதிகாரி காலில் விழுந்து வணங்கியிருக்கிறார். ஏனைய மத குருக்களுக்கு அப்படிப்பட்ட மரியாதை கிடைக்கவில்லை. பாதிக்கப்பட்ட மக்கள் யாரைக் குற்றவாளி என்று கூறுகிறார்களோ; யார் சட்டத்தை மீறுகிறார் என்று கூறுகிறார்களோ;அவரை அங்கு வந்த சட்டத்தின் காவலர்கள் என்று அழைக்கப்படும் போலீசார் விழுந்து வணங்கிய பின்னர் தான் விசாரணைகளை முன்னெடுத்திருக்கிறார்கள். பிறகெப்படி நீதி கிடைக்கும்?

இது தொடர்பாக தொடர்ச்சியாக கிழக்கில் உள்ள சிவில் சமூகங்களும் அரசியல்வாதிகளும் குரலெழுப்பி வருகிறார்கள். ஆனால் சிங்கள விவசாயிகளின் ஆக்கிரமிப்பை நிறுத்த முடியவில்லை. இப்பொழுது நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு முன்னரே இந்த பிரச்சினை தொடங்கிவிட்டது. அரசாங்கம் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்காக வெளிநாட்டு உதவிகளில் தங்கியிருக்கின்றது.மிகக்குறிப்பாக பன்னாட்டு நாணய நிதியத்திடம் தங்கியிருக்கின்றது. இவ்வாறு உதவிக்காக வெளி தரப்புகளிடம் கையேந்தும் ஒரு காலகட்டத்தில்கூட சிங்கள பௌத்த மயமாக்கலை அரசாங்கம் நிறுத்தவில்லை.இதை இன்னும் சரியாகச் சொன்னால் சிங்கள பௌத்த மயமாக்கல் அண்மை மாதங்களில்தான் மிகத் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அப்படியென்றால் அரசாங்கம் பன்நாட்டு நாணய நிதியத்துக்கும் பயப்படவில்லை; உதவி செய்யும் வெளிநாடுகளுக்கும் பயப்படவில்லை என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

குறிப்பாக அண்மைக் காலங்களில் இனங்களுக்கு இடையிலான முரண்பாட்டை ஊக்குவிக்கும் மோதல் களங்களில் பிக்குக்கள் வெளிப்படையாக காணப்படுகிறார்கள். கடந்த வாரத்துக்கு முதல் வாரம் குருந்தூர் மலையில் பொங்கல் செய்யப்போன தமிழ் மக்கள் அந்த பொங்கலுக்கு இடையில் புகுந்த பிக்குவைத் திட்டி வெளியே அனுப்பினார்கள். இப்பொழுது மற்றொரு பிக்கு பல் சமய சமூகத்தை நான்கு மணித்தியாலங்கள்  முற்றுகைக்குள் வைத்திருந்து மிரட்டியிருக்கிறார்.

இதுவெல்லாம் ரணில் விக்கிரமசிங்கவுக்கு தெரியாமல் நடக்கவில்லை. போலீசாருக்கு தெரியாமல் நடக்கவில்லை. எல்லாமே சம்பந்தப்பட்டவர்களுக்கு நன்றாகத் தெரியும். இவ்வாறு இனமுரண்பாடுகளை ஊக்குவிக்கும் செயற்பாடுகளின்மூலம் ரணில் விக்கிரமசிங்க தென்னிலங்கையில் உள்ள சிங்கள பௌத்த தீவிரவாதிகளின் கவனத்தை வடக்கு கிழக்கின் மீது திருப்பிவிட முயற்சிக்கின்றார். அதற்கு தேவையும் உண்டு. பன்னாட்டு நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு பணிந்து அரசாங்கம் முன்னெடுத்து வரும் பொருளாதார நடவடிக்கைகளின் விளைவாக சிங்கள சமூகத்தில் உள்ள எல்லா தரப்புக்களும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். வரிவிதிப்பினால் பணக்காரர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். விலையேற்றத்தால் ஏழைகள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அரசாங்கம் மானியங்களை குறைக்க தொடங்கிவிட்டது ஊழியர் சேமலாப நம்பிக்கை நிதியம் உட்பட பல்வேறு சேமிப்புக்களில் அரசாங்கம் கைவைக்கப் போகிறது என்ற கதை வருகிறது. ஒருபுறம் படித்த சிங்கள மக்கள் நாட்டை விட்டு தப்பியோடிக் கொண்டிருக்கிறார்கள். இன்னொரு புறம் பாதிக்கப்பட்ட ஏழை மக்கள் எந்த வேளையும் பெரிய அளவில் போராடலாம் என்று எதிர்பார்ப்பு இருக்கிறது.

நாட்டின் காலநிலையும் அரசாங்கத்துக்கு சாதகமாக இல்லை. வறட்சி காரணமாக விவசாயம் அதிகளவு பாதிக்கப்பட்டு இருக்கிறது. இவை எல்லாவற்றினுடையதும் தொகுக்கப்பட்ட விளைவாக சிங்கள மக்கள் அரசாங்கத்துக்கு எதிராக போராடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் சிங்கள மக்கள் பெரிய அளவில் போராடக்கூடிய வாய்ப்புகளை எப்படித் தடுப்பது என்று அரசாங்கம் யோசிக்கின்றது. எனவே அரசாங்கத்திற்கு எதிரான சிங்கள மக்களின் கோபத்தை திசை திருப்பும் உள் நோக்கத்தோடுதான் அரசாங்கம் சிங்கள பௌத்த மயமாக்கலைத் தீவிரப்படுத்தி இருக்கிறது. அரசாங்கத்திற்கு எதிரான சிங்கள மக்களின் கோபத்தை தமிழ் மக்களுக்கு எதிராகத் திசை திருப்பி விடுவதற்கு குருந்தூர் மலை, மேய்ச்சல் தரை போன்ற இடங்களில் நடப்பவை அரசாங்கத்துக்கு உதவ முடியும்.