LOADING

Type to search

இலங்கை அரசியல்

மண்ணுக்கும் மரங்களுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான ஒர் உணர்வு பூர்வமான பந்தம்

Share

“மனிதனோட ஆயுள்ரேகை மரத்தில் ஓடுமே – அது
மரணமில்லா வாழ்வுக்காகத் தூறல் போடுமே”

-கவிஞர் யுகபாரதி

மரங்களை நடுகை செய்வதன் அவசியம் பற்றிப் பலரும் பேசிவருகிறோம். மரங்கள் மனிதர்கள் உயிர் வாழ்வதற்குத் தேவையான பிராண வாயுவைத் தரும். உண்ண உணவு தரும். நோய்க்கு மருந்து தரும். இருக்கக் குடில் தரும். எரிக்க விறகு தரும், நிற்க நிழலும், வெம்மை தணிவிக்க மழையும் தரும். வெட்டு மரமாகி கைநிறையக் காசு தரும். இப்படி, மரங்கள் மனிதர்களுக்குத் தரும் பற்பல பயன்களைப் பட்டியலிட்டு மனிதர்கள் உயிர்வாழ மரங்களின் இன்றியமையாமையை வலியுறுத்தி வருகிறோம்.

மரங்கள் மனிதர்களுக்கு மாத்திரம் பய ன் தருவன அல்ல. பூமியில் வாழுகின்ற அனைத்து உயிரினங்களினதும் ஆதாரமே மரங்கள்தான். ஆனால், கைத்தொழிற் புரட்சியோடு சூழல் மையச் சிந்தனையில் இருந்து விடுபட்டு யாவற்றையும் எம்மை மையப்படுத்திச் சிந்திக்கும் மரபை வளர்த்துக் கொண்ட நாம் மரங்களையும் எமக்குப் பயன்படுகின்றவை என்ற அளவு கோலாலேயே அளக்கத் தலைப்பட்டிருக்கின்றோம். மரங்கள் எமக்கானவை என்ற இந்த மனித மையச் சிந்தனை கூட மரங்களுக்கும் எங்களுக்கும் இடையிலான தொடர்புகளைப் பூரணமாகத் தரிசிக்கவில்லை. மரங்களின் பயன்களைப் பற்றிப் பேசும்போது மரங்களை அறிவார்ந்த ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் அணுகுகின்றோமேயன்றி மரங்களுக்கும் எங்களுக்கும் இடையிலான பண்பாட்டு உறவை மறந்து வருகின்றோம்.

மரங்களுக்கும் எங்களுக்கும் இடையிலான பந்தம் மிகவும் ஆதியானது. மரங்கள் எங்களின் தாய் வீடுகள். ஆதி மனிதன் மரங்களில் பரண்கள் அமைத்து வாழ்ந்தான் என்பதால் மட்டுமே மரங்கள் மனிதர்களின் தாய் வீடுகள் அல்ல. ஆதி மனிதனின் தாயாதிகள் தாவித் திரிந்து கூடிக் குலாவிய இடங்கள் மரங்கள். பரிணாமப் பாதையில் ஆதிமனிதனின் தாயாதிகளும் குரங்குகளின் தயாதிகளும் ஒரு பொது முதாதியில் இருந்தே கிளைத்துப் பிரிந்தன. இதற்கு எமது முதுகெலும்பில் கடைசி எலும்பாக உள்ள குயலலகே சாட்சி. குரங்குகள் கிளை தாவும்போது தவறி வீழ்ந்து விடாமல் இருக்கவும், தூக்கத்தில் நிலை தடுமாறிச் சரிந்து விழாமல் இருக்கவும் தமது வால்களை ஒரு பற்றுறுப்பாகப் பயன்படுத்தி வருகின்றன. ஆனால், மனிதர்களின் பரிணாமத்தில் வால்களின் தேவை இல்லாமல் போய்விட்டது. அந்த வால் எலும்புகளே ஒன்றாகத் திரண்டு உருச்சிறுத்து குயிலலகு (tail bone) என்ற ஒற்றை எலும்பாக முள்ளந்தண்டின் கடைசியில் ஒட்டியிருக்கின்றது.

