நீதிபதி சரவணராஜாவுக்கான உயிர் அச்சுறுத்தல் விடயம் தொடர்பில் யாழ்ப்பாணத்தில் மனித சங்கிலி போராட்டம்
Share
நடராசா லோகதயாளன்
முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜா விவகாரத்தில் கண்டணத்தை வெளிப்படுத்தும் வகையில் யாழ்ப்பாணத்தில் மருதனார்மடம், கொக்குவில் பகுதியில் மனித சங்கிலி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதில் அரசியல் கட்சி பிரமுகர்கள், சிவில் சமூக உறுப்பினர்கள், மாணவர்கள், வர்த்தகர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் பங்குபற்றினர்.
.
இந்த போராட்டம் காலை 9 மணியளவில் மருதனார்மடத்தில் ஆரம்பித்து யாழ்ப்பாண நகர் வரையில் நீளுகின்ற வகையில் முன்னெடுக்கப்பட்டது.
முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு உயிரச்சுறுத்தல் விடுக்கப்பட்டு, அவர் நாட்டை விட்டு வெளியேறிய விவகாரத்தில் உரிய நடவடிக்கையெடுக்க வலியுறுத்தியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இலங்கை தமிழரசுக் கட்சி, தமிழீழ விடுதலை இயக்கம், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழ்த் தேசிய கட்சி, தமிழ் மக்கள் விடுதலைக் கழகம், தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சி , தமிழ் தேசிய மக்கள் முன்னணி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் போராட்டத்திற்கு ஆதரவளித்ததுடன் பல பொது அமைப்புகளும் இணைந்தனர்.
எனினும், புதன்கிழமை இடம்பெற்ற இந்த போராட்டத்தில் எதிர்பார்த்தளவு மக்கள் கலந்து கொண்டிருக்கவில்லை. மருதனார்மடம், கொக்குவில், யாழ் நகரம் ஆகிய இடங்களில் மட்டும் சிறிது தூரத்துக்கு மக்கள் வீதியோரமாக வரிசையில் நின்றிருந்தனர்.
மருதனார்மடத்துக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடைப்பட்ட தூரத்தில் மிக பெருமளவு பிரதேசத்தில் போராட்டம் நடக்கவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை போராட்டம் முன்னெடுக்கப்படும் பகுதியில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது