பழி வாங்கும் நோக்கிலேயே தெல்லிப்பழை வாள்வெட்டு சம்பவம் இடம்பெற்றது – கைதானவர்கள் வாக்குமூலம்
Share
தெல்லிப்பளையில் கடந்த திங்கட்கிழமை நடந்த வாள்வெட்டுச் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் மாவட்டக் குற்றத் தடுப்புப் பிரிவுப் பொலிஸாரால் மூவர் நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தாக்குதலுக்குப் பயன்படுத்திய வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் வள்ளிபுனம், முத்து ஐயன்கட்டு, கிளிநொச்சி ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்கள் என்றும், இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் 3பேர் தேடப்பட்டு வருகின்றனர் என்றும் மாவட்டக் குற்றத் தடுப்புப் பிரிவுப் பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த திங்கட்கிழமை தெல்லிப்பளையில் ஹையேஸ் வாகனம் ஒன்றில் வந்த கும்பல் வீதியில் மோட்டார் சைக்கிள்களில் பயணித்த இளைஞர்கள் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் ஒருவர் காயமடைந்திருந்தார். தாக்குதல் நடத்தி விட்டுத் தப்பிச் சென்றவர்களைத் துரத்திச் சென்று பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியபோதும், அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் மாவட்டகுற்றத் தடுப்புப் பிரிவுப் பொறுப்பதிகாரி மேனன் வழிகாட்டலில் உப பொலிஸ் பரிசோதகர் பிரதீப் தலைமையிலான குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகநபர்களைக் கிளிநொச்சிப் பகுதியில் வைத்து நேற்றுக் கைது செய்தனர்.
6 மாதங்களின் முன்னர் வினோதன் என்பவர் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பழிவாங்கும் நோக்குடன் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
ஹையேஸ் வாகனத்தில் இருந்த துப்பாக்கிச் சூட்டு அடையாளங்களை மறைக்கவும், பாகங்களை மாற்றவும் முயன்றுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.
தலைமறைவாகியுள்ள மூவரைக் கைது செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்றும், கைது செய்யப்பட்டவர்கள் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.