தமிழகம் செய்யத் தவறியதை ரொறன்ரொவில் இயங்கும் ‘தமிழ் இலக்கிய தோட்டம்’ தனது பணியாக மேற்கொண்டு வருகின்றது.
Share
கனடா உரையரங்கில் தமிழகத்தின் நட்சத்திர எழுத்தாளர் ஜெயமோகன் புகழாரம்
‘இந்த நகரத்திற்கு இன்னொரு தனிச் சிறப்பும் உள்ளது.அது தமிழகத்துக்கு இல்லாத ஒரு தனிச் சிறப்பு. அதாவது ரொறன்ரோ ‘தமிழ் இலக்கிய தோட்டம் அமைப்பு’ அது வருடா வருடம்ட வழங்கிவருன்ற ‘தமிழியல் விருது சிறப்பையும் ‘ தனித் தன்மையையும் கொண்டது.ஜெயமோகன் எடுத்துரைத்தார்.
எமது மொழியின் முக்கிய படைப்பாளிகளை இனம் கண்டு இலக்கியத் தோட்டம் கௌரவித்து வருவது தனிச் சிறப்பாகும். தமிழகம் செய்யத் தவறியதை இலக்கிய தோட்டம் தனது பணியாக மேற்கொண்டு வருகின்றது. இந்தப் பணியினை பதிவிட வேண்டிய கடப்பாடு எனக்கு உள்ளது. ஏனெனில் இத்தகைய தொடர்ச்சியான கௌரவ நிகழ்வுகள் மிக அரிதாகவே நடைபெறுவதொன்றாகும். இவ்வேளையில் தமிழியல் விருது பெற்ற சுந்தரம் இராமசாமி வெங்கட் சுவாமிநாதன் போன்ற எனது முன்னோடிகளை நான் இங்கு நினைவு கூறுகின்றேன். தமிழகத்தில் கொரவம் பெற வேண்டிய பல படைபபாளிகள் தமக்குரிய கௌரவத்தைப் பெறாமலே மறைந்து போயுள்ளனர் என்ற ஆதங்கத்தையும் பகிர்ந்து கொள்வது கூட இங்கு அவசியமாகிறது’
இவ்வாறு தமிழகத்தின் நட்சத்திர எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் கடந்த சனிக்கிழமையன்று மார்க்கம் நகரசபை மண்டபத்தில் நடைபெற்ற உரையரங்கின் ஆரம்பத்தில் மேற்கண்டவாறு தெரிவித்தார். ‘ரொறன்ரோ தமிழிலக்கியத் தோட்டம்’ ஏற்பாடு செய்த இந்த உரையரங்கில் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள்’ தமிழ் இலக்கியத்தில் அறம்’ என்ற தலைப்பில் உரையாற்றினார். உரைக்கு முன்னதாக எழுத்தாளர் ஜெயமோகன் பற்றிய அறிமுகத்தை மருத்துவர் ரகுராமன் அவர்கள் ‘சுவையுடன்’ வழங்கினார்.
அங்கு உரையாற்றிய எழுத்தாளர் ஜெயமோகன் தொடர்ந்து தனது உரையில் பின்வரும் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.
“இளம் எழுத்தாளனாக இருபத்து இரண்டு ஆண்டுகளுக்கு முன் இந்தியாவுக்கு வெளியே நான் வந்திறங்கிய முதலாவது நகரம் ரொறன்ரோ ஆகும் . அவ் வேளையில் இந்த நகரத்தின் ஒவ்வொரு காட்சியும் பெரும் விந்தையாக ஒரு புதிய உலகத்துக்கான திறவுகோலாக அமைந்தது.
எனது இந்த முதல் வெளிநாட்டுப் பயணம் ஜிம்காட்டன் என்னும் தேநீர் அருந்து உணவகத்தில் இருந்து ஆரம்பிக்கின்றது.அங்குதான் ஒரு சில இலக்கிய நண்பர்களான அ. முத்துலிங்கம். செல்வம் ஆகியோரோடு சந்திப்பு நிகழ்ந்தது.