மனிதப் பரிணாமத்தில் குயிலலகு எலும்பு தொழிலற்றுப்போன ஒரு பதாங்க எச்சமாக ஒட்டிக்கொண்டிருந்தாலும் அதில் ஆபத்துக்கு உதவும் எத்தனம் ஆச்சரியப்படும் விதத்தில் இன்றளவும் குடிகொண்டுதான் இருக்கிறது. மரக்கிளைகளில் நாம் ஊஞ்சல் கட்டி ஆடும்போது ஊஞ்சல் உயரே செல்லும் ஒவ்வொரு தடவையும் எமது முதுகுத்தண்டின் முனை கூச்ச உணர்வெடுத்துக் குறுகுறுக்கிறது. அந்த உணர்வை நாம் அனுபவித்தோமேயன்றி அதற்கான காரணத்தை அப்போது தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டியோர் அல்லர். ஊஞ்சலி;ல் உயரே செல்லும் ஒவ்வொரு தடவையும் கீழே விழுந்து விடுவோமோ என்ற பயம் குடிகொள்ள எம்மை அறியாமலேயே மரக்கிளைகளைப் பற்றிவிட வேண்டும் என்ற பழைய நினைப்பில் எமது குயிலலகு எலும்பு வாலாட்டத் தொடங்குகிறது. இதுவே கூச்ச உணர்வாக எம்மால் உணரப்படுகிறது. எமது மூதாதிகளின் வீடுகள் மரங்கள்தான் என்பதற்கு இப்படி வலுவான பல ஆதாரங்கள் இருந்த போதும் புதிய வீடுகள் கட்டிக் குடிபுகத் தொடங்கியதும் வாழ்ந்த மரங்களை நன்றி மறந்தவர்களாகத் தறித்தழிக்கத் தலைப்பட்டிருக்கிறோம்.

மரங்கள் மனிதர்களின் ஆதிவீடுகள் மாத்திரமல்ல் ஆதித் தெய்வங்களும் மரங்கள்தான். மனிதர்கள் தெய்வங்களுக்கு உருவங்களைக் கொடுக்கும்வரை மர வழிபாட்டைக் கொண்டவர்களாகவே இருந்திருக்கிறார்கள். ஆதி மனிதர்கள் திறந்த வெளிகளில் நடமாடத் தொடங்கிய போது இடி, மின்னல், புயல், மழை போன்ற இயற்கைச் சீற்றங்களுக்கு அஞ்சி மரங்களின் கீழேயே அடைக்கலம் தேடினார்கள். கொள்ளை நோய்கள் கொத்துக் கொத்தாக உயிர்களைப் பறித்தபோது பச்சிலை மருந்து தேடித் தாவரங்களிடமே தஞ்சமடைந்தார்கள். இயற்கைச் சீற்றங்களில் இருந்தும் நோய்களில் இருந்தும் தங்களைக் காப்பாற்றி வருகின்ற மரங்களை அவர்கள் தங்களைவிட மேலான சக்தியாக நினைத்து வழிபட ஆரம்பித்தார்கள்.
சங்ககாலத்தில் வேப்பமரத்தில் தெய்வம் உறைந்துள்ளதாகக் கருதி இறைச்சி படைத்து வழிபட்டதைக் கருவூர்க் கந்தப்பிள்ளைச் சாத்தனார் என்ற புலவர் அகநானூறில் இடம்பெற்றுள்ள பாடலொன்றில் “தெய்வம் சேர்ந்த பராரை வேம்பில் கொழுப்பு ஆ எறிந்து” என்று குறிப்பிட்டுள்ளார். ஆலமரத்தைக் ‘கடவுள் ஆலம்’ என்றும், வேங்கை மரத்தை ‘எரிமருள் வேங்கைக் கடவுள் காக்கும்’ என்றும் நற்றிணையும் மரங்களைத் தெய்வங்களாக வழிபடுகின்றது. இவ்வாறு மரங்களைத் தெய்வங்களாகத் தொழுத தொல்வரலாறு தமிழர்களுக்கு உண்டு. இன்றும் அதன் தொடர்ச்சி உள்ளது. தமிழகத்தின் சிற்றூர்கள் பலவற்றில் அரசும் வேம்பும் அருகருகாக வளர்ந்திருந்தால் அவ்விடத்தை வழிபாட்டிடமாகக் கொள்வதோடு, அரசை ஆணாகவும், வேம்பைப் பெண்ணாகவும் கருதி இரு மரங்களுக்கும் ஊர்கூடித் திருமணச் சடங்குகளையும் நிகழ்த்தி வருகிறார்கள்.

