LOADING

Type to search

இலங்கை அரசியல்

மக்கள் மயப்படுத்தியே போராட்டங்களை தமிழ்க் கட்சிகள் முன்னெடுக்கவேண்டும் – சரவணபவன்

Share

தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் தங்கள் வாக்கு அரசியலுக்காக போராட்டங்களை முன்னெடுக்கக் கூடாது. மக்கள் மயப்படுத்திய போராட்டங்களையே முன்னெடுக்கவேண்டும். எதிர்காலத்தில் பொது அமைப்புக்கள் உள்பட அனைத்துத் தரப்புக்களுடன் கலந்தாலோசித்து முழு அடைப்புப் போராட்டங்களை தமிழ்த் தேசியக் கட்சிகள் அறிவிக்கவேண்டும்.

எப்படியிருப்பினும் இம்முறை முழு அடைப்பின் நோக்கங்கள் வெற்றியடைய வேண்டுமானால் நாளை ஒரு நாள் பொதுமக்கள் தங்கள் இயல்பு வாழ்வை முடக்கவேண்டும். இவ்வாறு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்தார்.

யாழ்ப்மாணம் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது,

நாளைய முழு அடைப்புப் போராட்டம் இரண்டு காரணங்களுக்காக நடத்தப்படுகின்றது.
கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தின் மயிலத்தமடுவில் தமிழ் மக்களின் மேய்ச்சல் தரவைகளை சிங்களவர்கள் ஆக்கிரமித்து இருக்கின்றார்கள். அந்த மேய்ச்சல் தரவையில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான மாடுகளை வெட்டிக் கொன்றிருக்கின்றார்கள். சிங்களவர்களை வெளியேற்றவேண்டும் என தமிழ் மக்கள் தொடர்ச்சியாக போராடுகின்றார்கள்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவோ, சிங்கள மக்களை சட்டநடவடிக்கை ஊடாக அங்கிருந்து வெளியேற்றுமாறு அதிகாரிகளைப் பணிக்கின்றார். ஆனால் தமிழ் மக்கள் என்றால் சட்டத்துக்கு முரணாக, இயற்கை நீதிக்கு மாறாக வெளியேற்றுவார்கள்.

சிங்கள மக்கள் என்றதும் சட்டத்துக்கு உட்பட்டு அதுவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டுமாம். இதுதான் இந்த நாட்டில் பிரயோகிக்கப்படும் இருவேறு சட்டநடைமுறைகள்.

அடுத்தது எமது முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜா உயிர் அச்சுறுத்தல் காரணமாக பதவியைத்துறந்து வெளியேறியிருக்கின்றார். குற்றப்புலனாய்வுத் திணைக்களம் அவருக்கு அச்சுறுத்தல் இல்லை என்று கூறுகின்றது. நீதியமைச்சர் விஜயதாஸவோ, அவரது பதவி விலகலை ஏற்கவில்லை. அவருக்கு உயிர் அச்சுறுத்தல் இல்லை என்று நீதிச்சேவை ஆணைக்குழு அறிவித்துள்ளதாகக் கூறுகின்றார். அப்படி உயிர் அச்சுறுத்தல் இருந்தால் அவர் பிடியாணை பிறப்பித்து சம்மந்தப்பட்ட சந்தேகநபரைக் கைது செய்திருக்க முடியும் என்று குறிப்பிடுகின்றார்.

நீதிபதியின் கட்டளையை மீறி விகாரை அமைக்கப்படுகின்றது. நீதிமன்றத்தின் கட்டளையை மீறி அமைக்கப்படும் விகாரைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டிய பொலிஸார், விகாரை அமைப்பவர்களுக்கு பாதுகாப்புக் கொடுக்கின்றனர். இலங்கையில் சட்டத்தை இயற்றும் நாடாளுமன்றத்தில் நீதிபதியின் பெயரைக் குறிப்பிட்டு இரு தடவைகள் பகிரங்க எச்சரிக்கையை நாடாளுமன்ற உறுப்பினர் விடுகின்றார்.

இவை எவையும் அவருக்கான அச்சுறுத்தல்களாக இருக்கவில்லையா?
இவையனைத்தும் தமிழர்களுக்கு எதிராக இனவாதத்தை கக்கும் சிங்கள – பௌத்த பேரினவாதச் சிந்தனையில் ஊறிய ஆட்சியாளர்களின் வெளிப்பாடு. அத்தகைய போக்கை நாம் அனுமதிக்க முடியாது. அது எமது இருப்பை கறையான் புற்றுப்போல அழித்து ஒரு நாள் முழுவதையும் சுரண்டிவிடும்.

