LOADING

Type to search

இலங்கை அரசியல்

பசுமை அமைதி விருதுகள்

Share

பொருத்தமற்ற நிலப்பயன்பாடு, வளங்களின் அதீதச் சுரண்டல், கட்டுப்பாடற்றுப் பெருகும் மாசுகள், விஸ்வரூபம் எடுத்துள்ள காலநிலை மாற்றம் ஆகியனவற்றின்; தாக்குதல்களுக்கு முகங்கொடுக்க முடியாமல் இயற்கை திண்டாடி வருகிறது. இந்நிலை நீடித்தால் விரைவிலேயே உலகம் பெரும் பிரளயத்துக்குள் தள்ளப்பட்டுவிடும் என்று சூழலியல் விஞ்ஞானிகள் எச்சரித்து வருகின்றனர்.

இயற்கையின் மீதான தாக்குதலை நிறுத்தி அதனுடன்  ஒரு பசுமை அமைதி ஒப்பந்தத்தை உடனடியாகச் செய்து கொண்டால் மாத்திரமே பேரழிவில் இருந்து எம்மையும் பாதுகாத்து உலகத்தையும் காப்பாற்ற முடியும். இதனைக் கருத்திற்கொண்டு, பொதுமக்கள் மத்தியில் சூழற் கல்வி, சூழல் விழிப்புணர்வு மற்றும் சூழல் பாதுகாப்புச் செயற்பாடுகளை ஊக்குவிக்கும் முகமாகத் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் ஆண்டுதோறும் மாணவர்களுக்கும் சிறந்த சூழல்நேயச் செயற்பாட்டாளர் ஒருவருக்கும் பசுமை அமைதி விருதுகளை வழங்கிக் கௌரவித்து வருகின்றது.

மாணவர்களுக்கான பசுமை அமைதி விருதுகள் – 2023

1. மாணவர்களிடையே பசுமை அமைதி விருதுக்குரியவர்களைத் தெரிவு செய்யும் பொருட்டு சூழல் பொது அறிவுப் பரீட்சை இணையவழியில் நடாத்தப்படும்.

2.  இப்பரீட்சையில் தரம் 9 முதல் 13 வரை பயிலும், இலங்கையை வதிவிடமாகக் கொண்ட மாணவர்கள் எவரும் தோற்ற முடியும்.

3. இலவசமாக நடைபெறவுள்ள இப்பரீட்சைக்குத் தோற்ற விரும்புபவர்கள் www.tamilnationalgreen.org இணையத்தளத்தின் ஊடாக 15.10.2023 இற்கு முன்பாகப் பதிவுகளை மேற்கொள்ளுதல் வேண்டும்.

4. பரீட்சை இணையவழியூடாக 28.10.2023 (சனிக்கிழமை) இலங்கை நேரம் முன்னிரவு 7.00 மணி தொடங்கி 8.30 மணிவரை நடைபெறும்.

5. தமிழ் மற்றும் ஆங்கில மொழி மூலம் நடைபெறும் இப்பரீட்சை 100 பல்தேர்வு வினாக்களைக் கொண்டிருக்கும். கடந்த கால வினாத்தாள்களை இணையத்தளத்தில் பார்வையிட முடியும்.

6. பரீட்சையில் சித்தியடையும் அனைத்து மாணவர்களும் பசுமை அமைதிச் சான்றிதழ்கள் வழங்கிக் கௌரவிக்கப்படுவார்கள்.

7. இவர்களிலிருந்து பெற்றுக்கொண்ட புள்ளிகளின் அடிப்படையில் முதல் 100 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு பசுமை அமைதிச் சான்றிதளோடு சிறப்புப் பரிசுகளும் வழங்கி கௌரவிக்கப்படுவார்கள்.

8. இவர்களில் முதல் 3 மாணவர்கள் பசுமை அமைதிச் சான்றிதழ், சிறப்புப் பரிசுகளுடன் பசுமை அமைதி விருதுகளும் வழங்கிக் கௌரவிக்கப்படுவார்கள். முதலாம் இடத்தைப் பெறும் மாணவர் 1 பவுண் தங்கப் பசுமை அமைதி விருதும், இரண்டாம் இடத்தைப் பெறும் மாணவர் வெள்ளிப் பசுமை அமைதி விருதும், மூன்றாம் இடத்தைப் பெறும் மாணவர் வெண்கலப் பசுமை அமைதி விருதும் வழங்கிக் கௌரவிக்கப்படுவார்.

இப் பசுமை அமைதி விருதுகள் சூழலியல் ஆசான் க. சி. குகதாசன் ஞாபகார்த்த விருதாக வழங்கப்படும்.

9. சிறப்புப் பரிசுகளையும் விருதுகளையும் தீர்மானிப்பதற்குப் புள்ளிகளின் அடிப்படையில் தெரிவு செய்யப்படும் ஒரு தொகுதி மாணவர்கள் தேவையேற்படின் இரண்டாவது சுற்றுப் பரீட்சைக்கும் தோற்ற நேரிடலாம்.

10. தெரிவு செய்யப்படும் மாணவர்களுக்கான பரிசுகள் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தினால் நடாத்தப்படும் பசுமை அமைதி விருதுகள் வழங்கும் விழாவில் வழங்கப்படும்.

சிறந்த சூழல்நேயச் செயற்பாட்டாளருக்கான

பசுமை அமைதி விருது – 2023

சூழல் பாதுகாப்பு மற்றும் சூழல்நேயச் செயற்பாடுகளில் பல ஆண்டுகளாகத் தீவிரமாக உழைத்து வரும் தனிநபர் ஒருவர் பொதுமக்கள் மற்றும் பொது அமைப்புகளின் பரிந்துரையில் தெரிவு செய்யப்பட்டு  சிறந்த சூழல்நேயச் செயற்பாட்டாளருக்கான பசுமை அமைதி விருதும் ஒரு  இலட்சம் ரூபா பொற்கிளியும் வழங்கிக் கௌரவிக்கப்படுவார்.

இப்பசுமை அமைதி விருது தாலகாவலர் மு.க. கனகராசா ஞாபகார்த்த விருதாக வழங்கப்படும்.

சிறந்த சூழற் செயற்பாட்டாளர் ஒருவரைப் பரிந்துரை செய்ய விரும்புபவர்கள் அவர் பற்றிய விபரங்களைத் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம், இல. 109, அரசடி வீதி, கந்தர்மடம், யாழ்ப்பாணம் என்ற முகவரிக்குத் தபால் மூலமாகவோ அல்லது greentamils5@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பி வைக்கலாம்.

பரிந்துரைகளை அனுப்பி வைப்பதற்கான முடிவுத் திகதி 31.10.2023