இலக்கிய நண்பர்களுடனான சந்திப்பை ஒரு ஹோட்டலில் அமர்ந்து நடத்தலாம் என்பதும் ஒரு உணவரங்கில் இரண்டு மணித்தியாலங்கள் பேசலாம் என்பதும் ஆச்சரியமானதும் அற்புதமானதுமான விடயமுமாகும். அத்தகைய அனுபவத்தை ரொறன்ரோ நகரம் தந்தது.தமிழக ஹோட்டல்களில் இவ்வாறான சந்திப்புக்களை ஹோட்டல்களில் நடத்துவதோ நீண்ட நேரம் பேசிக் கொண்டிருப்பது என்பதெல்லாம் நினைத்துப் பார்க்க முடியாத ஒரு விடயமாகும் என்று தமிழக எழுத்தாளர் ஜெயமோகன் தனது உரையின் ஆரம்பத்தில் பகிர்ந்து கொண்டார்.
இன்றைய இந்தச் சந்திப்பில் தமிழ் இலக்கியத்தில் அறம் என்ற தலைப்பிலேயே உரையாற்ற உள்ளேன். இந்த முறை ரொறன்ரோ நகரத்துக்கான பயணத்தின் உளப் பதிவு குறித்து நண்பர்கள் கேட்பதாகக் குறிப்பிட்ட ஜெயமோகன் அத்தகைய பதிவு பற்றிக் குறிப்பிடுகையில்
இந்தமுறை ரொறன்ரோவிலும் ஏனைய இடங்களிலும் நான் சந்தித்த நண்பர்களின் குழந்தைகள் குறிப்பாக பதினைந்து வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளின் இலக்கியம் தொடர்பான கேள்விகளே உளப் பதிவுகளாக அமைந்தன என்று ஆரம்பித்தார்.
இந்தக் குழந்தைகளுடனான மிகத் தீவிரமான முக்கியமான இலக்கியம் சார்ந்த உரையாடல்களில் அந்தக் குழந்தைகள் முன் வைத்த கேள்விகள்தான் எனவும் ஜெயமோகன் தெரிவித்தார்.
இந்தக் குழந்தைகள் தமிழ் இலக்கியத்தைப் படிக்கின்றனர்.தாம் கற்ற இலக்கியப் படைப்புக்களை சமகால ஆங்கில மொழியில் மொழி பெயர்க்க முற்படுகின்றனர். அவ்வேளையில் அது சார்ந்த பல கேள்விகள் அவர்களுக்கு எழுகின்றன. அந்தக் கேள்விகள் அனைத்துமே மிகச் சிறந்த கல்வி அறிவுள்ள தேசத்தில் கல்வி பயிலும் குழந்தைகளின் முக்கியமான கேள்விகளாக உள்ளன என்று ஜெயமோகன் சுட்டிக் காட்டினார். தமிழ் மொழியில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழி பெயர்க்கும் போது பண்பாட்டு சமகாலத் தன்மையைக் கண்டறிய வேண்டுமா அல்லது பண்பாட்டு தனித் தன்மையை அப்படியே கொண்டு வர வேண்டுமா என்று எனது நண்பரின் குழந்தை வினவியது.
சரியாகச் சொல்ல முடியாது. ஆனால் யாருக்காக மொழி பெயர்க்கின்றாய் என்பதைப் பொருத்தது. ஒரு பிரபல படைப்பை மொழி பெயர்ப்பதாயின் அதற்கு பண்பாட்டு சமகால தன்மையைக் கண்டறிய வேண்டும்.அதே வேளையில் இன்னொரு மொழியின் பண்பாட்டு நுட்பங்களுடன் மொழி பெயர்க்கப்பட வேண்டும் எனப் பதிலளித்ததாகக் குறிப்பிட்டார்.
சுந்தரம் இராமசாமியின் படைப்புக்கள் அதன் பண்பாட்டு பண்புகளை விட்டுவிட்டு பொது மொழியில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. ஆனால் …. துருக்கிய நாவலொன்றின் ஆங்கில மொழி பெயர்ப்பு துருக்கிய மொழியில் வாசிப்பது போன்றுள்ளது. இது ஒரு முக்கியமான தருணம்.இந்தக் குழந்தைகளின் கேள்விகள் சாதாரணமானவை அல்ல. குழந்தைகளுக்கு மாத்திரம் அல்ல பெற்றோருக்கும் இது முக்கியமான தருணம். எனது நண்பனின் பன்னிரண்டு வயது பெண் குழந்தையின் கேள்வி இது.
