LOADING

Type to search

இலங்கை அரசியல்

இலங்கை நாடாளுமன்றத்தில் கல்வி, உயர்கல்வி அமைச்சுக்கள் மீதான விவாவதத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம். பி ஆற்றிய உரை

Share

05-12-2023 அன்று நாடாளுமன்றத்தில் நடைபெற்ற கல்வி, உயர்கல்வி அமைச்சுக்கள் மீதான விவாவதத்தின் போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆற்றிய உரையின் சாராம்சம் பின்வருமாறு;-

ஆங்கில மொழி பொதுவாக எல்வோருக்கும் பரீட்சயமாக கொண்டு வருதற்குரிய பத்து வருட திட்டமொன்றை அறிமுகப்படுத்தியிருக்கிறீர்கள். அதற்காக கல்வியமைச்சர் மற்றும் ஏனைய துணை அமைச்சர்களையும் பாராட்ட விரும்புகிறேன்.

ஆங்கிலத்தில் கற்று ஆங்கிலத்தின் சாதகங்களை அறிந்தவன் என்ற வகையிலே அனைத்து மக்களுக்கும் அந்த வாய்ப்புக்கள் கிடைக்க வேண்டும் என்பது எனது விருப்பமாக இருந்தாலும், ஒரு நிபந்தனையை முன்வைக்க விரும்புகின்றேன். பல தசாப்தங்காள தமிழிலும் சிங்களத்திலும் கற்றுவந்தவர்களுக்கு திடீரென ஆங்கில மொழி பரீட்சயமாக வருவதற்கு சிறிது காலமெடுக்கும். காலங்காலமாக தாய்மொழியில் கற்று வந்தவர்களுக்கு சட்டக்கல்லூரியில் திடீரென – ஆங்கில மொழியில் பரீட்சை எடுக்க வேண்டும் என விதித்த நிபந்தனை முற்றிலும் தவறானதாகும். சட்டம் என்பது நுணுக்கங்களை கொண்ட விடயம். இந்த நிலையில் பரீட்சயம் இல்லாத புதுமொழியில் திடீரென திணிக்க முயல்வது பாதிப்புக்களை ஏற்படுத்தும். மாறாக சிறிய வயதிலிருந்தே ஆங்கிலத்தில் கற்கக் கூடிய வாய்ப்பை ஏற்படுத்தி நடைமுறைப்படுத்துவதே பொருத்தமாக இருக்கும். இதனை நீங்கள் கட்டாயம் கவனத்தில் எடுக்க வேண்டும்.

அடுத்ததாக வடக்கு கிழக்கில் பாடசாலைகள் தொடர்பாக சொல்லும்போது, இன்று மாகாண சபைகள் இயங்குநிலையில் இல்லை. இந்த நிலையில் யாழ்ப்பாணத்தில் தெரிவுசெய்யப்பட்ட ஒரு கபினெட் அமைச்சர் வடக்கு கிழக்கு மாகாண கல்விசார்ந்த விடயங்களை தன்னுடைய சொந்த சொத்தாக பயன்படுத்தி மிக மோசமான தலையீடுகளை செய்து கொண்டிருக்கிறார்.
விசேடமாக இடமாற்றங்களில் இந்த தலையீடுகள் அதிகரித்துள்ளது.

2007ஃ20 என்ற இடமாற்றச் சுற்றுநிருபம் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு மட்டுமல்ல முழு நாட்டுக்குமே பொதுவாக இருக்கக்கூடிய நிலையில், மாகாண சபைகளிலும் இவை நடைமுறையிலுள்ளன. ஆனால் வடக்கு கிழக்கில் மிக மோசமாக இருக்கின்றது. இதன் காரணமாக கல்வி நிர்வாகமே குழும்பிப்போகின்ற அளவுக்கு மிக மோசமான தலையீடுகளாக இருக்கின்றது.

