LOADING

Type to search

இலங்கை அரசியல்

ஏ9 வீதி மறிப்புப் போராட்த்தில் நாம் ஈடுபட மாட்டோம் – பொறியியல் பீட மாணவர்கள் அறிக்கை!

Share

யாழ்ப்பாண பல்கலைக்கழக கிளிநொச்சி வளாக மாணவர்களால் ஏ9 வீதியை மறித்து எதிர்வரும் 7 ஆம் திகதி வியாழக்கிழமை போராட்டம் ஒன்று நடாத்தப்படவுள்ளதாக வெளிவந்த செய்திகளுக்கும், யாழ்ப்பாண பல்கலைக்கழகப் பொறியியல் பீட மாணவர்களுக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை என்றும், கிளிநொச்சி வளாக சிங்கள – தமிழ் மாணவர்கள் என்ற பெயரில் அனுப்பப்பட்ட மின்னஞ்சல்கள் அனைத்தும் பொய்யானவை என்றும் யாழ். பல்கலைக்கழகப் பொறியியல் பீட மாணவர் ஒன்றியத்தினர் அறிவித்துள்ளனர்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் கடந்த மாதம் 27ஆம் திகதி தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து உயிரிழந்தவர்களை நினைவு கூரும் வகையில் மாவீரர் நாள் நிகழ்வுகள் நடைபெற்றமை தொடர்பாக, பொறியியல் பீட சிங்கள – தமிழ் மாணவர்கள் என்ற பெயரில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவர் உட்படப் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் பலருக்கு அநாமதேய மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டிருந்தன. அதன் தொடச்சியாக 7 ஆம் திகதி வியாழக்கிழமை கிளிநொச்சி, அறிவியல் நகரில் ஏ9 வீதியை மறித்துப் போராட்டமும், பேரணியும் நடாத்தப்படவுள்ளதாகவும், அதனைத் தவிர்ப்பதற்காக கிளிநொச்சி வளாகத்தில் அமைந்துள்ள பீடங்களின் பீடாதிபதிகள் பதவி விலக்கப்படுவதோடு, நிகழ்வுகளில் ஈடுபட்ட மாணவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் கிளிநொச்சி வளாக மாணவர் ஒன்றியம் என்ற பெயரில் பேராட்ட முன்னறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பிலேயே, யாழ்ப்பாண பல்கலைக்கழகப் பொறியியல் பீட மாணவர் ஒன்றியம் இன்று செவ்வாய்க்கிழமை நண்பகல் தமது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தி பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவருக்குக் கடிதமொன்றினை அனுப்பி வைத்துள்ளனர்.

அந்தக் கடிதத்தில்,”யாழ். பல்கலைக்கழகப் பொறியியல் பீட மாணவர் ஒன்றியத்தினராகிய நாங்கள் JaffnaEngineering2023@protonmail.com என்ற பெயரில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவர் உட்படப் பலருக்கு முறைப்பாட்டுக் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக அறிகின்றோம். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பொறியியல் பீட மாணவர்களுக்கென ஒரேயொரு மாணவர் அமைப்பாக எமது அமைப்பே இயங்கி வருகிறது. எமது பீட மாணவர்களுக்கென வேறெந்த அமைப்பும் கிடையாது.

அத்துடன் எதிர்வரும் 7 திகதி மேற்கொள்ளப்படவுள்ள பேராட்டங்களுக்கும் எமக்கும் எவ்விதமான தொடர்புகளும் கிடையாது என்பதோடு, எமது மாணவர்கள் எந்தப் போராட்டத்திலும் கலந்து கொள்ள மாட்டார்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.