தெய்வங்களுக்கு உருவங்களைக் கற்பிதம் செய்து மரங்களுக்குக் கீழே இருத்திச் சிறு தெய்வ வழிபாடு ஆரம்பித்தபோது அதுவரை இறையாக வழிபட்ட மரங்கள் தெய்வங்களுக்கு நிழல் தரும் உறையாக மாறியது. புளியடி வைரவர், கொண்டலடி வைரவர், மருதடிப் பிள்ளையார், அத்தியடிப் பிள்ளையார், அழிஞ்சில் பிள்ளையார், அரசடி அம்மன் என்று தெய்வங்கள் மரத்தின் பெயரோடு அழைக்கப் பெறுவது இதற்கான சாட்சியமாகும். பெரும்பாலான ஆலயங்களில் இம்மரங்கள் தல விருட்சங்களாக வணங்கப்படுகின்றன. ஈழத்தில் திருநெல்வேலி தலங்காவற் பிள்ளையார் கோவில் அழிஞ்சில் மரத்தையும், திருநெல்வேலி பத்திரகாளி அம்மன் கோவில் தேத்தா மரத்தையும், மன்னார் திருக்கேதீஸ்வரம் வன்னி மரத்தையும், திருகோணமலை கோணஸ்வரம் கல்ஆலம் மரத்தையும், ஒட்டுசுட்டான் தான்தோன்றீச்சரம் கொக்கட்டி மரத்தையும் தல விருட்சங்களாகப் போற்றுகின்றன. தமிழகத்தில் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் மாமரத்தையும், சிதம்பரம் நடராஐர் கோவில் தில்லை மரத்தையும் , மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கடம்ப மரத்தையும் , காசி விஸ்வநாதர் கோவில் செண்பக மரத்தையும், குற்றாலத்தின் திருகுற்றாலநாதர் கோவில் பலா மரத்தையும் தலவிருட்சங்களாகத் துதிக்கின்றன. இவை சில உதாரணங்கள்தாம்.

மனிதர்களுக்கும் மரங்களுக்குமிடையிலான தொல்மதப் பண்பாட்டின் அடையாளமாகக் கோயிற் காடுகளும் விளங்கியுள்ளன. சிலப்பதிகாரத்தில் இடம்பெற்றுள்ள “சம்பாதியிருந்த சம்பாதி வனமும் தவாநீர்க் காவிரிப் பாவைதன் தாதை கவேரனாங் கிருந்த கவேரவனமும்” என்ற பாடலின் மூலம் பூம்புகாரில் சம்பாதிவனம், சுவேரவனம் ஆகிய கோவிற்காடுகள் இருந்ததை அறியமுடிகிறது. மன்னார் திருக்கேதீஸ்வரம் மீது திருஞானசம்மந்தர் பாடிய தேவாரமொன்றில் ‘மாதோட்ட நன்னகரில்’ ஆலயம் அமைந்துள்ளது பற்றிக் குறிப்பிட்டிருப்பதை அங்கு பெரியளவில் மாமரங்களாலான தோட்டம் அல்லது காடு அமைந்திருந்ததாக எடுத்துக்கொள்ளலாம். தமிழ் நாட்டில்; இக்காடுகள் சோலைக்காடு, சாமிச்சோலை என்ற பெயர்களிலும், கேரளாவில் காவு, சர்ப்பக்காடு போன்ற பெயர்களிலும் அழைக்கப்படுகி;ன்றன. தமிழ்நாட்டில் ஏறத்தாள 1670 கோவில் காடுகள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இக்காடுகள் மக்களின் நம்பிக்கையும் பயமும், பக்தியும் ஒருங்கே அமையப்பெற்றவை எனபதால் இங்;கு எந்த மரங்களும் தறிக்கப்படுவதில்லை, எந்தக் கிளைகளும் வெட்டப்படுவதுமில்லை. எனினும் சிறு தெய்வ வழிபாடு பெருந்தெய்வ வழிபாடாகி சுற்றுமதில் பிரகாரம், கோபுரம் என்று ஆலயங்கள் விரிவடைய ஆரம்பித்தபோது மரங்களும் தமது இறை மகிமையை மெல்ல இழக்கத் தொடங்கின.