ஆதலால் கல்வியமைச்சர் தலையிட்டு அரசியல் தலையீடுகள் அனைத்தும் நிறுத்தப்பட்டு முறைப்படி இடமாற்றச் சபையின் முடிவுகளை நடைமுறைப்படுத்துகின்ற ஒரு நிலைமையை உறுதிப்படுத்த வேண்டும். இந்த இடமாற்றச் சபைகளில் தொழிற்சங்கப் பிரதிநிதிகள், மற்றும் திணைக்களத் தலைவர்களும் பங்குகொள்கின்றனர். இங்கே சகல விடயங்களும் ஆராயப்பட்டே முடிவுகள் எடுக்கப்படும். ஆகவே அரசியல் தலையீடுகள் நடைபெறாதிருப்பதை நீங்கள் உறுதிப்படுத்தவேண்டும்.

அடுத்து பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் கடந்த வருடங்களில் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டு, கடுமையான அழுத்தங்களை வழங்கிய நிலையில் அவர்களுக்கு வாக்குறுதிகள் வழங்கப்பட்டு – சுபோதினி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை மூன்று படிமுறைகளாக நடைமுறைப்படுத்துவதாக உறுதியளிக்கப்பட்டது. கடந்த காலங்களில் அதன் மூன்றில் ஒரு பகுதி மட்டுமே அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த வரவு செலவுத் திட்டத்தில் அவர்களுக்கு வழங்கவேண்டிய இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டங்கள் தொடர்பாக எந்த விதமான விடயமும் இங்கு பதிவு செய்யப்படவில்லை. இவை முக்கியமாக கவனத்தில் எடுக்கப்படவேண்டிய விடயம்.

இன்றைக்கு அபிவிருத்தி அவசியமாக தேவைப்படும் நிலையில் கல்வியின் பங்களிப்பு என்பது மிகமுக்கியமானது. அது குழம்புவது என்பது ஆபத்தானதாகும். எனவே ஏற்கனவே நீங்கள் இணங்கிய விடயம் என்ற வகையில் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு அவர்களைத் தள்ளாமல் நீங்களாகவே நடைமுறைப்படுத்துவதற்கு முன்வரவேண்டும் என்றும் இதனை தாமதமின்றி நிறைவேற்றவேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

பல்கலைக்கழகங்கள் சம்பந்தமாக சொல்லும்போது – இன்று மூளைசாலிகளின் வெளியேற்றம் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. கல்விமான்கள், தொழில்நுட்பவியல் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் நாட்டில் இருக்கக்கூடிய பொருளாதார நெருக்கடியைக் காரணமாக வெளிநாடுகளுக்கு செல்லுகின்ற ஒரு நிலைமை காணப்படுகின்றது. விசேடமாக – கல்வி சார் விடயத்தில் மட்டுமல்ல சுகாதாரத் துறையிலும் கணிசமானவர்களின் வெளியேற்றம் நடைபெறுகின்றன. இவை பெரும் பிரச்சினையான விடயமாகும். இதற்கு பிரதான காரணமாக வரிவிதிப்பு முறைகளில் மாற்றங்களை ஏற்படுத்தி கணிசமாக குறைக்க முடியும். இதன் மூலம் அவர்களை தொடர்ந்தும் இந்த நாட்டுக்குள் வைத்திருக்கக் கூடிய நிலைமையை உருவாக்கமுடியும். அதில் மாற்றங்களைக் கொண்டுவராதவிடத்து மூளைசாலிகள் வெளியேற்றம் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தப்போகின்றது.

