தமிழரசுக் கட்சியின் அடுத்த தலைவர் யார்?
Share
வேட்பாளர் யோகேஸ்வரன் வெளிப்படையாகவே சிறீதரனுக்கான தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்
நடராசா லோகதயாளன்
ஈழத்தில் தமிழ் மக்களின் கடந்தகாலம் மற்றும் எதிர்காலம் ஆகியவற்றுடன் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு நெருங்கிய தொடர்பு உள்ளது என்பதை மறுக்க முடியாது. இந்நிலையில் வடக்கு கிழக்கில் தமிழர் தாயகப் பகுதிகளில் அந்த கட்சியின் அடுத்த தலைவர் யார் என்பது ஒரு பெரும் பேசுபொருளாகியுள்ளது.
எதிர்வரும் ஞாயிறு அதாவது இம்மாதம் 21ஆம் திகதி இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அடுத்த தலைவருக்கான தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இது என்னவோ அடுத்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு ஒப்பாகப் பேசப்படுவதை காணவும் கேட்கவும் முடிகிறது. இது பகடியாக கருதப்பட்டாலும் அந்தளவிற்கு இது குறித்த பேச்சுக்கள் உள்ளன.
தமிழரசுக் கட்சியின் அடுத்த தலைவர் யார் என அந்த கட்சியினையும் அதன் தொண்டர்களையும் விடவும் எதிர்த் தரப்பினரே அதிக அக்கறையும் ஆர்வமும் காட்டுகின்றனர்.
நடைபெறவுள்ள தமிழரசுக் கட்சியின் தேர்தலில் அதிகாரபூர்வமாக மூன்று வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நடப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறீதரன் மற்றும் சுமந்திரனைத் தவிர, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரனும் போட்டியில் உள்ளார். ஆனால், யதார்த்தமாக போட்டி யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே தான் உள்ளது.
வியாழக்கிழமை (18-01-2024 ) அன்று யாழ்ப்பாண ஊடக மையத்தில் இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், யோகேஸ்வரன் வெளிப்படையாகவே சிறீதரனுக்கான தனது ஆதரவைத் தெரிவித்தார்.
“கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழரசுக் கட்சியின் 90 வீதமான பொதுச்சபை உறுப்பினர்கள் தமிழ் தேசியத்துடன் பயணித்து சிறீதரனுக்கே ஆதரவளிப்பர். தமிழ் தேசியத்திற்கு எதிராக கருத்து தெரிவிக்கும் சுமந்திரன் கட்சிக்குத் தலைவராக வந்தால் இலங்கை தமிழரசுக் கட்சியிலிருந்து தமிழ் தேசியம் இல்லாது போய்விடும்”.
நடைபெறவுள்ள கட்சியின் தலைவர் தேர்தலில் கிழக்கு மாகாணத்திலிருந்து தன்னைப் போட்டியிடுமாறு பலர் வற்புறுத்தியதால்
இத்தேர்தலில் தான் போட்டியிடுவதாகவும் செய்தியாளர்களிடம் யோகேஸ்வரன் கூறினார்.
“இலங்கை தமிழரசுக் கட்சிக்கு தலைவராவதற்கு கிழக்கு மாகாணத்திலும் தகுதியானவர்கள் இருக்கிறார்கள் என்பதைக் காட்டவே தலைவர் தேர்தலில் நான் போட்டியிடுகிறேன். எனது குடும்பம் தமிழரசுக் கட்சியின் பாரம்பரியத்திலிருந்து வந்தது”. என்று மேலும் தெரிவித்தார்.
அதேவேளை சகபோட்டியாளரான சுமந்திரன் மீதும் கடும் விமர்சனங்களையும் அவர் வைத்தார்.
“சுமந்திரனை பொறுத்தவரை அவர் ஒரு சிறந்த சட்டத்தரணி. ஆனால் அவர் தமிழ் தேசியத்திற்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து வருபவர். அவ்வாறு தமிழ் தேசியத்திற்கு எதிராக கருத்து தெரிவிக்கும் ஒருவரை இலங்கை தமிழரசுக் கட்சிக்கு தலைவராக வந்தால், கட்சியிலிருந்து தமிழ் தேசியம் இல்லாது போய்விடும். இவ்வளவு காலமும் இலங்கை தமிழரசுக் கட்சி கொண்டிருந்த கொள்கைகள் கோட்பாடுகள் எல்லாம் அத்தோடு இல்லாமல் போய்விடும்”.
யாழ்ப்பாண ஊடக மையத்தில் அவர் தொடர்ந்து கருத்துக்களை வெளியிட்ட போது, தான் வேட்பாளராக இருந்த போதிலும் சிறீதரன் தான் ஆதரப்பதற்கான காரணத்தையும் அவர் முன்னிறுத்தினார்.
