LOADING

Type to search

இலங்கை அரசியல்

ஒரு மையத்திலிருந்து திட்டமிடப்படாத தமிழ் எதிர்ப்பு | யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார்

Share

தமிழ் மக்கள் எத்தனை விடையங்களில் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது? தமிழ் அரசியல்வாதிகளும் செயல்பாட்டாளர்களும் எத்தனை களங்களில் தோன்ற வேண்டியிருக்கிறது? போராட வேண்டி இருக்கிறது? அண்மை வாரங்களாக நாட்டில் நடப்பவற்றைத் தொகுத்துப் பார்ப்போம்.

கடந்த ஆறு மாதங்களாக போதைப்பொருள் வலைப் பின்னலுக்கு எதிராகயுக்தியஎன்ற ஒரு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதன் கீழ் போதைப் பொருள் வணிகத்தோடு தொடர்புடையவர்கள் நூற்றுக்கணக்கில் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். சிலர் கொல்லப்பட்டதாகவும் தகவல். போதைப்பொருள் விநியோகஸ்தர்களை இரும்புக் கரம் கொண்டு அடக்குவது தவிர்க்க முடியாதது என்று அதில் சம்பந்தப்பட்ட அமைச்சர் திரும்பத் திரும்பக் கூறுகிறார். அதனை உலகளாவிய மனித உரிமை அமைப்புகள் பல ஏற்றுக்கொள்ளவில்லை. கண்டித்திருக்கின்றன.

நாடாளுமன்றத்தில் ஏற்கனவே நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டு விட்டது. சிவில் சமூகங்களை அரசு சாரா நிறுவனங்களை கட்டுப்படுத்துவதற்கான சட்டம் ஒன்றை உருவாக்குவதற்கான சட்டமூலம் வரையப்பட்டிருக்கிறது. புதிய பயங்கரவாத தடைச் சட்டம் ஒன்றை கொண்டு வருவதற்கான சட்டமூலமும் மேசையில் உள்ளது. மீனவர்கள், கடல் சம்பந்தமாக ஒரு புதிய அதிகார சபையை உருவாக்குவதற்குரிய சட்டமூலம் மேசையில் உள்ளது. இல்லத்தரணிகள் ஊடகங்களை கட்டுப்படுத்துவதற்கான ஒரு சட்டமூலமும் மேசையில் உள்ளது. இவை யாவும் நாடாளுமன்றத்தில் நடப்பவை.

இது தொடர்பான விவாதங்களில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உரையாற்றுகிறார்கள். நிகழ் நிலை பாதுகாப்புச் சட்டத்துக்கு எதிராக சுமந்திரன் ஒரு வழக்கையும் தொடுத்திருந்தார். அதில் சாதகமான தீர்ப்புக் கிடைக்கவில்லை. நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்துக்கு எதிராகவும் உலகளாவிய மனித உரிமை அமைப்புகள் கருத்து தெரிவித்துள்ளன.

இது தென்னிலங்கையில். தமிழ் மக்களின் தாயகத்தைத் தொகுத்துப் பார்த்தால், பல ஆண்டுகளாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் முடிவின்றிப் போராடிக் கொண்டிருக்கிறார்கள்

அடுத்ததாக,மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் நிலத்தை ஆக்கிரமிக்க முற்படும் அத்துமீறிய சிங்கள விவசாயிகளுக்கு எதிராக, மட்டக்களப்பில், பண்ணையாளர்களும் விவசாயிகளும் அரசியல் செயற்பாட்டாளர்களும் தொடர்ச்சியாகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

அடுத்ததாக, அண்மையில் சிவராத்திரி விரதத்தின்போது வெடுக்கு நாறி மலையில் கூடியிருந்தவர்களை போலீசார் மிரட்டியிருக்கிறார்கள். எட்டுப் பேரைக் கைது செய்து சில நாட்கள் சிறையில் வைத்திருக்கிறார்கள்.

இடையில், இம்மாதத் தொடக்கத்தில், இந்தியாவில் இருந்து சாந்தனின் உடல் கொண்டு வரப்பட்டது. சாந்தன் ராஜீவ் காந்தி மற்றும் பத்மநாபா கொலைகளில் குற்றம் சாட்டப்பட்டு இந்தியச் சிறைகளில் இரண்டு ஆயுள் தண்டனைகளை முடித்தவர். 2022 ஆம் ஆண்டின் இறுதியில் அவர் இந்திய உச்ச நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டிருந்தார். எனினும் அதன் பின்னரும் அவர் சிறப்பு முகாமில் வைக்கப்பட்டிருந்தார். அவரை நாட்டுக்குள் கொண்டு வரத் தேவையான பொருத்தமான நடவடிக்கைகளை தமிழ் அரசியல்வாதிகள் பொருத்தமான நேரத்தில் செய்திருக்கவில்லை. அதனால் 15 மாதங்களாக சிறப்பு முகாமில் இருந்த சாந்தனின் உடல் கெட்டு, ஒரு கட்டத்தில் அவர் உடல்நலக் குறைவினால் இறந்து போய்விட்டார். சாந்தனின் மரணம் தமிழ்த் தேசிய அரசியலைப் பொறுத்தவரை ஒரு தோல்வி.

