பொலிஸ் பாதுகாப்புடன் காணி பிடிக்க சென்ற அரச ஊடகவியலாளர் – பிரதேச மக்களால் விரட்டியடிப்பு
Share
பொலிஸ் பாதுகாப்புடன் அரச காணி பிடிக்க சென்ற ஊடகவியலாளர் பிரதேச மக்களால் விரட்டியடிக்கப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது.
கிளிநொச்சியில் அரச ஊடகத்தில் பணியாற்றும் குறித்த செய்தியாளர் மற்றுமொரு செய்தியாளருடன் அறிவியல் நகரில் அமைந்துள்ள யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு அருகில் கனரக இயந்திரம் கொண்டு துப்பரவாக்க முற்பட்டுள்ளார்.
சம்பவத்தை அவதானித்த பிரதேச மக்கள் அவ்விடத்தில் ஒன்றுகூடி எதிர்ப்பை வெளியிட்டனர். இந்த நிலையில் குறித்த செய்தியாளர் புலனாய்வு துறையின் துணையுடன் பொலிசாரின் பாதுகாப்பை கோரியுள்ளார்.
கிளிநொச்சியில் உள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரின் பெயரை பயன்படுத்தி குறித்த பகுதியில் அவருடைய செய்திகளை அறிக்கையிடும் ஊடகவியலாளர்கள் மூவர் காணிக்கு விண்ணப்பித்துள்ளனர்.
இந்த நிலையில், குறித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரின் அரச செல்வாக்குக்கு அஞ்சி குறித்த ஊடகவியலாளர் உட்பட மூவருக்கு அப்பகுதியில் அரச அதிகாரிகளால் காணி வழங்கப்பட்டுள்ளது.
குறித்த காணியானது, மக்கள் குடியிருப்பாக இருந்த நிலையில், அம்மக்களிற்கு மாற்று இடங்கள் வழங்கப்பட்ட பின்னர் தொழில் சார் விடயங்களிற்கு வழங்குவதற்காக ஒதுக்கப்பட்டது.
இந்த நிலையில் அரச புலனாய்வாளர்களின் செல்வாக்குடன், பொலிசாரைக் கொண்டு மக்களை அச்சுறுத்தி காணி பிடிக்க முற்பட்ட நிலையில் பிரதேச மக்கள் ஒன்று திரண்டு தடுத்து நிறுத்தினர்.
குறித்த ஊடகவியலாளர்களிற்கு கண்டாவளை, கரைச்சி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் நிரத்தர காணி மற்றும் வீடு உள்ள நிலையில் அரச காணியை அரச செல்வாக்குடன் கையகப்படுத்த நினைப்பது மக்கள் மத்தியில் விசமத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளை குறித்த காணியிலிருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் உட்பட 65 க்கு மேற்பட்ட குடும்பங்கள் காணி இன்றி உறவினர் வீடுகளில் தங்கி உள்ள நிலையில், குறித்த செய்தியாளர்களிற்கு காணி வழங்கப்படுவது தொடர்பில் மக்கள் விசனம் முன்வைத்து வருகின்றனர்.
இவ்விடயம் தொடர்பில் மக்கள் பல்வேறு கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.