“சிறீதரனை பார்க்கும் போது தமிழ் தேசியக் கருத்துக்களையே தொடர்ந்து வலியுறுத்துகிறார். அவருக்கு சர்வதேச நாடுகளிலும் செல்வாக்கு இருக்கிறது. அவருடன் நான் வெளிநாடுகளுக்கு செல்லும் போது இதனை அவதானித்திருக்கிறேன். ஆகவே அவர் தமிழ் தேசியத்துடன் பயணிப்பவர் என்ற வகையில் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவராக வருவதற்கு பொருத்தமானவர்.”
எக்காரணம் கொண்டு சுமந்திரன் தலைவராக வருவதை தான் விரும்பவில்லை என்பதையும் யோகேஸ்வரன் வெளிப்படையாகத் தெரிவித்தார்.
“சிறீதரனிடம் ஒரு குணம் உள்ளது. புத்திஜீவிகள், முக்கியப் பிரமுகர்கள், சர்வதேச நாட்டு பிரதிநிதிகள் அவரிடம் தலைவர் தேர்தலில் விட்டுக்கொடுங்கள். சுமந்திரன் இம்முறை வரட்டும், அடுத்த முறை நீங்கள் வாருங்கள் என்று கேட்டால், சில வேளைகளில் சிறீதரன் விட்டுக்கொடுத்துவிடக் கூடிய நிலை காணப்பட்டது. அவர் அப்படி விட்டுக்கொடுத்தால், நேரடியாக சுமந்திரன் தலைவராக தெரிவாவார். அதனை தவிர்ப்பதற்காகவே நான் இத்தேர்தலில் போட்டியிடுகிறேன். அதேநேரம் சிறீதரன் தலைவர் தெரிவில் போட்டியிடுவதில் உறுதியாக இருந்தால் நான் விட்டுத்தர தயாராக உள்ளேன் என்று அவரிடம் கூறினேன். தமிழ் தேசியம் வெற்றிபெற வேண்டும் என்பதே எனது நோக்கம்”.
இதனிடையே தலைவர் பதவிக்கான தேர்தல் திட்டமிட்டபடி 21ஆம் திகதி நடைபெறும் என்று சுமந்திரன் கூறியுள்ளார். “பொதுச்சபையில் அங்கம் வகிப்பவர்களுக்கான கடிதங்கள் அனுப்பபட்டுவிட்டன என்று பொதுச்செயலாளர் மூலம் அறிகிறேன்” என்று கூறியுள்ளார்.
“எதிர்வரும் 21ஆம் திகதி இந்த தேர்தல் உச்சகட்டமாக உட்கட்சி ஜனநாயகத்தை வெளிப்படுத்தும் விதத்தில் திருகோணமலையில் நடைபெற்று நல்லதொரு முடிவு வருமென நாம் எதிர்பார்க்கிறோம்” எனவும் சுமந்திரன் கருத்து வெளியிட்டுள்ளார்.
தமிழரசுக் கட்சிக்கான தலைவர் 1952 ஆம் ஆண்டின் முதலாவது தேசிய மாநாட்டில் தேர்வு செய்யப்பட்டமை முதல் இப்போது கட்சியில் தலைவருக்காக முன்மொழியப்படுபவர்கள் வரையில் ஒருவர் தலைவராக தேர்வு செய்யப்படுவார். எதிர்வரும் ஜனவரி மாதம் 27ஆம் 28ஆம் திகதிகளில் கட்சியின் 17 ஆவது தேசிய மாநாடு இடம்பெறவுள்ளது.
இதற்கு முன்னர் இடம்பெற்ற 16 மாநாடுகளிலும் தலைவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டாலும் செயலாளர் பதவிக்கு மட்டும் இருதடவை போட்டி நிலை ஏற்படுவதற்கான ஏதுநிலைகள் உருவாகி அது கட்சியின் மூத்த தலைவர்களின் தலையீட்டால் கைவிடப்பட்ட வரலாறும் உண்டு.
கட்சியின் தலைவராக ஒருவரது பெயர் மட்டும் முன்மொழியப்பட்டால் அவரையும் அல்லது ஒன்றிற்கும் மேற்பட்டவர்கள் முன்மொழியப்பட்டால் பொதுச் சபை உறுப்பினர்கள் இரகசிய வாக்களித்து தேர்வு செய்யப்படுவார் என 63 வருடங்களின் முன்னர் அதாவது 1961 ஆம் ஆண்டு எழுதப்பட்ட தமிழரசுக் கட்சியின் யாப்பிலேயே சொல்லப்பட்ட ஓர் விடயமாகும்.
இதற்கமைய இடம்பெறவுள்ள தமிழரசுக் கட்சியின் 17 ஆவது தேசிய மாநாட்டில் தெரிவு செய்யப்பட வேண்டிய தலைவரிற்காக மூவரின் பெயர்கள் இப்போது பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதற்கு பொதுச் சபை உறுப்பினர்கள் வாக்களித்தே தமது கட்சிக்கான தலைவரை தேர்வு செய்யவுள்ளனர்.