அடுத்தது, தமிழரசுக் கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் தலைமை போட்டி. அது நீதிமன்றம் வரை சென்று விட்டது. நீதிமன்றத்தின் அடுத்த தீர்ப்புக்காகக் கட்சி காத்திருக்கின்றது. தமிழில் பொதுவாக ஒரு நம்பிக்கை உண்டு. ஆஸ்பத்திரிக்கும் நீதிமன்றத்துக்கும் ஒருவர் போகத் தொடங்கி விட்டார் என்றால், அவருக்குக் கெட்ட காலம் தொடங்கி விட்டது என்று பொருள்.

இப்படிப்பட்டதோர் பின்னணிக்குள்தான், அண்மையில், ஐநா மனித உரிமைகள் பேரவையில், அதன் ஆணையாளருடைய வாய்மூல அறிக்கை வெளிவந்தது. அந்த அறிக்கையானது இலங்கை அரசாங்கத்தின் மீது அழுத்தங்களைப் பிரயோகிக்கக்கூடிய விடயங்களைக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக கட்டுரையின் தொடக்கத்தில் கூறப்பட்ட நாட்டின் ஜனநாயகச் சூழலை நாசம் செய்யக்கூடிய சட்டமூலங்கள் மற்றும் சட்டங்களுக்கு எதிராக ஆணையாளர் கருத்து தெரிவித்துள்ளார்.

மேற்படி அறிக்கை தமிழ் ஊடகங்களில் வெளிவந்தது. எனினும் அதே காலப்பகுதியில் சாந்தனின் உடல், வெடுக்குநாறி மலையில் மலையில் சிவராத்திரி.. போன்ற விடயங்களின் பரபரப்புக்குள், உணர்ச்சிக் கொந்தளிப்புக்குள் நா மனித உரிமைகள் ஆணையாளருடைய அறிக்கை குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய கவனிப்பைப் பெறவில்லை.

எல்லா விடயங்களும் ஏதோ ஒரு விதத்தில் தமிழ் மக்களோடு சம்பந்தப்பட்டவை. இந்த விடயங்கள் தொடர்பான சிங்கள அரசியல் சமூகத்தின் செயற்பாடுகள் எவ்வாறு உள்ளன? தமிழ் அரசியல் சமூகத்தின் செயற்பாடுகள் எவ்வாறு உள்ளன?

சிங்கள மக்கள் ஓர் அரசுடைய தரப்பு. எனவே அங்கு இந்த விவகாரங்களை கையாள்வதற்கு சம்பந்தப்பட்ட அமைச்சுகள், திணைக்களங்கள், நிபுணத்துவம், ஆளணிகள், போதிய வளம் போன்ற எல்லாமே உண்டு. ஆனால் தமிழ் மக்களைப் பொறுத்தவரை என்ன உண்டு?

இதுதான் பிரச்சினை. தமிழ் மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் எல்லா நடவடிக்கைகளும் ஒரு மையத்தில் இருந்து திட்டமிடப்படுகின்றன. ஓர் அரசு இயந்திரத்தின் வெவ்வேறு பகுதிகள் அவற்றை முன்னெடுக்கின்றன. அவற்றுக்கு இடையே இணைப்புகள் உண்டு. அவை ஒரு பொதுவான நிகழ்ச்சி நிரலை வெவ்வேறு மட்டங்களில், வெவ்வேறு வடிவங்களில் முன்னெடுக்கின்றன என்பதுதான் உண்மை.

இங்கு ஒரு உதாரணத்தைச் சுட்டிக் காட்டலாம். நிலப் பறிப்பு, சிங்கள பௌத்த மயமாக்கல் போன்ற நடவடிக்கைகளில்,பகலில் தீவிரமான பிக்குகள் முன்னணியில் நிற்பார்கள். அவர்களை போலீசாரோ படையினரோ கட்டுப்படுத்த மாட்டார்கள். ஏன் ஆளுநர், அவருடைய அதிகாரிகள், யாராலும் அவர்களைக் கட்டுப்படுத்த முடியாது. அவர்கள் இலங்கைத் தீவில் சட்டங்கள் எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டவர்களாக நடந்து கொள்வார்கள். அதேசமயம் அரசுத் திணைக் களங்கள் அந்த நடவடிக்கையை சட்டரீதியாகச் செய்யும். அதை மீறியதாகக் கூறி தமிழ் அரசியல் செயற்பாட்டாளர்களை போலீஸ் கைது செய்யும். அதாவது திணைக்களங்கள் சட்டத்தை அமல்படுத்தும் பொழுது, அதற்கு எதிர்ப்புக் காட்டும் தமிழ் அரசியல் செயற்பாட்டாளர்களை போலீஸ் கைது செய்யும். ஆனால் பிக்குக்களை கைது செய்வதில்லை. ஒரே நாடு இரண்டு சட்டங்கள்.