பண்டைத் தமிழர்களுக்கும் மரங்களுக்கும் இடையிலான பிணைப்பு இறை நம்பிக்கையோடு முற்றுப் பெறவில்லை. இன்னும் ஏராளமானவற்றைத் தமிழ்ப் பண்பாட்டு மரபுகளின் பொக்கிசங்களாகத் திகழும் சங்க இலக்கியங்கள் பதிவு செய்து வைத்துள்ளன. தற்போதைய குடியாட்சியில் அரசுகள் தேசிய மரம், தேசிய மலர் என்ற தேசியச் சின்னங்களைக் கொண்டிருப்பதைப் போன்று முடியாட்சியில் மூவேந்தர்களும் ஒவ்வொரு மரங்களோடு தங்களை அடையாளப்படுத்தியிருந்தார்கள். சேரர்கள் பனையையும் சோழர்கள் அத்தியையும் பாண்டியர்கள் வேம்பையும் தங்களது குலக் குறிச் சின்னங்களாகக் கொண்டாடினார்கள். இவற்றின் மலர்களிலான மாலைகளைச் சூடிக் கொண்டார்கள். பண்டைத் தமிழ் மன்னர்கள் தங்கள் ஆட்சி அதிகாரத்தின் , வீரத்தின் பறைசாற்றலாகக் குலக்குறி மரங்களில் ஒன்றைக் காவல் மரமாக ஊரெல்லையில் பாதுகாத்து வந்துள்ளார்கள். சங்க இலக்கியங்கள் கடி மரம் எனச்சுட்டும் இம் மரம் புனிதமரமாகப் போற்றப்பட்டது. வீரர்களின் பாதுகாவலையும் மீறிக் கடிமரம் பகைமன்னன் வசம் வீழ்ந்தால் மரத்துக்குரிய மன்னனும் வீழ்ந்ததாகவே கருதும் போர்மரபு சங்ககாலத்தில் நிலவியுள்ளது.

சங்ககாலத்தில் போரில் ஈடுபட்ட தமிழ் மன்னர்களும் அவர்தம் படையினரும் போரின் ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொரு வகையான மலர்களைச் சூடியிருந்திருக்கிறார்கள். போர் தொடுக்கவுள்ளதற்கான அறிவிப்பாகப் பகைநாட்டின் ஆநிரைகள் கவரப்படுவது சங்க காலத்துப் போர் மரபு. ஆநிரை கவரும் போர் வீரர்கள் வெட்சிப் பூவையும், கவர்ந்து சென்ற பசுக்களை மீட்டுவரச் செல்லும் போர்வீரர்கள் கரந்தைப் பூவையும் சூடியிருந்தார்கள். எதிரியின் ஆள்;புலத்துள் நுழையும்போது வஞ்சிப் பூவையும், கோட்டை கொத்தளங்களைத் வளைத்துத் தாக்கும்போது உழிஞைப் பூவையும,; கொத்தளங்களின் உள்ளே இருந்தவாறு இவர்களின் நுழைவைத் தடுப்பதற்குப் போரிடும் வீரர்கள் நொச்சிப் பூவையும் அணிந்து கொண்டார்கள். போர் உக்கிரமடைந்து; நேருக்குநேர் பொருதும்போது இருதரப்பும் தும்பைப் பூவையும், வெற்றி பெறும் தரப்பு வாகையையும் சூடிக் கொண்டது. போர்க்களத்தில் பூவைச் சூடியவாறு பொருத வரலாறு தமிழ் மன்னர்களுக்கு மாத்திரம் உரித்தான ஒன்றாகவே இருந்துள்ளது. வேறு எவரும் இவ்வாறு செய்ததாக வரலாற்றில் இல்லை.

மரங்களை இரத்த உறவுகளைப் போன்றும் நேசித்தவர்கள் தமிழர்கள். மங்கை ஒருவர் புன்னை மரம் ஒன்றைத் தனது தங்கையாக உருவகித்து வளர்த்த காரணத்தால் அதன் முன்பாகத் தனது நாயகனுடன் அளவளாவ விரும்பாதவளாய் நாணிக்கோணினாள் என நற்றிணை இலக்கியத்தில் உள்ளது. பெண்ணொருவர் அவரிடம் அவரது தலைவன் சொல்லாமல் வேறோர் இடத்துக்குச் சென்றுவிட்ட நிலையில,; தானும் அவரும் இரவில் கூடுகின்றபோது இனிய துணையாக இருந்த வேங்கைமரத்துக்காவது சொல்லும்படி பறவைகளின் மூலம் அவர் தூது அனுப்பியிருக்கலாமே என்று தனது தோழியிடம் வருந்தியதாகக் குறுந்தொகை பதிவுசெய்துள்ளது. தென்னையினதும் கமுகினதும் கன்றுகளை நாம் இப்போதும் பிள்ளைகள் என்று தான் கனிவோடு அழைத்து வருகிறோம். இறந்த உறவுகளின் நினைவாக மரங்களை நாட்டி அந்த உறவுகளின் பெயர்களை அம் மரங்களுக்குச் சூட்டி அழைத்த வழக்கமும் எம்மிடையே இருந்துள்ளது. தமிழகத்தில் சத்தியமங்கலம் காட்டுப் பகுதியில் வாழும் சோளகர் என்ற பழங்குடியினரிடையே தற்போதும் அந்தச் சடங்கு நடைமுறையில் உள்ளது.

