LOADING

Type to search

கனடா அரசியல்

கனடா ஸ்காபுறோ நகரில் தமிழ் மணம் பரப்பி நிற்கும் Majestic City தமிழர் அங்காடியில் நம் மொழியின் பயன்பாடு நீக்கப்பட்டு ‘தமிழர் அங்காடி’ என்ற பெயர் அழிக்கப்படுமா?

Share

சில ஆண்டுகளுக்கு முன்னர் கனடாவின் ஸ்காபுறோ நகரில் மார்க்கம்-மெக்னிக்கல் சந்திப்புக்கு அருகில் பிரமாண்டமான முறையில் திறந்து வைக்கப்பெற்ற Majestic City என்னும் தமிழர் பல் பொருள் அங்காடி தமிழ் மக்களின் அடையாளமாகத் திகழத் தொடங்கியது. அதற்கு முக்கிய காரணங்களில் சிலவற்றை நாம் எடுத்துக்கொண்டால், அங்கு தமிழ் பேசும் வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்களே தங்கள் வர்த்தகத்தை நடத்தத் தொடங்கினார்கள்.

மற்றைய காரணம். மேற்படி Majestic City என்னும் தமிழர் பல் பொருள் அங்காடியின் ஏகபோக உரிமையாளர் வேற்று இனத்தவராக இருந்தாலும். பலரது ஆலோசனையின் பேரில் அங்காடியின் உட்பக்கத்தில் அமைக்கப்பெற்ற நடைபாதைகளுக்கு எமது தாய்த் தமிழகத்தில் உள்ள நகரங்கள் மற்றும் கிராமங்களின் பெயர்களே சூட்டப்படுவதற்கு பூரண சம்மதத்தை வழங்கியிருந்தார்.

இந்த Majestic City என்னும் தமிழர் பல் பொருள் அங்காடி திறக்கப்படுவதற்கு முன்னரே பல தமிழ் பேசும் அன்பர்கள் அங்கு முக்கிய பதவிகளில் அமர்த்தப்பட்டனர். தமிழ் பேசும் வர்த்தகர்களை கவரும் வகையில் Majestic City வர்த்தக வளாகத்தின் பொது முகாமையாளராக ஆற்றலும் அனுபவமும் கொண்ட தமிழ் பேசும் அன்பர் ஒருவர் நியமனம் செய்யப்பெற்றார்.

வெளிநாடுகளிலிருந்து கனடாவிற்கு பயணம் செய்யும் தமிழ் மக்கள் இந்த தமிழர் அங்காடிக்கு படையெடுக்கும் காட்சிகளை நாம் கண்டுள்ளோம்.

அங்கு சில மணிநேரங்களை கழிக்கின்றபோது நமது தாய் மண்ணுக்கு சென்று வந்தது போன்று தாய் மண்ணின் சுகந்தத்தையும் சுவையான உணவுவகைகளையும் நுகர முடிந்தது. அதற்கு மேலாக அங்கு வர்த்தக நிலையங்களை அமைந்துள்ள பகுதிகளில் வீதிப் பெயர்களாக நம் தமிழர் தேசத்தின் ஊர்களின் பெயர்களை நாம் உச்சரித்து மகிழ்ந்தோம்.

ஆனால் சில நாட்களுக்கு முன்னர் எமக்கு கிடைத்த செய்தி எம்மில் சிலரை அதிர்ச்சிக்கும் ஆச்சரியத்திற்கும் உள்ளாக்கியுள்ளதை உணர்ந்தவர்களாக உறைந்து போயுள்ளோம்.

அங்கு வேற்றினம் ஒன்று காலுன்ற முயலுகின்றது என்றும் அதற்கு முன்னேற்பாடாக அங்கு பொது முகாமையாளராக பணியாற்றிய தமிழ் பேசும் அன்பர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் என்றும் புதிதாக அந்த குறிப்பிட்ட உரிமையாளரின் இனம் சார்ந்த உணவகங்கள் மற்றும் வர்த்தக நிலையங்கள் திறக்கப்படவுள்ளன என்றும் இவ்வாறான நிலையில் சில தமிழ் பேசும் வர்த்தகர்கள் தங்கள் நிறுவனங்களை வேறு இடங்களுக்கு மாற்றிக் கொள்ள முனைவதையும் காணக்கூடியதாக உள்ளதாகவும் அறியப்படுகின்றது.

இவ்வாறான இக்கட்டான சூழ்நிலையில் அங்கு உறுதியாக தங்கள் வர்த்தக நடவடிக்கைகளை நிறுவியுள்ள பல தமிழ் பேசும் அன்பர்கள் இந்த மாற்று நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வளாகத்தின் உரிமையாளரோடு பேச்சுவார்த்தைகள் நடத்த தீர்மானித்துள்ளாதாகவும் அறியப்படுகின்றது.

எதற்கும். இந்த Majestic City என்னும் தமிழர் பல் பொருள் அங்காடியின் எதிர்காலம் எப்படியிருக்கப்போகின்றது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என்கிறார்கள் சில வாடிக்கையாளர்கள்.