தமிழரசுக் கட்சிக்கு 1966இல் உடுவிலில் இடம்பெற்ற மாநாட்டின்போது க.பொ.இரத்தினம் செயலாளராக வர விரும்பி அந்த முயற்சியில் ஈடுபட்டார். அப்போது தந்தை செல்வாவின் தலையீட்டினால் அமிர்தலிங்கம் செயலாளரானார்.
இம் முறை தலைவர் தேர்விற்கு மொத்தம் 343 பேர் மட்டுமே தகுதி உடையவர்களாகவே காணப்படுகின்றனர்.+
17 ஆவது தேசிய மாநாடு ஆரம்பமாகும் தினமான ஜனவரி. 27 ஆம் திகதி தற்போதைய தலைவர் புதிய தலைவரின் பெயரை உத்தியோகபூர்வமாக அறிவிப்பார்.
இங்கே வாக்களிக்கும் உரிமைகொண்டோர், வடக்கு கிழக்கில் உள்ள தமிழர் பிரதேச செயலக ரீதியில் அமைக்கப்படும் கிளைகளில் இருந்து தலா 05 பேரும் கொழும்புக் கிளைக்கு 5 பேருடன் தற்போதைய மத்திய செயற்குழுவில் இருக்கும் 43 பேருடன் மேலதிகமாக தலைவரால் (தற்போதைய) பரிந்துரைக்கப்படும் 12 பேரும் இந்த இரகசிய வாக்களிப்பில் வாக்களிக்க தேர்வாகியுள்ளனர்.
இதற்கமைய யாழில் 15 கிளை,மட்டக்களப்பில் 10 கிளைகள், அம்பாறையில் 07, திருகோணமலையில் 06, வவுனியாவில் 04, முல்லைத்தீவு மற்றும் மன்னாரில் தலா 05 கிளைகளுடன் கிளிநொச்சியில் 4 கிளைகளும், கொழும்பில் ஒரு கிளையும் என்ற அடப்படையிலேயே இந்த 57 கிளைகள் உள்ளன.
அவ்வகையில் மாவட்டரீதியில் வாக்களிக்கத் தகுதிபெற்றவர்களாக யாழில் 94 பேரும், மட்டக்களப்பில் 60, அம்பாறை 38, திருகோணமலை 37, வவுனியா 23, , கிளிநொச்சி 23, ,மன்னார் 27, முல்லைத்தீவில் 28 பேருக்கும் வாக்குரிமை உள்ள அதே நேரம் கொழும்பில் 08 பேருக்கும் வாக்குரிமை உள்ளது.
இவ்வாறு இந்த 343 பேரும் வாக்களித்து தேர்வு செய்யவுள்ள தலைவரை அந்தக் கட்சியின் தொண்டர்கள், ஆதரவாளர்கள், வாக்காளர்களிற்கு அப்பால் இராஜதந்திரிகளுடன் தமிழரசுக் கட்சியை சிதைக்க வேண்டும் அல்லது அழிக்க வேண்டும் எனத் துடிப்பவர்கள்கூட அக்கறையாக காத்திருக்கின்ற நிலையிலேயே போட்டியிடும் 3 வேட்பாளர்களில் ஒருவர் அதிக அக்கறை காட்டவில்லை. ஏனைய இருவரும் அதில் சளைத்தவர்கள் அல்லர்.
அவர்கள் தமக்குத் தெரிந்த இராஜதந்திர மதி நுட்பங்களை பயன்படுத்துகின்றனர். இவற்றின் மத்தியில் 21ஆம் திகதி காலை 10 மணிக்கு கூடும் கூட்டத்தை தொடர்ந்து தேர்விற்கான வாக்களிப்பும் இடம்பெற்று மாலை 2 மணியளவில் முடிவு அறியப்படும்.
இவ்வாறான ஓர் கட்சித் தலைவருக்கான தேர்வே இன்று அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலின் முடிவிற்காக காத்திருப்பவர்கள் போன்று உலகெங்கும் எதிர்பார்த்து காத்திருப்பதோடு நாமும் காத்திருக்கின்றோம். சிறீதரன் அல்லது சுமந்திரன் இருவரில் யார் தமிழரசுக் கட்சியின் அடுத்த தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், அவரது பதவிக்காலம் மிகவும் சவால்களும் சிக்கல்களும் நிறைந்ததாகவே காணப்படும். உள்நாடு மற்றும் பன்னாட்டு ராஜதந்திர நகர்வுகளுக்கு மத்தியில் தமிழ் மக்களின் அபிலாஷைகளை புதிய தலைவர் எப்படி முன்னெடுத்துச் செல்வார், அவர் இதர தமிழ் கட்சிகளிடமிருந்து எழும் போட்டியை தேர்தல் காலத்தில் எப்படி சமாளிப்பார் போன்ற விடயங்கள் இனிவரும் காலங்களில் தெரியவரும்.
எவ்வாறாயினும் அந்த பாதை மலர் பாதையாக இருக்காது, முட்கள் நிறைந்ததாகவே இருக்கும் என்பதில் ஐயமில்லை.