மரங்களைத் தெய்வங்களாகவும் குலக்குறிகளாகவும் உறவுகளாகவும் கொண்டாடியவர்களின் வழித்தோன்றல்கள் நாம். மரங்களில் இருந்து ஏதாவது ஒன்றைத் தவிர்க்க முடியாமல் பறிக்க நேர்ந்தாலும் மரங்களிடம் மன்னிப்புக் கேட்டவாறே அதைச் செய்தவர்களின் பரம்பரை நாம். மரங்களில் இருந்து மருந்துக்காக அதன் பகுதிகளை எடுக்கும்போது மரம் சாகுமளவுக்கு மாந்தர்கள் எடுக்க மாட்டார்கள் என்று உறுதிபட நற்றிணையில் கணியன் பூங்குன்றனார்; சொல்லிவைத்துள்ளார். கொழுகொம்பு இல்லாது துவண்டிருந்த முல்லைக்கொடிக்குத் தனது தேரை ஈந்த பறம்பு மன்னன் பாரியின் கொடைத்தன்மை பற்றிக் கபிலர் புறுநானூற்றில் போற்றியுள்ளார். வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன் என்று வள்ளலார் தன்

திருவருட்பாவில் பாடியுள்ளார். ஆனால,; இன்று நம் முன்னோர்கள் மரங்களுடன் கொண்டிருந்த பண்பாட்டுப் பிணைப்பை மறந்தவர்களாக நாம் இன்று எவ்விதக் கருணையும்
இன்றி மரக் கொலைகளைச் செய்து வருகின்றோம். நட்ட மரங்களைக்கூட பராமரிக்காது பட்டுப் போகவல்லவா செய்து வருகிறோம். அறிவியல் வளர்ச்சி எமது பண்பாட்டில் இருந்து வந்த பல நல்ல கூறுகளை இன்று புறமொதுக்கி விட்டது. அவற்றுள் மரங்களுடன் நாம் கொண்டிருந்த உணர்வு பூர்வமான அணுகுமுறையும் ஒன்று. அறிவியல் எப்போதும் அபிவிருத்தியின் பக்கம் சார்ந்ததாகவே இயங்கும். அபிவிருத்தி தன்பாதைக்குக் குறுக்காக நிற்கும் எதனையும், அது மனிதர்களாக இருந்தாலுங்கூட அழிப்பதற்குத் தயக்கம் காட்டுவதில்லை. இதனாலேயே நகர அபிவிருத்தியின்போதும் வீதி அகலிப்பின் போதும் மின் வழித்தடம் மற்றும் தொலைத் தொடர்பு வழித்தடங்களை அமைக்கும் போதும் மாற்று வழிபற்றிச் சிந்திக்காமல் மரங்களைக் குற்றுயிரும் குலையுயிருமாக வெட்டிச் சாய்த்து வருகிறோம். வெட்டிய மரங்களுக்குப் பதிலாக வேறு மரங்களை நடுகை செய்கிறோம் என்று பிராயச்சித்தமும் பேசுகிறோம்.

மரங்களுக்கும் எங்களுக்கும் இடையிலான உணர்வு பூர்வமான பண்பாட்டு உறவைத் தாண்டி வந்துவிட்ட நாம், மரங்களுக்கும் மண்ணுக்கும் இடையிலான உறவைக்கூட மறந்து வருகிறோம். மரங்களுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான உறவுப் பிணைப்பை விட மரங்களுக்கும் மண்ணுக்கும் இடையிலான பிணைப்பு மிக வலுவானது. மிகுந்த உயிரோட்டமானது. மனிதன் தோன்றமுன்னர் இந்த மண்ணில் குடியேறிய மூத்த குடிகள் அல்லவா இவை. மரங்களை நடுகை செய்யும்போது மண்ணுக்கும் மரங்களுக்கும் இடையிலான தொடர்பு குறித்து நாம் சிந்திப்பதில்லை. நடுகை செய்யுமாறு கோரும் இயற்கை ஆர்வலர்கள்கூட எமது மண்ணுக்குப் பொருத்தமான மரங்கள் எவை என்று சொல்வதில்லை. எந்த மரம் என்றால் என்ன எல்லாமே மரந்தானே என்ற எண்ணமே பொதுப் புத்தியில் ஆளவேரூன்றி வருகிறது. இதனால்தான் மகோகனி, தேக்கு, காயா முதலான அயல்நாட்டு மரங்களை நடுவதில் காட்டும் நாட்டம் இந்த மண்ணுக்குச் சொந்தமான மரங்களின் மீது இல்லாது உள்ளது.

