கிளிநொச்சியில் படையினருக்கு மேலும் நிலம்?
Share
நடராசா லோகதயாளன்.
கிளிநொச்சி மாவட்டத்தில் படையினரின் இருப்பிற்காக 2 ஆயிரத்து 273 ஏக்கர் நிலம் கோருவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று (04-01-2024) யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களிற்கான விசேட அபிவிருத்திக் குழுக் கூட்டம் இடம்பெற்றது . இதன்போதே இத் தரவுகள் ஜனாதிபதி முன்னிலையில் மாவட்டச் செயலாளர் சார்பாக முன்வைக்கப்பட்டது.
இவ்வாறு இடம்பெற்ற விசேட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் படையினர் கோரும் 2 ஆயிரத்து 273 ஏக்கர் நிலத்தில் பூநகரியில் ஆயிரத்து 666 ஏக்கரும், கரைச்சியில் 195 ஏக்கரும், கண்டாவளையில் 197 ஏக்கரும் கோரும் அதே நேரம் பளையில் 145 ஏக்கரும் கோருகின்றனர்.
இவ்வாறு கோரும் 2 ஆயிரத்து 273 ஏக்கர் நிலத்தில் கடற்படையினரே அதிக நிலத்தை கோரி நிற்பதாகவும் அதற்கமைய கடற்படையினர் ஆயிரத்து 295 ஏக்கர் நிலத்தையும், இராணுவத்தினர் 559 ஏக்கர் நிலத்தையும் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தினர் 290 ஏக்கரை கோரும் அதே நேரம் பொலிசார் 17 ஏக்கரை கோருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதேநேரம் கிளிநொச்சி மாவட்டத்தின் பளை பிரதேச செயலாளர் பிரிவிலே இன்னமும் 70 குடும்பங்களைச் சேர்ந்த 238 பேர் மீள் குடியேற்றப்பட வேண்டும் என்ற தரவுகளும் சமர்ப்பிக்கப்பட்டது.
இதேபோன்று நில விடயத்தில் வனவளத் திணைக்களத்மின் பிடியில் தற்போதுள்ள 7 ஆயிரத்து 132 ஏக்கரை விடுவிக்க இணக்கம் தெரிவிக்கும் திணைக்களம மேலதிகமாக 2 ஆயிரத்து 273 ஏக்கரை கோரிநிற்கின்றது. வன ஜீவராசிகள் திணைக்களத்தை பொறுத்தமட்டில் 100 ஏக்கரை விடுவிக்க இணக்கம் தெரிவித்துள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தின் முக்கிய விடயங்களாக படையினர் வசமுள்ள நிலத்தில் இருந்து 695 ஏக்கர் நிலம் விடுவிக்கப்பட வேண்டும், 22 கிலோ மீற்றருக்கு யானைத் தடுப்பு முறை அமைக்கப்பட வேண்டும், வயல் அழவிற்கான அழிவு மற்றும் பரந்தனில் விவசாய நிலையத்திற்கான ஓர் புதிய கட்டிடம் அமைக்கப்பட வேண்டும் எனவும் கோரப்பட்டது.
இவ்வாறு கோரப்பட்ட வயல் அழிவில் 5 ஆயிரத்து 559 கெக்டேயர் அல்லது 14 ஆயிரம் ஏக்கர் வயல் முழுமையாகவும் 1 ஆயிரத்து 300 கெக்டேயர் அல்லது 5 ஆயிரத்து 700 ஏக்கர் பகுதி அளவிலும் அழிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்திற்கு 4 ஆயிரத்து 714 வீடுகள் தேவைப்படுவதோடு 10 ஆயிரத்து 500 குடும்பங்களிற்கான குடிநார் வசதியும், ஆயிரத்து 10 குடும்பங்களிற்கான மின் இணைப்பும் வழங்க வேண்டியுள்ள அதேநேரம் கேரதீவு சங்குப்பிட்டிப் பாலம், 50 கிலோ மீற்றர் வீதி புனரமைக்கப்படவேண்டி உள்ள அதேநேரம் நகரின் மத்தியில் வீதிச் சமிக்கையும் அமைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடப்பட்டுள்ளது.
இதேநேரம் அறவியல்நகர், ஆனந்தபுரம், கனேசபுரம் பகுதியில் ஒலியுடன் கூடய புகையிரதக் கடவை சமிக்கைகள் அமைக்கவும் கோரப்பட்டது.