இவ்வாறு பிக்குகளும் திணைக்களங்களும் பொலிசும் சட்டப்படி என்று கூறிக்கொண்டு தமது நடவடிக்கைகளை முன்னெடுத்துக் கொண்டிருக்க, இரவில் ஆக்கிரமிக்கப்பட்ட இடங்களில் படைத்தரப்பு விகாரைகளையும் புதிய கட்டுமானங்களையும் கட்டி முடிக்கும். இலங்கைத் தீவிலேயே அதிகம் ஆசீர்வதிக்கப்பட்ட ஒரு கட்டமைப்பு அது.படைத்தரப்புக்கு என்று ஒரு பொறியியல் நிர்மாணப் பிரிவு உண்டுபோதிய வளங்கள் அவர்களுக்கு உண்டு. தேவையான இடத்தில் இரவோடு இரவாக விகாரைகளைக் கட்டிமுடிக்க அவர்களால் முடியும்.

எனவே இப்பொழுது தொகுத்துப் பார்த்தால் என்ன தெரிகிறது? இவை அனைத்தும் சிங்கள பௌத்த மயமாக்கல் என்ற அரசு கொள்கையை அமல்படுத்தும் வெவ்வேறு வடிவிலான நடவடிக்கைகள்தான். இந்த நடவடிக்கைகளின் முடிவு எப்படி இருக்கும்? தமிழ் நிலம் பறிக்கப்படும். தமிழ் மரபுரிமைச் சொத்து சிங்களமயமாக்கப்படும்.

அப்படியென்றால் இதைத் தமிழ் மக்கள் எப்படி எதிர்கொள்ள வேண்டும்?

ஒடுக்கும் தரப்பு அதனை ஒரு மையத்தில் இருந்து திட்டமிட்டு, வெவ்வேறு உபகரணங்களின் ஊடாக, அதை முன்னெடுக்கும் பொழுது, தமிழ்த் தரப்பும் அவ்வாறு ஒரு மையத்தில் இருந்து அதைத் திட்டமிட்டு, ஒரு மையத்திலிருந்து அதை அணுக வேண்டும். ஆனால் அப்படியில்லை. தமிழ் மக்கள் ஓர் அரசுடைய தரப்பு அல்ல. அதனால் தமிழ் மக்களிடம் மையமான கட்டமைப்புகள் இல்லை. வளமும் இல்லை. அதைக் குறித்து தமிழ் அரசியல்வாதிகளிடம் பொருத்தமான அரசியல் பொருளாதார தரிசனங்களும் இல்லை.

இப்படிப்பட்டதோர் பின்னணியில், தாயகத்தில் லண்டனை நோக்கியும் கனடாவை நோக்கியும் பெருமெடுப்பில் பெருந்தொகையானவர்கள் புலம்பெயர முயற்சிக்கின்றார்கள். இவர்கள் எத்தனை பேர் தமது முயற்சிகளில் வெற்றி அடைகிறார்கள்? இது தொடர்பாக ஒரு மையத்தில் இருந்து திரட்டப்பட்ட புள்ளிவிவரங்கள் கிடையாது. எந்த ஒரு தமிழ்க் கட்சியிடமாவது ஒரு மையத்தில் இருந்து திரட்டப்பட்ட புள்ளிவிவரம் அல்லது தகவல்கள் உண்டா? உதாரணமாக, அண்மை மாதங்களாக அதிகரித்து வரும் புலப் பெயர்ச்சியால் எத்தனை ஆயிரம் பேர் இதுவரை புலம் பெயர்ந்திருக்கிறார்கள்? யாரிடமாவது புள்ளிவிவரம் உண்டா? ஆனால் அந்தப் புலப்பெயர்ச்சி தொடர்பாக தமிழ்ப் பகுதிகளுக்கு வரும் ராஜதந்திரிகள் கேட்கிறார்கள். தாயகத்தில் தமிழ் ஜனத்தொகை சிறுத்துக் கொண்டே போகிறது

அதே சமயம் சிங்கள பௌத்த மயமாக்கலுக்கு எதிரான தமிழ் நடவடிக்கைகளோ ஒரு மையத்தில் இருந்து திட்டமிடப்படவில்லை. அவை சொரியலானவை, தொடர்ச்சியற்றவை. தமிழ் எதிர்ப்பு ஒரு மையத்தில் இருந்து திட்டமிடப்படவில்லை, முன்னெடுக்கப்படவில்லை.இந்த வெற்றிடத்தில்தான் கடந்த ஞாயிற்றுக் கிழமை,பத்தாந் திகதி, அதாவது வெடுக்குநாறி மலையில் எட்டுத் தமிழர்கள் கைது செய்யப்பட்டு இரண்டு நாட்களின் பின் யாழ். முற்ற வெளியில் விமானப்படையின் கண்காட்சியில், கட்டுப்படுத்த முடியாத அளவுக்குள் மக்கள் திரண்டார்கள்.