LOADING

Type to search

இலங்கை அரசியல்

திருக்கோவில் மரதன் ஓடிய 16 வயது மாணவன் மயங்கி வீழ்ந்து வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி மரணம்

Share

– மரணத்துக்கு நீதி கோரி மக்கள் ஆர்பாட்டம்

(கனகராசா சரவணன்)

திருக்கோவில் பிரதேசத்தில் பாடசாலை ஒன்றின் இல்லவிளையாட்டு போட்டியை முன்னிட்டு 11-03-2024 திங்கட்கிழமை அன்று இடம்;பெற்ற மரதன் ஓட்டப் போட்டிலில் பங்கு பற்றிய 16 வயது மாணவன் ஒருவன் மயங்கி வீழ்ந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவத்தையடுத்து திருக்கோவில் ஆதார வைத்தியசாலையின் கவலையீனம் காரணமாக மாணவன் உயிரிழந்துள்ளார் என குற்றச்சாட்டு தெரிவித்து வைத்தியசாலைக்கு முன்னால் பொதுமக்கள் ஒன்று திரண்டதையடுத்து அங்கு பெரும் பதற்ற நிலையையடுத்து பொலிசார் பலத்த பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர்.

திருக்கோவில் 3 ம் பிரிவு துரையப்பா வீதியைச் சேர்ந்த 16 வயதுடைய ஜெயக்குமார் விதுர்ஜன்; என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

திருக்கோவில் மெதடிஸ் மகா வித்தியாலய வருடாந்த இல்லவிளையாட்டுப் போட்டியை முன்னிட்டு சம்பவதினமான அன்று காலை 7.00 மணிக்கு 16 வயது மாணவர்களுக்கான மரதன் ஓட்டப் போட்டி பாடசாலையில் இருந்து ஆரம்பித்து திருக்கோவில் அக்கரைப்பற்று பிரதான வீதி ஊடகா களுதாவளை பிள்ளையர் கோவில்வரை சென்று பாடசாலையை நோக்கி ஓடிக் கொண்டிருந்த மாணவன் பாடசாலைக்கு அருகில் சுமார் 7.35 மணியளவில் திடீரென மயங்கி வீழ்ந்ததையடுத்து மாணவனை திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் கொண்டு சென்று அனுமதித்தனர்

இதனை தொடர்ந்து மேலதிக சிகிச்சைக்காக அக்கரைப்பற்று ஆதாரவைத்தியசாலையில் 11 மணிக்கு அனுமதித்த நிலையில் மாணவன் உயிரிழந்துள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது

இதேவேளை அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் அங்கு மாணவன் சுமார் ஒரு மணித்தியாலத்திற்கு முன்னர் உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளதாகவும் திருக்கோவில் ஆதார வைத்தியசாலை வைத்தியர்கள் சுமார் 2 மணித்தியாலயத்திற்கு மேலாக மாணவனுக்கு சிகிச்சையளிக்வில்லை எனவும் மாணவனின் உடல்நிலை மோசமாக சென்று கொண்டிருந்தும் அவரை உடனடியாக மேலதிக சிகிச்சைக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லாமல் இழுத்தடித்ததனால் மாணவன் உயிரிழந்துள்ளார். எனவே வைத்தியர்களின் செயற்பாட்டினால் மாணவன் உயிரிழந்துள்ளார் என உறவினர்கள் தெரிவித்தனர்.

அதேவேளை உயிரிழந்த மாணவனின் சக மாணவர்கள் பிரதேச மக்கள் உறவினர்கள் வைத்தியசாலைக்கு முன்னால் ஒன்றுதிரண்டு மாணவனின் மரணத்திற்கு வைத்தியசாலையே பொறுப்பு அவருக்கு நீதி வேண்டும் அதேவேளை அப்போது கடமையாற்றிய வைத்தியர்கள் பணிநீக்கம் செய்யப்படவேண்டும் என கோரி தொடர்ந்து வைத்தியசாலைக்கு முன்னால் பொதுமக்கள் ஒன்று திரண்டதையடுத்து அங்கு பெரும் பதற்ற நிலை ஏற்பட்டது.

இதனையடுத்து வைத்தியசாலைக்கு முன்னால் பொலிசார் விசேட அதிரடிப் படையினர் வரவழைக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுவருவதுடன் தொடர்ந்து மக்கள் வைத்தியசாலைக்கு முன்னால் ஒன்று திரண்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்