விரிவுரையாளர்கள் தங்கள் உயர் பட்டத் தகைமைகளை வெளிநாடுகளில் சென்று பெறுவதற்கு பிணை ஒப்பந்தம் செய்து செல்லவேண்டும். இந்த பிணை ஒப்பந்தம் இறுக்கமாக நடைமுறைப்படுத்தப்படுகின்றது. அதற்கு காரணம் பிணை ஒப்பந்தம் செய்வதற்கு வெளிநாட்டில் புலமைப்பரிசில் வழங்கப்படும் தொகையும் சேர்க்கப்படுகின்றது. ரூபாயின் பலவீனமான இன்றைய நிலையில் குறித்த பிணைத்தொகையானது அதிகளவானதாக இருக்கும் நிலையில் உயர் கல்வி கற்க விரும்பும் விரிவுரையாளர்கள் குறித்த தொகை பிணைக்குரிய உத்தரவாதத்தை வழங்கும் நபர்களை வழங்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக – தமது விரிவுரையாளர்கள் பதவிகளை துறந்து வெளிநாடுகளுக்கு செல்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனாலும் கல்வியலாளர்களை கணிசமாக இழக்கப் போகின்றோம். வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் புலமைப்பரிசில் வழங்கும் தொகைகளுக்கும் சேர்த்து இத்தகைய பிணை ஒப்பந்தங்களில் பணம் அறவீடு சேர்த்துக்கொள்ளும் முறைமையும் நிறுத்தப்படவேண்டும் என்ற யோசனையை முன்வைக்க விரும்புகின்றேன்.

வெளிநாடு செல்கின்றவர்களும் நாட்டுக்கு திரும்பிவரக்கூடிய நிலையே உருவாக்க வேண்டுமே தவிர, வெளிநாடு செல்பவர்கள் நிரந்தரமாக திரும்பி வர முடியாத சூழலை ஏற்படுத்துவது முட்டாள் தனமாகும்.

யாழ் பல்கலைக்கழக கலைப் பிரிவில் குறைந்த அளவான ஆளணியே காணப்படுகின்றது. இதனால் விரிவுரையாளர்களுக்கு அதிக வேலைப்பழு காணப்படுகின்றது. அந்த பழு காரணமாக அவர்கள் ஆய்வு மற்றும் வெளிக்கள ஆய்வுகள் எதுவும் செய்யமுடியாத நிலையில்- வெறுமனே அந்தப் பாடத்துறையில் உள்ள பாடத்திட்டங்களை நிவர்த்தி செய்வதற்குரிய வேலைகளையே செய்துகொண்டிருக்கிறார்கள். இப்படிப்பட்ட கல்விக் கலாசாரம் மிகமோசமாகவே அமையும். அந்தவகையில் இவ்விடயம் தொடர்பாக கலைப்பீட மாணவர் ஒன்றியம் எழுதிய கடிதம் ஒன்றையும் சபைக்கு சமர்ப்பிக்கின்றேன். இதனை கருத்தில் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.

கொழும்பு பல்கலைக்கழகத்துக்கும் கொழும்புக்கு வெளியே இருக்கக்கூடிய பல்கலைக்கழகங்களுக்கும் பாரிய வேறுபாடுகள் காணப்படுகின்றன. அவை பாரபட்சங்களாக உள்ளன. விசேடமாக வடக்கு கிழக்கில் இருக்கும் பல்கலைக்கழகங்களில் பாரபட்சங்கள் மிக அதிகம். இந்த பாரபட்சம் மனித வலு ஒதுக்கீடுகளில் மிகப்பெரும் அளவில் காணப்படுகின்றது.
உதாரணமாக 2022 ற்கான சமூகவியல் புள்ளிவிபரம் எடுத்துக் காட்டுகின்றேன்.

அரசுக்கு புதிய ஆளணி ஒதுக்கீடுகளை செய்ய முடியாது விட்டாலும் இருக்கின்ற ஆளணியை சமமாகப் பிரிக்கின்ற முறைமையை செய்யாமல், வெறுமனே ஒருசில பல்கலைக்கழகங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஏனைய பல்கலைக்கழகங்களுக்கு கடும் சுமையை கொடுக்கின்ற வகையில் நடந்துகொள்வது ஓரம் கட்டும் செயற்பாடாகவே அமையும்.

