இனவழிப்புக்கு ஆளாகும் பாலஸ்தீனிய மக்களுடன் மனதளவிலாவது தமிழ்மக்கள் துணைநிற்க வேண்டும் பொ. ஐங்கரநேசன் தெரிவிப்பு
Share
காசாப் பகுதியிலிருந்து ஹமாஸ் இயக்கத்தினர் இஸ்ரேல் மீது தாக்குதல்களை மேற்கொண்டு பெரும் எண்ணிக்கையிலான இறப்புகளுக்கு வழிவகுத்ததையடுத்து இஸ்ரேல் காசாவின் மீது கொடூரமான யுத்தமொன்றை ஆரம்பித்திருக்கிறது. மக்கள் குடியிருப்புகள், மருத்துவமனைகள் என்று பாராது தடை செய்யப்பட்ட பொஸ்பரஸ் குண்டுகளை வீசி காசா முழுவதையுமே துடைத்தழிக்கும் நோக்கில் இஸ்ரேல் மூர்க்கத்தனமாகத் தாக்கி வருகிறது. இந்த யுத்தம் ஹமாஸ் இயக்கத்தினரைச் சாட்டாக வைத்து பாலஸ்தீனியர்களைக் கருவறுக்கும் இனவழிப்பு யுத்தம் ஆகும். இந்நேரத்தில், இலங்கையில் இனவழிப்புக்குத் தொடர்ச்சியாக முகங்கொடுத்துவரும் ஈழத்தமிழ் மக்கள் இனவழிப்புக்கு ஆளாகும் பாலஸ்தீனிய மக்களுடன் மனதளவிலாவது துணைநிற்க வேண்டும் என்று தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.
காசா மீது இஸ்ரேல் நிகழ்த்திவரும் தாக்குதல் தொடர்பாக பொ.ஐங்கரநேசன் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்திருக்கும் அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
பாலஸ்தீனத்தின் ஒரு பகுதியான காசா நிலப்பரப்பை இஸ்ரேல் 1967ஆம் ஆண்டு பலவந்தமாக ஆக்கிரமித்ததைத் தொடர்ந்து அங்கு வாழும் பாலஸ்தீனியர்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளாக ஆக்கப்பட்டுள்ளார்கள். காசா வெறும் 365 சதுரகிலோமீற்றர் பரப்பளவைக் கொண்டது. உலகின் அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட பகுதியாக விளங்கும் இங்கு 20 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கிறார்கள். இவர்களில் பாதிப்பேர் 18 வயதுக்குட்பட்ட இளயதலை முறையினராவர். இலங்கை அரசு முள்ளிவாய்க்கால் என்னும் குறுகிய நிலப்பரப்பில் இலட்சக்கணக்கான தமிழ் மக்களைத் திட்டமிட்டுச் சிக்கவைத்து அவர்களைக் கொத்துக்குண்டுகள் வீசி அழித்தொழித்ததைப் போன்றே இன்று மிகக்குறுகிய காசா நிலத்துண்டில் பாலஸ்தீனியர்களை இஸ்ரேல் கொன்று குவித்து வருகிறது.
தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டம் ஐனநாயக வழிமுறைகளிலிருந்து ஆயுதப் போராட்டமாகப் பரிணாமித்தபோது தமிழ் விடுதலை இயக்கங்களில் பலர் பாலஸ்தீன விடுதலைப் போராளிகளிடம் இருந்து ஆயுதப் பயிற்சி பெற்றிருக்கிறார்கள். இதைத் தங்களின் பெருமையாகவும் வலிமையாகவும் சிலாகித்தவர்கள் இன்றும் எம்மத்தியில் உள்ளனர். பாலஸ்தீனியர்களிடமிருந்து ஆயுதப் பயிற்சி பெற்றதை நாம் எவ்வாறு மறக்கவியலாதோ, அதே போன்று இஸ்ரேலின் மொசாட் உளவுப்பிரிவினரின் ஆலோசனையின்பேரில் தமிழ் மக்களை இலங்கை அரசு தாக்கி அழித்ததையும் நாம் மறந்துவிடலாகாது. ஒடுக்கப்பட்ட பாலஸ்தீனிய மக்களுக்காக நாம் குறைந்த பட்சம் தற்போது அனுதாபங்களையாவது வெளிப்படுத்தாதுவிடின் வரலாறு எம்மை ஒருபோதும் மன்னிக்காது என்றும் குறிப்பிட்டுள்ளார்