இலங்கையில் உள்ள ஈரப்பலா, கொறக்காப்புளி, காட்டுமா, எண்ணெய் மரம் உள்ளிட்ட சில தாவரங்கள் வேறு எந்த நாடுகளினதும் இயற்கைச் சூழலில் காணப்படுவதில்லை. ஒரு பிரதேசத்துக்கு மாத்திரமே உரித்தானதாகக் காணப்படும் இத்தகைய மரங்களைத் தாவரவியலாளர்கள் உள்நாட்டுக்குரிய (endemic) இனங்கள் என்கிறார்கள். தேக்கு, மகோகனி, இப்பில் இப்பில் இயூகலிப்ரஸ் ஆகியவை இலங்கைக்குப் பிற நாடுகளில் இருந்த எடுத்து வரப்பட்ட மரங்கள். இவ்வாறு புகுத்தப்பட்ட இனங்களை அந்நிய இனங்கள் (நஒழவiஉ) என்கிறார்கள். உள்நாட்டுக்குரிய மரங்களையும், அந்நிய வெளிநாட்டுக்குரிய மரங்களையும் தமிழ்நாட்டில் முறையே இயல்மரங்கள் என்றும் அயல்மரங்கள் என்றும் அழைத்துவருகிறார்கள். இந்த இரண்டு தரப்புத் தாவரங்களையும் தவிர, மண்ணின் மைந்தர்கள் என்று இந்த மண்ணுக்கு நாம் சொந்தம் கொண்டாடுவதைப்போல, மண்ணின் மரங்கள் என்று இந்த மண்ணுக்குச் சொந்தமான இன்னுமொரு தரப்பும் உண்டு.

எமது பிரதேசங்களில் குளக்கரைகளிலும் ஆற்றங்கரைகளிலும் நெடிதுயர்ந்து நிற்கும் மருது இங்கு இயற்கையாகவே பரிணாமித்து இந்த மண்ணைத் தனது சொந்தமென ஆட்சி செய்யும் ஒரு தாவரம். அதே சமயம், இவை இந்தியாவிலும் இயற்கையாகக் காணப்படுகின்றன. இப்படி ஒரு பிரதேசத்து இயற்கைச் சூழலில் தாமாகவே வளரும் தாவரங்கள் இன்னுமொரு நாட்டிலும் இயற்கையாகவே காணப்படுமாயின் அவற்றை அந்த மண்ணுக்குச் சொந்தமான (யெவiஎந) இனங்கள் அல்லது சுதேசிய இனங்கள் அல்லது பூர்வீக இனங்கள் என்கிறார்கள். ஆல், அரசு, அத்தி, புன்னை, புங்கு, வில்வம், அழிஞ்சில், இலுப்பை, நாவல், கொண்டல், தான்றி, வாகை, கடம்பு, வேம்பு உள்ளிட்ட பல மரங்கள் எமது மண்ணுக்குச் சொந்தமான மரங்களாக உள்ளன. மலைவேம்பும் இவ்வகையினதே.

மலைவேம்பு வயலும் வயல் சார்ந்த நிலத்திணையுமான எமது மருத நிலத்துக்குச் சொந்தமான மரம். வேம்பின் குடும்பத்தைச் சார்ந்தது வேம்பைப்போன்று இதன் வேர் முதல் இலைத் துளிர் வரை அத்தனை பாகங்களுமே மருத்துவப் பெறுமதிமிக்கவை. தமிழ் நாட்டில்

அண்மையில் டெங்கு நோய் தீவிரமாகப் பரவிய போது இம் மரத்தின் கசாயத்தையே தமிழக அரசு உத்தியோகபூர்வ மருந்தாக அறிவித்திருந்தது. தொன்று தொட்டுத் தமிழ் மக்களின் பிணிதீர்க்கும் நாட்டு வைத்தியராகப் பணியாற்றி வந்த இம் மரத்தை இன்று மறந்த விட்டோம். அந்நிய வரவான மகோகனி மரத்தையே மலை வேம்பு என்று தவறாகப் பெயர் சூட்டிக் கொண்டாடி வருகிறோம். மலைவேம்பு எமது சூழலில் சர்க்கரை வேம்பு என்ற பெயருடன் நட்டுப் பராமரிப்பார் எவருமின்றிக் காண்பதற்கு அரிதாகி வருகின்றது. இவ்வாறு சொந்த மரமெது அந்நிய மரமெது என்று அடையாளங்காண இயலாத நிலைக்கு நாம் இயற்கையை விட்டு வெகுதொலைவு வந்துவிட்டோம்.