என்னைப் பொறுத்த வரையில், பல்கலைக்கழகங்கள் சுதந்திரமான சிந்தனை கொள்ளக்கூடிய இடமாக இருக்க வேண்டும். நாட்டினுடைய ஒட்டுமொத்த எதிர்காலத்துக்கும் வளர்ச்சிக்கும் திறந்த சிந்தனை மையமாக அது இல்லாது விட்டால் அதன் நோக்கமே தோற்கடிக்கப்படுவதாகவே அமையும்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமும் கிழக்கு பல்கலைக்கழகமும் கடுமையாக இராணுவ மயப்படுத்தப்படுகின்றது. இராணுவ தலையீடுகள் மிகவும் அதிகம். அவர்கள் தான் கணிசமான தீர்மானங்களை மேற்கொண்டு தடைகளை உருவாக்குகிறார்கள். பல்கலைக்கழகங்களில் அரசியல் சிந்தனைகளையும் திறந்த உரையாடலுக்கும் விடவேண்டும். ஆனால் யாழ்ப்பாணத்திலும் ஏனைய தமிழ் பல்கலைக்கழகங்களிலும் கடும் கட்டுப்பாடுகளை விதிக்கிறார்கள். அங்கே அரசியலே இருக்கக்கூடாது என்கின்ற அளவுக்குதான் இந்த கட்டுப்பாடுகள் இருக்கிறது. இது என்னைப்பொறுதத்தவரையில் பொருத்தமற்ற ஒரு விடயம். இந்தவகையில் இந்த மாற்றங்களையும் செய்ய வேண்டும் என்று வலியுறுத்த விரும்புகின்றேன்.

இதன் போது நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் கருத்து தெரிவித்தபோது –

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலே சட்டத்தரணி சுவஸ்திகா பேசவிடாமல் தடுக்கப்ப்பட்டார். உண்மையிலே அங்கே இருப்பவர்கள் தான் தடுக்கிறார்களே தவிர வெளித்தரப்பாலோ இராணுவத்தாலோ சொல்லப்பட்ட விடயம் அல்ல என்னும் விடயத்தை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். என்று குறிப்பிட்டிருந்தார்.

இதற்குப் பதிலளித்திருந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம். தனிப்பட்ட முறையில் அந்த அம்மையார் தனது கருத்தைப் பதிவு செய்வதற்கு நான் எதிர்ப்பவன் அல்ல. அவரை உரையாற்ற அனுமதித்திருக்க வேண்டும் என்பதுதான் எனது தனிப்பட்ட கருத்து. ஆனால் – அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததற்கான நியாயம் என்னவென்றால், அந்த அம்மையாருடைய அரசியல் கருத்துக்களுக்கு நேர் மாறான கருத்தை அந்த பல்கலைக்கழகத்திலோ அல்லது இந்த நாட்டில் இருக்கக் கூடிய எந்தவொரு பல்கலைக்கழகங்களிலோ போய் சொல்ல முடியாது. அந்த அம்மையார் சொல்லும் கருத்தை எல்லா இடத்திலும் போய் சொல்ல முடியும். அதற்கு ஒரு தடையும் விதிக்காமல் வரவேற்பார்கள். ஆனால் இந்தக் கருத்துக்கு நேர்மாறான கருத்துதான் மிகப் பெரும் பெரும்பான்மையினரின் கருத்தாக வடக்கு கிழக்கில் இருக்கத் தக்கதாக, சுவஸ்திகா போன்றோரின்; கருத்தை திணிப்பதற்கு பார்க்கிறார்களே தவிர, அதற்கு நேர் மாறான கருத்தை எந்தவொரு இடத்திலும் – குறிப்பாக வடக்கு கிழக்கிலும் சரி அதற்கு வெளியிலும் இருக்கும் பல்கலைக்கழகங்களிலும் சரி கதைக்க முடியாது.

ஆகவே, இதனைத்தான் நான் சொல்லுகின்றேன். இந்த சிந்தனை சுதந்திரத்தை எந்தவொரு தடையும் விதிக்காமல் முழுமையாக அமுல்படுத்த வேண்டும். அதை செய்யாமல் வெறுமனே ஒரே ஒரு கருத்தை மட்டும் திணிக்க முயல்வதை ஏற்கமுடியாது.
என்று பதிலளித்திருந்தார்.