தமிழ் இலக்கியம் தமிழர் பண்பாடு என்பன உயர்வானதென எனது அப்பா கூறுகின்றார். ஆனால் நான் வாசித்ததில் பெண்கள் தமிழ் இலக்கியத்தில் உயர்வாகச் சொல்லப்படவில்லை. வள்ளுவர் கூட பெண்களைப் பற்றி இழிவாகவேக் கூறுகின்றார் என்று எனக்குத் தோன்றுகின்றது என்று அந்தக் குழந்தை கூறியது.
இன்னொரு குழந்தையின் கேள்வி இது. சங்க காலத்திலும் கம்பராமாயண காலத்திலும் சாதி முறைகள் இருந்தனவா என்று என்னிடம் கேள்வி எழுப்பியது.
சாதி முறைகள் இருந்தன என்று பதில் அளித்தேன். அப்படியானால் நீதிபற்றிப் கேட்பதற்கு அவர்களுக்கு தகுதி உண்டா என்று கேள்வி எழுப்பிய அந்தக் குழந்தை அறம்பற்றி அவர்கள் பேசலாமா என்றும் கேள்விகளை முன் வைத்தது. இருந்தது என்றே நான் பதில் அளித்தேன். அதற்ககு அந்த குழந்தை அவர்கள் எழுதிய நீதி நூல்கள் இலட்சிய சமூகம்.மற்றும் அறம் குறித்த நூல்களை நான் ஏன் பள்ளிக்கூடத்தில் பாடப் புத்தகங்களில் படிக்க வேண்டும் என்ற வினாவையும் அந்தக் குழந்தை தொடுத்தது.
இந்தக் குழந்தைகளின் கேள்விகளுக்கு விரிவான பதிலை அளித்தேன். குழந்தைகளின் இது போன்ற கேள்விகளுக்கு இல்லாத பதிலைத் தேட வேண்டியுள்ளது. குழந்தைகளின் இவ்வாறான கேள்விகளுக்கு வழங்கும் பதில்களிலேயே அவர்களுக்கும் எமக்கும் இடையிலான உறவு தங்கியுள்ளது. அது இன்னும் நெருக்கமாகின்றது.
தமிழ் இலக்கியத்தில் அறம் இருந்ததா? இல்லையா என்பதற்கு ஆம் அல்லது இல்லை என்ற பதிலே வழங்க வேண்டும். அந்த பதில் தமிழ் இலக்கியத்தில் அறம் இருந்தது என்பதற்கு வரலாற்று கலாசார பரிணாமமாக சொல்லி இருந்தால் அந்த பதில் உண்மையாகும்.
ஒரு கொள்கை அல்லது வாழ்க்கை முறை அல்லது நம்பிக்கையை ஆதாரமாகக் கொண்டு அவை ஒன்றல்ல பல படி நிலைகளுக்கூடாக வளர்ந்து வரும் ஒரு பகுதியில் பெரும் வளர்ச்சி மறு பகுதியில் தேக்ன நில ஏற்படும்.
சங்க காலத்தில் சாதி இல்லை பேதமில்லை பெண் அடிமைத்தனமில்லை. எல்லாமே மிகச் சிறப்பாக இருந்த இலட்சிய சமூகம். கடவுளின் ஆசிபெற்ற அல்லது கடவுளின் ஒளிவட்டம் பட்டுத் தெறிக்கின்ற காலமாக சங்க காலம் இருந்தது. ஆனால் நாம் வாழும் காலம் அவ்வாறு இல்லை’ என்று எழுத்தாளர் ஜெயமோகன் தெரிவித்தார்.
தொடர்ந்தும் அவர் தமிழிலக்கியத்திலும் சங்க இலக்கியங்களிலும் அறம் காணப்பட்ட சந்தர்ப்பங்களை சான்றுகளுடன் எடுத்துரைத்தார். அவர் உரையாற்றிக் கொணடிருக்கையில் நான் ஒன்றை நினைத்துக்கொண்டேன். ”ஜெயமோகன் அவர்கள் தனது படைப்பிலக்கியத் தளத்தில் அறம் பற்றிய அவசியத்தை தனது நெறியாகக் கொண்டு எழுத்துக்களைப் படைப்பதனால் தானோ அவர் வெற்றி பெற்றவராகப் போற்றப்படுகின்றார்” என்று.
தொடர்ந்து எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் சபையோர் மத்தியிலிருந்து எழுந்த கேள்விகளுக்கும் அழகுற பதிலளித்து சபையோரின் பாராட்டுக்களையும் கரகோசத்தையும் பெற்றுக்கொண்டார்.
—ரொறன்ரோவிலிருந்து சத்தியன்