சொந்த மரம் எது அந்நிய மரம் எது என்பதை எம்மைவிட எமது சூழலில் வாழும் உயிரினங்கள் அதிகமாகத் தெரிந்து வைத்துள்ளன. ஆல், அரசு, அத்தி, இத்தி மரங்களில் குதூகலமாகக் கூடுகின்ற விதம்விதமான எண்ணற்ற பறவைகளும் பூச்சிகளும் பிற உயிரினங்களும் இதற்கான சாட்சிகள். இவை சொந்த மரங்களை நாடுகின்ற அளவுக்கு அந்நிய மரங்களைத் தேடுவதில்லை. சொந்த மரங்கள் தனிமரங்கள் அல்ல. ஒவ்வொன்றும் ஒவ்வொரு காடு. இவை எண்ணுக்கணக்கில்லாத உயிரினங்களின் உணவிடமாகவும் உறைவிடமாகவும் விளங்குகின்றன. ஆனால், நாம் பத்து வருடங்களில் பல இலட்சம் ரூபா பணம் கிடைக்கும் என்று சொந்த மரங்களின் இடத்தை மகோகனிகளாலும் தேக்குகளாலும் நிரப்பிக் கொண்டிருக்கிறோம்.
மரங்கள் எவற்றையுமே இயற்கை தவறாகப் படைக்கவில்லை. இயற்கை தன் பரிணாமத் தராசில் மரங்களை எடை போடும்போது அவை மனிதர்களுக்குப் பயன்படுமா என்பதை அல்லாமல் சூழலுக்கு உகந்தவையா என்பதையே கருத்தில் கொள்கிறது. மரங்களை எந்த மண்ணின் சொந்த மரங்களாக இயற்கை தோற்றுவித்ததோ அம் மண்ணின் சூழற்சமநிலையிலும் உயிர்ச் செழிப்பிலும் அவை ஆற்றி வரும் பங்கு இன்றிமையாதது; அளவிடற்கரியது. ஆனால், புதியதொரு சூழலுக்கு இடம் மாற்றப்பட்டு வலிந்து புகுத்தப்பட்ட அயற் தாவரங்களாகும்போது அவற்றில் சில சூழலின் சமநிலையைக் குழப்பி மூரக்கம் கொண்ட முற்றுகைத்; தாவரங்களாகவும் ஆகிவிடுகின்றன. இதற்கு எமது சூழலில் பரவி வரும் சீமைக்கருவேலம், இப்பில் இப்பில், ஆகியன பரிச்சயமான எடுத்துக்காட்டுகளாகும்.

தென் அமெரிக்க மரமான சீமைக்கருவேலம் (Pசழளழிளை தரடகைடழசய) ஐரோப்பியர்களின் காலனித்துவ ஆட்சியில் ஆசிய, ஆபிரிக்க நாடுகள் பலவற்றுக்கும் எடுத்துச் செல்லப்பட்டது. பிரித்தானியர்கள்; பொட்டல் வெளிகளில் இதனை வளர்ப்பதன் மூலம் விறகுத்தேவையை ஈடுசெய்யலாம் எனவும், வெட்டுமரமாகவும், சாற்றுப்பிடிப்பான காய்களை கால்நடைகளுக்கு உணவாகவும் பயன்படுத்தலாம் எனவும் 1876ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எடுத்துச்சென்றார்கள். நான்கு வருடங்கள் கழித்து -1880இல்-பிரித்தானியர்கள் இதனைப் பேராதனை தாவரவியற்ப் பூங்காவில் நடுகை செய்துள்ளார்கள.; எனினும,; சுதந்திர இலங்கையிலேயே சீமைக்கருவேலம் அதிகளவில் காலூன்றியது. வனவளத்திணைக்களம் 1950 களில் அம்பாந்தோட்டை கடல்நீரேரிப் பகுதிகளில் மண்ணரிப்பைத் தடுப்பதற்கும் நிழல் வழங்குவதற்காகவுமென அதிகளவில் விதைகளைத் தூவியது.