இதற்கு எதிராக எமது ஒன்றுபட்ட எதிர்ப்பை நாம் வெளிக்காட்ட வேண்டும். அதற்காகவே முழு அடைப்புப் போராட்டம் நாளை இடம்பெறப்போகின்றது. தமிழ் மக்களாக – தமிழ் பேசும் மக்களாக இந்த நாட்டின் சிங்கள பேரினவாதத்தால் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் இனங்களாக ஒன்றாக – ஒரே குடையில் திரண்டு முழு அடைப்பை வெற்றியடையச் செய்ய ஒத்துழைக்கவேண்டும்.

முழு அடைப்புக்கான முடிவை எடுத்துவிட்டு சிவில் அமைப்புக்கள் உள்பட ஏனைய தரப்புக்களும் தமிழ்த் தேசியக் கட்சிகள் பேச்சு நடத்தியது தவறு. சிவில் அமைப்புக்கள் உள்பட சகல தரப்புகளையும் உள்ளீர்த்து குறிப்பாக முழு அடைப்பால் பொருளாதார ரீதியில் பாதிக்கப்படும் தரப்புக்களையும் பிரதிநிதித்துவப்படுத்துபவர்களையும் உள்வாங்கி முழு அடைப்பு தொடர்பில் தீர்மானம் எடுத்திருக்கலாம்.

முக்கியமாக பாடசாலைகளில் இரண்டாம் தவணைப் பரீட்சை நடக்கின்றது. ஆலயங்களில் நவராத்தி நடக்கின்றது. இந்த முழு அடைப்பால் அவையும் நாளை நிறுத்தப்படப்போகின்றன. இது தொடர்பில் முற்கூட்டியே அந்தத் தரப்புக்களுடன் கலந்து பேசியிருக்கலாம். அப்படி நடந்திருந்தால் இது தொடர்பில் சலசலப்பு வந்திருக்காது.

இம்முறை தமிழ்த் தேசியப் பரப்பில் இயங்குகின்ற ஊடகங்களும் கூட முழு அடைப்புப் போராட்டத்துக்கு முழுமையான ஆதரவை வழங்கவில்லை. அவர்கள் முழு அடைப்பு தொடர்பான செய்திகளைப் பிரசுரிக்கின்றன. ஆனால் பத்திரிகைகள் தங்கள் கருத்தியலாக இந்த முழு அடைப்புப் போராட்டத்தை கேள்விக்கு உட்படுத்தியுள்ளன. அவர்கள் முன்வைக்கின்ற காரணங்கள் தொடர்பிலும் எதிர்காலத்தில் முழு அடைப்புப் போராட்டத்தை அறிவித்த தமிழ்த் தேசியத் தரப்புக்கள் கவனத்தில் கொள்ளவேண்டும்.

இன்றைய தினம் தென்னிந்திய நடிகர் விஜயின் திரைப்படம் வெளியாகியிருக்கின்றது. எங்களது இளைஞர்கள் சினிமாக்கள் பார்ப்பதை தவறு என்று நான் சொல்லவில்லை. ஆனால் தமிழ் மக்களது விடுதலைப் போராட்டத்தின் ஆணிவேரே இளைஞர்கள்தான். அவர்கள் நாளைய முழு அடைப்புப் போராட்டத்துக்கு குந்தகம் வராமல் பார்த்துக் கொள்ளவேண்டும். நாளை முழு அடைப்புப் போராட்டம் இந்தச் சினிமாவால் – திரைப்படத்தால் குழம்பிய என்ற செய்தி தென்னிலங்கைக்குச் செல்லுமாக இருந்தால், அதைப்போன்ற மிக மோசமான – பெரிய பின்னடைவான தருணம் வேறு எதுவும் இருக்காது. பௌத்த – சிங்கள பேரினவாதச் சிந்தனையில் ஊறிய ஆட்சியாளர்களுக்கு, இளைஞர்கள் தாங்கள் இன்னமும் உரிமை போராட்டத்தின் பங்குதாரர்களாகவே இருக்கின்றோம் என்பதை உணர்த்த இன்றைய முழு அடைப்புப் போராட்டத்தை வெற்றியடையச்செய்யவேண்டும்.

தற்போது எமது மண்ணில் தென்னிலங்கையை அடித்தளமாகக் கொண்ட பல்தேசிய நிறுவனங்கள் உள்பட பல நிறுவனங்கள் கால் பதித்துள்ளன. அவை எமது போராட்டங்களையோ, தமிழ் மக்களின் நினைவுநாள்களையோ எதனையும் கவனத்தில் கொள்வதில்லை. அந்த நிறுவனங்களில் பணிபுரிவதும் எமது இளைஞர்கள்தான். அந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர்களும் தமிழர்கள்தான். தமிழர்களிடமிருந்து சுரண்டவேண்டும். ஆனால் தமிழ் மக்களின் உரிமைகள் மிதிக்கப்படுவது அவர்கள் துணைபோவார்கள். அவர்களையும் கடந்த காலத்தைப்போன்று எமது வழிக்கு கொண்டு வரவேண்டும், என்றார்.