இங்கிலாந்தில் நடனச் செல்வி இஷானியின் அரங்கேற்றச் சிறப்பு கண்டு மகிந்த சபையோர்
Share
என்னுடைய ஆயுளில் பல அரங்கேற்ற நிகழ்வுகளை கண்டு களித்திருக்கிறேன். இம்முறை கடந்த செப்டெம்பர் திங்கள் 2ம் நாள், லண்டன் மாநகர் (பெரிய பிரித்தானியா) எல்லைக்குள் பிரசித்தி பெற்ற லண்டன் Waters Meet நாடகக் கலையரங்கில் நடந்தேறிய குமாரி. இஷானி கிரிஷான் (Miss. Ishani Krishan) அவர்களின் நடன அரங்கேற்ற நிகழ்வுகள் என்னை மீண்டும் பூம்புகார் செல்வி மாதவி பொற்கொடியாளின் அரங்கேற்றக் கலை வடிவங்களை, இளங்கோ அடிகள் வர்ணித்த அரங்கேற்ற காதையை நினைவூட்டியது போல் மெய் சிலிர்த்து இரசித்தேன்.
“.. தாது அவிழ் புரிகுழல் மாதவி” – தன்னை ஆடலும் பாடலும் அழகு என்று, இக்கூறிய மூன்றில் ஒன்று குறை படாமல் என்று, இளங்கோவடிகள் வர்ணித்தது போன்று குமாரி இஷானியின் அபினய முத்திரைகளும், பாவங்களும், விழிகள் பேசிய செய்திகளும் என்னை அப்படியே கட்டிப்போட்டன.
குமாரி. இஷானியின் தாயார் திருமதி. அபிராமி கிரிஷான், பாரிஸ் நகரில் புகழுடைத்த “ பரத சூடாமணி” திருமதி கௌசலா ஆனந்தராஜின் தலையாய மாணவியாவார். “பரத கலா வித்தகர்” அபிராமியின் தவச்செல்வியான இஷானியும் வாழையடி வாழையென வந்துதித்த கலைச்செல்வி ஆவார்.
காங்கேசன்துறையூர் பெரியவர் அமரர். இ. குருசாமி அவர்களின் குடும்பத்தில் கலை மணம் பரப்பும் வம்சமென வழி வழி வந்த நான்காவது தலைமுறை, கலை வாரிசு, குமாரி இஷானியின் தாயார் திருமதி. அபிராமியே இவரது குருவுமாவார். தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை எனும் பெரியோர் வாக்கிற்கமைய மாணவப் பருவத்திலேயே பல்வேறு நடன நிகழ்வுகளை வெவ்வேறு அரங்குகளில் காட்சிப்படுத்திய நடன இளவரசி குமார். இஷானி மென்மேலும் பரதக் கலையின் அற்புதங்களை வெளிக்கொணர்வார் என நம்பிக்கை தருகிறார்.
அரங்கேற்ற நிகழ்வில், முதலில் புஷ்பாஞ்சலியை தொடர்ந்து வர்ணம் – சப்தம் – ஜதீஸ்வரம் – கணேஷ நிருத்தியாஞ்சலி – கீர்த்தனம் – பதம் – கண்ணன் பாடல், (திருமதி கௌசலா அவர்கள் தயாரிப்பில் தில்லானா என அனைத்து சங்கதிகளும் அரங்கேற்ற மாணவி செய்தது போலல்லாமல் மிகவும் அனுபவம் – தேர்ச்சி பெற்ற கலைஞராக தன்னுடைய திறமைகளை அரங்கில் காட்சிப்படுத்திய குமாரி இஷானியை சபையோர் அனைவரும் உளமாரப் பாராட்டினார்கள்.
தாயாரும் குருவுமான திருமதி அபிராமியின் நட்டுவாங்கம் மிக மிக அற்புதம். கணீரென்ற குரலில் அட்சர சுத்தம் புல்லரிக்க வைத்தது. பக்க வாத்தியக் கலைஞர்களின் பங்களிப்பு அபாரம். நடன அசைவுகளுக்கு உயிர் கொடுத்த வாத்தியக் கலைஞர்களுக்கு ஆடல் அரசன் தில்லைக்கூத்தன் அருள் பெருகட்டும் தண்ணுமை வாத்தியம் (மிருதங்கம்) ஸ்ரீ எம். பாலசந்தர், வாய்ப்பாட்டு உடுப்பி எஸ். ஸ்ரீ நாத், வயலினிசை ஸ்ரீ ஏகலாதரன், புல்லாங்குழல் ஸ்ரீ பா. ஞானவரதன், மோர்சிங் ஸ்ரீ சிதம்பரநாதன் ஆகியோரின் வாத்திய இசைக் கலவைகளுடன் குமாரி இஷானியைப் போன்றுதான் சிலப்பதிகாரச் செல்வி மாதவியும் அன்று ஆடியிருப்பாளோ என என் மனத்திரையில் காட்சி விரிகிறது. வாழிய எங்கள் கலைச்செல்வி இஷானி.
ஆடல் அரங்க நிகழ்ச்சிகள் அனைத்தையும் அழகு தமிழிலும், ஆங்கில மொழியிலும் இரசிக்கத்தக்க விதத்தில் தொகுத்து வழங்கிய கலைஞர் திருமதி. ஆனந்தராணி பாலேந்திராவின் குரல் வளம் செவிகளில் தேன் பாய்ச்சுகிறது !
தொடரட்டும் குமாரி இஷானியின் கலைபணி ! வளரட்டும் பரதக் கலை வடிவங்கள் !
வீணை மைந்தன், கனடா.