எமது பூர்வீகக் கருவேலமரத்தின் தோற்றத்தை ஒத்திருந்ததால் இந்த அந்நிய மரத்துக்கு சீமைக்கருவேலம் என்று பெயரிடப்பட்டது. தமிழகத்தில் இதனை வேலிக்காத்தான் எனவும் அழைக்கிறார்கள். ஆனால், வேலியே பயிரை மேய்ந்த கதையாகச் சீமைக்கருவேலம் விரைவிலேயே புதிய சூழலில் நாசகார மரமாக அவதாரம் எடுத்தது. நீர்வேட்கை மிக்க இம்மரம் தன் பக்கவேர்களை விசாலமாக அகலப்பரப்பியும் ஆணிவேரை 20 மீற்றர் ஆழத்துக்குக் கீழாக நுழைத்தும் மேற்பரப்பு நீரையும், நிலத்தடி நீரையும் வேக வேகமாக உறிஞ்சி நிலங்களை மூடி வேகமாக வளர்ந்தது. அம்பாந்தோட்டையில் பிரசித்திபெற்ற புந்தல பறவைகள் சரணாலயத்தின் பெருமளவு பரப்பளவை இன்று சீமைக்கருவேலம் மூடி மறைத்துள்ளது. இதனால், வலசப்பறவைகளின் வரவும், உள்;ர் உயிர்ப்பல்வகைமையும் பாதிக்கப்பட்டுள்ளது. இவற்றின் ஆக்கிரமிப்பால் கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரையும் அருகி வருகிறது. துரதிஸ்டவசமாக, போராட்ட காலத்தில் தமிழகத்திலிருந்து பாதகங்களை

அறியாது இதன் விதைகள் வடக்குக்கும் எடுத்துவரப்பட்டுள்ளன. இன்று வடக்கிலும் சீமைக்கருவேலம் ஓர் ஆக்கிரமிப்பு மரமாக உருவெடுத்துள்ளது.

மெக்சிக்கோவைத் தாயகமாகக் கொண்ட இப்பில் இப்பில் (டுநரஉயநயெ டநரஉழஉநிhயடய) ஓர் அவரைக் குடும்ப மரமாகையால் இயற்கையாகவே நைதரசன் பதிக்கும் ஆற்றல் பெற்றது. இதனால் மண்ணை வளம்படுத்துவதற்கெனவும், இதன் இலைகளிலுள்ள உயர் புரதச்செறிவு காரணமாகக் கால்நடை உணவாகப் பயன்படுத்துவதற்கெனவும், 1980களில் இலங்கைக்கு இம் மரம் எடுத்துவரப்பட்டது. ஆனால், மிக அதிக எண்ணிக்கையான விதைகளை உருவாக்கி விரைந்து பெருகும் மரமாக இருப்பதால் சுதேசிய இனங்களுடன் வளங்களைப் பங்கிடுவதில் கடுமையான போட்டியை ஏற்படுத்துகிறது. ஈற்றில் இப்போட்டியில் தானே வென்று சூழலை ஆக்கிரமித்து மண்ணின் மரங்களை ஓரங்கட்டியும் வருகிறது. இலங்கையில் வடக்கில் யுத்தத்தால் இடம்பெயர்ந்த மக்களின் கைவிடப்பட்ட குடியிருப்புக்காணிகள்கூட இன்று இப்பில் இப்பில் காடாகவே காணப்படுகின்றன இதனால் இப்பில் இப்பில் ஓர் ஆக்கிரமிப்பு இனமாக இலங்கையில் இப்போது பிரகடனப் படுத்தப்பட்டுள்ளது.

மரங்களை, காற்றைச் சலவைசெய்யும் இயந்திரங்களாகவும் குளிர்விக்கும் பதனப்படுத்திகளாகவும் சொல்லித் தரும் அறிவியலும், உயிர்காக்கும் மரங்களைப் பணங்காய்ச்சி மரங்களாகப் போதிக்கும் பொருளியலும் ஆதிக்கம் பெற்றுள்ள நிலையில் மரங்களுக்கும் எமக்கும் இடையிலான பண்டைய பண்பாட்டு உறவை மீட்டுருவாக்கம் செய்வது அவசியம் ஆகும். இந்தப் பண்பாட்டு உறவே மரங்கள் மீதான பற்றுதலை வளர்க்கும். இதற்குச் சமாந்தரமாக இந்த மண்ணுக்கும் எமக்கும் சொந்தமான மரங்களை அடையாளம் கண்டு அவற்றை முதன்மைப்படுத்துவதும் இன்றியமையாதது. கூடவே அந்நிய மரங்களின் அறிமுகத்தின் போது இரட்டிப்புக் கவனமும் கட்டாயமானது. மரநடுகை பற்றியும் சூழல்பாதுகாப்புப் பற்றியும் பேசும்போது இவற்றைக் கணக்கில் எடுக்காமல் எவையும் முழுமை பெறாது.

யாழ்ப்பாணத்திலிருந்து பொ. ஐங்கரநேயன். சூழலியலாளர்- சமூக செயற்பாட்டாளர்