LOADING

Type to search

இலங்கை அரசியல்

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் நீதி கோரி மன்னாரில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு

Share

வடக்கு கிழக்கை சேர்ந்த 8 மாவட்டங்களில் இருந்தும் பங்கேற்பு.

மன்னார் நிருபர்

30.08.2023

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான இன்று புதன்கிழமை (30) வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் ஏற்பாடு செய்த மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்றைய தினம் புதன்கிழமை(30) காலை 10.30 மணியளவில் மன்னார் நகரில் உள்ள சதொச மனித புதைகுழி பகுதியில் ஆரம்பமானது.

குறித்த போராட்டத்தில் மன்னார், வவுனியா, கிளிநொச்சி , முல்லைத்தீவு, யாழ்ப்பாணம்,திருகோணமலை,அம்பாரை,மட்டக்களப்பு ஆகிய 8 மாவட்டங்களையும் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்க பிரதி நிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது இலங்கை அரசாங்கத்தின் முப்படைகளினால் யுத்தத்திற்கு முன்பும் யுத்தத்திற்கு பின்பும் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நீதி கோரி மன்னார் ‘சதோச’ மனித புதைகுழி க்கு அருகாமையில் இருந்து மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பமாகியது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்,பொது அமைப்புக்கள்,சிவில் அமைப்புக்கள்,சட்டத்தரணிகள்,அருட்தந்தையர்கள்,உட்பட அரசியல் பிரதி நிதிகளும் இணைந்து குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

மன்னார் ‘சதோச’ மனித புதைகுழி க்கு அருகாமையில் இருந்து ஆரம்பமான குறித்த போராட்டம் மன்னார் சுற்று வட்ட பாதை ஊடாக ஓ.எம்.பி அலுவலக வீதியை சென்றடைந்தனர்.

பின்னர் அங்கிருந்து வைத்தியசாலை வீதி ஊடாக மன்னார் பொது விளையாட்டு மைதானத்தை சென்றடைந்தனர்.

குறித்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கறுப்பு கொடிகளை ஏந்தி காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளின் புகைப்படங்களை சுமந்து பல்வேறு கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினால் கருத்துக்கள் வெளியிடப் பட்டதோடு,மகஜர் பொது வெளியில் வாசிக்கப்பட்டு மனித உரிமைகள் செயற்பாட்டாளர் அருட்தந்தை ஜெயபாலன் குரூஸ் அடிகளார் தலைமையிலான அருட்தந்தையர்கள் இடம் கையளித்தனர்.

குறித்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.

இப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு குடிநீர் மற்றும் ஏனைய உதவிகளுக்கு ரோரண்ரோ மனிதநேய அமைப்பு (Toronto Humanitarian Organization )ஊடாக உதவியும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.